அம்மாவுக்கு ஆப்பு!

அம்மாவுக்கு ஆப்பு!

கடந்த தி.மு.க. அரசு, ஏழை, பணக்காரர் என்கிற வித்தியாசம் இல்லாமல் சமமான, சீரான கல்வியை அணைத்து மாணவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற (உன்னத!?) நோக்கில் கொண்டுவந்ததே சமச்சீர் கல்வி பாடத்திட்டம். 

சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது பற்றி ஆராய கடந்த தி.மு.க. அரசு கல்வியாளர் பாலமுருகன் தலைமையில் நிபுணர் குழுவை அமைத்தது. அக்குழுவின் அறிக்கைப்படி ஒன்று மற்றும் ஆறு ஆகிய இரு வகுப்புகளுக்கு மட்டும் சமச்சீர் கல்வியை அமல்படுத்தியது. மீதமுள்ள 2, 3, 4, 5, 7, 8, 9 & 10 ஆகிய வகுப்புகளுக்கு 2010-2011 கல்வியாண்டில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் என்றும் தி.மு.க. அரசு கூறியது.

அதற்குள் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, அ.தி.மு.க. அரசு அமைந்ததும், சமச்சீர் கல்வியை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி நிறுத்தியது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டு, சமச்சீர் கல்வியை இந்தாண்டே அமல்படுத்த வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த நீதிமன்றம் ஒன்று மற்றும் ஆறு ஆகிய இரு வகுப்புகளுக்கு மட்டும் இந்தாண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டுமென்றும், மீதமுள்ள வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி தேவையா என்பதைப்பற்றி ஆராய நிபுணர் குழுவை அமைக்க வேண்டுமென்றும் கூறி அந்த குழுவின் அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கால் செய்ய வேண்டுமென்றும் அதன் பிறகு வழக்கை சென்னை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டிருந்தது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழுவை முதல்வர் ஜெயலலிதா அமைத்தார்.அக்குழுவில் கல்வியாளர்களே இடம்பெறவில்லை, கல்விக் கொள்ளையர்கள்தான் இடம்பெற்றிருக்கிறார்கள் என்றும் ஒரு சர்ச்சை கிளம்பியது. அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் வெறும் நான்கு அல்லது ஐந்து ஆலோசனைக்கூட்டம் மட்டுமே கூட்டிப் பேசிவிட்டு, 700 க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட அறிக்கையை கடந்த 5 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது தமிழக அரசு. அதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் காரசார விவாதங்கள் நடைபெற்று, இறுதியாக தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (18/07/2011) சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்தை இந்தக் கல்வியாண்டே அனைத்து வகுப்புகளுக்கும் முழுவதுமாக அமல்படுத்தவேண்டும் என்றும் வரும் 22 ஆம் தேதிக்குள் பாட புத்தகத்தை முழுவதுமாக பள்ளிகளுக்கு வழங்கவேண்டுமென்றும் உத்தரவிட்டிருக்கிறது.

இந்தத் தீர்ப்பு அ.தி.மு.க. அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளது. ஏற்கனவே உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுதான் சென்னை உயர் நீதிமன்றத்திற்கே வழக்கு வந்தது. எனவே மேல் முறையீடு செய்தாலும் தமிழக அரசுக்கு எதிராகவே தீர்புக்கிடைக்கும் என நம்பப்படுகிறது.

எவ்வாறு உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் நடக்கும் 2 ஜி ஊழல் வழக்கில் ஜாமீன் வேண்டி உச்ச நீதிமன்றத்திலேயே மனு செய்து, அதை நீதிமன்றமும் நிராகரித்து எப்படி தி.மு.க.வினர் அவமானப்பட்டார்களோ? அதே மாதிரியான அவமானத்தைதான் அ.தி.மு.க. அரசும் படப்போகிறது என்பது நிஜம்!

சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை பொது மக்களும் பட்டாசு வெடித்து கொண்டாடியிருக்கிறார்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதியும் 'இத்தீர்ப்பு அரசுக்குக் கிடைத்த தோல்வியென்று நினைக்காமல், தீர்ப்பை மதித்து இந்தாண்டே அமல் படுத்த வேண்டும்' என்று கூறியிருக்கிறார்.

எது எப்படியோ, ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு அம்மாவுக்கு வைக்கப்பட்ட முதல் ஆப்பு என்பது மட்டும் உண்மை!

- உமர் முக்தார்.

0 comments:

Post a Comment

Time

Total Page Views

About this blog

நம்மைச்சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகள் , அதன் பின்னணியிலிருக்கும் அரசியல் , அந்த நிகழ்வை நகர்த்தும் அடிப்படை,அதற்கான தேவை, என நாங்கள் புரிந்துகொண்டதை , நாங்களே பகிர்ந்து கொள்ளவும் , நாங்கள் பகிர்ந்து கொண்டதை , உங்களோடு பகிர்ந்து கொள்ளவுமே இந்தத் தளம்.
Powered by Blogger.

Followers

Blog Archive