கருணாநிதி முதல்வர் பதவியை இழந்தும், ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றும் இரண்டு மாத காலமாகிவிட்டது. ஜெயலலிதாவின் அணுகுமுறையிலும், பணியாற்றும் விதத்திலும் ஓரளவு மாற்றம் இருந்தாலும், முந்தைய அரசின் மக்கள் நலத்திட்டங்களை ரத்து செய்வதிலும் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதிலும் அவரது வழக்கமான பாணி தொடர்கிறது.
முந்தைய திமுக அரசு செயல்படுத்திய இலவச அரிசி, கான்கிரீட் வீடு, காப்பீட்டு போன்ற திட்டங்களை பெயர் மாற்றி செயல்படுத்த முனைந்துள்ள போதிலும், தமிழகத்தின் நீண்டகால கனவுத் திட்டமான சமச்சீர் கல்விமுறையை நிறுத்தி வைத்ததன் அனைத்து தரப்பினரின் எதிர்ப்புகளையும் ஜெயலலிதா சம்பாதித்துள்ளார். இதனால் மாணவ, மாணவிகளும் பெற்றோரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் 600 கோடி ரூபாய்க்கும் மேலான மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டுள்ள புதிய தலைமைச் செயலகத்தை பயன்படுத்தாமல் பூட்டிவைத்துள்ளதன் மூலம் ஜெயலலிதா இன்னும் மாறவில்லை எனத் தெரிகிறது. தலைமைச் செயலகத்தை பயன்படுத்தாமல் இருப்பதற்கு அதிமுகவின் கூட்டணிக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கூட்டணிக் கட்சிகளான கம்யூனிஸ்ட் மற்றும் தேமுதிக கட்சிகள் எவ்வளவோ கோரிக்கை விடுத்தும் சமச்சீர் கல்வியை அமல்படுத்தாமல் அதை நிறுத்தி வைக்க சட்டத்திருத்தம் கொண்டுவந்தார். தற்போது நீதிமன்ற உத்தரவால் சமச்சீர் கல்வியை அமல்படுத்தியே தீர வேண்டும் என்ற கட்டாயத்துக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.
திமுக கொண்டுவந்தது, கட்டியது என்ற ஒரே காரணத்துக்காக சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தியும், தலைமைச் செயலகத்துக்கு பூட்டுப்போட்டுவிட்டார்கள் என்று ஜெயலலிதா மீது பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் அதிகாரிகள் தங்களது துறை சார்ந்த பணிகளை இன்னமும் தொடங்காததால் தேர்தல் சமயத்தில் முடங்கிப்போன அரசு இயந்திரம் இன்னமும் செயல்பட ஆரம்பிக்கவில்ல.
கடந்த காலத்தைப் போல சாலையில் செல்லும்போது நீண்டநேரம் போக்குவரத்தை நிறுத்தி வைக்காமல் மக்களுக்கு இடையூறு இன்றி நடந்து கொள்வது சற்று ஆறுதல் அளிக்கிறது. அதேபோல் பத்திரிகைகளை புறக்கணிக்கும் நிலையை கைவிட்டு வாராவாரம் பிரஸ் மீட் தருவதாக சொல்லி இருப்பது செய்தியாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகள் சிலவற்றை ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் தடாலடியாக நிறைவேற்றி மக்களின் பாராட்டை பெற்றுள்ளார் ஜெயலலிதா. எளிமையாக இருந்து அமைச்சர்களையும் எளிமையாக மாற்றியது, அரசு விழாக்களை ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக நடத்துவது போன்ற நடவடிக்கைகள் ஜெயலலிதா தமிழகத்துக்கு நல்லாட்சி தருவார் என்ற நம்பி்க்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக ஆட்சி வரும்போதெல்லாம் திமுகவின் தி்ட்டங்களை ரத்து செய்வதும்,திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அதிமுகவின் திட்டங்களை ரத்து செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. இந்தப் போக்கு கட்டாயம் மாற்றப்பட வேண்டும். ஒரு அரசு செயல்படுத்தும் நலத்திட்டம் அனைத்து மக்களுக்கும் முழுமையாக சென்றடைவதற்கு 5 ஆண்டுகாலத்துக்கு மேல் ஆகிவிடுகிறது. இந்நிலையில் அத்திட்டத்தை அடுத்து வரும் அரசு ரத்து செய்துவிட்டால் அது எப்படி பயனாளிகளை சென்றடையும்? செயல்படுத்தும் ஒரு சில திட்டங்களையும் இப்படி ரத்து செய்துகொண்டே சென்றால் அவை மக்களுக்கு நன்மை பயக்காது. ஆட்சியாளர்களுக்கே பயனளிக்கும். எனவே, ஆட்சிமாறும்போது எல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திட்டங்களை ரத்து செய்யும் இந்த கீழ்த்தரமான கலாச்சாரத்தை திராவிடக் கட்சிகள் கைவிட்டால் மக்களும் செழிப்பார்கள். தமிழகமும் செழிக்கும்.
0 comments:
Post a Comment