ஊடகவியலாளர்கள் பட்டினிப் போராட்டம்!

ஊடகவியலாளர்கள் பட்டினிப் போராட்டம்!

மரண தண்டனையை சட்டத்திலிருந்து நீக்க கோரியும், 3 தமிழர்களின் உயிர்களை பாதுகாக்கக் கோரியும், மரண தண்டனை எதிர்ப்பு கூட்டமைப்பு, கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே உள்ள இரண்டாவது சிக்னல் பக்கத்தில் கடந்த ஒரு மாத காலமாக தொடர் பட்டினி போராட்டம் நடத்தி வருகிறது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைப்பினர் அந்த பட்டினி போராட்டத்தில் பங்கு கொள்கிறார்கள். நாளை அக்டோபர் 19-ம் நாள் ஊடகவியலாளர்கள் சார்பாக அந்த பட்டினிப் போராட்டம் நடைபெறுகிறது.

ஊடகவியலாளர்களுடன் கல்லூரி மாணவர்களும், கலைஞர்களும் அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

அன்னையர் முன்னணியின் தலைவியும், நாடுகடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையத்தின் அமைப்பாளருமான பேராசிரியர் சரஸ்வதி நாளை காலை 9.30 மணிக்கு இந்தப் பட்டினி  போராட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார்.

தமிழ்நாடு அரசு தனது சட்டமன்ற தீர்மானத்தின் மூலம், மரண தண்டனை அறிவிக்கப்பட்ட 3 தமிழர்களான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது தண்டனையை குறைத்து அறிவிக்கும்படி இந்திய குடியரசு தலைவரை  கேட்டுக் கொண்டுள்ளது.

இதைப் போலவே ஒரு தீர்மானத்தை காஷ்மீர் பேரவையில் நிறைவேற்றி, அப்சல் குருவின் மரண தண்டனையை குறைப்பதற்கான முயற்சி நடந்து கொண்டிருக்கிறது.

பஞ்சாபை சேர்ந்த தேவநாத்பால் சிங் புல்லார் என்ற காலிஸ்தான் தளபதிக்கு அறிவிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கிலும் கூட தமிழகத்தின் சட்டமன்ற தீர்மானம் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறாக மரண தண்டனையை அரசியல் சட்டத்திலிருந்து நீக்குவதற்கான 2007, 2008-ம் ஆண்டுகளில் டிசம்பர் 18-ம் நாள் ஐ.நா. வின் பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இந்தியா எங்கிலும் புத்துயிர்பெற்று விவாதிக்கப்பட்டு வருகிறது.

அந்த அள்வுக்கு தமிழகத்தின் சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை குறைப்பு தீர்மானம் இந்திய அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அத்தகைய தீர்மானத்தை வலுவேற்ற விரும்பும் தமிழ ஊடக வியலாளர்களும் மனித உரிமை குரலை உயர்த்துவதற்காக தங்களது சிறிய பங்களிப்பாக நாளை நடக்கும் பட்டினி போராட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு பங்கிளிப்பு செலுத்த வேண்டும். 

இளம் செய்தியாளர்களின் மனிதம் ? !

இளம் செய்தியாளர்களின் மனிதம் ? !

தொலைக்காட்சி ஊடகங்களில் பணிபுரியும் இளம் செய்தியாளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. 

துடிப்புடன் பணியில் சேரும் இளம் செய்தியாளர்கள், முதன்மை செய்தி ஆசிரியர்களின் நன்மதிப்பை பெற வேண்டும் என ஆர்வத்தில், மிக வேகமாக செயல்படுவது வழக்கம். 

ஆரம்பத்தில் பணி நேரத்திற்கு முன்பாக அலுவலத்திற்கு வரும் இவர்கள், பணி முடிந்த பின்பும், வீட்டிற்கு வெகு நேரம் கழித்தே செல்கின்றனர்.

சுவையான, பரபரப்பான செய்திகளை எப்படியும் கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வ கோளாறால், இளம் செய்தியாளர்கள் செய்யும் சில செயல்கள், மனித நேயத்திற்கு நேர் எதிராக அமைந்து விடுகின்றன.

செய்தி ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுவதால், மனிதம் குறித்து இவர்கள்,  சிறிதும்  கவலைப்படுவதாக தெரிவதில்லை. அக்கறை கொள்வதில்லை.

இதற்கு பல எடுத்துக்காட்டுகளை அடுக்கலாம்.

ஆனால், ஒருசிலவற்றை மட்டுமே, இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன்.

கடந்த 12.10.2011 ஆம் தேதி டெல்லி உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்குரைஞர்களின் சேம்பரில் நடந்த ஒரு சம்பவம் நாட்டையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சேம்பரில் இருக்கும் தனது அறையில் அமர்ந்து கொண்டு, தனியார் தொலைக்காட்சியின் இளம் செய்தியாளர் ஒருவருக்கு, நேர்காணல் அளித்துக் கொண்டிருந்தார் பிரபல வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண்.

வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், நாடு முழுவதும உள்ள வழக்குரைஞர்களால் மிகவும் மதிக்கப்படுபவர்.

