அடிமை கல்வி!

சென்னை பல்கலைக்கழகத்தில், இருதினங்களுக்கு முன், குற்றவியல் துறையில் பயின்ற மாணவர்களுக்கு, பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிவதற்கான, வேலை உறுதி சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய, பல்கலைகழக துணைவேந்தர் திருவாசகம், பல்கலைகழகத்தில் மொத்தம் உள்ள துறைகளில், எழுபத்து ஐந்து சதவீத துறைகளில் பயிலும் மாணவர்களுக்கு, தங்கள் படிப்பை முடித்த உடன், வளாகத்தில் நடைபெறும் நேர்காணலில்(கேம்பஸ் இன்டர்வியு), நூறு சதவீதம் வேலை கிடைப்பதாக கூறினார். மேலும், அயல்மொழி துறையில்(ஜெர்மன், பிரெஞ்சு, ரஷ்யன்) படிக்கும் மாணவர்களுக்கும், நூறு சதவீத வேலைவாய்ப்பு கிடைப்பதாக கூறினார்.

குற்றவியல் துறையை பொறுத்தவரை, அதன் பாடத்திட்டங்கள் தயாரிக்கும் குழுவில், பன்னாட்டு நிறுவனங்களின், அதிகாரிகளும் இடம்பெறுவதாக கூறினார். மேலும், பன்னாட்டு நிறுவனங்களை சேர்ந்த வல்லுனர்கள், இத்துறையில் படிக்கும் மாணவர்களுக்கு, கௌரவ பேராசிரியர்களாக வந்து பாடம் எடுப்பதாகவும் கூறினார். இதனால்தான், இந்தத்துறையில் பயின்ற அனைத்து மாணவர்களுக்கும் வளாகத்தில் நடைபெற்ற நேர்காணலில் வேலை கிடைத்துள்ளதாக கூறினார். இதேபோல், பல்கலைகழகத்தில் உள்ள மற்ற துறைகளிலும், குற்றவியல் துறையில் மேற்கொள்ளும் நடைமுறையை கொண்டுவரபோவதாக கூறினார். 

அதாவது, பல்கலைகழகத்தின் பாடத்திட்டங்களை வகுக்கும் குழுவில், பன்னாட்டு நிறுவனங்களின் அதிகாரிகளை இடம்பெரசெய்வதும், அந்த அதிகாரிகளை கொண்டு, மாணவர்களுக்கு பாடம் சொல்லிதரசெய்வதுமே இந்த திட்டம். இதனால் மாணவர்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்கலாம்? பிரச்சனை உள்ளது. அது என்னவென்றால், இனி மாணவர்கள் தாங்கள் பயிலும் துறையை முழுமையாக கற்க தேவைஇல்லை, அதாவது, வளாகத்தில் நடைபெறுவுள்ள நேர்காணலுக்கு தகுந்தாற்போல் பாடத்திட்டம் உருவாக்க பட்டிருக்கும், அதை மட்டும் படித்தால் போதும். படிப்பு முடிந்ததும் உடனடியாக வேலை. உதாரனத்திற்க்கு, ஹச்.சி.எல் என்ற நிறுவனம், வங்கிகளுக்கு மென்பொருள் தயாரித்து கொடுப்பதாக வைத்துக்கொள்வோம், அந்த நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி, குற்றவியல் துறை பாடத்திட்டம் தயாரிக்கும் குழுவில் இடம்பெற்றால், அவர் நிச்சயம் வங்கி சார்ந்த பாடதிட்டங்களுக்கே அதிகம் அழுத்தம் கொடுப்பார். இதேபோல் மற்ற நிறுவனங்களும் தாங்கள் ஈடுபட்டுள்ள தொழிலுக்கு ஏற்ப பாடத்திட்டம் அமையவேண்டும் என்றே விரும்புவர். 

இதனால், அந்த துறையில் இயல்பாக கற்கவேண்டிய விஷயங்களை மாணவர்கள் கற்க முடியாமல் போகும். காலபோக்கில், ஒரு துறையில், ஆதி அந்தங்களை அளந்து, அதில் ஆராய்ச்சி செய்து, புதிய கண்டுபிடிப்புகளை செய்யவேண்டும் என்ற எண்ணம் மாணவர்களிடமிருந்து விலகிவிடும். இதனால், அந்த துறையில் பயிலும் மாணவர்களுக்கு சுயமாக சிந்திக்கும் எண்ணம் கொஞ்சமும் இருக்காது. இப்படி பட்ட மாணவர்கள் எப்படி தாங்கள் சார்ந்த துறையில் வல்லுனதுவம் பெற்று, அந்நியர்களிடம் கையேந்தாமல் சுயமாக புதிய கண்டுபிடிப்புகளை நாட்டிற்க்கு வழங்கமுடியும்? 

அன்றைய கூட்டத்தில், இதுகுறித்த சந்தேகம், துணைவேந்தர் திருவாசகத்திடம் செய்தியாளர்களால் கேட்கப்பட்டது. அதற்க்கு அவர் நேரடியாக பதில்சொல்லாமல், குற்றவியல் துறையின் தலைவரை அதற்க்கு பதில் அளிக்க சொன்னார். கேட்கப்பட்ட கேள்விக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் அவர் பதில் அளிக்க, ஒளிப்பதிவாளர் ஒருவர், உணர்ச்சிவசப்பட்டு "நம்ம கேட்டது ஒன்னு, அவர் சொல்லுறது ஒண்ணா இருக்கே" என்று சக ஒளிப்பதிவாளர்களிடம் கூறி சிரித்துகொண்டார். இதிலிருந்து புரிந்துகொள்ளுங்கள் அந்த துறையின் தலைவர் எப்படி நழுவலாக பதில் அளித்திருப்பார் என்று.

மாணவர்கள் கவனத்திற்க்கு 

ஏற்க்கனவே உயர்கல்விக்கு வழங்கிவந்த மானியங்களை, அரசு கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக்கொண்டு வருகின்றது.

ஆராய்ச்சி படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கான, ஆய்வு கூடங்கள் எந்த கல்லூரியிலும், பல்கலைகழகத்திலும் இல்லாத காரணத்தினால், வெளிநாடுகளுக்கு சென்று படிக்கவேண்டிய சூழ்நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகிறார்கள். 

