லண்டன் மாநகரில் கடந்தவாரம் முழுவதும் நடந்த சம்பவங்களை, உலக மீடியாக்கல் மிகவும் கேவலமாக, திருடர்களும் போக்கிரிகளும் நடத்திய கலவரமாகவே சித்தரித்துள்ளன. ஐரோப்பிய நாடுகளின், மக்கள்விரோத பொருளாதார கொள்கையினால் நாளுக்குநாள் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துவருவதும், உழைக்கும் மக்கள் நடுத்தெருவுக்கு தள்ளப்படுவதும் அதிகரித்துவருகின்றது. லண்டன் கலவரத்தை, இந்த பின்னனியிலிருந்தும் பார்க்கவேண்டி உள்ளது. இந்த பிரச்சனையில், உலக மக்களால் நடுநிலையான செய்திநிறுவனம் என்று (தவறாக) நம்பப்படும் பி.பி.சி, அரசின் ஆதரவு குரலாக செயல்பட்டு, போராட்டத்தின் மற்றொரு பக்கத்தை மறைத்து, பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு வருகின்றது.
லண்டன் சம்பவகளின் மற்றொரு பக்கத்தை "ரஷ்யா டுடே" என்ற செய்தி சேனல் ஒளிபரப்பியது. அந்த செய்தியில் பி.பி.சி யில் காட்டப்பட்ட, மக்கள் வணிக நிறுவனங்களை சூறையாடும் சம்பவங்களும் காட்டப்பட்டன. அதன் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் அவர்களின் போராட்டத்திற்கான காரணம் கேட்கப்பட்டு அவை ஒலிபரப்பு செய்யப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட (சூறை சம்பவங்களில்) ஒரு பெண்ணிடம் RT (ரஷ்யா டுடே) செய்தியாளர் பேட்டி எடுத்தபோது " என் குழந்தைக்கு பால்வாங்க கூட என்னிடம் பணம் இல்லை, அதனால்தான் பாலை திருடுகிறேன்" என்று கூறுகிறார். மற்றொரு பெண், குழந்தைக்கு "நாப்கின்" திருடியதாக கூறுகிறார். ஆனால் பி.பி.சி யோ, சமூகவிரோதி ஒருவனை போலீசார் சுட்டுகொன்றதால், அந்த சமூகவிரோதியின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டதாக தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றது. அந்த செய்தியையே நமது தொலைக்காட்சிகளும் வாந்தி எடுத்து வருகின்றன.
மக்களை திருடர்களாக அரசு சித்தரித்துவரும் நிலையில், மக்கள் வெளியிட்டுள்ள விளம்பரம் இது.(படம் பார்க்க).
கிரீஸ், இத்தாலியை தொடர்ந்து, ஆள்பவர்களின் மக்கள்விரோத கொள்கையினால், மக்கள் போராட்டம் இங்கிலாந்தில் வெடித்துள்ளது. ஆட்சியாளர்களுக்கு எதிராக ஐரோப்பா பற்றி எரிகிறது. ஐரோப்பிய மக்களை விட, பெரும் துன்பத்தை அனுபவித்து வரும் இந்தியமக்களின் போராட்டமோ, ஊழலுக்கு எதிரான போராட்டம் என்ற கவர்ச்சிகர அரசியலால், ஆளும்வர்கத்தால் திட்டமிட்டு குறுக்கப்பட்டு, திசை திருப்பப்பட்டு வருகின்றது.
விழித்துக்கொள்வோம்!
புரட்சி என்பது
மென்மையானதாக,கருணையானதாக,
கண்ணியமானதாக,கட்டுப்பட்டதாக,
பெருந்தன்மையானதாக
இருக்கமுடியாது....
புரட்சி ஒரு மக்கள் பேரெழுச்சி!
ஒரு வர்க்கம், மற்றொரு வர்க்கத்தை
தூக்கியெறியும்
வன்முறை செயல்.....
- மாவோ