நல்ல திறமைச்சாலி. கருத்துகளை நேர்மையாக, அச்சமின்றி சொல்லும் குணம் கொண்டவர்.

இப்படிப்பட்ட பிரசாந்த் பூஷண், தனியார் தொலைக்காட்சியின் இளம் செய்தியாளருக்கு நேர்காணல் அளித்துக் கொண்டிருந்தபோது, அத்துமீறி அவரது அறைக்குள் நுழைகின்றனர்  ராம்சேனா அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர்.

அவர்களில் ஒருவர், பிரசாந்த் பூஷண் மீது திடீரென தாக்குதல் நடத்த ஆரம்பித்து விடுகிறார்.

பூஷணை சரமாரியாக அடிக்கிறார். இதனால் நாற்காலியில்  அமர்ந்துக் கொண்டிருந்த பூஷண் நிலை தடுமாறி கீழே விழுகிறார்.

அப்போதும், அவரை அந்த இளைஞர் விடவில்லை. பூஷணின் கால்களை இழுத்தப்படியே, அவரை பலமாக தாக்குகிறார். 

இந்த காட்சிகள் அனைத்தையும் தமது கேமிராவில் பதிவு செய்கிறார் நேர்காணல் எடுக்க வந்த இளம் செய்தியாளர். இளம் ஒளிப்பதிவாளர். 

பிரசாந்த் பூஷண் மீதான தாக்குதலை நிறுத்த இருவரும் எந்த முயற்சியும் செய்யவில்லை.

பேட்டியை நிறுத்திவிட்டு, கேமிராவை ஓரமாக வைத்துவிட்டு, உடனே, பூஷணை காப்பாற்ற முயற்சிக்கவில்லை. 

பூஷண் நன்றாக அடிப்பட்ட பிறகு, அது கேமிராவில் நன்கு பதிவு ஆகிவிட்ட பிறகே அவரை காப்பாற்ற ஓடோடி வருகிறார் அந்த இளம் செய்தியாளர்.

என்ன ஒரு அநியாயம்? பாருங்கள்.

வழக்குரைஞர் பூஷண் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, நன்கு படம் பிடித்து அதன் மூலம் செய்தி ஆசிரியரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற ஆர்வக் கோளாறே, அந்த இளம் செய்தியாளரிடம் மிகுந்து இருந்தது.

அதனால், மனிதம் குறித்து அக்கறை
கொள்ளாமல், பூஷணை காப்பாற்ற அந்த தனியார் தொலைக்காட்சி இளம் செய்தியாளர், சிறிதும்  முயற்சிக்கவில்லை.

இந்த தாக்குதல் காட்சி நாடு முழுவதும்  உடனே ஒளிபரப்பி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அந்த தனியார் தொலைக்காட்சி.

இதன்மூலம், அந்த தனியார் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி. ரேட்டிங் சிறிது நேரத்திலேயே உயர்ந்தது உண்மைதான்.

ஆனால்....மனிதம் ? 

காணாமல் போனது.

இதேபோன்று, தமிழகத்தில் இரண்டு சம்பவங்கள் நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தின.

அவற்றில் ஒன்று. சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களிடையே நடந்த குழு மோதல்.

இந்த மோதல் காட்சிகளை, பல தொலைக்காட்சிகளின் இளம் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் சுற்றி சுற்றி படம் பிடித்தனர்.

காவல்துறையினர் வேடிக்கைப் பார்த்ததை ஆர்வமாக படம் பிடித்தனர்.

ஆனால், உடனே உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து, வன்முறையை, மோதலை கட்டுப்படுத்த எந்த முயற்சியையும் செய்யவில்லை.

காரணம். பரபரப்பான அந்த காட்சிகள் முதலில் தங்களது தொலைக்காட்சியில் வர வேண்டும் என்ற ஆர்வம்தான்.

அதன்மூலம், முதன்மை செய்தி ஆசிரியர், நிர்வாகம் தரப்பில் நன்மதிப்பை பெற வேண்டும் என்பது இளம் செய்தியாளர்களின் நோக்கமாக இருந்தது.

அதேநேரத்தில,  மக்கள் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணிபுரிந்த இளம் பெண் செய்தியாளர் அருணா மட்டும் இதற்கு விதிவிலக்காக இருந்தார்.

மோதலின்போது பணியில் இருந்து காவல்துறை அதிகாரிகளிடம் அவர் ஒடோடி சென்றார்.

சார். அநியாயம் நடக்கிறது. நீங்கள் வேடிக்கை பார்க்கிறீர்களே. இது நியாயமா? என தட்டிக் கேட்டார்.

ஆனால், அந்த இளம் பெண் செய்தியாளரின் கோரிக்கை, செவிடன் காதில் ஊதிய சங்கு போன்று ஆனது.

மாணவர்கள் மோதிக் கொண்டனர். கலவரம், வன்முறை படம் பிடிக்கப்பட்டது. தொலைக்காட்சிகளில் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டது.

ஒரு இளம் பெண் செய்தியாளருக்கு இருந்த தைரியம், மனிதம், மற்ற செய்தியாளர்களுக்கு உடனே ஏன் ஏற்படவில்லை?

