தமிழகத்தின் சுயநிர்ணயஉரிமை

சுயநிர்ணய உரிமையும் தனிநாடும்
ஒரு நாட்டில், இருவேறு தேசிய இனங்கள் இருக்கும்பட்சத்தில், அந்த தேசியஇனங்கள், தங்கள் சமுகவாழ்நிலையை நிர்ணயிக்கும் உரிமை, அந்தந்த தேசிய இனங்களுக்கு கொடுக்கப்படவேண்டும் என்பதே நியாயம். அதாவது, தமிழ்மொழி பேசுபவர்கள், ஆண்டாண்டு காலமாக, தங்களுக்கென்ற ஒரு கலாச்சாரத்துடனும் அதற்கான உளவியலையும் பெற்றுவாழ்ந்து வந்துள்ளனர். அந்த மொழியையும், கலாச்சாரத்தையும், உளவியலையும் மற்றொரு தேசிய இனத்தால், உதாரணத்திற்கு சிங்கள தேசிய இனத்தால் புரிந்து கொள்ளமுடியாது. ஏனென்றால், சிங்கள மொழி பேசும் மக்கள், தனிவகையான கலாச்சாரம் மற்றம் உளவியலை பெற்று வாழ்ந்துள்ளனர். இப்படிப்பட்ட நிலையில், தமிழர்களின் வாழ்நிலையை சிங்களர்களோ, சிங்களர்களின் வாழ்நிலையை தமிழர்களோ நிர்ணயிக்க முடியாது. அதாவது, சிங்களர்களை தமிழர்களோ, தமிழர்களை சிங்களர்களோ, ஆளமுடியாது. ஆனால், இரண்டு தேசிய இனங்களும் தங்களை தாங்களே ஆளும் அதிகாரத்தை தனித்தனியாக பெற்று, அந்த அதிகாரத்தை எந்த வகையிலும் பாதிக்காத படி சிங்களர், தமிழர் பொதுநன்மைக்கா, சிங்கள-தமிழர் கூட்டரசை உருவாக்கி அதன் முலம் இரண்டு தேசிய இனங்களும், நாடு என்ற வரையறுக்கப்பட்ட நிலபரப்பின் கீழ் ஒன்றாக வாழலாம் இதுவே சுயநிர்ணய உரிமையுடன் கூடிய இணைவாகும். இது, பெயரளவில் ஒரே நாடாக இருந்தாலும், அதனுள் சுதந்திரமான இரண்டு அரசுகள் நடைபெற்று வரும். சுதந்திர அரசுகளின் செயல்பாட்டை, நாடு என்ற அமைப்பு பாதிக்காத வரை, நாடு என்ற அமைப்பை சுதந்திர அரசுகள் பாதிப்படைய செய்யாது.
ஒரே நாடு என்ற பெயரில், ஒரு தேசிய இனம், மற்றொரு தேசிய இனைத்தை ஒடுக்கும் செயலில் ஈடுபடும்போது, அந்த தேசிய இனங்கள் தங்களுக்குள், இருந்து வந்த பொதுவான தன்மையை இழந்து விடுகின்றன. இதன்காரணமாக, ஒரேநாட்டில் ஒன்றாக இருந்த, இரண்டு சுதந்திர தேசிய அரசுகள், இரண்டாக பிளவுற்று, இரண்டு சுதந்திர நாடுகள் உருவாகின்றன. கூட்டரசு என்பது, அதாவது ஒரே நாடு என்பது, இரண்டு தேசிய இனத்தையும் சேர்ந்த மக்களின் நன்மைக்கா அமைக்கபட்டது என்பதை அனைவரும் எளிதாக புரிந்துகொள்வதைபோல, பிரிந்த செல்வது என்பதும் கூட, மக்களின் நன்மைக்கே என்பதை பெரும்பாலானோர் புரிந்துகொள்வதில்லை. மக்களிடம் போலியாக ஊட்டப்படும் தேசிய உணர்வு என்ற பொய் பிரச்சாரமே இதற்கு காரணமாகும்.  
