தாமதமாக கிடைக்கும் நீதி, அநீதிக்கு சமம்!



இன்று உச்சநீதி மன்றம், சமச்சீர்கல்வியை தமிழக அரசு இந்த வருடமே நடைமுறைபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், இன்னும் பத்து நாட்களுக்குள் சமச்சீர் புத்தகங்களை பள்ளிகளுக்கு வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதைதொடர்ந்து, சமச்சீர் கல்விக்காக போராடிய, மாணவர்கள், பெற்றோர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் அனைத்து தரப்பினரும், நீதிகிடைத்து விட்டதாகவும், நியாயம் ஜெயித்துவிட்டதாகவும் மார்தட்டிகொள்கின்றனர்.

உண்மையில் நடந்தது என்ன?

தற்போது காலாண்டு தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கவேண்டும் நம் பிள்ளைகள். நியாயமாக, பள்ளிகள் ஜூன் மாத முதல்வாரத்தில் திறந்திருந்தால் தற்போது மூன்றில் ஒருபங்கு பாடங்கள் நடத்தி முடிக்கபட்டிருக்கும். பொதுத்தேர்வை சந்திக்கும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அரைவாசி பாடம் நடத்தி முடிக்கபட்டிருக்கும். ஆனால் நடந்தது என்ன? தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக, இரண்டரை மாதங்களாக, பாடப்புத்தகம் எதுவும் இல்லாமல் பள்ளிகள் நடைபெற்றன. இந்த பெருமை அனைத்தும் நம் முதல்வர் ஜெயலலிதா அவர்களையே சேரும். (இதற்க்கு நாம் அவருக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்போது நன்றி சொல்லிக்கொள்ளலாம்). இதில் கவனிக்கத்தக்க இன்னொரு விஷயம் உள்ளது.

மே 22 ஆம் தேதி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க அரசின் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூடத்தில் சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு நிறுத்தி வைக்கபோவதாக முடிவெடுக்க பட்டது. (அப்போது பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டிருந்தது) இந்த செய்தி வெளியான உடனேயே சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசின் முடிவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது (உயர்நீதி மன்றமும் கோடை விடுமுறையில் இருந்தது). நீதிமன்றத்தின் விடுமுறைகால அமர்வின் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விடுமுறைகால அமர்வு என்பதால், விசாரனைக்குமுன், வழக்கின் முக்கியத்துவத்தை அறிந்தபின்பே, அவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாமா, இல்லையா என்பதை நீதிபதிகள் முடிவு செய்வார்கள். அதேபோல், சமச்சீர் வழக்கின் முக்கியத்துவமும் நீதிபதிகளால் ஆராயப்பட்டு(?!), சம்பிரதாயப்படி, தமிழகஅரசுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணை கிட்ட தட்ட பத்துநாட்களுக்கு மேல் ஒத்திவைக்கப்பட்டது. 

இதற்க்கிடையில், தமிழக அரசு சமச்சீர் கல்வி சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்ததுடன், பள்ளிகள் சிறிது தாமதமாக ஜூன் 15 ஆம் தேதி திறக்கும் என்றும் அறிவித்தது. இதைதொடர்ந்து, சட்ட திருத்தத்தை எதிர்த்து ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டன. அதுவரை கவனிக்கபடாமல் இருந்த சமச்சீர் வழக்கு அனைவராலும் கவனிக்கப்பட ஆரம்பித்தது. ஜூன் 11 ஆம் தேதி, சென்னை உயர்நீதி மன்றம் சமச்சீர் கல்வி சட்ட திருத்தத்திற்கு தடைவிதித்து உத்தரவிட்டது. இதனால், சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே நடைமுறை படுத்தவேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு ஏற்பட்டது. அனைவரும் எதிர்பார்த்தபடி, தமிழக அரசு, உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது. 

