தெலங்கானா: மக்கள், மண், போராட்டம்!

 தெலங்கானா, கடலோர ஆந்திரா மற்றும் 
ராயல் சீமாவை குறிக்கும் வரைபடம்

தெலங்கானா என்று தற்போது அழைக்கப்படும் பகுதி 1742 முதல் 1948  வரை, ஹைதராபாத் நிஜாமால் ஆளப்பட்ட பகுதியாகும். தற்போதைய கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் சில மாவட்டங்களையும், தற்போதைய தெலங்கானா பகுதிகளையும் உள்ளடக்கிய  இந்த நிலப்பரப்பு, ஹைதராபாத் சமஸ்தானம் என்று அழைக்கப்பட்டது. தற்போதைய, கடலோர ஆந்திரா மற்றும் ராயல் சீமா பகுதிகள்(தெலங்கான தவிர்த்த மற்ற பகுதிகள்)அன்றைய சென்னை மாகாணத்தின் (தமிழ் நாட்டின்) ஒருபகுதியாக இருந்தன. தெலங்கானா பகுதி 1952 வரை தனி ஒரு நிலப்பரப்பாகவே இருந்து வந்துள்ளது. அந்த நிலப்பரப்பை, மொகலாயர் காலத்துக்கு பின், ஹைதராபாத் நிஜாம் பரம்பரையினர் ஆண்டுவந்துள்ளனர். பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்திற்கு அடிபணிந்த சிற்றரசுகளில், ஹைதராபாத் நிஜாமும் அடங்குவான். வெல்லஸ்லியின் திட்டப்படி, இவ்வாறு பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்க்கு அடிபணிந்த அரசுகளிடமிருந்து, கப்பம்(வரி) மட்டும் வாங்கிக்கொண்ட கிழக்கிந்திய கம்பனியினர், அந்த சிற்றரசுகளை, பிரிட்டிஷ் இந்தியாவுடன் இணைக்க வில்லை. ஆனால், அந்த சிற்றரசுகளின் பாதுகாப்பு மற்றும் வெளிஉறவு கொள்கைகளை பிரிட்டிஷாரே நிர்ணயம் செய்தனர். அதன் அடிப்படையில், தற்போதைய தெலங்கான பகுதி, பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், இந்தியாவுடன் கூட, இணைந்து இருந்தது கிடையாது.

நிஜாம் மிர் ஒஸ்மான் அலி 

தெலங்கானா சிற்றரசில், அதாவது ஹைதராபாத் சமஸ்தானத்தில் 85 சதவீதத்திற்க்கும் அதிகமான மக்கள், தெலுங்கு மொழி பேசிவந்தனர். மிக குறைவானவர்களே "உருது" மொழி பேசிவந்தனர். ஆனால், நிஜாமின் ஆட்சியில், உருது மொழியே அரசு மொழியாக இருந்தது. பள்ளிகளிலும் உருது மொழியிலேயே பாடம் சொல்லிகொடுக்க பட்டன. ஆங்கிலம் கூட கற்பிக்க படவில்லை. இதனால், உருது பேச தெரியாத தெலங்கானா மக்களுக்கு அரசு வேலைவாய்ப்பு மறுக்க பட்டது. சிறுபான்மையினரான, உருது பேச தெரிந்த முஸ்லிம்களுக்கே அரசுவேலையில் முன்னுரிமை வழங்கப்பட்டது. அந்த காலத்திலேயே, ஹைதராபாத் நிஜாம் உலக பணக்காரர் பட்டியலில், முன்வரிசையில் இடம்பெற்றிருந்தான். அனைத்து வகையான ஆடம்பரங்களிலும் திளைத்துபோய் இருந்த நிஜாம், தன் ஆடம்பர வாழ்க்கைக்கு மக்களை கசக்கி பிழிந்தான். இதில் அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்கள், விவசாயிகளான தெலுங்கு பேசும் மக்களே. நிஜாமால் நியமிக்கப்பட்ட, ஜமீன்தார்களும், ஜாஹிர்தார்களும் விவசாய மக்களிடம் வரிவசூலிக்கும் அதிகாரத்தை பெற்றிருந்தனர். குட்டி ராஜாக்களை போன்று செயல்பட்ட இவர்கள், மக்களிடம் கடுமையாக வரி வசூலித்தனர். வரிகட்ட முடியாத விவசாயிகள் கடுமையாக தண்டிக்க பட்டனர். நிஜாமும், ஜமீன்தார்களும் சுகபோகமாக வாழ்வதற்க்காக, ஏழை விவசாயிகள் பட்டினியுடன் நிலத்தில் உழைத்தனர். விவசாயிகளின் ரத்தத்தி உறிஞ்சி பிழைத்த நிஜாம், உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடம் பிடித்தான்.

