தமிழர்களின் வெற்றிக்கு முதல் படி!

தமிழர்களின் வெற்றிக்கு முதல் படி!

இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வட பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றது. 

இலங்கையில் மொத்தம் உள்ள 65 மாகாண சபைகளுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

வட பகுதியில் மொத்தம் உள்ள 26 மாகாண சபைகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில் 18 மாகாண சபைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. மற்றொரு தமிழ் அமைப்பான தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி (டியுஎல்எப்) இரண்டு மாகாண சபைகளையும் கைப்பற்றியுள்ளன., ராஜபட்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 2 சபைகளை மட்டுமே கைப்பற்றி உள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, இத்தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது.

இக்கட்சியைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா ராஜபட்ச அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். இதனால்தான் வட பகுதியில் இரு மாகாண சபைகளை ராஜபட்ச கட்சி பெற முடிந்தது.

தேசிய அளவில் இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 45 மாகாண சபைகளை கைப்பற்றி உள்ளது. இலங்கையின் தெற்குப் பகுதியில் உள்ள பெரும்பாலான மாகாண சபைகளில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டவர்கள் மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

 இத்தேர்தலில் இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சிகள் படுதோல்வி அடைந்துள்ளன.
 குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் ஜேவிபி ஆகிய கட்சிகள் ஒரு மாகாண கவுன்சிலைக்கூட கைப்பற்றவில்லை.

ஆனால் விடுதலைப்புலிகளுக்கு எதிரான வீரசிங்கம் ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி 2 மாகாண சபைகளைக் கைப்பற்றி உள்ளது.

 இத்தேர்தலில் ரஜபட்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 512 இடங்களிலும்,
 தமிழ் தேசியக் கூட்டமைப்பு 183 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளன. அதுபோல்
 முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி 137 இடங்களிலும் ஜேவிபி 13 மற்றும் தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

தேர்தல் குறித்து இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னே கூறுகையில்,
"இலங்கையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு வட பகுதியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. மொத்தம் 2,200 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு நடந்தது. ஒருசில சிறிய சம்பவங்களைத் தவிர தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது" என்றார்.
                        
ராஜபட்சவின் போர்க்குற்றம் உலகமே குற்றம் சாட்டிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் தற்போது சிங்களர்களும் அது பற்றிய உண்மையை புரிந்து கொண்டிருப்பதாகவே இத்தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுகிறது!

வெற்றிக்கான முதல் படியைத் தாண்டியுள்ளனர் தமிழர்கள். விரைவில் மொத்த இலங்கையும் தமிழர்களின் கையில் மீண்டும் கிடைக்கும் என உலகத் தமிழர்கள் மத்தியில் நம்பிக்கை பிறந்துள்ளது!

- உமர் முக்தார்.

பாதியில் வெளியேறிய அழகிரி! விஸ்வரூபம் எடுத்த குடும்பச்சண்டை!

பாதியில் வெளியேறிய அழகிரி! விஸ்வரூபம் எடுத்த குடும்பச்சண்டை!

தமிழக சட்டசபைத் தேர்தலில் தோற்று, எதிர்க்கட்சி அந்தஸ்துக்கூட இல்லாத நிலையில் தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு சனி மற்று ஞாயிறு ஆகிய இரு நாட்கள் கோவையில் நடைபெற்றது. தி.மு.க. தோற்கக் காரணமாக இருந்த 'குறுநில மன்னர்களாக' செயல்பட்ட மாவட்டச் செயலாளர்கள் பதவியைத் தூக்கிவிட்டு, நாடாளுமன்ற தொகுதி செயலாளர்கள் என்ற புதிய பதவியை உருவாக்கலாமென ஸ்டாலினும், கலைஞரும் எண்ணி அது பற்றி கருத்தும் கேட்டிருந்தார்கள். ஆனால் இதற்கு மா. செ. க்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது, வீரபாண்டியார் நேரிலேயே கலைஞரை மிரட்டிவிட்டு வந்தார். ஸ்டாலினின் இச்செயல் அழகிரிக்கும் பிடிக்கவில்லை. மேலும் ஸ்டாலின்தான் அடுத்தத் தலைவர் என்ற பேச்சும் கிளம்பியதால், இருவருக்கும் குடும்பச் சண்டை முற்றியது!

