ராஜீவ் கொலைவழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள்ள முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளனுக்கு தூக்குதண்டனையை உறுதிசெய்துள்ளது இந்திய அரசு. இதை தொடர்ந்து அவர்கள் எந்நேரமும் தூக்கிலிடபடலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. கடந்த இருபது வருடங்களாக, தன் மகனின் விடுதலைக்காக தன்னந்தனியாக போராடிவரும், பேரறிவாளனின் தாய் அற்புதம்மாவை இச்செய்தி தவிடுபொடியாக்கி உள்ளது.
இன்று, செய்தியாளர்களை சந்தித்த அந்த தாய், தன் மகனை காப்பாற்ற, ஏதேனும் செய்யுங்களேன் என்று கதறி அழுதது, அனைவரையும் கண்கலங்க செய்துவிட்டது. இருபது வருடங்களுக்கு முன், விசாரணை என்று கூறி தன் மகன் அழைத்து செல்லப்பட்ட அந்தநாளை நினைவு கூர்ந்த அந்த தாய், அன்று முதல் இன்றுவரை, நம் காவல்துறையும் நீதித்துறையும் ஒருவரை மற்றவர் மிஞ்சும் வகையில், மாறி மாறி நடத்திவரும் நாடகத்தை பட்டியலிட்டு கூறினார்.
தானே முன்வந்து விசாரணைக்கு சென்ற பேரறிவாளனை, கண்காணாத இடத்துக்கு அழைத்து சென்ற சி.பி.ஐ, ஒருவாரம் கழித்து, தலைமறைவாக இருந்தவரை தேடி கண்டுபிடித்ததாக கூறிய முதல் பொய் தொடங்கி தற்போது வரை அனைவராலும் நம்பப்பட்டுவரும் பொய்களையும் பட்டியலிட்டு கூறினார். தன் மகனின் வழக்கு விசாரணையில் நடைபெற்ற அநியாயங்களை நேரில் பார்த்த அந்த தாய், 'தடா' கருப்பு சட்டத்தின் கொடுமைகளை அதன்மூலம் விளக்கினார். தன் தரப்பு நியாயங்களை எடுத்துவைக்க கூட அனுமதி மறுக்கும் அந்த கொடும் சட்டத்தினால், தன் மகன் செய்யாத குற்றத்திற்கு, இருபது வருடங்களாக சிறைதண்டனை அனுபவித்து வருவதை கூறி அழுதார் அந்த தாய். மகனுடன் சேர்ந்து, இருபது வருடங்களாக தானும் தண்டனை அனுபவித்து வருவதாக அவர் கூறினார். அரசின் கோரபற்களில் சிக்கி, முழுவதும் மென்று துப்பப்பட்ட அந்த தாய், வேறு வழி ஏதும் இல்லாமல், தன் மகனுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குதண்டனையை நிறுத்த, முதல்வர் ஜெயலலிதா முன்வரவேண்டும் என்று பணிந்து கேட்டுகொண்டார். பேரறிவாளன் மட்டுமல்லாமல் முருகனுக்கும், சாந்தனுக்கும் உறுதிசெய்யப்பட்டுள்ள தூக்கு தண்டனையும் ரத்து செய்யப்படவேண்டும் என்று அவர் கேட்டுகொண்டார்.
இத்தனை செய்தியாளர்கள், வழக்கறிஞர்கள், மனிதஉரிமை ஆர்வலர்கள் மற்றும் சமூக சேவகர்கள் இருந்தும், இருபது வருடங்கள் கடந்தும், என் மகன் தரப்பு நியாயம், பெருவாரியான மக்களிடம் சென்றடையாதது குறித்து வருந்திக்கொண்டார் அந்த தாய். தன்மகன் குற்றம் எதுவும் செய்யவில்லை என்று அடித்துகூறும் அற்புதம்மா(அறிவம்மா), இறுதியாக, பேரறிவாளன் சிறையிலிருந்து எழுதிய புத்தகத்தை அனைவரும் படிக்கும்படி வேண்டிக்கொண்டார் .
என்ன செய்ய போகின்றோம்...?
1 comments:
தற்போது இந்த பிரச்சினையில் மத்திய அரசு அவசர அவசரமாக முடிவெடுத்திருப்பது ராஜீவ் கொலை குற்றவாளிகளை தண்டிப்பதற்கல்ல. மாறாக, வழக்கம் போல், பற்றி எரியும் பெரும் தீயில் குவளைத் தண்ணீர் ஊற்றும் காரியம் தான். ஸ்பெக்ட்ரம்,காமன் வெல்த்,நாடாளுமன்றத்திற்கு இலங்கை எம்பிக்களின் வருகை இலங்கை அரசை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற உறுப்பினர்களின் வலுவான கோரிக்கை உள்ளிட்டவற்றை திசை திருப்புவதற்காகவே இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. தடா சட்டத்தின் கீழ் தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள் பேரறிவாளன் சாந்தன் முருகன். ஆனால் தற்போது அந்தச் சட்டமே நடைமுறையில் இல்லை. நடைமுறையில் இல்லாத சட்டத்தில் எப்படி 3 பேருக்குத் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற முடியும். மேலும் கருணை மனு மீது 3 ஆண்டுகளுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்¢க வேண்டும் என்கிறது நீதிமன்றம். ஏனென்றால், சிதையில் எரியும் பிணம் அந்த நொடிகள் மட்டுமே எரிவதாகவும் ,தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் வாடும் கைதிகளின் மனமோ ஒவ்வொரு நொடியும் எரிகிறது என்றும் கூறிய வரலாறு உச்ச நீதிமன்றத்திற்கு உண்டு. அந்த விதிமுறையும் இவர்கள் வழக்கில் மீறப்பட்டுள்ளது. ஏறத்தாழ 13 ஆண்டுகள் இவர்களுடைய கருணை மனு பரீசிலனையில் இருந்துள்ளது. இது சட்டப்பிரிவு 21க்கு எதிரானது என்கின்றனர் சட்ட வல்லூநர்கள்.
மேலும் பேரறிவாளன் சாந்தன் முருகன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு 14 ஆண்டுகளாகிறது. இத்தனை ஆண்டுகளாக அதை நிறைவேற்றாமல் அவர்களை சிறையில் வைத்திருந்ததன் மூலம் அவர்கள் ஆயுள் தண்டனையையும் அனுபவித்ததாக கணக்காகிறது. தற்போது தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டால்,அவர்களுக்கு இரட்டை தண்டனையை அளித்ததாகவும்,அது 2ம் நிறைவேற்றப்பட்டதாகவும் அர்த்தம் ஆகிறது. ஆனால் அவர்களுக்கு நீதிமன்றங்கள் விதித்தது ஒரு தண்டனை மட்டுமே. பின் எப்படி நிறைவேற்ற முடியும் தூக்குத் தண்டனையை. பாகிஸ்தான் சிறையில் உள்ள சப்தர் சிங்கை தூக்கிலிடக் கூடாது என்று கோரும் இந்தியப் பேரரசு, பேரறிவாளனுக்கும் முருகனுக்கும் சாந்தனுக்கும் எப்படி மரண தண்டனையை நிறைவேற்ற முடியும்.
Post a Comment