முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்துசெய்யவேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழ் அமைப்புகளால் "வீரதமிழச்சி" என்று ஏற்கனவே தனக்கு கொடுக்கப்பட்ட பட்டத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார் ஜெயலலிதா.
இரண்டு வாரங்களுக்கு முன், மூவரின் தூக்குதண்டனையை உறுதிசெய்து, உள்துறை அமைச்சகம் (நம்ம ப.சிதம்பரம் தான்) ஜனாதிபதிக்கு சிபாரிசு செய்தது. இதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி முருகன், சாந்தன், பேரறிவாளனின் கருணைமனுக்களை நிராகரிப்பதாக தமிழக அரசுக்கு தகவல் அனுப்பினார். இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமானது. வழக்கம்போல் சட்டக்கல்லூரி மாணவர்களும் வழக்கரிஞர்களும் போராட்டத்தின் வழியை தீர்மானிக்கும் சக்திகளாக செயல்பட்டனர். இவர்களை பின்பற்றி சமூகத்தின் மற்ற அங்கத்தினரும் போராட்டகளத்தில் குதித்தனர். ஒருகட்டத்தில் போராட்டகாரர்கள், அரசியல்சாசன சட்டத்தின் 161 வது விதியை பயன்படுத்தி மூவருக்கும் விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனையை மாநிலஅரசு ரத்துசெய்யவேண்டும் என்று ஜெயலலிதாவுக்கு கோரிக்கை வைக்க தொடங்கினர். சட்டமன்ற கூட்டதொடர் நடைபெற்றுவரும் நிலையில், போராட்டக்காரர்களின் கோரிக்கை குறித்து பதிலளிக்கவேண்டிய அவசியம் ஜெயலலிதாவுக்கு உருவானது. இருந்தபோதும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வழக்கம்போல் சட்டமன்றத்தை திறமையாக(!) நடத்திவந்தார் ஜெயலலிதா.
ஆகஸ்ட் இருபத்தெட்டாம்தேதி, அனைவரின் நெஞ்சையும் நெகிழவைக்கும் வகையில்
காஞ்சி மக்கள் மன்றத்தில் சமூகபணியாற்றி வந்த இளம்பெண் செங்கொடி, மூவரின் தூக்குதண்டனையை ரத்துசெய்ய கோரி தீக்குளித்துக்கொண்டார். யாருக்காக இல்லையென்றாலும், இந்த பெண்ணின் மரணத்திற்க்கு பதில் சொல்லவேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டார் ஜெயலலிதா. வேருவழின்றி மறுநாள் காலை சட்டமன்றத்தில் நூற்றுபத்தாம் விதியின்கீழ் ஒரு அறிக்கையை வாசித்தார் முதல்வர். அந்த அறிக்கையில், ஜனாதிபதியால் ஒருவரின் கருணைமனு நிராகரிக்கபட்டபின் மாநில அரசால் எதுவும் செய்யமுடியாது என்று கூறினார். அரசியல்சாசனத்தின் 161 ஆம் விதியை மாநிலஅரசு பயன்படுத்தமுடியாத வகையில் 1991 ஆம் ஆண்டும் மத்தியஅரசு ஒரு சுற்றறிக்கையை அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பயுள்ளதாகவும், ஆகவே இந்தவிஷயத்தில் தன்னால் எதுவும் செய்யமுடியாது என்று கையை விரித்தார் ஜெயலலிதா.
எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் அரசியல்சாசனமே உயர்ந்ததாக கருதப்படும். அதாவது அரசியல்சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை வேறுஎந்தவிதமான சட்டங்கள்போட்டோ, உத்தரவுகள் வழங்கியோ, சுற்றறிக்கைகள் அனுப்பியோ செல்லாததாக்கமுடியாது. அதாவது அரசியல்சாசனத்தின் 161 ஆம் பிரிவின்கீழ் மாநிலஅரசுக்கு உள்ள உரிமையை, மத்தியஅரசின் சுற்றறிக்கை எந்தவகையிலும் பரித்துவிடாது. இந்தவிஷயத்தை, மறைத்துவிட்டு தன்னால் எதுவும் முடியாது என்று சட்டமன்றத்தில் தெரிவித்த ஜெயலலிதா, மீண்டும் ஜனாதிபதியிடம் கருணை மனு வழங்க சட்டத்தில் இடம் உள்ளதாக தமிழகமக்களுக்கு சட்டஆலோசனை(!!!) வழங்கினார்.