உச்சநீதிமன்றம், அரசின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்துவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், திருடனை காவலுக்கு வைத்த கதையைப்போல், சமச்சீர் புத்தகத்தை ஆராய்வதற்காக, தமிழக அரசே ஒரு குழுவை அமைக்கவேண்டும் என்றும், அந்த குழுவின் அறிக்கை சென்னை உயர்நீதி மன்றத்தில் சமர்பிக்கபட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, யாரெல்லாம் சமச்சீர் கல்விக்கு  எதிராக உள்ளார்களோ அவர்களை கொண்டு தமிழ அரசு  நிபுணர்கள் குழுவை(?) அமைத்தது. அக்குழு, 10000 பக்கங்களுக்கு மேலுள்ள, சமச்சீர் புத்தகங்களை, நான்கே அமர்வுகளில்(அதாவது 8 மணி நேரத்தில்) ஆராய்ந்து முடித்து, தனது அறிக்கையை ஜூலை 6 ஆம் தேதி சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது(அதுவும், உச்சநீதி மன்றம் விதித்த கடைசி நாளில்). அந்த அறிக்கையில் சமச்சீர் புத்தகங்கள் பயன்பட தகுதியற்றவை என (கொடுத்த காசுக்கு மேல் கூவி) நிபுணர்குழு கூறியது. 

உச்சநீதி மன்ற உத்தரவுபடி நிபுணர்குழு அறிக்கை சமர்பிக்கப்பட்ட உடனேயே விசாரணையை தொடங்கி, தினந்தோறும் விசாரணை நடத்தி, ஒருவாரத்திற்குள் உயர்நீதி மன்றம் விசாரணையை முடிக்கவேண்டும். ஆனால், அறிக்கை சமர்பிக்கபட்டபின், உயர்நீதி மன்றம், விசாரணையை மூன்று நாட்களுக்கு ஒத்திவைத்து, அதன்பின் சிலநாட்கள் விசாரணை நடத்தப்பட்டு, நான்குநாட்கள் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இறுதியாக ஜூலை 18 ஆம் தேதி  தீர்ப்புவழங்கியது. அந்த தீர்ப்பில், தமிழக அரசு சமச்சீர் கல்வி சட்டத்தில் கொண்டுவந்த திருத்தத்தை ரத்துசெய்து, இந்தவருடமே சமச்சீர் கல்வியை நடைமுறைபடுத்தவேண்டும் என்றும், 22 ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் சமச்சீர் புத்தகங்களை வழங்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது. அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், கொஞ்சம்கூட கூச்சப்படாமல், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது ஜெயலலிதா அரசு.


உச்சநீதிமன்றம் இம்முறை, தொடக்கநிலையிலேயே தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், சமச்சீர் புத்தகம் வழங்க உயர்நீதி மன்றம் விதித்த கெடுவை ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து, வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அதன் பின் நடைபெற்ற விசாரணைக்கிடையே, புத்தகம் வழங்கும் காலத்தை ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை மீண்டும் நீட்டிப்பு செய்தது.  கிட்டத்தட்ட 18 நாட்கள் கழிந்த நிலையில் உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. அந்த தீர்ப்பில், சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமுல்படுத்தவேண்டும் என்று, உயர்நீதி மன்றம் வழங்கிய உத்தரவு சரிதான் என்று கூறியுள்ள உச்சநீதி மன்றம், அதற்க்கான 25 காரணங்களையும் கூறியுள்ளது. 

நின்று, நிறுத்தி, ஆராயப்பட்டு முடிவெடுக்கபடவேண்டிய பல்வேறு வழக்குகளை, நீதிமன்றங்கள், ஒரேநாளில் தள்ளுபடி செய்வதை நாம் தினந்தோறும் பார்க்கலாம். அப்படிப்பட்ட நீதிமன்றங்களில் சமச்சீர் வழக்கு விசாரணையின்போது, பிள்ளைகள் புத்தகம் இல்லாமல் மாதக்கணக்கில் பள்ளிசென்று வருகின்றனர் என்ற செய்தி, பல்வேறு தருணங்களில், வழக்கரிஞர்களால் எடுத்துசொல்லபட்டும், நீதிபதிகள் அதுகுறித்து பெரிதும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. நீதிமன்றங்களில் மாணவர் நலன் கருதி இவ்வழக்கிற்காக, கூடுதல் கவனம் செலுத்தி, கூடுதல் நேரம் ஒதுக்கபடாவிட்டாலும், தேவையில்லாத கால தாமதம் கூட தவிர்க்கப்படவில்லை என்பதே உண்மை. 

"தாமதமாக கிடைக்கும் நீதி, அநீதிக்கு சமம்!"
சமச்சீர் பாடபுத்தகத்தில் இது போதிக்கப்படும் என்று நம்புவோம்.