இதற்கு காரணம், செய்திகளை பரபரப்பாக, முதலில் தர வேண்டும் என்ற ஆர்வமே ஆகும். 

இதேபோன்று மற்றொரு கசப்பான நிகழ்ச்சியும் தமிழகத்தில் நடந்தது.

தென் மாவட்டத்தில், ஒரு காவல்துறை அதிகாரியை குண்டர்கள் அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தினர்.

உயிருக்கு போராடிய அந்த அதிகாரி, தண்ணீர் கேட்டு கூச்சலிடுகிறார்.


ஆனால், அவரை உடனடியாக காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் அங்கிருந்த செய்தியாளர்களுக்கு துளிக்கூட ஏற்படவில்லை.

ஏன் அங்கிருந்த மக்களுக்கும் ஏற்படவில்லை. காவல் அதிகாரி உயிருக்கு போராடிய காட்சியை எல்லோரும் வேடிக்கை பார்த்தனர்.

காவல் அதிகாரி, துடித்துக் கொண்டிருந்த அந்த காட்சியை, தங்கள் கேமிராவில் வேக வேகமாக படம் பிடிப்பதில் மட்டுமே இந்த இளம் செய்தியாளர்கள் கவனம் செலுத்தினர்.


அந்த அதிகாரி துடி துடித்து உயிரிழந்த காட்சி, கல் மனதையும் உருகச் செய்தது.

ஆனால், இளம் செய்தியார்களை மட்டும் ஏன் உருகச் செய்யவில்லை என தெரியவில்லை?

இப்படிப்பட்ட, சம்பவங்கள், நிகழ்ச்சிகள் நாள்தோறும் நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இளம் செய்தியாளர்கள் தங்கள் பணியை செய்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

சென்னையில் வயதான மூதாட்டி ஒருவர் நகைக்காக கொலை செய்யப்படுகிறார்.

மூதாட்டியை இழந்து வீடே சோகத்தில் மூழ்கியிருக்கிறது.


அங்கு ஓடோடி செல்லும் இளம் செய்தியாளர்கள், கொலை எப்படி நடந்தது? நீங்கள் எங்கே இருந்தீர்கள்? கொலைக்கு யார் காரணம் ?

என இப்படி வேண்டாத கேள்விகளை, காவல்துறையினர் கேட்க வேண்டிய வினாக்களை கேட்டு, மூதாட்டியின் பிள்ளைகளை, உறவினர்களை படுத்தும் பாடு இருக்கிறதே அப்பப்பா,  அதை சொல்ல வார்த்தைகளே இல்லை.

தற்போது, தமிழக தொலைக்காட்சி ஊடகங்களில் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள அனைத்து ஊடகங்களிலும் இப்படிப்பட்ட இளம் செய்தியாளர்களின் எண்ணிக்கைதான் அதிகரித்து வருகிறது.

பரபரப்பான செய்திகளை அளிப்பதில் தவறு இல்லை.

இப்படிப்பட்ட செய்திகள் தங்களது தொலைக்காட்சியில் முதலில் வர வேண்டும் என்று நினைப்பதில் குற்றம் இல்லை.

ஆனால், மனிதம், மனித நேயம் ஆகியவற்றை இளம் செய்தியாளர்கள் தங்களது  இதயத்தில் புகுத்திக் கொண்டு செயல்பட்டால், வன்முறைகளை, தாக்குதல்களை சிறிதாவது தடுக்க முடியும் அல்லவா !

கொலை செய்யப்பட்டு, வீடே சோகத்தில் மூழ்கியிருக்கும் நிலையில், அங்கு சென்று விசாரணைகளை நடத்துவதை தவிர்த்து, அவர்களின் சோகத்தில் பங்கேற்கலாம்.

நாசுக்காக பேசி விஷயங்களை வாங்கலாம். செய்திகளை சேகரிக்கலாம்.

இதன்மூலம், மனிதம் மலரும். இளம் செய்தியாளர்கள் மீதான குற்றச்சாட்டுகளும் மறையும்.

செய்தி ஊடகங்கள் மீதான புகார்கள் குறையும்.

செய்தி ஊடகங்கள் மீது மக்களுக்கு நன்மதிப்பு ஏற்படும்.

இவற்றையெல்லாம், இளம் செய்தியாளர்கள் சிந்திப்பார்களா ? !

கவனத்தில் எடுத்துக் கொள்வார்களா ? !

இனிவரும் நாட்களில், இளம் செய்தியாளர்களின் நடவடிக்கைகளின் மூலம் மட்டுமே இதற்கு விடை  தெரியவரும்.


Time

Total Page Views

About this blog

நம்மைச்சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகள் , அதன் பின்னணியிலிருக்கும் அரசியல் , அந்த நிகழ்வை நகர்த்தும் அடிப்படை,அதற்கான தேவை, என நாங்கள் புரிந்துகொண்டதை , நாங்களே பகிர்ந்து கொள்ளவும் , நாங்கள் பகிர்ந்து கொண்டதை , உங்களோடு பகிர்ந்து கொள்ளவுமே இந்தத் தளம்.
Powered by Blogger.

Followers

Blog Archive