நிழல்களுக்கு நேர்ந்துள்ள ஆபத்து!
லஞ்ச ஒழிப்புத் துறை என்றழைக்கப்படும் கண்காணிப்பு & ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் கலைஞரின் நிழலாக கடந்த ஆட்சியில் வலம்வந்த முன்னாள் தமிழக உளவுத்துறை கூடுதல் இயக்குனராக இருந்த ஜாபர் சேட் (தற்போது இவர் மண்டபம் அகதிகள் சிறப்பு முகாம் கூடுதல் இயக்குனராக உள்ளார்), கலைஞரின் முன்னாள் செயலாளர் ராஜமாணிக்கம், தற்போதைய உதவியாளர் சண்முகநாதன், கலைஞரின் பாதுகாப்பு அதிகாரிகளான கணேசன், வாசுதேவன், பாண்டியன், கலைஞரை கைத்தாங்கலாக பார்த்துக்கொள்ளும் நித்தியன், நாக்கீரன் பத்திரிகை துணை ஆசிரியர் காமராஜ், ஆகியோரின் வீடுகளில் செவ்வாய்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரும் கலைஞரைச் சுற்றி இருந்த மற்றும் இருப்பவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது!
கடந்த ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு 'அப்பழுக்கற்ற ஊழியர்' என்ற அந்தஸ்திலும், சமுதாயத்திற்கு சேவை புரிந்தவர்களுக்கு 'சமூக சேவகர்' என்ற அந்தஸ்திலும், மேலும் பத்திரிகையாளர்களுக்கும் தமிழா நாடு வீட்டு வசதி வாரியம் சார்பாக வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் விதிமீறல்கள் நடந்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டது. இது அப்போது பெரும் புயலைக் கிளப்பியதால் கடந்த தி.மு.க. ஆட்சியின் கடைசி ஆளுநர் உரையில் 'விருப்ப ஒதுக்கீடு' முறை இத்தோடு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. ஆட்சி மாறினால் காட்சியும் மாறும் என்பதற்கிணங்க கடந்த தி.மு.க. ஆட்சியில் முறைகேடாக ஒதுக்கப்பட்ட வீடுகள் குறித்து விசாரணை துவங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாகத்தான் செவ்வாய்க்கிழமை அனைவரின் வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
சோதனைக்குப் பிறகு ஜாபர் சேட்டின் மனைவி பர்வின், நக்கீரன் காமராஜ் மனைவி ஜெயசுதா, ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர், பாண்டியனின் மனைவி மீனா மற்றும் வினோதன், கணேசன் ஆகியோர்மீது தவறான ஆவணங்கள் மூலம் வீடுகள் ஒதுக்கீடுப் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறை முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்துள்ளது. தேவைபட்டால் மேலும் இதுபற்றி விசாரணை மேற்கொள்ள இவர்கள் அனைவரும் நேரில் ஆஜராக வேண்டியிருக்கும் என தெரிகிறது!.
குறிப்பு:
இவர்களில் மிகவும் முக்கியமான நபர் ஜாபர் சேட்தான். ஏனெனில் கடந்த ஆட்சியில் அணைத்து அதிகாரங்களும் பொருந்தியவராக வலம் வந்தவர் இவர்தான்.
- முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி விஜயகாந்தும், விஜயகாந்தைப் பற்றி ஜெயலலிதாவும் தரக்குறைவாக பேசியதுபோல் டேப் (ஒலிநாடா) தயாரித்து இருவருக்கும் அனுப்பியது,
- ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா கொலை செய்யப்பட்ட வழக்கு,
- அதன் பின்னணியாக விளங்கக்கூடிய 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு,
- பலகோடி ரூபாய் நிலம் கையகப்படுத்தியது,
உள்ளிட்ட பல வழக்குகள் வரிசை கட்டி நிற்கின்றன இவர்மீது!
இவரைப்பற்றி முழுமையாக எழுத வேண்டுமானால் தனி கட்டுரை தேவைப்படும். விரைவில் முழு தகவல்களோடு ஜாபர் சேட் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
- உமர் முக்தார்
(Email: reporteromar@gmail.com
Mobile: +919840669935).
(Email: reporteromar@gmail.com
Mobile: +919840669935).