அப்படி வெளிநாடு செல்லும் மாணவர்கள், அந்த நாடுகளில் தாங்கள் கண்டுபிடிக்கும் புதியவிஷயங்கள் இந்தியர்களுக்கு வந்தடைவதற்க்கு சிலநேரங்களில், ஒரு நூற்றாண்டு கூட ஆகிவிடுகின்றது.

ஆகவே, உயர்கல்விக்கு உரிய மானியம் வழங்க அரசை நிர்பந்திக்க வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது.

வேலையை மட்டும் குறிகோளாக வைத்து கற்று கொடுக்கப்படும், அடிமை கல்வியை எதிர்க்க வேண்டிய கடமை மாணவர்களுக்கு உள்ளது.

இந்நிலையில், ஐ.ஐ.டி இல் பயிலும் மாணவர்கள், பொறியியல் பயில்வதற்கு இனிமேல் வருடத்திற்க்கு இரண்டரை லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்தவேண்டும் என, அரசு அறிவிக்க உள்ளதாக ஒரு செய்தியை படிக்க நேர்ந்தது, மேலும் நமது வருத்தத்தை அதிகரித்துள்ளது.

சிறுபான்மை மக்களின் பாதுகாவலர்!


தனி பெரும்பான்மையுடன் அ.தி.மு.க ஆட்சியை கைப்பற்றியது, தி.மு.க வை விட, அ.தி.மு.க வில் உள்ள மற்ற கூட்டணி கட்சிகளுக்கே பெரும் இடியாக உள்ளது. அமைச்சரவையில் பங்குகேட்பதை அ.தி.மு.கவுக்கு அடுத்து அதிகமான இடங்களில் வெற்றிபெற்றுள்ள தே.மு.தி.க வே கனவிலும் எதிர்பார்க்க முடியாத நிலையில், வெறும் ஒன்றிரண்டு இடங்களில் வென்றுள்ள மற்ற கூட்டணி கட்சிகள், பதவியேற்பு விழாவிற்க்காவது தங்களை அழைப்பார்களா என்ற சந்தேகத்தில் மூழ்கவைத்ததுதான் உண்மை. 

பதவியேற்பு விழாவிற்க்கு, குஜராத்(கொலைகார) முதலமைச்சர் மோடிக்கு, ஜெயலலிதா, அழைப்பு விடுத்தது, கூட்டணியில் உள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. குஜராத்தில் முஸ்லிம் மக்களை கொன்று குவித்த மோடி, கலந்துகொள்ளும் விழாவில், முஸ்லிம் மக்களின் வோட்டின்(நம்பிக்கையின்) மூலம் வெற்றி பெற்ற மனித நேய மக்கள் கட்சி கலந்துகொள்வது சரிதான என்று அக்கட்சி சற்று தயங்கியது. 

பதவியேற்பு விழாவில், மனித நேய மக்கள் கட்சியின் பிரதிநிதிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை. இதைதொடர்ந்து, அக்கட்சி விழாவை புறக்கணித்து விட்டதாக தகவல்கள் பரவின. இது, வோட்டளித்த மக்களுக்கு அக்கட்சி உண்மையாக செயல்படுவதைபோன்ற பிம்பத்தை உருவாக்கியது. அ.தி.மு.க வின் அதிகார மையத்தை, தங்களுடைய கொள்கைக்காக எதிர்க்கும் தைரியமுள்ள ஒரு கட்சியும் உள்ளதே! என்று நினைத்து யாமும் மகிழ்ச்சியடைந்தோம். ஆனால் அந்த மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்க வில்லை. 

மனித நேய மக்கள் கட்சி சார்பாக, சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட தமீம் அன்சாரி, மோடி அழைக்கபட்டதன் காரணமாகவே தங்கள் கட்சி விழாவை புறக்கணிப்பதாக செய்தியாளர்கள் சிலரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர் ஒருவர், அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வை தொடர்புகொண்டு பேசியபோது, அவர், தமீம் அன்சாரி கூறியதை மறுத்துள்ளார். மேலும், போக்குவரத்து நெரிசல் காரணமாகவே தன்னால் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார். அக்கட்சியின் சார்பாக வெற்றிபெற்ற மற்றொரு சட்டமன்ற உறுப்பினருக்கு, அழைப்பிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், அவராலும் கலந்துகொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதற்க்குள், தமீம் அன்சாரி, செய்தியாளர்கள் சிலரை தொடர்புகொண்டு, தான் முன்னர் சொன்ன தகவலை செய்தியாக வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேபோல், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமியை சந்தித்த செய்தியாளர்கள், அவரிடம், புதிய தலைமை செயலகத்தை அ.தி.மு.க புறக்கணிப்பது பற்றி கேட்டபோது, அது அவர்களின் விருப்பம் என்று பதில் அளித்தார்.அக்கேள்வியை மற்றொரு முறை செய்தியாளர்கள், தெளிவாக கேட்டபோது, தான் முன்னர் சொன்னபதிலை எண்ணி, அசடு வழிந்துகொண்டு, தயவு செய்து தன்னை சங்கடத்தில் மாட்டிவிட்டுடாதீங்க என்பதுபோல் கேட்டுகொண்டார். 

மக்களின் கவனத்திற்க்கு


அ.தி.மு.க அதிகார மையத்திற்கு முன், எப்பெயர் பெற்ற கட்சியும் அடிபணிந்து தீரவேண்டும் என்பதே உண்மை.

சிறுபான்மை மக்களின் நலன்களை உண்மையாக பாதுகாக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், அ.தி.மு.க அதிகாரத்தை எதிர்க்க தயாராக வேண்டும்.

இதைவிடுத்து, எந்த தலைவராவது உங்களிடம், சகோதரி ஜெயலலிதா, (அல்லது அம்மா அவர்கள்), சிறுபான்மை மக்களின் பாதுகாவலர் என்று, வசனம் பேசினால், தயவுசெய்து நம்பிவிடாதீர்கள்!

மனமார்ந்த நன்றி .

22.05.2011 அன்று சென்னை தேனாம்பேட்டையில் நடை பெற்ற ஈழ தமிழர் இன படுகொலை நினைவு நாள் நிகழ்விற்கு வருகை தந்து ,நிகழ்வில் கலந்து கொண்ட அத்தனை தோழர்களுக்கும் மாற்றத்திற்க்கான செய்தியாளர்கள் சார்பாக மனமார்ந்த நன்றி .
  

