மீண்டும் மீண்டும்!

மீண்டும் மீண்டும்!

இராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) மறுபடியும் தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டது. உலக அரசியல் வரலாற்றில் அதிக தடவை கூட்டணி மாறிய கட்சி பா.ம.க.வாகத்தான் இருக்குமென நினைக்கிறேன்!. அந்தளவிற்கு ஒவ்வொரு தேர்தலின் போதும், தேர்தல்  முடிந்த பின்னரும் கூட்டணி மாறுவது இராமதாசுக்கு வாடிக்கை (போதை போல்) ஆகிவிட்டது.

நடைபெற்று முடிந்த தேர்தலுக்கு முன்பாக கூட்டணி பற்றிய பேச்சு அடிபடுகையில், கலைஞரை பா.ம.க.வைச் சேர்ந்த சிலர் அடிக்கடி சந்தித்துவிட்டு வந்தனர். சந்திப்பின்போது இராமதாசால் ஒரேயொரு கோரிக்கை மட்டுமே வைக்கப்பட்டது. அது, இராமதாசின் மகனான முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த அன்புமணி இராமதாசுக்கு மாநிலங்களைவை உறுப்பினர் பதவி கொடுக்க வேண்டுமென்பதே!

இது பற்றி கட்சியினர் கூடி முடிவு அறிவிக்கப்படுமென கூறிய கலைஞர், 'பா.ம.க.வை வேண்டுமானால் கூட்டணியில் சேர்த்துக்கொள்கிறோம், மாநிலங்களவைப் பதவி 2013 ஆம் ஆண்டுதான் தரமுடியும்' என நக்கலாக கூறினார். பிறகு சிறிது காலம் அடங்கியிருந்த கூட்டணி பேச்சுவார்த்தை தேர்தல் நெருக்கத்தில் மீண்டும் துவங்கியது. திடீரென்று கூப்பிட்டு 31 தொகிதிகளை கொடுத்தார் கலைஞர் (பிறகு ஒரு தொகுதியை பரித்த்துக்கொண்டார் என்பது வேறு விஷயம்).

தி.மு.க.மீது மக்களுக்கு இருக்கும் எதிர்ப்பு அலைப்பற்றி தெரியாமல் இராமதாசும் அதற்கு ஒத்துக்கொண்டார். 2013 ஆம் ஆண்டுதான் கனிமொழிக்கு மாநிலங்களவைப் பதவி முடிகிறது, அப்போது காலியாகும் அப்பதவிக்கு அன்புமணியை நிறுத்துகிறேன் என்று கூறியிருந்தார் கலைஞர். ஆனால் எதிர்பாராத விதமாக தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி படுதோல்வி அடைந்தது. பா.ம.க. வெறும் மூன்று தொகுதிகளில்தான் வெற்றிபெற்றது. 

ஒரு கட்சிக்கு குறைந்தது 31(?) எம்.எல்.ஏ.க்கள் இருந்தால் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கும். ஆனால் தி.மு.க.வோ வெறும் 23 இடங்களில்தான் வெற்றிபெற்றது. எனவே இந்த 5 வருடத்திற்கு தி.மு.க.விற்கு ராஜ்ய சபா பதவி கிடைக்க வாய்ப்பில்லை. எனவேதான் இராமதாஸ் திடீரென்று பொதுக்குழுவைக் கூட்டி தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறினார். 

குறிப்பு: ஒத்த கருத்துடைய கட்சிகள் பா.ம.க. தலைமையில் ஒன்றிணைய வேண்டுமெனவும் காமெடி செய்கிறார் மருத்துவர் அய்யா!

- உமர் முக்தார்.

நீக்கியதற்கான விளக்கம்!

நீக்கியதற்கான விளக்கம்!

