அண்ணா சாலையில் அநாமத்தாக நிற்கும் 1200 கோடி!
30 சதவீத வேலைகள் முடிவதற்குள் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் திருமதி.சோனியா காந்தி ஆகியோரை வரவழைத்து பிப்ரவரி 13, 2010 அன்று திறப்புவிழாவையும் நடத்தி முடித்து விட்டார் கருணாநிதி!
புதிய தலைமைச் செயலகம் கட்டப்ப்படும்போதே செல்வி.ஜெயலலிதா 'தான் அடுத்து முதல்வரானால், புதிய தலைமைச் செயலகத்தில் காலடிகூட எடுத்துவைக்கமாட்டேன்' என்று சூளுரைத்தார்! அதன்படியே ஆட்சிப் பொறுப்பேற்றதும் பழைய தலைமைச் செயலகத்திலேயே பணிகளைத் தொடர்கிறார். தேர்தல் வருவதற்குள் பழைய தலைமைச் செயலகத்திலிருந்து அனைத்துத் துறைகளையும், அமைச்சர்கள் அறைகளையும் புதிய தலைமைச் செயலகத்திற்கு மாற்றிட வேண்டுமென்று நினைத்தார் கருணாநிதி. ஆனால் 9 துறைகளை மாற்றுவதற்குள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் மாற்றமுடியவில்லை.
பிறகு ஜெயலலிதா முதல்வரானதும் சட்டமன்றத்தில் "புதிய தலைமைச் செயலகம் அரசு எந்திரத்தை நடத்துவதற்கு லாயக்கற்றது என்றும், 9 துறைகள் மட்டுமே அங்கு உள்ளது, மீதி 29 துறைகள் புனித ஜார்ஜ் கோட்டையிலேயே உள்ளதாகவும், புதிய தலைமைச் செயலக கட்டுமானத்தில் ஊழல் நடந்திருப்பதாகவும், அதைப்பற்றி விசாரிக்க ஒரு கமிஷன் அமைக்கப்படுமென்றும், அதற்கு ஏதுவாக தொடர்ந்து முடியாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கட்டடப்பணி நிறுத்தப்படுவதாகவும்" தீர்மானங்கள் நிறைவேற்றினார்.
முதல்வரின் இம்முடிவிற்கு 2 காரணங்களை நாம் ஆராயவேண்டும்.
ஒன்று அதில் நிஜமாகவே நடைபெற்ற ஊழல்
இரண்டு தன்னால் நிறைவேற்ற முடியாததை கருணாநிதி செய்துவிட்டாரே ங்கிற ஆணவம், ஈகோ.
1 ) கருணாநிதி முதல்வராக இருக்கும்பொழுது கொண்டுவந்த திட்டமான 'கலைஞர் காப்பீட்டுத் திட்ட'த்தில் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் என்ற ஈ.டி.எ. குழுமத்தின் நிறுவனம் அதிக பயனடைந்தது. கல்ப் நாட்டு நிறுவனமான ஈ.டி.எ. குழுமத்தின், கட்டுமான நிறுவனம்தான் புதிய தலைமைச் செயலகத்தை கட்டியது. எனவே இதில் 400 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. கருணாநிதி முதல்வராக இருந்தபோது தினமும் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு, டிப்ஸ் கொடுத்து பார்த்துப் பார்த்து கட்டினாலும், விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்பவர் என்று மீண்டும் நிரூபித்திருக்கிறா கலைஞர்!
2 ) இதற்கு முன்பு 2001 முதல் 2006 வரையிலான அ.தி.மு.க. ஆட்சியிலேயே புது தலைமைச் செயலகம் கட்ட பல இடங்கள் பரிசீலிக்கப் பட்டன. தமிழகத்தின் முதல் மகளிர் கல்லூரியான ராணி மேரி கல்லூரியை இடித்துவிட்டு அங்கு தலைமைச் செயலகம் காட்டப்படும் என அப்போது ஜெயலலிதா அறிவித்தார். அதற்கு மாணவர்கள் மத்தியில் எதிர்ப்புக் கிளம்பியது. அந்த எதிர்ப்பை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு தி.மு.க. போராடி, அத்திட்டத்தை வாபஸ் பெற வைத்தது. அதன்பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கோரப்பட்டது. பிறகு அதுவும் முடியாமல் கோட்டூர்புரத்தில் ஒரு இடம் பார்த்து வைத்தார் ஜெயலலிதா. அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதால் அத்திட்டம் கைவிடப்பட்டது. (ஜெயலலிதா கோட்டூர்புரத்தில் பார்த்துவைத்த இடத்தில்தான் கருணாநிதி 'அண்ணா நூற்றாண்டு நூலகம்' காட்டியுள்ளார் என்பது வேறு விஷயம்). எனவே தன்னால் கட்டமுடியாத புதிய தலைமைச் செயலகத்தை கருணாநிதி கட்டிவிட்டரே என்று ஜெயலலிதா ஆணவங்கொண்டு இச்செயலில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது!.
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை, புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் திரு. கிருஷ்ணமூர்த்தி என்பவர் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், தலைமைச் செயலகத்தை மாற்றியதற்கு தடை விதிக்க முடியாது என்று கூறி பொதுநல வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும், அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். வழக்கு தள்ளுபடியானதால் மேல்முறையீடு செய்யவுள்ளதாக வழக்கறிஞர் திரு. கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
புதுச்சேரி காவலரின் தொப்பிபோல் உள்ளது என்றும், தண்ணீர் டேன்க் போல் உள்ளது என்றும் கிண்டல் செய்யப்பட்ட புதிய தலைமைச் செயலகம், வியர்வை சிந்தி உழைத்த மக்களிடம் வாங்கப்பட்ட, ஆயிரத்து இருநூறு கோடி ரூபாய் வரிப்பணத்தை, மொத்தமாக விழுங்கிக்கொண்டு, அண்ணா சாலையில் அநாமத்தாக நிற்கிறது!.
- உமர் முக்தார்