ஏன் தனி நாடு?
ஆங்கிலேயர் ஆட்சி செய்தவரை, சட்டம் இயற்றப்பட்டதிலும், உரிமைகள் வழங்கபட்டதிலும் முழுக்க, முழுக்க அவர்களின் சுயநலத்திற்கே முன்னுரிமை கொடுக்கபட்டது என்றாலும், அதில், சிங்களர், தமிழர் என்ற பேதம் பார்க்கப்படவில்லை. அதாவது, இலங்கையின் வளத்தை சுரண்டிய ஆங்கில அரசின் நடவடிக்கையால், சிங்களர், தமிழர் ஆகிய இருவரும் சமமாக பாதிக்கப்பட்டனர். 1948 ஆம் ஆண்டு, ஆங்கிலேயர்கள் இலங்கையை விட்டு வெளியேறியதும், இலங்கையின் அரசு அதிகாரம் சிங்களர்கள் வசம் சென்றது. ஏனென்றால் இலங்கை தீவில், எண்ணிக்கையில் சிங்களர்களே அதிகம். ஆகவே, விகிதாச்சார அடிப்படையில், அரசு அதிகாரம் சிங்களர்களிடம் சென்றது. அரசு அதிகாரத்தை கையில் எடுத்த சிங்கள அரசியல்வாதிகள் (ஆளும்வர்க்கம்), ஆட்சிசெய்வதிலும், சட்டம் இயற்றுவதிலும் சிங்களர் தமிழர் என்ற பாகுபாடு பார்க்காமல், அனைவருக்கும் பொதுவான வகையில் செயல்படவில்லை. அதுவரை, சிங்களர்களுக்கு இணையாக தமிழர்கள் அனுபவித்து வந்த உரிமைகள் தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்டன. தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டனர். இழந்த உரிமைகளை மீண்டும் பெறுவதற்காக தமிழர்கள் தொடங்கிய போராட்டம் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டமாக கட்டியமைக்கப்பட்டது. அதாவது, இரண்டு தேசிய இனங்களும் ஒன்றாக சேர்ந்து ஒரே நாட்டிற்குள் வாழ்வதற்கு தேவையான சுயநிர்ணய உரிமையை கோரி தமிழர்கள் போராட்டத்தை தொடங்கினர். தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையை தர மறுத்த சிங்கள தேசிய இனம் (சிங்கள அரசு) அவர்கள் அதுவரை அனுபவித்து வந்த உரிமைகளையும் ஒவ்வொன்றாக பறிக்கத்துவங்கியது. இதை எதிர்த்து, தமிழர்களால் நடத்தப்பட்ட போராட்டங்கள், இலங்கை நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என பொய் பிரச்சாரத்தின் முலம் சிங்கள அரசால் கடுமையாக அடக்கப்பட்டன. நாடு என்ற அமைப்பு தேசிய இனத்தின் சுதந்திரத்திற்கு, அதாவது சுயநிர்ணய உரிமைக்கு பாதிப்பை உண்டாக்கியதை தொடர்ந்து, காலத்தின் கட்டாயத்தால், தமிழர்களுக்கான தனி நாடு என்ற நியாயமான கோரிக்கை உதித்தது.