ஈழ தமிழர் இனப்படுகொலை நினைவு நாள் நிகழ்ச்சி


தமிழகத்தின் மூன்று மாத முதல்வன்

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல், பணத்துக்காக ஓட்டுக்கள் விற்கப்படுவதை தடுக்கவும் வழக்கமாக நடைபெரும் தேர்தல் திருவிழா கலாச்சாரத்தை மாற்றும் நோக்கில் அடுக்கடுக்கான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தவர்! வாக்களர்களுக்கு பணம், மது, மற்றும் பரிசுப்பொருட்களை கொடுக்கவிடாமலும் தேர்தல் பிரசாரத்துக்காக அதிக செலவு செய்யவிடாமலும் வேட்பாளர்களை திக்குமுக்காட செய்தவர்!
அவர் வேறு யாருமல்ல? தமிழகத்தின் தற்போதைய கதாநாயகனாக பத்திரிகைகளால் வருணிக்கப்படும் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார்தான்!
அரசு அமைப்புகளின் சட்ட, திட்டங்கள் மற்றும் விதிமுறைகளை சரியான முறையில் அமல்படுத்தும் பொறுப்பு அதிகாரியின் கையில்தான் இருக்கிறது. அதுபோல கடுமையான தேர்தல் விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்தி மிகவும் தைரியத்துடன் செயல்படுத்தியதற்காக பொதுமக்கள் மற்றும் நடுநிலையாளர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளார் பிரவீன்குமார்.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அவர் கடந்த ஆகஸ்ட் முதல் தமிழகத்தில் பணியாற்றி வருகிறார். பணியில் சேர்ந்த மிக குறுகிய காலத்திலேயே தமிழை பேசவும் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டார். இதற்கு முன் தேர்தல் அதிகாரியாக இருந்த நரேஷ் குப்தாவை போலவே மிகவும் எளிமையும் அமைதியான சுபாவமும் கொண்டவர். புன்சிரிப்புக்கு சொந்தக்காரர். அதிகாரிகளை கடிந்துகொள்ளாமல் அரவணைத்து செல்பவர். மிகவும் கெடுபிடியாக நடந்துகொண்டதற்காக அரசியல் கட்சியினரின் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானவர் பிரவீன். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனக்கு வழங்கப்பட்ட பணியை நேர்மையாகவும் செவ்வனே செய்து தமிழக சட்டப்பேரவை தேர்தலை அமைதியாகவும் நேர்மையாகவும் நடத்தி முடித்திருக்கிறார். தமிழக தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக 78 சதவீத வாக்குகள் பதிவாக மூல கர்த்தாவாக இருந்து ஒரு சாதனை படைத்திருக்கிறார். அது மட்டுமின்றி பணப்பட்டுவாட தொடர்பாக கட்சியினர் மீது பதிவான வழக்குகளில் என்பத்து ஐந்து சதவீத வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய பணிகளை கச்சிதமாக செய்து முடித்த பிரவீன் எவ்வித ஆரவாரமின்றி கடந்த 11ம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, மக்களின் உறுதுணையுடன் அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்புடன் உங்களின் உதவியுடன் வெற்றிகரமாக இப்பணிகளை வெற்றிகரமாக செய்ய முடிந்தது என்று மிகவும் அடக்கமாக பதில் அளித்தார். இது என் கடைசி பேட்டி என்று கூறிவிட்டு விடைபெற்றுக்கொண்டார். பின்னர் வெளியான வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக அமோக வெற்றிபெற்றது. தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளும் ஆட்சிமாற்றத்திற்கு ஒரு காரணமாகிவிட்டது. கடந்த மார்ச் முதல் மே வரை ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த அவர் இந்த மூன்று மாத காலத்தில் முதல்வராக தமிழகத்தை ஆட்சி செய்து இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இந்த 2011 ம் ஆண்டு தேர்தல் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. எது எப்படியோ வரும் காலங்கழிலும் இதே போன்றதொரு தேர்தல் தமிழகத்திலும் ஏன் நாடு முழுவதிலும் நடைபெற வேண்டும் என்பதே மக்களின் மிகுந்த எதிர்பார்ப்பு.
இந்நிலையில், அதிகாரி பிரவீன் பதினாறாம் தேதி ஜெயலலிதா தலைமையில் சென்னை பல்கலைகழகத்தில் நடந்த புதிய அரசு பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றார். இது, அவர் தேர்தலில் அதிமுகவுக்கு சாதகமாக நடந்துகொண்டாரோ என்று மக்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

வீரவணக்கம்!

உலக முதலாளிகளின் கைகூலியான இந்திய ஆளும்வர்க்கம், ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவான, தன் வெளிஉறவு கொள்கையை மாற்றும் வரை, ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்க போவதில்லை என்பதை உணர்வோம்!

இந்த பன்னாட்டு முதலாளிகளின் ஆதரவு கொள்கையினால், பாதிக்கபட்டுள்ள ஒவ்வொரு தமிழனையும், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்திற்க்கு அணிதிரட்டுவதன் மூலம், இந்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை மாற்றுவோம்! 

தமிழ்நாட்டில் நடத்தப்படும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமே, தமிழீழம் அமைவதற்கும், ஈழ தமிழர் துயர் நீங்குவதற்கும், இனவெறியர்களை தண்டிப்பதற்கும் ஒரேவழி என்பதை உணர்வோம்!

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமே, ஈழ தமிழர்களுக்கு ஆதரவான போராட்டம் என்ற உண்மையை உணர்ந்து போராடுவோம்!

தமிழீழ விடுதலைக்காக, சிங்கள இனவெறி அரசின் அடக்குமுறையை எதிர்த்து போராடி உயிர் நீத்த, ஒவ்வொரு ஈழ தமிழனுக்கும், எங்கள் சிரம்தாழ்த்தி வீரவணக்கம் செய்கின்றோம்!!!

வீரவணக்கம்!                      வீரவணக்கம்!!                        வீரவணக்கம்!!!

மாற்றத்திற்க்கான செய்தியாளர்கள்! 

கரியா(ல்)ய் போன மக்கள் பணம் !

