சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே நடைமுறை படுத்தவேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை அமுல் படுத்தாமல், மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்த ஜெயலிதா அரசுக்கு, உச்சநீதி மன்றம் சரியான சவுக்கடி கொடுக்கும் என்று அனைவரும் எதிர் பார்த்தனர். ஆனால் நடந்ததோ வேறு. வழக்கை விசாரணைக்கு ஏற்றுகொண்ட உச்ச நீதிமன்றம், வரும் 22 ஆம் தேதிக்குள் சமச்சீர் புத்தகங்களை அனைத்து பள்ளிகளுக்கும் விநியோகம் செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய கால கெடுவை, ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளது. மேலும், இறுதி விசாரணை வரும் 26 ஆம் தேதி நடைபெறும் என்று உத்தரவிட்டுள்ளது. உண்மையில், உயர்நீதி மன்றத்தின் உத்தரவுக்கு, உச்சநீதி மன்றம் மறைமுகமாக இடைக்கால தடை வழங்கி உள்ளதாகவே இதை கருத முடியும். இதை புரிந்து கொள்ளாமல், நம் ஊடகங்கள், சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவுக்கு தடைவிதிக்க, உச்சநீதி மன்றம் மறுப்பு தெரிவித்ததாக, செய்திவெளியிட்டு வருகின்றனர்.
எது எப்படியோ, மாணவர்கள் தாங்கள் எந்த பாடத்திட்டத்தின் கீழ் படிக்கபோகிறோம் என்பதை தெரிந்து கொள்ள, இன்னும் இரண்டுவாரமாவது காத்திருக்க வேண்டும். பள்ளி திறந்து நாற்பது நாட்களுக்கு மேல் ஆன நிலையில், படிப்பதற்கு எந்த புத்தகமும் இல்லாமல் மாணவர்கள் பள்ளி சென்று வரும் அவலத்தை என்னவென்று சொல்வது? ஆட்சியாளர்களின் அகங்காரத்தால், மாணவர் சமுதாயம் பாதிக்கபடுகிறது என்று, ஒருவர் தெருவோர மேடையில் முழங்கிக்கொண்டிருக்கையில், "பசங்க இப்பதான் ஸ்கூலுக்கு ஜாலியா போறாங்க" என்று சிரித்தபடி கூறிச்சென்ற அந்த பாமரனை போல் நாமும் இருக்க போகிறோமா?
0 comments:
Post a Comment