தமிழகத்தின் சுயநிர்ணய உரிமை
தமிழ்நாடு என்று அழைக்கப்படும் நிலப்பரப்பில், வரலாறு எழுதப்பட்ட காலம் முதல், தமிழ்மொழி பேசி, பொதுவான கலாச்சாரத்தை கொண்ட மக்கள் வாழ்ந்து வருவதற்கான சான்றுகள் ஐயத்திற்கு இடமின்றி நிருபிக்கப்பட்டுள்ளன. தற்போது, இந்தியாவின் ஒருமாநிலமாக உள்ள தமிழ்நாடு, சோழர்கள் காலத்தில், தெற்காசியாவின் பலநாடுகளை வென்று ஒரு பேரரசாக திகழ்ந்த வரலாற்றை யாராலும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. இதேபோன்று, இந்தியாவில் உள்ள பல்வேறு தேசியஇனங்களும், தங்களை தாங்களாகவே ஆண்டு வந்ததற்கான வரலாறு உள்ளது. பல்வேறு தேசியஇனங்களின் ஒருங்கிணைப்பின் முலமே, இந்தியா என்ற நாடு உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்தியா என்ற கூட்டரசு(?) உருவாக்கப்பட்டுள்ளது. சுதந்திர அரசுகளின் செயல்பாட்டை, அதாவது, தேசியஇனங்களின் சுயநிர்ணய உரிமையை, நாடு என்ற அமைப்பு பாதிக்காத வரை, நாடு என்ற அமைப்பை சுதந்திர அரசுகள் (தேசியஇனங்கள்) பாதிப்படைய செய்யாது என்பது நமக்கு தெரியும். ஆகவே, இந்தியா என்ற கூட்டரசின் அங்கமாக உள்ள அனைத்து தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமை கொடுக்கப்பட்டிருந்தால் மட்டுமே, இந்தியா என்ற நாடு (கூட்டரசு) முழு அர்த்தத்தை பெறும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் தேசியஇன போராட்டம்
இலங்கையில், ஈழபோராட்டத்திற்கான கரு கூட உருவாகாத நிலையில், தமிழ்நாட்டில், தேசியஇனத்தின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம், தனி தமிழ்நாடு என்ற உட்சபட்ச கோரிக்கையுடன் தொடங்கிவிட்டது. திராவிட கட்சிகள் தேர்தல்பாதைக்கு வந்தபிறகு, தனி தமிழ்நாடு கோரிக்கை கைவிடப்பட்டு, சுயாட்சி என்ற கோரிக்கை, முன்நிறுத்தப்பட்டது. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி என்ற முழக்கத்தை வைத்தே, தற்போது வரை, திராவிட கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன. ஆனால் நடைமுறை என்று வரும்போது, சுயநிர்ணய உரிமை என்ற கோரிக்கை தண்ணீரில் எழுதப்பட்ட எழுத்தாகவே உள்ளது. அதாவது, திராவிட கட்சிகள், சுயநிர்ணய உரிமையின் உண்மையான அர்த்தத்தை மறைத்து, மக்களை ஏமாற்றி வருகின்றன. வருடா வருடம் தி.மு.க பொதுக்குழுவில், மாநிலசுயாட்சி வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுவதை தவிர, அதை அடைவதற்கான எந்த வகையான வழிமுறையும் நடைமுறை படுத்தியதாக தெரியவில்லை. அ.தி.மு.க அதையும் கூட செய்வதில்லை. அதாவது, திராவிட கட்சி என்ற போர்வையை போர்த்திக்கொண்டு நடிக்க கூட தயாராக இல்லை.
கடந்த அறுபதாண்டு கால வரலாற்றை பார்க்கும் போது, தமிழகத்தில், சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் பின்னோக்கியே பயணித்துள்ளது. அதேவேளையில், சிங்கள பேரினவாத அரசின் ஒடுக்குமுறையின் காரணமாக, ஈழத்தில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் வேகமாக முன்னேறி, தனி ஈழம் என்ற கோரிக்கையுடன், பெரும் மாற்றத்தை அடைந்துள்ளது. இதன் காரணமாக, தேசியஇன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில், ஈழமக்கள், தமிழக மக்களை பின்தொடரவேண்டிய சூழ்நிலை மாறி, தமிழகம் ஈழத்தை பின்தொடர வேண்டிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பின்தொடரல் என்பது கடந்த முப்பது வருடங்களில், தமிழகத்தின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை திசைவிலகச்செய்துள்ளது. ஏனெனில், பின்தொடரல் என்ற பதம், நேரடியாக அர்த்தப்படும்படியாக, அந்த பின்தொடர்வு அமைந்துள்ளது. சுருங்கக்கூறினால், தமிழகத்தின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் என்பது, தனிஈழத்திற்கான போராட்டமே என்று தவறாக அர்த்தம் கற்பிக்கப்பட்டுள்ளது.
