துவங்கியது அ.தி.மு.க. - தே.மு.தி.க. சண்டை! துவக்கிவைத்தார் முதல்வர்!
தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர் திரு.அருள் சுப்பிரமணி, 'அண்ணா அறிவாலயம் விதிமுறைகளை மீறி ஆக்கிரமிப்பு சித்து கட்டப்பட்டதாக முதலில் கூறியது தான்தான்' என்று புதன்கிழமை (07.09.11) சட்டமன்றப் பேரவையில் கூறினார். அப்போது குறுக்கிட்ட அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் திரு.வெற்றிவேல், 'கடந்த 1999 ஆம் ஆண்டுமுதல் சென்னை மாநகராட்சி மன்றத்திலேயே தொடர்ந்து தான் வலியுறுத்தி வந்ததாக' கூறினார். அதை மறுத்த தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர் திரு.அருள் சுப்பிரமணி, மீண்டும் அதே கருத்தை தெரிவித்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்வர் ஜெயலலிதா, 'கடந்த 2001 - 2006 அ.தி.மு.க. ஆட்சியிலேயே அதுபற்றி பேசப்பட்டு கடிதம் அனுப்பியதாகவும், தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர் ஆதாரத்துடன் விரிவாக தெரிவிக்க வேண்டுமென்றும், ஆதாரமில்லாமல் பேசுவது அதிகாரிகளை குற்றம் சுமத்துவதுபோல் உள்ளதென்றும், தெரிவித்தார். மேலும், தே.மு.தி.க. உறுப்பினர்கள் புதியவர்கள் என்றும், அ.தி.மு.க.விற்கு பாலபாடம் நடத்தக்கூடாது என்றும் கூறிய முதல்வர், மேட்டூர் தொகுதியில் உள்ளது மேட்டூர் அணை, ஆறுபடை வீடுகளில் ஐந்தாவது படை திருத்தணி என்று பேசுவது தங்களுக்கு தெரியாதது அல்ல என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
அ.தி.மு.க. - தே.மு.தி.க. ஆகிய இரு கட்சிகளுக்குள் எப்போது சண்டை வரும் என எண்ணியவர்களுக்கு வந்து சேர்ந்துள்ளது இனிப்பான செய்தி! முதல்வர் அவ்வாறு கூறியபொழுது சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த் அவையில் இல்லாததால் பண்ருட்டியார் உட்பட தே.மு.தி.க. உறுப்பினர்களால் எதுவும் பேச இயலவில்லை. வருகிற உள்ளாட்சித் தேர்தலுக்குள் இரு கட்சிகளும் பிரிந்துவிடும் என பரவலாகப் பேசப்பட்டு வரும் இவ்வேளையில் முதல்வரே சண்டையை துவக்கிவைத்திருப்பது அதை உறுதி படுத்துவதுபோல் இருக்கிறது! ஆனால், அ.தி.மு.க. கூட்டணியில் இருந்ததால்தான் தே.மு.தி.க.வால் 29 தொகுதிகளைப் பெற முடிந்தது, எனவே உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணியிலேயே இருந்து கவுன்சிலர், பஞ்சாயத்துத் தலைவர் பதவிகளை பெறுவதே விஜயகாந்திற்கு ஏற்புடையதாக இருக்கும்!
- உமர் முக்தார்