இந்நிலையில் சனிக்கிழமை செயற்குழுவும், ஞாயிற்றுக்கிழமை பொதுக்குழுவும் கூடியது. செயற்குழுவில் ஒருவர் 'ஸ்டாலினை செயல் தலைவராக்க வேண்டும்' என கூறியபோது, 'நான் பதவி விலக வேண்டுமென அந்தத் தொண்டர் விரும்புகிறாரா?' என காட்டமாக கேள்வி எழுப்பினார் கலைஞர். 

பிறகு செயற்குழுவின் முடிவில், 'சட்டப்பேரவையில் ஏற்பட்டத் தோல்வி நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்ட முடிவு என்றும், தி.மு.க. ஒரு எக்குக் கோட்டை, யாராலும் அழிக்க முடியாது' என்றும் வீரவசனம் பேசினார் கலைஞர்.

இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்குழுவில் ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கும், அழகிரி ஆதரவாளர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டதாகத் தெரிகிறது. பொதுக்குழுவில் முன்னாள் எம்.பி. ஒருவர் 'கட்சியின் அடுத்தத் தலைவர் யார்' என கேள்வி கேட்டார். அதற்கு அங்குக் குழுமியிருந்தவர்கள், 'ஸ்டாலின்' 'ஸ்டாலின்' என கோரசாக கூறினார்கள். இதன் பிறகு மதிய உணவு இடைவேளை விடப்பட்டு, மீண்டும் கூடியபோது இரண்டாவது அமர்வில் அழகிரி வரவில்லை. இதனால் பொதுக்குழுவில் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்டாலினைத் தூக்கிவைத்துப்பேசியது அழகிரிக்குப்பிடிக்கவில்லை. ஒரு மாத காலமாக புலனாய்வுப் பத்திரிகைகள் கூறிவந்த குடும்பச் சண்டை உண்மை என்பதை நிரூபித்து விட்டார் அழகிரி. அதன் பிறகு மாலையில் 'தனக்கு கட்சியில் உயர் பதவி எதுவும் வேண்டாம்' என (பெருந்தன்மையோடு?!) மறுத்து விட்டார் ஸ்டாலின்!

எதை எதிர்பார்த்து தொண்டர்கள் வந்தார்களோ அது நடக்கவில்லை. தி.மு.க.வை வலுப்படுத்த அமைப்புச்செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் குழு ஒன்று அமைத்தும், 'கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்கவிடாமல் சி.பி.ஐ. உள்நோக்கத்தோடு தடுக்கிறது, ஓட்டுப்பதிவு நடத்தி தனி ஈழம் பெற்றுத்தரவேண்டும், நில மோசடி புகார்கள் மீதான தமிழக அரசின் செயல்களை கண்டிப்பது' என்பன உள்ளிட்ட இருபத்தி ஐந்து தீர்மானங்களை ஒப்புக்காக நிறைவேற்றிவிட்டு கலைந்தது பொதுக்குழு!

முடிவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கலைஞர், 'தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது என்றும், ராசா, மாறன் ஆகியோருக்கு மாற்றாக வேறு அமைச்சர்களை தாங்கள் கேட்கப்போவதில்லை என்றும், காங்கிரஸ் தலைவர்கள் தி.மு.க.வை விமர்சித்துப் பேசுவது கண்டிக்கத் தக்கது என்றும், ஊடகங்களுக்கு தலைப்புச்செய்தியாக வேண்டும் என்பதற்காக கட்சித் தலைமையை மாற்ற மாட்டோம் என்றும், தி.மு.க. ஒரு ஜனநாயாக கட்சி என்றும், உட்கட்சித் தேர்தல் நடத்தி தலைவரைத் தேர்ந்தெடுக்கலாம்' என்றும் தெரிவித்துவிட்டுச் சென்றார்.

எது எப்படியோ, தீர்க்கலாமென நினைத்திருந்த குடும்பச்சண்டை மேலும் பெரிதானதுதான் மிச்சம்!

- உமர் முக்தார்.

Time

Total Page Views

About this blog

நம்மைச்சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகள் , அதன் பின்னணியிலிருக்கும் அரசியல் , அந்த நிகழ்வை நகர்த்தும் அடிப்படை,அதற்கான தேவை, என நாங்கள் புரிந்துகொண்டதை , நாங்களே பகிர்ந்து கொள்ளவும் , நாங்கள் பகிர்ந்து கொண்டதை , உங்களோடு பகிர்ந்து கொள்ளவுமே இந்தத் தளம்.
Powered by Blogger.

Followers

Blog Archive