ஒருபக்கம் இந்தியா தமது 64-வது சுதந்திர தினத்தை கொண்டாடி கொண்டிருக்கிறது. அதேநேரம் மேலை நாடுகளால் ஏழை என இழிக்கப்படும் இந்த நாடில் தான் லட்சம் கோடிகளை விழுங்கி ஏப்பம் விடும் மெகா ஊழல்களும் அரங்கேறுகின்றன. இந்த வேளையில் நாட்டின் அனைத்து மட்டங்களிலும் புரையோடி கிடக்கும் ஊழல் புற்றுநோய்க்கு தள்ளாத வயதில் தன்னால் ஆனதை செய்ய கிளம்பி இருக்கிறார் அன்னா ஹசாரே. ஊழலுக்கு எதிரான இந்த முதியவரின் ஆக்ரோஷத்தை அடக்க காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு படாதபாடு படுவதை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஹசாரேயின் நிலைப்பாட்டில் பலருக்கும் பல்வேறு கருத்துகள் இருக்கலாம். ஆனால் இவர் தான் லோக்பால் என்ற பூனைக்கு மணியை கட்டியவர். ஊழலுக்கு எதிரான கோடிக்கணக்கான இந்தியர்களின் ஏக்கத்தை தணிக்க புறப்பட்டு இருக்கும் ஹசாரேவை ஒடுக்க முயலும் மத்திய அரசு இந்த பிரச்சனையில் தவறான அணுகுமுறையை கையாலுகிறதோ என்ற ஐயம் தோன்றுகிறது. காரணம் ஹசாரேயின் பின்னால் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகும் கூட்டம். சமரச தீர்வை விடுத்து, ஹசாரேவை ஒடுக்கும் முயற்சியை மத்திய அரசு தொடர்ந்தால் மத்திய கிழக்கு நாடுகளை போன்று இங்கேயும் மக்கள் புரட்சி வெடித்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
- செருவை ப. சுந்தரமூர்த்தி