நாம் துவங்கி இருக்கும் இவ்வலைபூ (blog) மற்றும் நாம் துவங்க இருக்கும் வலைத்தளம் (website) ஆகியவை பொதுவான செய்திகளைப் பற்றியும், அச்செய்தியின் பின்னாலுள்ள அரசியலைப்பற்றியும் வாசகர்களுக்கு உணர்த்துவதற்கேயாகும். மற்றபடி இது தனி மனித துதிபாடுவதற்காக துவங்கப்படவில்லை (அதற்கென பல வளைதளமுண்டு). மாற்று சிந்தனை உடையவர்களாக நாம் இருப்பதினாலேயே 'மாற்றத்திற்கான செய்தியாளர்கள்' என்ற பெயருடன் துவங்கி இருக்கிறோம். எனவே இதில் தனி மனிதரைப் பற்றி எழுதுவது சரியானதாக இருக்காது. அதுவும்,  "அவரை அய்யா (இராமதாஸ்),  என்று அழைக்கும்போது,  எங்கள் உள்ளத்தில் தனி சுகம் கிடைக்கும்" இவ்வாறெல்லாம் எழுதினால் இது பொதுவுடைமை சிந்தனை என்பதா அல்லது தனி மனித துதி பாடுதல் என்பதா? அதனால்தான் அக்கட்டுரையை நீக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம் (அக்கட்டுரை drafts போல்டரில் உள்ளது). நண்பரான உங்கள்மீது கொண்ட உரிமை காரணமாகவே உங்களுக்கு அதை முன் அறிவிப்புக்கூட செய்யாமல் அகற்றிவிட்டோம். எனினும் சொல்லாமல் நீக்கியதற்கு மன்னிப்புக்கேட்டுக் கொள்கிறோம், இனிமேல் தனி மனிதரைப் பற்றி துதிபாடும் கட்டுரைகளை இதில் எழுத வேண்டாமென கேட்டுக்கொள்கிறோம்!

'மாற்றத்திற்கான செய்தியாளர்கள்'.

ஜனநாயக வலைபூவில் முளைத்த சர்வாதிகார முட்கள் !


மாற்றத்திற்காண செய்தியாளர்கள் என்ற தலைப்புடன், ‘நம்மைச்சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகள், அதன் பின்னணியிலிருக்கும் அரசியல், அந்த நிகழ்வை நகர்த்தும் அடிப்படை,அதற்கான தேவை, என நாங்கள் புரிந்துகொண்டதை, நாங்களே பகிர்ந்து கொள்ளவும், நாங்கள் பகிர்ந்து கொண்டதை, உங்களோடு பகிர்ந்து கொள்ளவுமே இந்தத் தளம்.’ என்ற விளக்கத்துடன் தொடங்கும் இந்த தளத்தில் இரண்டு நாட்களுக்கு முன் என்னால் பதிவேற்றம் செயயப்பட்ட கட்டுரை என் அனுமதியின்றி, எனக்கு அறிவிப்பும் இன்றி நீக்கப்பட்டுள்ளது என்பதை வேதனையுடன் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

நில அபகரிப்பு புகார்களுக்கு பயந்தும், பிற அரசியல் ஆதாயங்களுக்காகவும் அதிரடியாக தி.மு.க வில் இருந்து விலகியுள்ள பா.ம.க வின் நிறுவனர் தமிழ்குடிதாங்கி அய்யா இராமதாஸ் பற்றி என் சக ஊரியர் எழுதிய ஒரு கட்டுரையை நம் வலைப்பூவில் பதிவேற்றம் செய்திருந்தேன், அதன் நோக்கம் அந்தக் கட்டுரையை படிக்கும் நன்பர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் அக்கட்டுரையின் அல்லது அக்கட்டுரை நாயகனின் உண்மைத்ன்மையை எளிதில் தெரிந்து கொள்ளலாம் என்பதேயன்றி வேறொன்றும் அல்ல. அக்கட்டுரையை ஒரு விவாதப்பொருளாக கையாளவே நான் நினைத்திருந்தேன்.

ஆனால் சில (அல்லது) பல பிற்போக்கு சிந்தனையாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு அந்த கட்டுரையை உடனடியாக முன்னறிவிப்பின்றி வலைப்பூவிலிருந்து அகற்றி விட்டனர். இதற்க்கு ஏனோ சில சிவப்பு சிந்தனவாதிகளும் உடந்தையாகிவிட்டனர்.

இராமதாஸ் நல்லவர் என்றோ அனைவரும் பா ம க வில் இனையுங்கள் என்றோ நான் வாதிடவில்லை. இன்னும் சொல்லப்போனால் எங்கள் ஊர் பகுதிகளில் உள்ளவர்களுக்கு பா ம க என்றொரு கட்சி இருப்பதே தெரியாது.
அப்படி இருக்க அக்கட்டுரையின் மூலம் உண்மை என்ன என்பதை அறியவே முற்பட்டேன்.