பிரிட்டிஷ்காரர்களால் உருவாக்கப்பட்ட சென்னை துறைமுகம் நூற்றாண்டுகளை கடந்து, இன்னும் செயல்பட்டு வருகின்றது. முதலாளிகளால், பிரிட்டன் தொழிலாளர்களின், ரத்தத்தை உறிஞ்சி உருவாக்கப்பட்ட பொருட்களை, இந்தியாவில் விற்க்கும் எண்ணத்துடன் வந்த அவர்கள், துறைமுகங்களை ஒட்டி தங்கள் கோட்டைகளை அமைத்துக்கொண்டனர். பெரும் தொழிற்சாலைகள் மற்றும் பிழைக்க வழி உள்ள அனைத்து இடங்களை சுற்றியும் மக்கள் குடி அமர்வதென்பது இயல்பே. அதேபோல், உழைக்கும் மக்கள், துறைமுகத்தை ஒட்டி தங்கள் இருப்பிடங்களை அமைத்துக்கொண்டனர். காலம் செல்ல செல்ல, பிரிட்டிஷ் அரசாங்கத்தின், சுரண்டல் பொருளாதார கொள்கையினால், கிராமங்களை விட்டு நகரங்களை நோக்கி, ஒரு பெரும் மக்கள் கூட்டம் வந்ததால், துறைமுகத்தை ஒட்டி மக்கள் குடியிருப்புகள் பெருக ஆரம்பித்தன. இத்துறைமுகத்தில் காலம் காலமாக நிலக்கரி, இரும்புத்தாது மற்றும் பல்வேறு ரசாயன பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ய படுகின்றன. 

இந்நிலையில், நேற்று, சென்னை உயர்நீதி மன்றம், சென்னை துறைமுகம் வரும் அக்டோபர் மாதம் முதல், நிலக்கரி மட்டும் இரும்புதாது கையாள்வதை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்றும் அவை புதிதாக துவங்கப்பட்டுள்ள எண்ணூர் துறைமுகத்திற்கு மாற்றபடவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் ஒருவர் உட்பட, பலர் தொடர்ந்த பொதுநலவழக்கின் மீது இவ்வுத்தரவு பிறப்பிற்க பட்டுள்ளது. இதில் முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, தானாக முன்வந்து எடுத்துக்கொண்ட வழக்கும் அடங்கும்.

இவ்வழக்குகளில், பொதுவாக எழுப்பப்பட்ட பிரச்சனை என்னவென்றால், துறைமுகத்தில் நிலக்கரி கையாளப்படுவதால், அதில்இருந்து உருவாகும் தூசு, காற்றில் கலந்து, ராயபுரம் முதல் திருவெல்லிக்கேணி வரை வாழும் மக்களுக்கு பல்வேறு உடல்நலக்குறைவை ஏற்படுத்துவதே. மேலும், துறைமுகத்திற்கு அருகில் அமைந்துள்ள உயர்நீதி மன்றத்தின் சுவர்களில், கரிய நிறத்தில் மாசு படிவதும் ஒரு பிரச்சனையாகும். 

இதுகுறித்து, சென்னை துறைமுகம் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், காற்றில் மாசுகலப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கபட்டது. மேலும், நிலக்கரி கையாள்வதில் சென்னை துறைமுகத்திற்கு (அரசாங்கத்தால் கையாளப்படுகிறது) பெரும் வருமானம் கிடைப்பதாகவும், இத்தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இருப்பதாகவும், ஆகவே நிலக்கரி கையாள்வதை எண்ணூர் துறைமுகத்திற்கு மாற்றினால் சென்னை துறைமுகம் (அரசால் நடத்தபட்டுவருவது) நஷ்டம் அடைவதுடன், தொழிலாளர்களும் பாதிக்கபடுவர் என்று தெரிவிக்கப்பட்டது. 

வழக்கம்போல், இருதரப்பு வாதங்களையும் ஆழமாக(இந்த ஆழத்தை அளக்க முற்படவேண்டாம்) பரிசீலித்த நீதிபதிகள், அக்டோபர் மாதத்துக்குள் சென்னை துறைமுகம் நிலக்கரி மற்றும் இரும்புத்தாது கையாள்வதை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், இச்சேவையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அனைவரையும், எண்ணூர் துறைமுகம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும், அப்படி இல்லையென்றால், சென்னை துறைமுகம் பாதி தொழிலாளர்களையும், எண்ணூர் துறைமுகம் பாதி தொழிலாளர்கலையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

கவனிக்க வேண்டியவை 

சென்னை துறைமுகம் இன்றல்ல நேற்றல்ல, கடந்த பல பத்து வருடங்களாக நிலக்கரிகையாண்டு வருகின்றது. மக்களும் ஒரு நூறு ஆண்டுக்கு மேல் துறைமுகத்தை சுற்றி வாழ்ந்து வருகின்றனர்.

சென்னை துறைமுகத்தில் நிலக்கரி கையாள்வது அரசு நிறுவனம். ஆகவே, அதில் வரும் வருமானம் அரசுக்கு சென்று, அதன்மூலம் அந்த பணம் மக்களை வந்து அடைகிறது.

எண்ணூர் துறைமுகம் அரசுக்கு சொந்தமானது என்றாலும், அதில் நிலக்கரி கையாள்வது உட்பட பல்வேறு பணிகளை தனியார் நிறுவனங்கள் செய்துவருகின்றன. 

நிலக்கரி கையாள்வது கோடிக்கணக்கில் லாபம்தரும் தொழில். 

ஆகவே, நிலக்கரி கையாள்வது எண்ணூருக்கு மாற்ற படுவது தனியார் நிறுவனங்களுக்கு லாபம் ஈட்டித்தரும் விஷயம் மட்டும் அல்ல இதுநாள்வரை அரசுக்கு கிடைத்துவந்த வருமானத்தை இழக்கவைக்கும் விஷயமும்.

எண்ணூர் துறைமுகம், மாசுவை கட்டுபடுத்தும் நவீனவசதிகள் தங்களிடம் உள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை (கவனிக்க).

மக்களின் உடல்நலத்தை கருத்தில்கொண்டு இவ்வுத்தரவு பிறப்பிற்க்கபட்டிருந்தால், எண்ணூர் துறைமுகத்தை சுற்றி மக்கள் வாழவில்லையா????? 