ஈழப்பிரச்சனையை பொறுத்தவரை தமிழகத்தில் காலம் காலமாக நடைமுறையில் உள்ள போராட்ட வடிவத்தையும் அப்போராட்ட முறையின் பின்னனியில் உள்ள அரசியலையும், 2009 இன அழிப்பு இறுதிப்போருக்கு பின்னரும் கூட மறுபரிசீலினை செய்ய நாம் தயாராக இல்லை. இது நாள் வரை ஈழப்பிரச்சனை என்பது, தமிழகத்தில் உணர்வுவயப்பட்ட அரசியலால் மட்டுமே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. சுயநிர்ணய உரிமை என்ற பலமான பாரம்பரியம் கொண்ட தமிழக அரசியல் போராட்டத்துடன், ஈழப்போராட்டம் உறுதியா இணைக்கப்படவே இல்லை. எப்பொழுதெல்லாம், தமிழர்களுக்கெதிராக சிங்கள பேரினவாத அரசு தன் அடக்குமுறையை அவிழ்த்து விடுகிறதோ, அப்போது மட்டுமே போராட்டகளம் உருவாக்கப்டுகிறது. இக்களத்தில், போராட்டத்தின் தீர்மானகரணமான சக்தியான, சாமான்ய மக்கள் பங்கேற்பதில்லை. காரணம், சாமான்ய மக்களையும் இணைத்து நடத்தும் அளவிற்கு, அப்போராட்டத்தை தலைமை தாங்குபவர்களின் அரசியல் முற்போக்கானதாக இருப்பதில்லை. அதாவது, தமிழகமக்களின் பிரச்சனைகளையொட்டி, ஈழப்பிரச்சனையை புரிந்துகொள்ளும் அளவிற்கு அரசியல் ரீதியாக மக்கள் பக்குவபடுத்தபடவில்லை. சுருங்ககூறினால், தமிழகத்தின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்துடன், ஈழப்போராட்டம் அரசியல்ரீதியாக இணைக்கப்படவில்லை. இந்த வழக்கம், கடந்த பல பத்து ஆண்டுகளா நடைமுறையில் உள்ளது. தவறான அரசியலும், அதன் தொடர்ச்சியான தவறான நடைமுறையும், ஆயிரம் ஆயிரம் உயிர்களை பலிகொடுத்த பின்னரும், மாறாமல் உயிருடன் உள்ளது. உண்மையில் இதன் காரணம், ஈழத்தின் சுயநிர்ணய உரிமைதான் தமிழகத்தின் சுயநிர்ணய உரிமை என்று கருதப்படுவதேயாகும். இந்தபார்வை, ஈழவிடுதலைக்கோ, தமிழக சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்கோ எந்த வகையிலும் பயன் தருவதில்லை. மாறாக இந்த இரண்டு போராட்டங்களையும் குறித்த தவறான புரிதலை மக்களிடன் ஏற்படுத்துவதுடன், போராட்டங்களை திசைதிருப்பும் வகையிலும் அமைந்து விடுகின்றது. 