- அசீப் 

அம்மாவுக்கு இரண்டாவது ஆப்பு!


அம்மாவுக்கு இரண்டாவது ஆப்பு!




'எவ்வாறு உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் நடக்கும் 2 ஜி ஊழல் வழக்கில் ஜாமீன் வேண்டி உச்ச நீதிமன்றத்திலேயே மனு செய்து, அதை உச்ச நீதிமன்றமும் நிராகரித்து எப்படி தி.மு.க.வினர் அவமானப்பட்டார்களோ? அதே மாதிரியான அவமானத்தைதான் அ.தி.மு.க. அரசும் படப்போகிறது என்பது நிஜம்!'

கடந்த ஜூலை 18 ஆம் தேதி சமச்சீர் கல்வி குறித்த சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கிடைத்தப் பிறகு மேலே உள்ளவாறு நாங்கள் கூறியிருந்தோம். அது இன்று நிஜமாகியிருக்கிறது!

கடந்த தி.மு.க. ஆட்சியில் கொண்டுவந்த திட்டம் சமச்சீர் கல்வித் திட்டம், அதை நாம் ஏன் அமல் படுத்தவேண்டும்? என்கிற ஈகோவோ அல்லது சிறந்த முழுமையான சமச்சீர் கல்வியை மாணவர்களுக்கு கொடுக்கவேண்டும் என்கிற நல்லெண்ணமோ தமிழக அரசுக்கு இல்லை. மாறாக, தனியார் பள்ளிகளின் தூண்டுதலுக்கு அரசு படிந்தது என்பதே நிதர்சன உண்மை!

ஏனெனில், அரசு மற்றும் தனியாரில் வேலை பார்க்கும் ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை தங்கள் பிள்ளைகளுக்கு தரமான கல்வி கிடைக்கவேண்டுமென ஆசைப்பட்டுத்தான் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சேர்க்கின்றனர். சமச்சீர் கல்வி அமலானால் அனைத்து அரசு மற்றும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஒரே மாதிரியான சமமான, சீரான கல்வி வந்துவிடும், அவ்வாறு வந்தால் கல்வியை வியாபாரமாக்கிய தனியார் பள்ளிகளுக்கு பெருத்த பொருளாதார இழப்பு ஏற்படும். ஏனென்றால், மேற்கூறிய அரசு மற்றும் தனியாரில் வேலை பார்பவர்கள் குறைந்த செலவில் அரசு பள்ளியிலேயே தங்கள் பிள்ளைகளைச் சேர்த்து விடுவார்கள். அவ்வாறு சேர்த்தால் தங்களது கஜானா காலியாகிவிடும் என்பதை அறிந்த தனியார் முதலாளிகள் 'செட்டில்' செய்து அரசை பணியவைத்தனர். அரசும் அதனாலேயே எதையும் கண்டுகொள்ளாமல் உச்ச நீதிமன்றம் வரை சென்றது. தற்போது அதே உச்ச நீதிமன்றம் தனியாருக்கும், தமிழகத்தை ஆளும் அம்மாவுக்கும் ஆப்பு வைத்ததுபோல் தீர்ப்பைக் கூறியிருக்கிறது! 

இனியாவது தமிழக அரசு எதிலும் தனியாருக்கு சாதகமாக செயல்படாமல் மக்கள் நலனில் அக்கறைக் கொண்டு செயல்படவேண்டுமென்பதே அனைவரின் விருப்பம்!

குறிப்பு: சமச்சீர் கல்வியில் அரசு மேற்கொண்ட இந்த வகையான நடவடிக்கை நிச்சயம் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலிக்கும்!

- உமர் முக்தார் 

விரைவில்...


Time

Total Page Views

About this blog

நம்மைச்சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகள் , அதன் பின்னணியிலிருக்கும் அரசியல் , அந்த நிகழ்வை நகர்த்தும் அடிப்படை,அதற்கான தேவை, என நாங்கள் புரிந்துகொண்டதை , நாங்களே பகிர்ந்து கொள்ளவும் , நாங்கள் பகிர்ந்து கொண்டதை , உங்களோடு பகிர்ந்து கொள்ளவுமே இந்தத் தளம்.
Powered by Blogger.

Followers

Blog Archive