அப்படி என்றால் இதுநாள்வரை அரசுக்கு(நமக்கு) கிடைத்துவந்த வருமானம்?????

இக்கேள்விக்கு சரியாக பதில் அளிப்பவர்களுக்கு, ராயபுரம் மேம்பாலத்தின் மேல் ஏறி நின்று, சென்னை துறைமுகத்தில் கடைசியாக நிலக்கரி கையாளப்படும் காட்சிகளை பார்க்க, ஏற்பாடு செய்யப்படும்.

அசீப் 
நன்றி 








அவசரம்: உங்கள் கவனத்திற்க்கு

நம்முடைய அவசரகூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், இரண்டு வருடங்களுக்கு முன் இதே மாதத்தில், இலங்கையில், சிங்கள அரசினால் கூட்டம் கூட்டமா கொள்ளப்பட்ட தமிழ் மக்களின் போராட்டத்தின் நினைவாக நாம் ஏதேனும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யலாமா என விவாதிக்கபட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் அதற்க்கு சம்மதம் தெரிவித்தனர். ஆனால், கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களிடமும் இதுகுறித்து கருத்து கேட்டபின், நிகழ்ச்சி குறித்து முடிவெடுக்கலாம் என்று தீர்மானிக்கபட்டது. ஆகவே, நேற்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளாதவர்கள், இதுகுறித்துதங்கள் கருத்துக்களை வரும் ஞாயிறுக்குள் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ள படுகின்றனர். 

நன்றி 
மாற்றத்திற்கான செய்தியாளர்கள்.

சிந்தனை

"புரட்சி என்பது ஆப்பிள் பழமல்ல, பழுத்தவுடன் விழுவதற்கு. அதனை நீ விழ வை" - [சே குவேரா]

சிறப்பு பொருளாதார மண்டலம் (Special Economic Zone)

1990 பிறகு இந்தியாவில் உலகமயமாக்கல், தாராளமயம்,தனியார்மயம் இந்த வார்த்தைகள் எல்லாம் இந்தியாவில் வேகமாக பரவ ஆரம்பித்தாகிவிட்டது.இதற்கு புள்ளையார் சுழி போட்டு வரவேற்றது நரசிம்மராவ் அரசு .சந்தைகள் கிடைக்காமல் இருந்த வெளிநாட்டு முதலாளிகள் (முதலைகள்) தங்கள் பொருட்களோடு இங்கு வந்திறங்க தொடங்கின.இதெற்கெல்லாம் அரசு சொல்லும் காரணம் தொழில்வளர்ச்சி .ஆனால் யாரோடைய வளர்ச்சி என்பதை கூர்ந்து  கவனிக்க வேண்டியது .நிச்சயம் அது அதிகாரவர்கத்தின் வளர்ச்சிக்கு தான்.அதன் பின் ஒவ்வொரு ரூபத்தில் வெளிநாட்டு சக்திகளும், உள்நாட்டு பெருமுதலாளிகளும் நம் வளத்தையும் ,மக்களையும் சுரண்ட ஆரம்பித்துவிட்டன. அதில் சமீபத்திய வரவு சிறப்பு பொருளாதார மண்டலம்  (Special  Economic  Zone ) .


நவீன காலனிசம்:
                                   பிரிட்டிஷ் அரசு இந்தியா போன்ற நாடுகளை காலனியாக மாற்றி அதன் வளங்களை சுரண்டியதை படித்து இருப்போம்.இன்று அது போல செய்யமுடியாது நிலையில் வல்லரசு நாடுகள் சிறப்பு பொருளாதார மண்டலங்கள்  மூலம் தங்கள் காலனிகளை மறைமுகமாக திணிக்கின்றனர் .அதற்கு நம் அரசு பச்சை கொடி காட்டிவருகிறது.மத்திய-மாநில அரசுகள் வெளிநாட்டு முதலாளிகளை வரவேற்கின்றனர் .

சிறப்பு பொருளாதார சட்டம் :
                                     இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்கள் எந்த இடையூறும் இல்லாமல் அரங்கேற மன்மோகன் தலைமையிலான மத்திய அரசு  2005 ம் நாடாளுமன்றத்தில் சட்டம் ஒரு சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றியது .இதில் வேடிக்கை என்ன வென்றால் இதை எதிர்க்க எந்த கட்சியும் முன்வரவில்லை மாறாக வெளிநடப்பு செய்தனர் .இதன் மூலம் தங்கள் மறைமுக ஆதரவை தெரிவித்து சென்றுவிட்ட்னர்.அவ்வளவு தான் வெளிநாட்டு ,உள்ளநாட்டு முதலாளிகள் படையெடுக்க  ஆரம்பித்துவிட்டனர் .மத்திய அரசும்,மாநில அரசும் இனி பொருளாதார வளர்ச்சி வின்னைதொடும் என பரப்புரை செய்தனர்.


இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்கள் வெளிநாடு ,உள்நாடு மூலதனத்தின் சொர்க்க பூமி .இங்கே தாங்கள் விரும்பிய தொழிலால் தோண்ட அனுமதி உண்டு .இதற்கு அனுமதி வாங்குவது என்பது மிக எளிது ஒற்றை சாளர முறையில் எளிதாக வாங்கிவிடமுடியும் .ஆனால் இங்கு ஒரு சாதாரண குடிமகன் ரேஷன் அட்டை வாங்க பல வழிமுறைகளை பின்பற்றவேண்டும் .இதற்கு வெறும் வணிக அமைச்சகத்திடம் அனுமதி வாங்கினால் போதுமானது ,நிதி அமைச்சகதிடமோ ,ரிசர்வ் வங்கிடமோ அனுமதி வாங்க அவசியம் இல்லை .

இங்கு தயாரிக்கப்படும் எந்த பொருளுக்கும் வரி கிடையாது .இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்திற்குள் எந்த ஒரு இந்திய அரசியல் சட்டமும் செல்லுபடியாகாது .ஏற்றுமதி ,இறக்குமதி வரியும் கிடையாது .ஏற்றுமதி ,இறக்குமதி செய்யும் பொருகளை இந்திய சுங்க துறையினர் சோதனை போடமுடியாது.அதாவது இந்திய நாட்டிற்குள் அவர்கள் தங்கள் நாடு அரசாங்கத்தை நடத்துவர் .இங்கு வழங்கப்படும் வரி சலுகைக்கு வரி விடுமுறை என்று பெயர் (  Tax Holiday) .இதனால் இன்று வரை ஏற்பட்டிருக்கும் இழப்பு 2 லட்சம் கோடிக்கும் மேலும் .இது இன்னும் அதிகரித்து கொண்டே போகும்.