சுயநிர்ணய உரிமையும், ஏகாதிபத்திய எதிர்ப்பும்
இலங்கையை பொறுத்தவரை, ஒடுக்கும் தேசியஇனம் சிங்கள தேசியஇனம், ஒடுக்கப்படும் தேசியஇனம் தமிழ் தேசியஇனம் என்பது பட்டவெளிச்சம். சிங்கள பேரினவாத அரசு, தமிழ்தேசிய இனத்தின் மீது கட்டவிழ்த்து விடும் அடக்குமுறையின் காரணமாக, தமிழ்மக்கள் சுயநிர்ணய உரிமையை இழந்ததோடு மட்டுமல்லாமல், அடிப்படை வாழ்வுரிமையையே இழந்துநிற்கின்றனர். ஆகவேதான், வாழ்வுரிமைக்கான, தனி ஈழம் என்ற கோரிக்கை அங்கு வழுப்பெற்றுள்ளது. இன அழிப்புபோர், அக்கோரிக்கையை மேலும் வழுப்படுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் என்பது, வெறும் அடையாள வகைப்பட்ட போராட்டமாவே உள்ளது. திராவிட வாக்கு அரசியல் கட்சிகளும் சரி, தமிழ்தேசியம் பேசும் சமுக இயக்கங்களும் சரி, காவிரிக்காக கர்நாடகாவுடனும், முல்லைபெரியாருக்காக கேரளாவுடனும், கிருஷ்ணாவுக்காக ஆந்திராவுடனும் சண்டையிடுவதை அல்லது பேரம்பேசுவதை மட்டுமே சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் என நம்மை நம்பவைக்கின்றன. இதைதாண்டி, ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராக ஏதேனும் அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டால், அதை கண்டித்து தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களையும் கூட, தமிழகத்தின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் என கணக்கு காண்பிக்கின்றன. அதாவது, ஈழத்திற்காகவும், அண்டைமாநில அரசுகள் செய்யும் அநீதிகளுக்காகவும் மட்டுமே மத்திய அரசை எதிர்த்து அடையாள வகை போராட்டம் நடத்தும் இவர்கள், மத்திய அரசின் ஏகாதிபத்திய ஆதரவு கொள்கையின் காரணமாக, தமிழகத்தின் சுயநிர்ணய உரிமை, தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அடகுவைக்கப்படும் மிக முக்கியமான நிகழ்வுபோக்கை எதிர்த்து ஒருபோதும் குரல் கொடுப்பதில்லை.
தமிழக விவசாயிகளின் விளைநிலம் (நம் மண்), தூரதேசத்திலிருந்து நாட்டை சுரண்ட வந்த விதேசிகளால் களவாடப்படுவதைபற்றி இவர்களுக்கு கவலைஇல்லை. தமிழகத்தின் பாரம்பரிய விவசாயமுறை நவீனம் என்ற புனைப்பெயரில், ஏகாதிபத்திய கொள்ளை லாபத்திற்காக கொலைசெய்யப்படுவதை பற்றி இவர்களுக்கு கவலைஇல்லை. விதை நெல்லை களவாடி, இரசாயன உரத்தால் நம் மண்ணை உயிரிழக்கசெய்யும் ஏகாதிபத்தியத்தின் விளைபொருளான லாபவெறி, காலம் கலமாக நாம் பயன்படுத்தி வந்த பொருட்களை கூட, இனி அயலான் அனுமதி இல்லாமல் உபயோகிக்க முடியாது என்ற கேவலமான நிலைமைக்கு நம்மை தள்ளியுள்ளது குறித்த அறிவும் கூட அவர்களுக்கு இல்லை.
