சமச்சீர் கல்வி தேவையா?


ஜெயலலிதா முதல்வர் ஆனவுடன், "இந்தமுறையாவது அம்மா, தடாலடியான முடிவுகள் எதுவும் எடுக்காமல் இருப்பாரா?" என்பதே பெரும்பாலானவர்கள் பேசக்கேட்டோம். அப்படி கேட்டவர்களின் மூக்கை உடைப்பதற்காகவோ என்னவோ, எடுத்த எடுப்பிலேயே, எதைபற்றியும் யோசிக்காமல், யாரைபற்றியும் கவலைபடாமல் தினந்தோறும் எதாவது ஒரு அதிர்ச்சி தரும் அறிவிப்புகளை வெளிட்டு கொண்டிருக்கிறார் நம் முதல்வர்.

இதில், கிடப்பில் போடப்பட்ட புதிய தலைமைச்செயலகம், மறைமுகமாக, மூடுவிழா கானபோவதாக அறிவிக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவை அடங்கும். இதுபோன்ற முடிவுகள் அரசின் பணத்தை வீணடிக்கும் செயல் என்ற அளவில், இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடியாக, பெரும் அளவுக்கு பாதிப்பு ஏற்படபோவதில்லை. ஆனால், சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்கபோவதாக அ.தி.மு.க அரசு எடுத்துள்ள முடிவு, இனிவரும் காலங்களில், ஜெயலிதாவின் அராஜக நடவடிக்கைகள், "டாப் டென்" பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கபோவது உறுதி. ஏனென்றால், இந்த முடிவு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் அந்த அளவுக்கு குழப்பத்தை உண்டாக்கி உள்ளது. 

தற்போது செயல்படுத்த போவதாக அறிவிக்கப்பட்ட, சமச்சீர் கல்வி என்பதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால், அரசு பள்ளியில், கிழிந்த சட்டையை அணிந்துகொண்டு, பசித்த வயிற்றுடன் இலவசமாக(இது அரசின் கடமை) படிக்கும் மாணவனும், தனியார் பள்ளியில் ஆயிரம் ஆயிரம் ரூபாய்களை செலவழித்து அணைத்து வசதிகளுடனும் படிக்கும் மாணவனும், ஒரே பாட திட்டத்தில் பயில்வதாகும். அதாவது, அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவன், கூட்டல் கழித்தல் விதிகளை கற்றுக் கொண்டிருக்கும்போது, தனியார் பள்ளியில் பயிலும் மாணவன், அதைவிட மேலான அல்ஜீப்ரா விதிகளை கற்றுகொண்டிருப்பது என்று இல்லாமல். அனைத்து பள்ளி மாணவர்களும் ஒரேவகையான பாடத்திட்டத்தில் பயிலும் வகையில் ஏற்படுத்தபட்ட திட்டம்தான் இந்த சமச்சீர் கல்விதிட்டம்.

நாம் ஏற்கனவே சொன்னதுபோல், கிழிந்த சட்டையை அணிந்துகொண்டு பணக்கார மாணவன் படிக்கும் பாடத்திட்டத்தை படிப்பதால் மட்டும், நம் ஏழை மாணவனுக்கு கல்வியில் சமத்துவம் கிடைத்து விட்டதாக நாம் கருத முடியாது. ஆனால், தற்போது இருந்துவரும் நான்கு வகையான(ஏற்ற, தாழ்வான) கல்வித்திட்டத்தை விட, இந்த சமச்சீர் கல்வி திட்டம் முற்போக்கான விஷயம் என்றவகையில் நாம் இதை ஆதரித்தே ஆகவேண்டும். கல்வியில் உண்மையான சமத்துவத்தை நிலைநாட்ட, எதையும் புரிந்துகொள்ளாமல், வெறுமனே மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் கல்விமுறையை மாற்றி, அறிவியல்பூர்வமான கல்விமுறையை உருவாக்க, ஆசிரியர் என்ற சர்வாதிகாரி(பெரும்பாலானோர்) கற்பிக்கும் பாடத்தை, எதிர்கேள்வி கேட்காமல் கவனிக்கும் அடிமை கல்விமுறையை மாற்றி, ஜனநாயக கல்விமுறையை உருவாக்க நடத்தப்பட்டுவரும் போராட்டத்தில் சமச்சீர் கல்விமுறையை அமுல்படுத்த வைப்பது ஒரு முக்கியமான மைல் கல் என்பதை நாம் உணரவேண்டும். 