மேலும் இவர்களுக்கு தடை இல்லா மின்சாரம் இலவசமாகவும் ,மானிய விலையிலும் கண்டிப்பாக தரபடுகிறது .இப்பொழுது இருக்கும் மின்வெட்டிற்கு இதுவே காரணம் .அது மட்டும்  இல்லை தடை இல்ல தண்ணீர் வசதியையும் அரசே செய்ய வேண்டும் .

சரி இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்க வேண்டிய நிலம் எங்கிருந்து கையகபடுத்தபடுகிறது .எப்படி எடுக்கபடுகிறது .பன்னாட்டு முதலாளிகளும் ,உள்நாட்டு முதலாளிகள் ,வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்கள் தொழிலை இங்கு தொடங்க மத்திய அரசோடும் மாநில அரசோடும் சேர்ந்து உள்நாட்டு தரகர்களோடு நிலம் தேடி அலைகின்றனர் .அவர்கள் விரும்பும் இடம் பல்லாயிர கணக்கான ஏக்கர் நிலங்கள் அது கிடைக்கு இடமாக புறநகர் ,மற்றும் கிராமங்களை தேர்வு செய்கின்றனர்.

இதற்கு நில ஆர்ஜிதம் செய்ய 1894 நில ஆர்ஜித சட்டத்தையே பின்பற்றி செயல்படுகின்றனர் .நிலம் கையகபடுத்தும் பொறுப்பு அரசாங்கத்திற்கு கொடுக்கபடுகிறது .மக்களுக்கு ஆசை வார்த்தை சொல்ல படுகிறது இங்கே தொழில்சாலை வந்தால் உங்களுக்கு தான் நல்லது .வீட்டில்  ஒருவருக்கு வேலை என்றெல்லாம் மாய்மாலம் காட்டுவார்கள் .மயங்கினால் அவர்கள் வேலை எளிது,இல்லையென்றால் துப்பாக்கி வைத்து செல்லமாக மிரட்டபடுவார்கள்.அதையும் மீறி எதிர்பவர்கள் நக்சல் என முத்திரை குத்தபடுவார்கள் .சரி அவர்களுக்கு உரியவிலைக்கு நிலம் விற்கப்படுமா என்றால் இல்லை .பெரிய முதலாளிகள் தானே மக்கள் கேட்கும் விலைக்கு கொடுத்தால் என்ன ,நிச்சயம் கொடுக்கமாட்டர்கள் அடி மாட்டு விலை பேரம்பேசி அரசே விலை நிர்ணயம் செய்யும். தாங்கள் பிறந்து ,வளந்த ஊரை காலி செய்துவிட்டு பல மயிலுக்கு அப்பால் குடியேறும் அவலங்கள் தொடர்கின்றனர் .அவர்கள் வாழ்வு ஆதாரமே அந்த பகுதியை நம்பி தான் இருக்கும் அதையும் விட்டாகிவிட்டது .இனி இவர்கள் பாடு திண்டாட்டம் தான் .நாளை நமக்கும் .

இந்த மாதிரி  பல சலுகைகள் இருப்பதால் வெளியில் உள்ள தொழில் நிறுவனங்களும் இங்கே தொழில் தொடங்க படை எடுகின்றனர்.   1000  ஏக்கர் முதல் 40,௦௦௦ ஏக்கர் வரை நிலம் எடுக்கபடும் பட்சத்திலும் தொழில் நிறுவனகள் இதில் வெறும்  25%   தான் ஏனைய 75%  திரை அரங்கம்,குடியிருப்பு,மருத்துவமனை ,கேளிக்கை விடுதி ,அங்காடிகள் ,கோல்ப் மைதானங்கள் தான்.யார் வீடு இடத்தில யார் இதெல்லாம் கட்டுவது .

சிறப்பு பொருளாதார மண்டலங்களால் மக்களுக்கு ஆரசு சொல்லும் படியான எந்த நன்மையையும் கிடையாது .நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை என்பதெல்லாம் வெறும் வாய் வார்த்தைகள் தான்.மீறி கேட்டால் கல்வி தகுதி என எதாவது சொல்லி தட்டி கழிப்பார்கள்.மேலும் இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்கள் வெளிநாட்டு தூதரக அலுவலங்களுக்கு நிகரானது ,அங்கு இருப்பது போல் உள்நாட்டு  சட்ட தட்டங்கள் இங்கு செல்லாது .இங்கு விழி செய்பவர்களுக்கு மலிவான கூலி தான் கிடைக்கும் .தொழிலார்கள் சட்டம் என்றால் என்ன அர்த்தம் என கேட்பார்கள் .எட்டு மணி நேர வேலை,பணி பாதுகாப்பு,ஓய்வுதியம் ,பேறு காலவிடுப்பு என்பதற்கு இவர்களின் அதிகாரத்தில் இடம் இல்லை .அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் ,பெண்கள் மீதான பாலியல் வக்கிரங்கள் சாதாரமானவை .
                  
ஆனால் இங்கு இருக்கும் முதலாளிகளுக்கு ஆயிரம் சலுகைகள் ,ஏன் நிலம் கொடுக்கும் மக்களுக்கு அந்த நிறுவனத்தின் பங்கு பத்திரங்கள் தரலாமே மாட்டார்கள் அந்த பங்கு வைத்து இருப்பவர்களுக்கும் வரி சலுகை உண்டு .காலம்காலமாக வாழ்ந்து ,உழுத நிலத்திற்கு யாரோ விலை பேசுகிறார்கள் .

 இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அரசிற்கு அதிகமான வரி இழப்பையும் ,நிதி நெருக்கடியும் ஏற்படுத்தும்  என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்து .ஏற்கனவே அரசுகள் நிதி நிலைமையை காட்டி மக்கள் நல திட்டங்களை நிறுத்திவருகிறது.இதன் மூலம் மேலும் பல தனியார் நிறுவங்களை வர வழிவகை செய்யும் .