ஏகாதிபத்தியங்களுக்கு சேவை செய்வற்காகவே, மாநிலங்களிடம் மிச்சமிருக்கும்   உரிமைகளையும் மத்திய அரசு முழுவதுமாக பிடுங்க நினைக்கின்றது. தமிழக மாணவர்களுக்கு கல்வி வழங்கும் முழுபொறுப்பும் மாநில அரசுக்கே உள்ளது. ஆனால், கல்வி பொதுப்பட்டியலில் உள்ளதால், தமிழக மாணவர்களின் கல்வி குறித்து, தமிழக அரசால் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது. இதனால், உயர்கல்வியில் இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த முடியாத நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. ஏகாதிபத்திய ஆதரவு கொள்கையின் காரணமாக, தனியார்மயத்தை ஊக்குவிக்கும் செயலில் ஈடுபடும் மத்திய அரசு, உயர்கல்விக்கு மானியம் வழங்கும் கொள்கையிலிருந்த பின்வாங்கியுள்ளது. இக்கொள்கையை, மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்படுகின்றது. இதனால், தமிழகத்தில் அரசு கல்விநிலையங்களில், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உரிய வசதிகள் எதுவும் செய்துதரப்படாத நிலையில், தமிழக மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்காக, இலட்சக்கணக்கில் பணம் செலவிட்டு, தனியார் கல்வி நிறுவனங்களை நாடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். தனியார்மயத்தின் விளைவாக, புற்றீசல்போல் உருவாகிவரும் தனியார் கல்வி நிலையங்கள், கல்வியை வியாபாரமாக்கி, தொடக்கல்விக்கே இலட்சக்கணக்கில் பணம் வசூலிக்கின்றன. மத்தியஅரசு தாராளமய கொள்கையை நடைமுறைபடுத்துவதன் விளைவாக, பட்ஜெட்டில் கல்விக்காக ஒதுக்கும் தொகை தொடர்ச்சியாக குறைத்துவருகின்றது. இதையே மாநில அரசுகளும் பின்பற்றுகின்றன. பணம் கொடுத்தால் மட்டுமே சிறந்த கல்வி என்ற நிலையில், கல்விகடன் என்ற பெயரில், தமிழக மாணவர்கள் படிக்கும் போதே கடன்காரர்களாக மாற்றப்படுகின்றனர். இப்படிப்பட்ட நிலையில், தனியார் கல்வி கூடங்களை அரசுடமையாக்க வேண்டும் என்று மாநில அரசிடம் வெறுமனே, கோரிக்கை மட்டும் வைப்பவர்கள், அந்த உரிமை மாநில அரசுக்கு உள்ளதா? அதை எப்படி சாத்தியப்படுத்த போகிறோம் என்பதை கூட யோசிப்பது கிடையாது.
தமிழகத்தில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்கள், தமிழக தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான, சங்கம் வைக்கும் உரிமையை மறுப்பதுடன், பல ஆண்டுகள் போராடிப்பெற்ற 8 மணிநேர வேலை என்ற உரிமையையும் மறுத்து வருகின்றது. பன்னாட்டு நிறுவனங்கள் பகல் கொள்ளையடிப்பதற்காக, சிறப்பு பொருளாதாரமண்டலங்கள் என்ற பெயரில், தமிழகத்திற்குள் முளைத்து வரும் சுதந்திர தீவுகளில், தமிழக அரசின் தொழிலாளர் நல சட்டங்கள் எதுவும் செல்லுபடியாகாது. சுருங்கசொன்னால், தமிழக அரசுக்கு அம்மண்டலங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் கிடையாது.
உலகநாடுகள் அனைத்தும் மக்களின் கடும் எதிர்ப்பை கண்டு அஞ்சி பேராபத்தை விளைவிக்ககூடிய அணு உலைகளை முடிவரும் நிலையில், அந்நாடுகளிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட நிறுவனங்கள், விற்றுபோகாத தங்கள் அணு உலைகளை இந்தியாவின் தலையில் கட்டுவதற்கான ஏற்பாட்டை, அணு ஒப்பந்தம் என்ற பெயரில் மத்திய அரசு நிறைவேற்றிதந்துள்ளது. தமிழ்நாட்டில், ஏற்கனவே 5 அணு உலைகள் இயங்கிவரும் நிலையில், ஒப்பந்தத்தின் விளைவாக மேலும் பல அணு உலைகள் நிறுவப்பட உள்ளதாக கூறப்படுகின்றது. மத்தியஅரசு நடைமுறை படுத்திவரும் தாராளமய மற்றும் தனியார்மய கொள்கையின் விளைவால், பன்னாட்டு முதலாளிகள் இலாபம் அடைவதற்காக, தமிழக மக்களின் உயிர் பணயம் வைக்கப்படுகிறது.
