பாதியில் வெளியேறிய அழகிரி! விஸ்வரூபம் எடுத்த குடும்பச்சண்டை!
தமிழக சட்டசபைத் தேர்தலில் தோற்று, எதிர்க்கட்சி அந்தஸ்துக்கூட இல்லாத நிலையில் தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு சனி மற்று ஞாயிறு ஆகிய இரு நாட்கள் கோவையில் நடைபெற்றது. தி.மு.க. தோற்கக் காரணமாக இருந்த 'குறுநில மன்னர்களாக' செயல்பட்ட மாவட்டச் செயலாளர்கள் பதவியைத் தூக்கிவிட்டு, நாடாளுமன்ற தொகுதி செயலாளர்கள் என்ற புதிய பதவியை உருவாக்கலாமென ஸ்டாலினும், கலைஞரும் எண்ணி அது பற்றி கருத்தும் கேட்டிருந்தார்கள். ஆனால் இதற்கு மா. செ. க்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது, வீரபாண்டியார் நேரிலேயே கலைஞரை மிரட்டிவிட்டு வந்தார். ஸ்டாலினின் இச்செயல் அழகிரிக்கும் பிடிக்கவில்லை. மேலும் ஸ்டாலின்தான் அடுத்தத் தலைவர் என்ற பேச்சும் கிளம்பியதால், இருவருக்கும் குடும்பச் சண்டை முற்றியது!
இந்நிலையில் சனிக்கிழமை செயற்குழுவும், ஞாயிற்றுக்கிழமை பொதுக்குழுவும் கூடியது. செயற்குழுவில் ஒருவர் 'ஸ்டாலினை செயல் தலைவராக்க வேண்டும்' என கூறியபோது, 'நான் பதவி விலக வேண்டுமென அந்தத் தொண்டர் விரும்புகிறாரா?' என காட்டமாக கேள்வி எழுப்பினார் கலைஞர்.
பிறகு செயற்குழுவின் முடிவில், 'சட்டப்பேரவையில் ஏற்பட்டத் தோல்வி நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்ட முடிவு என்றும், தி.மு.க. ஒரு எக்குக் கோட்டை, யாராலும் அழிக்க முடியாது' என்றும் வீரவசனம் பேசினார் கலைஞர்.
இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்குழுவில் ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கும், அழகிரி ஆதரவாளர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டதாகத் தெரிகிறது. பொதுக்குழுவில் முன்னாள் எம்.பி. ஒருவர் 'கட்சியின் அடுத்தத் தலைவர் யார்' என கேள்வி கேட்டார். அதற்கு அங்குக் குழுமியிருந்தவர்கள், 'ஸ்டாலின்' 'ஸ்டாலின்' என கோரசாக கூறினார்கள். இதன் பிறகு மதிய உணவு இடைவேளை விடப்பட்டு, மீண்டும் கூடியபோது இரண்டாவது அமர்வில் அழகிரி வரவில்லை. இதனால் பொதுக்குழுவில் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்டாலினைத் தூக்கிவைத்துப்பேசியது அழகிரிக்குப்பிடிக்கவில்லை. ஒரு மாத காலமாக புலனாய்வுப் பத்திரிகைகள் கூறிவந்த குடும்பச் சண்டை உண்மை என்பதை நிரூபித்து விட்டார் அழகிரி. அதன் பிறகு மாலையில் 'தனக்கு கட்சியில் உயர் பதவி எதுவும் வேண்டாம்' என (பெருந்தன்மையோடு?!) மறுத்து விட்டார் ஸ்டாலின்!
எதை எதிர்பார்த்து தொண்டர்கள் வந்தார்களோ அது நடக்கவில்லை. தி.மு.க.வை வலுப்படுத்த அமைப்புச்செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் குழு ஒன்று அமைத்தும், 'கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்கவிடாமல் சி.பி.ஐ. உள்நோக்கத்தோடு தடுக்கிறது, ஓட்டுப்பதிவு நடத்தி தனி ஈழம் பெற்றுத்தரவேண்டும், நில மோசடி புகார்கள் மீதான தமிழக அரசின் செயல்களை கண்டிப்பது' என்பன உள்ளிட்ட இருபத்தி ஐந்து தீர்மானங்களை ஒப்புக்காக நிறைவேற்றிவிட்டு கலைந்தது பொதுக்குழு!
முடிவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கலைஞர், 'தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது என்றும், ராசா, மாறன் ஆகியோருக்கு மாற்றாக வேறு அமைச்சர்களை தாங்கள் கேட்கப்போவதில்லை என்றும், காங்கிரஸ் தலைவர்கள் தி.மு.க.வை விமர்சித்துப் பேசுவது கண்டிக்கத் தக்கது என்றும், ஊடகங்களுக்கு தலைப்புச்செய்தியாக வேண்டும் என்பதற்காக கட்சித் தலைமையை மாற்ற மாட்டோம் என்றும், தி.மு.க. ஒரு ஜனநாயாக கட்சி என்றும், உட்கட்சித் தேர்தல் நடத்தி தலைவரைத் தேர்ந்தெடுக்கலாம்' என்றும் தெரிவித்துவிட்டுச் சென்றார்.
எது எப்படியோ, தீர்க்கலாமென நினைத்திருந்த குடும்பச்சண்டை மேலும் பெரிதானதுதான் மிச்சம்!
- உமர் முக்தார்.
0 comments:
Post a Comment