இதெற்கெல்லாம் வெறும் அரசு மட்டும் தான் காரணமா இல்லை நாமும் தான் வெளிநாட்டு மோகத்தால் நுகர்வு என்னும் கலாசாரத்தில் சிக்கி தவிக்கும் நம் பலவீனம் தான் இந்த சிறப்பு பொருளாதார மண்டலகள் அமைய காரணங்கள் இதை பயன்படுத்தி தங்கள் அராஜங்களை காட்டிவருகின்றனர் .உதாரனம் சொல்ல போனால் சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ்  avenue அதுவும் ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் தான் .அங்கு செல்லாத சென்னை இளைஞர்களே இல்லை எனலாம் .அங்கு சென்று வருவது எதோ வெளி நாட்டிற்கே சென்று வருவதை போல் எண்ணம்.அங்கு விற்கும் ஒரு காலனி விலை  4000 ரூபாய் அதை வாங்கவும் ஆள் உள்ளது .ஆனால் இங்கு பலருக்கு அது தான் மத சம்பளமே .இது மனிதர்களிடையே இடைவெளியை உருவாக்கும்.மேலும் விலை வாசி ஏற முதல் காரணமும் இது தான் ,அங்கே இருக்கும் விலையே நாளடைவில் வெளியேயும்.

சிறப்பு பொருளாதார மண்டலம் என நடக்கும் அவலங்களை இடதுசாரிகள் கூட கண்டுகொள்ளுவதில்லை.இது நாட்டின் மறு காலனியம் என்பதில் துளியும் ஐயம் வேண்டாம் .இதை இப்பொழுதே எதிர்க்காவிட்டால் பின்விளைவுகள் மோசம் என்பது உண்மை

தி.மு.க - அ.தி.மு.க கூட்டணி!!!

நேற்று, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், மதியம் பன்னிரெண்டரை மணிக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்க பட்டது. இதில் தி.மு.க சார்பாக பொன்முடி, இளங்கோவன் கலந்துகொண்டனர். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நாற்காலியை  நிரப்ப ஆ(ம்ஸ்ட்ராங்)ள் இல்லை. அ.தி.மு.க சார்பாக பன்னீர்செல்வம், மைத்ரையன், செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர். பிரவீன் வருகை தாமதமானதால்  கூட்டம் தொடங்கும் முன், பொன்முடியும், மைத்ரேயனும் கட்சிவேறுபாடு மறந்து தங்களுக்குள் பேசி சிரித்துக்கொண்டிருக்க (Shhhhhh...யாரும் அம்மாவிடம் சொல்லிடாதீங்க), தாமதத்திற்க்கு மன்னிப்பு கேட்க்கும் விதமாக அசடு வழிய அரங்கிட்க்குள் நுழைந்தார் பிரவீன். வந்ததும் வராததுமாக, பிரவீனை சீன்டிபார்க்கும் விதமாக அவர் தாமதமாக வந்ததை பற்றி ஏதோ கேட்டார் பொன்முடி. "இதையெல்லாம் நாங்கள் உங்களிடமிருந்துதான் கற்றுகொள்கிறோம்" என்று பதிலுக்கு நக்கல் அடித்தார், பிரவீன். பின் மூடிய அரங்கில் சுமார் ஒருமணிநேரம் நீடித்தது ஆலோசனை. கூட்டம் முடிந்து முதல் ஆளாக வெளியேவந்த அ.தி.மு.க பிரதிநிதிகளை, பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்துகொள்ள, "ஐயோ லேட்டா போனா! அம்மா அடிப்பாங்க" என்று சொல்லாமல் சொல்லி நழுவினர் அ(ம்மா).தி.மு.கவினர். அடுத்து வந்த கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர்கள் தாங்கள் எடுத்துவைத்த கோரிக்கைகளை விளக்கினர். அதில் முக்கியமானவை, "தேர்தல் ஆணையத்தால் கைப்பற்றபட்ட, ஐம்பத்து இரண்டு கோடிஇல், உரிய ஆவணம் கொடுப்பவர்களுக்கு, சேரவேண்டிய பணத்தை திரும்ப கொடுக்கவேண்டும், மற்ற பணத்தை அரசு கருவூலத்தில் சேர்க்கவேண்டும்", "தேர்தல் ஆணையம், புது மாப்பிள்ளை போல் இல்லாமல்(அதாவது, தேர்தல் முடிந்ததும் இதுவரை காட்டிவந்த மாப்பிள்ளை முறுக்கை விட்டுவிடாமல்)தேர்தல் வழக்குகளாக பதிவு செய்யப்பட்டுள்ள ஐம்பதாயிரம் வழக்குகள் மீது, வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்பவை முக்கியமானவை. கம்யூனிஸ்ட்கள் பேசும்வரை காத்துநின்ற பொன்முடி, பின் வழிய வந்து பேசினார். "தபால் வாக்குகள் முதல் அரைமணிநேரம் மட்டுமே எண்ண படவேண்டும், பிறகு மின்னணு எந்திரத்தை எண்ண வேண்டும்", என தி.மு.க சார்பாக கேட்டு கொண்டதாக கூறினார். பின்னர் பா.ம.க வின் கோ.க.மணி, ஒவ்வொரு சுற்று முடிவின் நகல்கள் வேட்பாளருக்கு கொடுக்கவேண்டும் என கேட்டதாக சொன்னார். அனைத்து கட்சி பிரமுகர்களும் தங்களின் கோரிக்கைகள் அனைத்தையும், ஆணையம், ஏற்று கொண்டதாகவே(அதிசயம்) கூறினர். பின்னர் செய்தியாளர்களை பாழடைந்த கோட்டை.....மன்னிக்கவும், செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் முதல் இரண்டு மாடிகளுக்கு, இரண்டுமுறை ஏற்றி இறக்கியபின், அப்பாடா....இப்போ பேசலாம் என்று முடிவெடுத்து பேசினார் பிரவீன்குமார். கடந்த ஒருமாதமாக சொல்லிக் கொண்டிருக்கும் அதே விஷயத்தை, கிளிபிள்ளை போல் இன்னும் ஒருமுறை கூறினார். "மற்ற மாவட்டங்களில் உள்ள, தேர்தல் அதிகாரிகளுக்கும் தங்களுக்கும் தகவல் பரிமாற்றத்தில் உள்ள குறைகளை ஒத்துக்கொண்ட பிரவீன், அவை சரிசெய்யபடும் என்று நம்பிக்கையுடன் கூறினார். எல்லாம் முடியும் வேளையில், மணி இரண்டரையை தாண்டி இருந்தது. கீழ் குடல், மேல் குடலை தின்ன, செய்திகளை சுமர்ந்துகொண்டு பசியுடன் கோட்டையை விட்டு வெளியேறினர் செய்தியாளர்கள்.