இறையாண்மையுடைய ஒரு அரசின் குடிமகன், அந்த அரசுக்கு உட்பட்ட நிலபரப்பில் உருவாக்கப்படுள்ள சாலையில், எந்தவித வரியும் செலுத்தாமல்  சுதந்திரமாக சுற்றி திரியலாம். இதற்குமாறாக, தமிழகத்தில் நம் சாலையை, நாம் உபயோகிப்பதற்காக தனியாருக்கு பணம் கொடுக்கவேண்டிய சூழல் உருவாயுள்ளது. தனியார்மய கொள்கை, நலத்திட்டங்களுக்கு அரசு பணம் செலவிடுவதை குறைக்கசெய்கிறது அல்லது முற்றிலும் நிறுத்தசெய்கிறது. இதன் காரணமாக, ஆண்டாண்டு காலமாக, அரசு செய்துவரும் நலத்திட்ட பணிகள் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன. அதுவரை, சேவைகளை இலவசமாக பெற்றுவந்த மக்கள், தற்போது தனியாருக்கு பணம் கொடுத்து அச்சேவைகளை பெறவேண்டியுள்ளது. சாலைகள் அமைக்கும் பணி, மருத்துவ வசதி செய்துதரும் பணி மற்றும் பல்வேறு நலப்பணிகளை அரசு தனியாரிடம் வழங்கியுள்ளது. இதன்காரணமாக, நம் மண்ணில், நம் சாலையை, நாம் உபயோகபடுத்த கூட, பன்னாட்டு நிறுவங்களுக்கு பணம் கொடுக்கவேண்டிய அவலத்திற்கு ஆற்பட்டுள்ளோம்.
தமிழகத்தின் உயிர் ஆதாரமான மண்ணும், நீரும் கூட தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு, அதன் மீதான நம் உரிமை பறிக்கப்பட்டு வருகிறது. பன்னாட்டு மற்றும் தனியார் நிறுவனங்களின் இலாப வெறியின் காரணமாக, தமிழகத்தின் இயற்கைவளம் சுரண்டப்பட்டும் மாசுபடுத்தப்பட்டும் வருகின்றன. ஏகாதிபத்திய ஆதரவின் விளைபொருட்களான தனியார்மயம் மற்றும் தாராளமயக்கொள்கையினால், தமிழக மக்கள் அனுபவித்துவரும் துன்பத்தை போக்கவும், தமிழக சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டும் போராட்டத்தின் மிக முக்கிய பங்கான ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தை நாம் இன்னும் தொடங்கவில்லை என்பது வருந்தத்தக்க விஷயமாகும்.
தவறான கண்ணோட்டம்
வெவ்வேறு நிலபரப்பில் வாழும் மக்கள், அந்தந்த நிலபரப்பின் வரலாற்றின் தொடர்ச்சியாக வெவ்வேறுவகை சமுக சூழலில் வாழ்கின்றனர். அந்த சமுகத்திலிருந்து பெறப்படும் உணர்வால், வெவ்வேறு கலாச்சாரத்துடனும், உளவியலுடனும் வாழ்கின்றனர். இவ்விரு நிலபரப்புகளுக்கும் வரலாற்று காலம்தொட்டு, கொடுக்கல் வாங்கல் இருந்து வந்தாலும் அது சமுக சூழ்நிலையின் அடிப்படையை நிர்ணயிக்கும் காரணியாக கருதமுடியாது. ஆகவே, ஒரே மொழிபேசுபவர்கள் எல்லாம், ஒரே தேசியஇனம் என்று கூறிவிட முடியாது. ஈழமக்களை நாம், தொப்புள்கொடி உறவுகள் என்று கூறுவதன் முலம், ஈழப்போராட்டத்துற்கு வழுசேர்க்க முயல்கின்றோம். ஆனால், இந்த சொல்லாடலே தமிழகத்தில் ஈழபோராட்டாத்திற்கு ஆதரவாக கட்டியமைக்கவேண்டிய போராட்டத்தை திசைவிலகச்செய்து வருகின்றது. தமிழகத்தில் இருந்து கொண்டு, தமிழக அரசியல் சூழலையும், மக்கள் வாழ்நிலையையும் கவனத்தில் கொள்ளாமல், முழுக்க, முழுக்க