கரியா(ல்)ய் போன மக்கள் பணம் !

பிரிட்டிஷ்காரர்களால் உருவாக்கப்பட்ட சென்னை துறைமுகம் நூற்றாண்டுகளை கடந்து, இன்னும் செயல்பட்டு வருகின்றது. முதலாளிகளால், பிரிட்டன் தொழிலாளர்களின், ரத்தத்தை உறிஞ்சி உருவாக்கப்பட்ட பொருட்களை, இந்தியாவில் விற்க்கும் எண்ணத்துடன் வந்த அவர்கள், துறைமுகங்களை ஒட்டி தங்கள் கோட்டைகளை அமைத்துக்கொண்டனர். பெரும் தொழிற்சாலைகள் மற்றும் பிழைக்க வழி உள்ள அனைத்து இடங்களை சுற்றியும் மக்கள் குடி அமர்வதென்பது இயல்பே. அதேபோல், உழைக்கும் மக்கள், துறைமுகத்தை ஒட்டி தங்கள் இருப்பிடங்களை அமைத்துக்கொண்டனர். காலம் செல்ல செல்ல, பிரிட்டிஷ் அரசாங்கத்தின், சுரண்டல் பொருளாதார கொள்கையினால், கிராமங்களை விட்டு நகரங்களை நோக்கி, ஒரு பெரும் மக்கள் கூட்டம் வந்ததால், துறைமுகத்தை ஒட்டி மக்கள் குடியிருப்புகள் பெருக ஆரம்பித்தன. இத்துறைமுகத்தில் காலம் காலமாக நிலக்கரி, இரும்புத்தாது மற்றும் பல்வேறு ரசாயன பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ய படுகின்றன. 

இந்நிலையில், நேற்று, சென்னை உயர்நீதி மன்றம், சென்னை துறைமுகம் வரும் அக்டோபர் மாதம் முதல், நிலக்கரி மட்டும் இரும்புதாது கையாள்வதை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்றும் அவை புதிதாக துவங்கப்பட்டுள்ள எண்ணூர் துறைமுகத்திற்கு மாற்றபடவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் ஒருவர் உட்பட, பலர் தொடர்ந்த பொதுநலவழக்கின் மீது இவ்வுத்தரவு பிறப்பிற்க பட்டுள்ளது. இதில் முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, தானாக முன்வந்து எடுத்துக்கொண்ட வழக்கும் அடங்கும்.

இவ்வழக்குகளில், பொதுவாக எழுப்பப்பட்ட பிரச்சனை என்னவென்றால், துறைமுகத்தில் நிலக்கரி கையாளப்படுவதால், அதில்இருந்து உருவாகும் தூசு, காற்றில் கலந்து, ராயபுரம் முதல் திருவெல்லிக்கேணி வரை வாழும் மக்களுக்கு பல்வேறு உடல்நலக்குறைவை ஏற்படுத்துவதே. மேலும், துறைமுகத்திற்கு அருகில் அமைந்துள்ள உயர்நீதி மன்றத்தின் சுவர்களில், கரிய நிறத்தில் மாசு படிவதும் ஒரு பிரச்சனையாகும். 

இதுகுறித்து, சென்னை துறைமுகம் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், காற்றில் மாசுகலப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கபட்டது. மேலும், நிலக்கரி கையாள்வதில் சென்னை துறைமுகத்திற்கு (அரசாங்கத்தால் கையாளப்படுகிறது) பெரும் வருமானம் கிடைப்பதாகவும், இத்தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இருப்பதாகவும், ஆகவே நிலக்கரி கையாள்வதை எண்ணூர் துறைமுகத்திற்கு மாற்றினால் சென்னை துறைமுகம் (அரசால் நடத்தபட்டுவருவது) நஷ்டம் அடைவதுடன், தொழிலாளர்களும் பாதிக்கபடுவர் என்று தெரிவிக்கப்பட்டது. 

வழக்கம்போல், இருதரப்பு வாதங்களையும் ஆழமாக(இந்த ஆழத்தை அளக்க முற்படவேண்டாம்) பரிசீலித்த நீதிபதிகள், அக்டோபர் மாதத்துக்குள் சென்னை துறைமுகம் நிலக்கரி மற்றும் இரும்புத்தாது கையாள்வதை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், இச்சேவையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அனைவரையும், எண்ணூர் துறைமுகம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும், அப்படி இல்லையென்றால், சென்னை துறைமுகம் பாதி தொழிலாளர்களையும், எண்ணூர் துறைமுகம் பாதி தொழிலாளர்கலையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

கவனிக்க வேண்டியவை 

சென்னை துறைமுகம் இன்றல்ல நேற்றல்ல, கடந்த பல பத்து வருடங்களாக நிலக்கரிகையாண்டு வருகின்றது. மக்களும் ஒரு நூறு ஆண்டுக்கு மேல் துறைமுகத்தை சுற்றி வாழ்ந்து வருகின்றனர்.

சென்னை துறைமுகத்தில் நிலக்கரி கையாள்வது அரசு நிறுவனம். ஆகவே, அதில் வரும் வருமானம் அரசுக்கு சென்று, அதன்மூலம் அந்த பணம் மக்களை வந்து அடைகிறது.

எண்ணூர் துறைமுகம் அரசுக்கு சொந்தமானது என்றாலும், அதில் நிலக்கரி கையாள்வது உட்பட பல்வேறு பணிகளை தனியார் நிறுவனங்கள் செய்துவருகின்றன. 

நிலக்கரி கையாள்வது கோடிக்கணக்கில் லாபம்தரும் தொழில். 

ஆகவே, நிலக்கரி கையாள்வது எண்ணூருக்கு மாற்ற படுவது தனியார் நிறுவனங்களுக்கு லாபம் ஈட்டித்தரும் விஷயம் மட்டும் அல்ல இதுநாள்வரை அரசுக்கு கிடைத்துவந்த வருமானத்தை இழக்கவைக்கும் விஷயமும்.

எண்ணூர் துறைமுகம், மாசுவை கட்டுபடுத்தும் நவீனவசதிகள் தங்களிடம் உள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை (கவனிக்க).

மக்களின் உடல்நலத்தை கருத்தில்கொண்டு இவ்வுத்தரவு பிறப்பிற்க்கபட்டிருந்தால், எண்ணூர் துறைமுகத்தை சுற்றி மக்கள் வாழவில்லையா????? 

அப்படி என்றால் இதுநாள்வரை அரசுக்கு(நமக்கு) கிடைத்துவந்த வருமானம்?????

இக்கேள்விக்கு சரியாக பதில் அளிப்பவர்களுக்கு, ராயபுரம் மேம்பாலத்தின் மேல் ஏறி நின்று, சென்னை துறைமுகத்தில் கடைசியாக நிலக்கரி கையாளப்படும் காட்சிகளை பார்க்க, ஏற்பாடு செய்யப்படும்.

அசீப் 
நன்றி 








0 comments:

Post a Comment

Time

Total Page Views

About this blog

நம்மைச்சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகள் , அதன் பின்னணியிலிருக்கும் அரசியல் , அந்த நிகழ்வை நகர்த்தும் அடிப்படை,அதற்கான தேவை, என நாங்கள் புரிந்துகொண்டதை , நாங்களே பகிர்ந்து கொள்ளவும் , நாங்கள் பகிர்ந்து கொண்டதை , உங்களோடு பகிர்ந்து கொள்ளவுமே இந்தத் தளம்.
Powered by Blogger.

Followers

Blog Archive