இவ்வுலகில் படைக்கப்பட்டுள்ள (முக்கியமாகப் பெரியார் உட்பட) அனைத்தும் விமர்சனத்திற்க்கு உட்பட்டவை என்பதாக கூறிக்கொள்பவர்களால் ஏன் அந்த கட்டுரை தொடர்பாக ஒரு வார்த்தை கூட விமர்ச்சனம் எழுத இயழவில்லை? விமர்ச்சனம் கூட வேண்டாம் அக்கட்டுரையை நீக்குவதற்கான காரணமாவது எழுதப்பட்டதா?

சரி ஆனது ஆகட்டும் கட்டுரையை நீக்கியவர்களுக்கும் அந்த அதி நாகரீக செயலுக்கு உடந்தையாகிப்போன முக்கியஸ்தர்களுக்கும் நான் 1 கேள்விகளை முன்வைக்கிறேன்.

எந்தக் கட்டுரையில் யாருக்கு விருப்பம் இல்லை என்றாலும் உடனடியாக நீக்கிக்கொள்ளலாமா? 

                                                                                                               
                                                                                                                 ஆனந்த்குமார்


உலக சினிமா: குக்கூ


ரஷ்ய நாட்டு படமான் "குக்கூ", அலெக்சாந்தர் ரோகோச்கின் என்பவரால் இயக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலக போர் முடிவடையும் தருவாயில், மூன்று வெவ்வேறு மொழிபேசும் கதாபாத்திரங்களின் சந்திப்பும், ஒருவரின் மொழி மற்றவருக்கு புரியாத நிலையில், அவர்களுக்கிடையே நிகழும் பரிமாற்றங்களை அழகாக படம்பிடித்துள்ளார் அலெக்சாந்தர்.


பின்லாந்து நாட்டு ராணுவ வீரன் விக்கோ. ராணுவத்தில் செய்த தவறுக்காக விக்கோ, ஜெர்மன் இராணுவவீரனை போல் உடை அணிவிக்கப்பட்டு ஒரு காட்டுக்குள் விலங்கினால் கட்டிபோட படுகிறான். அந்த விலங்கின் ஒருபகுதியை உடைத்துக்கொண்டு மற்றபகுதியை உடைப்பதற்காக நடக்க ஆரம்பிக்கிறான். ரஷ்ய நாட்டு ராணுவ வீரனான இவான், எதிர்பாராத விதமாக நடைபெறும் விபத்தினால், ராணுவ நீதிமன்ற விசாரணையில் இருந்து தப்புகிறான்.


ஆர்டிக் பிரதேச 'சமி' பழங்குடி இனத்தை சேர்ந்தவள் ஆனி. போரில் தன் கணவனை இழந்த ஆனி, காட்டின் விளிம்பில் உள்ள தன் குடிசையில் வாழ்கிறாள். காயங்களுடன் ஆனியின் குடிசையை வந்தடைகிறான் இவான். அவன் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கிறாள் ஆனி. கைவிலங்கை உடைப்பதற்காக ஆனியின் உதவியை நாடிவருகிறான் விக்கோ. ஜெர்மன் உடையில் விக்கோவை பார்த்த இவான், விக்கோ மீது பகை கொள்கிறான்.


விக்கோ பேசுவது பின்லாந்து மொழி. ஆனி பேசுவது ஆர்டிக் பழங்குடி மொழி. இவான் பேசுவது ரஷ்ய மொழி. மூன்று பேருக்கும் மற்றவர் பேசுவது புரியாத நிலையில், இவான், விக்கோ மற்றும் ஆனி இடையிலான நட்பு வளர்கிறது. இறுதியில் மூவரும் பிரியும் தருவாயில் அவர்கள் பேசிய புரியாத மொழி, பார்வையாளர்களின் மனதில் ரீங்காரம் செய்கிறது.

அசீப்


Time

Total Page Views

About this blog

நம்மைச்சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகள் , அதன் பின்னணியிலிருக்கும் அரசியல் , அந்த நிகழ்வை நகர்த்தும் அடிப்படை,அதற்கான தேவை, என நாங்கள் புரிந்துகொண்டதை , நாங்களே பகிர்ந்து கொள்ளவும் , நாங்கள் பகிர்ந்து கொண்டதை , உங்களோடு பகிர்ந்து கொள்ளவுமே இந்தத் தளம்.
Powered by Blogger.

Followers

Blog Archive