தமிழகஅரசு கையை விரித்துவிட்டது என்ற செய்திபரவியதும், தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமானது. உயிர் நீத்த செங்கொடியின் உடலை, சென்னைவரை ஊர்வலமாக எடுத்துவரவேண்டும் என்ற கோரிக்கைவலுத்தது. சென்னையில் உண்ணாவிரதம் இருந்துவந்த மூன்று பெண் வழக்கறிஞர்களின் போராட்டம் நான்காம் நாளை தாண்டி தொடர்ந்தது. ஜெயலலிதாவுக்கு, பெண்களின் தியாகத்திற்கு மதிப்பளிக்கவேண்டும் என்பதைவிட, தான் கூறிய 161 ஆம் பிரிவு பற்றிய கதையை மக்கள் புரிந்துகொள்ளும் முன்னரே அவர்களின் கவனத்தை திசைதிருப்ப வேண்டிய கட்டாயம் உருவானது.
மறுநாள்காலை சட்டமன்றத்தில் முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு உறுதிபடுத்தப்பட்டுள்ள தூக்குதண்டனையை ஜனாதிபதி குறைக்கவேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டுவந்தார் ஜெயலலிதா. தமிழகமக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதற்க்கு மதிப்பளிக்கும்வகையில் இந்த தீர்மானத்தை கொண்டுவந்ததாக அவர் விளக்கமளித்தார்.
தீர்மானம் உண்மையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என்றேகூறலாம். ஏனென்றால் அன்று காங்கிரஸ் சார்பாக சட்டமன்றம் வந்திருந்த ஒரே உறுப்பினரான விஜயதாரணி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது அவையில் என்னநடக்கிறது என்பதைகூட அறிந்துகொள்ள முடியாமல் மிகவும் விழிப்புடன் அவைநிகழ்வுகளை கவனித்துகொண்டிருந்தார். தீர்மானம் நிறைவேற்றப்பட்ட செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பபட்டபின்னர்தான், யாரோ விஜயதாரணியை தொடர்புகொண்டு இதுபோல் ஒரு தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது, இதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என்பதை கூறினார்கள் என்று தெரிகிறது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முப்பது நிமிடங்களுக்கு மேல் ஆனபின், யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் அவையை விட்டு வெளியே வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி, தீர்மானத்தை எதிர்த்து பேச அவைதலைவரிடம் தான் அனுமதி கேட்டதாகவும், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவையைவிட்டு வெளிநடப்பு செய்ததாகவும் செய்தியாளர்கள் காதில் முழம் முழமாக பூ சுற்றினார். அந்த பூ, அடுத்த சில நிமிடங்களில் மக்களின் காதுகளுக்கு மாற்றப்பட்டது. (இப்படிதான் நம் ஊடகங்களால் தினம்தோறும் மக்களின் காதுகளில் பூ சுற்றப்பட்டு வருகின்றது).
சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், உயர்நீதிமன்றம் தூக்குதண்டனைக்கு இடைக்கால தடை வழங்கியதையும் மக்கள் கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தின் மத்தியில், தமிழகத்தின் உரிமையான 161 ஆம் பிரிவு பற்றிய உண்மை மறைக்கப்பட்டுவிட்டது. நாளை உயர்நீதிமன்றம் கைவிரித்து விட்டாலும் இனி தான் செய்வதற்கு எதுவும் இல்லை என்பதை மறைமுகமாக தெரிவித்துவிட்டார் ஜெயலலிதா. நீதிமன்றம் கைவிட்டபிறகுதான் இந்த உண்மை மக்களுக்கு தெரிவிக்கப்படுமா? அதன்பின் காலம் கடந்து போராட்டம் நடத்தப்படுமா?
- அசீப்
0 comments:
Post a Comment