ஈழ ஆதரவு கோசங்களை மட்டுமே முன்னெடுத்து செல்லும் செயல், ஈழதேசிய இனத்தையும், தமிழக தேசியஇனத்தையும் ஓன்றாக பார்ப்பதன் விளைவேயாகும். இந்தபார்வை, ஈழத்தையும், தமிழகத்தையும் ஒரேநாடாக பார்க்க தூண்டுகிறது. அதனாலேயே, ஈழஆதரவாளர்கள், ஈழவிடுதலை என்பதை, தமிழகமக்களின் விடுதலையாக பார்க்கின்றனர். தமிழகத்தின் சுயர்ணய உரிமை, ஏகாதிபத்தியத்தினால் நசுக்கப்பட்டு வரும் நிலையில், ஈழத்திற்கு ஆதரவாக ஏகாதிபத்திய நாடுகள் செயல்படுகின்றன என்ற காரணத்திற்காக, தமிழகத்தை மறந்து ஏகாதிபத்திய ஆதரவுகோசங்கள் ஈழஆதரவாளர்களால் தமிழகத்திலிருந்தே எழுப்பப்படும் ஒரு கேவலமான நிலை உருவாகியுள்ளது. இதனால், ஏகாதிபத்தியத்தால் (தனியார்மயம்,தாராளமயம்) பாதிக்கப்பட்ட சாமான்ய மக்களை, ஈழஆதரவுபோராட்டத்துடன் இணைக்க முடிவதில்லை. ஈழதேசிய இனத்தையும், தமிழக தேசிய இனத்தையும் ஒரே தேசியஇனமாக கருதுவது, ஈழபோராட்டத்திற்கு தமிழகமக்கள் செய்யவேண்டிய கடமையிலிருந்து தவறச்செய்வதோடு, தமிகத்தில் கட்டியமைக்க படவேண்டிய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தையும் மறுக்கச்செய்கின்றது. ஈழத்தமிழனையும், தமிழகதமிழனையும் ஒரே தேசியஇனமாக கருதுவது எந்தவகையிலும், இருவருக்கும் நன்மையை தருவதில்லை என்றாலும், அவ்வாறு ஈழமக்களை பிரித்து பார்ப்பது “ஈழமக்கள் நம் தொப்புள்கொடி உறவுகள்” என்று காலம் காலமாக கூறிவரும் சொல்லின் புனிதத்தை கெடுத்துவிடும் என்று ஈழஆதரளவாளர்கள் கருதுகின்றனர்.

என்னசெய்ய வேண்டும்?
தமிழகத்தில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை கட்டியமைப்பதன் முலமே ஈழபோராட்டத்திற்கு நாம் தோள்கொடுக்க முடியும். அதற்கான வேலையை செய்யாமல், இங்கிருந்துகொண்டு ஈழவிடுதலைக்கு குரல்கொடுப்பது மட்டும் எந்தவகையிலும் ஈழமக்களுக்கோ, தமிழக மக்களுக்கோ நன்மையை தரப்போவதில்லை. தமிழகத்தில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் என்பது அளவுரீதியில் ஏகாதிபத்திய எதிர்ப்புபோராட்டமே. இதை உணர்ந்து தமிழகத்தில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் வலுவாக கட்டியமைக்கப்படுவதே, ஈழமக்களுக்கும், தமிழகமக்களுக்கும் அனைத்து வகையான அடிமை நுகத்தடிகளிலிருந்தும் விடுதலையை பெற்றுதரும்.

-அசீப்

Time

Total Page Views

About this blog

நம்மைச்சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகள் , அதன் பின்னணியிலிருக்கும் அரசியல் , அந்த நிகழ்வை நகர்த்தும் அடிப்படை,அதற்கான தேவை, என நாங்கள் புரிந்துகொண்டதை , நாங்களே பகிர்ந்து கொள்ளவும் , நாங்கள் பகிர்ந்து கொண்டதை , உங்களோடு பகிர்ந்து கொள்ளவுமே இந்தத் தளம்.
Powered by Blogger.

Followers

Blog Archive