பின் குறிப்பு 

 "தி.மு.கவும் அ.தி.மு.கவும், இப்படி எல்லாம் சிரித்து பேசிக்குவாங்களா" என்று ஒரு இளம் செய்தியாளர், தனது வியப்பை வெளிபடுத்தினார்.

வழக்கம் போல், நச்சுன்னு, நாலு கோரிக்கையை (மட்டும்) வைத்துவிட்டு வெளியேறினர் கம்யூனிஸ்ட்கள்.

தேர்தல் ஆணையத்தின் மீதான தி.மு.கவின் கோபம்????, பொன்முடியின் நக்கலில் வெளிப்பட்டது.

ஆணையத்தின் மீதான அ.தி.மு.கவின் நன்றியுணர்வு????, பன்னீர்செல்வத்தின் பம்மலில் வெளிப்பட்டது. 

கோபத்திற்க்கும், நன்றியுணர்வுக்குமான இடைவெளி நூலிழைதான் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நன்றி 
அசீப் 

அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்

அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். உங்கள் படைப்புக்களை ஏற்றம் செய்யும்போது உங்கள் பெயரையும் தெரியப்படுத்தும் மாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி 
இப்படிக்கு 
ஆனந்த் குமார் 

இந்த வாரத்திற்கான சந்திப்பு

இந்த வாரத்திற்கான சந்திப்பு வழக்கம் போல வங்கக் கரையோரம் (8-5-11) ஞாயிற்று கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கும். 

நேர் - எதிர்

ராசா, தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், திட்டமிட்டு பழிவாங்க படுகிறார் என்று கூறிவந்த தி.மு.க. கனிமொழியை காப்பாற்ற. இன்று சி.பி.ஐ நீதிமன்றத்தில். கலைஞர் டி.வி சரத்குமார் மற்றும் முன்னால் அமைச்சர் ராசா-வை எக்கச்சக்கமாக போட்டுகொடுத்துள்ளது.
பெண்ணியம் பேசும் கனிமொழி, தன் ஜாமீன் மீதான வாதத்தின் போது, வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, கனிமொழி, பெண் என்பதையும், நீதிமன்றம் கருத்தில் கொள்ளவேண்டும் என கூறியதற்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.....
குடும்பம் என்றுவந்தால், கட்சியாவது! கொள்கையாவது!! 


இன்று கார்ல்மார்க்ஸ்-ன் பிறந்தநாள்...

உழைக்கும் வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவனின் பிறந்த தினமான இன்று, சுரண்டல் அற்ற சமூகத்தை படைக்கும் மக்கள் பணியில், பாடுபட்டுக்கொண்டிருக்கும் அனைவருக்கும் தோள்கொடுப்போம் என்று சபதம் ஏற்ப்போம்.... உலக ஒடுக்கப்பட்ட மக்களே! ஒன்று கூடுங்கள்!

மாற்றத்திற்கான செய்தியாளர்கள் - ஓர் அறிமுகம்

அரசியல் தொடங்கி ஆன்மிகம் வரை உங்கள் கண்களில் தெரியாமல் போன உண்மைகளையும் , உங்களுக்கு தெரியகூடாதென, மறைக்கபட்டிருக்கின்ற உண்மைகளையும் , உங்களுக்காக உங்களிடம் உரக்க சொல்வதே  எங்கள் நோக்கம்.ஏனெனில் உண்மை ஒருமுறை வெளிச்சத்திற்கு வந்தால், அது மாற்றத்திற்கான பாதையை நிச்சயம் உருவாக்கும் .

எப்போதும், வரலாறு என சொல்லப்படுவது  தகுதி உடையவர்களாலும், உண்மை உடையவர்களாலும் தொகுக்கப்படுவதில்லை  என்பதை உணர்த்தவே நாங்கள் முயற்சிக்கிறோம்.

நம்மைச்சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகள், அதன் பின்னணியிலிருக்கும் அரசியல், அந்த நிகழ்வை நகர்த்தும் அடிப்படை, அதற்கான தேவை, என நாங்கள் புரிந்துகொண்டதை, நாங்களே பகிர்ந்து கொள்ளவும், நாங்கள் பகிர்ந்து கொண்டதை, உங்களோடு பகிர்ந்து கொள்ளவுமே  இந்த  தளம்.

இத்தளம் பெரும்பான்மையாக  தொலைக்காட்சி, செய்தித்தாள், வலைத்தளம், வானொலி என ஊடகவியல் சார்ந்த இளைஞர்களாலும், சமூக மாற்றத்தில் ஆர்வம் கொண்ட பல்துறை இளைஞர்களாலும் இயங்கி வருகின்றது .

உங்களிடமும் இச்சமூகத்துக்கு உரைப்பதற்கு உண்மை இருக்குமானால், அவலங்களை எதிர்க்கும் தைரியம் இருக்குமானால், கைகோர்த்து போராட விருப்பம் என்றால், "செயல் ஒன்றே சிறந்த சொல்" என்ற கூற்றில் நம்பிக்கை இருந்தால், அதன்மூலம் மாற்றத்தை  ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இருக்குமானால், எங்கள் குழுவில் உங்களுக்கும் இடமிருக்கிறது ...

அணுக   : socialjournalists@gmail.com

Time

Total Page Views

About this blog

நம்மைச்சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகள் , அதன் பின்னணியிலிருக்கும் அரசியல் , அந்த நிகழ்வை நகர்த்தும் அடிப்படை,அதற்கான தேவை, என நாங்கள் புரிந்துகொண்டதை , நாங்களே பகிர்ந்து கொள்ளவும் , நாங்கள் பகிர்ந்து கொண்டதை , உங்களோடு பகிர்ந்து கொள்ளவுமே இந்தத் தளம்.
Powered by Blogger.

Followers

Blog Archive