சமச்சீர் கல்வி திட்டம் என்பது, ஏதோ செவ்வாய் கிரகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட திட்டம் என்பதை போல் பலர் யோசிக்கின்றனர். உண்மையில், தமிழ்நாட்டை தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் சமச்சீர் கல்விமுறை பலவருடங்களாக நடைமுறையில் உள்ளது. அப்படியென்றால், மற்ற மாநிலங்களில், மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என்று, பள்ளிகளில் பலவகைகள் கிடையாது, அதாவது ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு பாடத்திட்டம், அந்த பாடதிட்டத்திற்கு ஏற்றாற்போல் ஒவ்வொரு கட்டணம் என்றெல்லாம் கிடையாது. இந்த மாநிலங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் எல்லோரும் முட்டாள்களா? சமச்சீர் கல்வித்திட்டத்தை நடைமுறை படுத்துவதால், அவர்களின் கல்வித்திட்டம் சீரழிந்து விட்டதா? இல்லைதானே? அப்படியென்றால், இத்தனை நாளும் தமிழ்நாட்டில், இப்படிப்பட்ட வெவ்வேறு பாடத்திட்டங்களை கொண்ட பள்ளிகள், சிறந்த படிப்பை தருகிறேன் என்ற பெயரில், கல்வியை கேவலமாக வியாபாரம் செய்துவந்ததை நாம் பார்த்துகொண்டுதானே இருந்திருக்கிறோம்? 

கல்வியை வியாபாரிகளிடமிருந்து மீட்டெடுத்து, மெக்கானிக் கடைகளிலும், டீ கடைகளிலும், வனாந்தரங்களில் ஆடு மேய்த்துக் கொண்டும், தங்கள் எதிர்காலத்தை தொலைத்துகொண்டிருக்கும் நம் குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க, காலம் காலமாக நடத்தப்பட்டு வரும் நீண்ட போரட்டத்தில், சமச்சீர் கல்வி என்ற ஒரு சிறு கோரிக்கையை நிறைவேற்ற சம்மதித்தது தி.மு.க அரசு. பிஞ்சுகைகள் காய்த்துப்போக வேலை செய்யும் நம் குழந்தைகள் பற்றியோ, அவர்களை படிக்கவைக்க வழிதெரியாமல் தற்கொலை செய்துகொள்ளும் நமது தாய்மார்கள் பற்றியோ, கொஞ்சம்கூட கவலைபடாமல், கேவலம் அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக, அதோடுகூட, கல்வியை வியாபாரமாக்கி அதன்மூலம் கோடி கோடியாக சம்பாதிக்கும் திருட்டு கும்பலுக்கு ஆதரவாக, சமச்சீர் கல்வியை நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது அ.தி.மு.க அரசு.

இதைபற்றி கொஞ்சமும் கவலைகொள்ளாமல், அம்மாவின் தாளத்திற்கு தப்பாமல் ஆடிக்கொண்டு இருக்கின்றது தே.மு.தி.க என்ற, பெயரளவிலான எதிர்கட்சி. பொதுவுடைமை பேசிக்கொண்டு, தங்களை கம்யூனிஸ்ட்கள் என்று கூறிக்கொள்ளும், சி.பி.ஐ, சி.பி.எம் கட்சிகளும் கூட இதுகுறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை. இதனிடையே, சமச்சீர் கல்வி சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ள அரசு, அதன்மூலம் அடுத்த கல்வி ஆண்டில்கூட தாங்கள் விரும்பினால்தான் சமச்சீர் கல்வி திட்டத்தை செயல்படுத்துவோம் என்று மறைமுகமாக கூறியுள்ளது. அதாவது, இனிமேல் சமச்சீர் கல்வி திட்டம் வந்தால் வரலாம், வராமலும் போகலாம் என்ற நிலை உருவாகிஉள்ளது.

இனி இந்த அரசியல் கட்சிகளை நம்பி பயன் இல்லை. மக்கள் ஒருங்கிணைந்து சமச்சீர் கல்வியை நடைமுறை படுத்தவேண்டி நடத்தும் போராட்டமே ஆட்சியாளர்களை செவிசாய்க்க வைக்கும் என்பதை எல்லோரும் உணரவேண்டும். சமச்சீர் கல்வியை நடைமுறை படுத்த மக்கள் இயக்கத்தை கட்டி அமைப்பதும், அந்த இயக்கத்திற்க்கு அனைத்துதரப்பு மக்களின் ஆதரவையும் பெறுவதுமே இப்போது நம் முன் உள்ள கடமையாகும்.

நண்பர்களே! நமக்கு தெரிந்த வழிகளில், சமச்சீர் கல்வியின் முக்கியதுவத்தை அனைவரும் உணரும்படி செய்வோம்! நம் குழந்தைகளின் எதிர்காலத்தை ஒளிபெற செய்வோம்!

Time

Total Page Views

About this blog

நம்மைச்சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகள் , அதன் பின்னணியிலிருக்கும் அரசியல் , அந்த நிகழ்வை நகர்த்தும் அடிப்படை,அதற்கான தேவை, என நாங்கள் புரிந்துகொண்டதை , நாங்களே பகிர்ந்து கொள்ளவும் , நாங்கள் பகிர்ந்து கொண்டதை , உங்களோடு பகிர்ந்து கொள்ளவுமே இந்தத் தளம்.
Powered by Blogger.

Followers

Blog Archive