இதே வேளையில், அன்றைய சென்னை மாகாணத்தில்(தமிழ் நாட்டில்) இணைந்திருந்த, கடலோர ஆந்திரா மற்றும் ராயல் சீமா பகுதியை சேர்ந்த தெலுங்கு பேசும் மக்கள், பிரிட்டிஷார் கொண்டு வந்த கல்வி, விவசாயம் மற்றும் பல சீர்திருத்தங்களால், தெலுங்கானா(ஹைதராபாத் சமஸ்தானம்) மக்களை விட கல்வி அறிவு மற்றும் சமூக வாழ்வியலில் ஓரளவிற்கு முன்னேறி இருந்தனர். பிரிட்டிஷார் கொண்டுவந்த இந்த சீர்திருத்தங்கள், தங்கள் சுயநலத்துக்குதான் என்றாலும், அது சாதியில் சில தளர்வை ஏற்படுத்தியதுடன் கல்வியில் ஒடுக்க பட்ட மக்களுக்கு சில உரிமைகளை வழங்கியது. பிரிட்டிஷ் ஆட்சிபரப்பில், கல்விகூடங்களில் ஆங்கிலம் பயிற்றுவிக்கப்பட்டது.  பிரிட்டிஷார் ஜமிந்தாரி முறையை ஒழித்தனர். இதனால் தெலங்கானா பகுதி விவசாயிகள் அளவிற்க்கு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த விவசாயிகள் துன்பம் அனுபவிக்க வில்லை(இதை சரியாக புரிந்து கொள்ளவேண்டும்). ஆகவே, கடலோர ஆந்திரா மற்றும் ராயல் சீமா மக்களுக்கு மட்டும் ஆங்கிலம் பயில வாய்ப்பு இருந்தது. இப்பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி கற்க தொடங்கினர். தெலங்கானா பகுதியை விட, இப்பகுதியில் விவசாயிகள் ஓரளவிற்க்கு முன்னேறி இருந்தனர். இவர்களுக்கும், தெலங்கானா பகுதி மக்களுக்கும் இருந்த ஒரே ஒற்றுமை, இருவரும் தெலுங்கு பேசினர். அதைத்தாண்டி, சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டில் தெலங்கானா மக்கள் இவர்களிடமிருந்து வேறுபட்டனர்.
மக்கள் விடுதலை படை, அப்போது.

1946 ஆம் ஆண்டு, ஹைதராபாத் சமஸ்தானத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(அப்போது கம்யூனிஸ்ட் கட்சி ஒன்று மட்டுமே இருந்தது), ஒடுக்கப்பட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி நிஜாமுக்கு எதிராக ஆயுத போராட்டத்தை துவங்கியது. இந்தியாவிலேயே, இப்போரட்டம்தான், முதல்முறையாக மக்களை திரட்டி, ஓர் அரசியல் கோரிக்கைக்காக நடத்தப்பட்ட, ஒழுங்கமைக்கபட்ட போராட்டமாகும். நிஜாமின் பேய் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் தெலங்கானா விவசாயிகள் முன்னணி படையினராய் விளங்கினர். மக்கள் போராட்டத்தை கண்டு அஞ்சிய நிஜாம், மிர்வாஸ் என்ற தன் கொடுங்கோல் படையினை கொண்டு கடுமையாக தாக்கினான். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் அரசியல் பூர்வமாக ஒருங்கிணைந்த மக்கள், நிஜாமின் கூலிப்படையை வீரத்துடன் எதிர்த்து நின்றனர். மக்களின் ரத்தத்தை உறிஞ்சி பிழைத்த ஜமிந்தார்களும், ஜாஹிர்தார்களும் மக்கள் விடுதலை படையினரால் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து கைப்பற்றபட்ட நிலங்கள் விவசாயிகளுக்கு பிரித்து கொடுக்கபட்டது. போராட்டம் தொடங்கிய முதல் வருடங்களிலேயே, 3000 கிராமங்களுக்கு மேல் நிஜாமின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை அடைந்தது. அவ்வாறு உருவான கிராமங்களில், சோவியத் யூனியனை போல், கம்யூன்கள் அமைக்கபட்டு மக்கள் தங்களை தாங்களே ஆட்சி செய்துகொண்டனர்.
மக்கள் விடுதலை படை, தற்போது.

1947 பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறினர். அச்சமயம், இந்தியாவில், ஹைதராபாத் சமஸ்தானத்தை போல் கிட்டத்தட்ட 500 க்கும் மேற்பட்ட சுதந்திர சமஸ்தானங்கள் இருந்தன. இந்த சமஸ்தானங்கள் தங்கள்  விருப்பத்தின் அடிப்படையில் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தான் உடனோ இணைந்து கொள்ளலாம் என்றும் அல்லது தனி நாடாக இருக்கலாம் என்றும் பிரிட்டிஷார் கூறினர். ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க நேரு விரும்பினார்(வழக்கம்போல்). இது குறித்து நிஜாமுக்கு தெரிவிக்க பட்டது. ஏற்கனவே, உள்நாட்டில் மக்கள் போராட்டம் உச்சத்தில் இருந்த நிலையில், தன்னை பாதுகாத்து கொள்வதற்க்காக, ஹைதராபாத் சமஸ்தானத்தை பாகிஸ்தான் உடன் இணைக்க, நிஜாம் விரும்பினான். சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைப்பதா? பாகிஸ்தானுடன் இணைப்பதா? அல்லது தனிநாடாக இருப்பதா என்பது குறித்து தெலங்கானா(ஹைதராபாத் சமஸ்தானம்) மக்களிடம் நேருவும் கேட்கவில்லை, நிஜாமும் கேட்கவில்லை. நிஜாம் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க விரும்பாததால், நேருவின் கட்டளைக்கு இணங்க, சர்தார் வல்லபாய் பட்டேல், இந்திய ராணுவத்தை தெலங்கானா மக்கள் மீது ஏவிவிட்டார்.

இந்திய ஆக்கிரமிப்பு ராணுவம்.

1948 ஆம் வருடம், செப்டம்பர் 13 ஆம் தேதி, இந்தியாவின் ஆக்கிரமிப்பு ராணுவம் தெலங்கானா(ஹைதராபாத் சமஸ்தானம்) பகுதிக்குள் நுழைந்தது. இதற்க்கு நேரு "ஆபரேஷன் போலோ" என்று பெயரிட்டார். பிறகு ராணுவம் என்ன செய்திருக்கும் என்பது சொல்லாமல் விளங்கக்கூடியதே. நிஜாமின் பேய் ஆட்சிக்கு எதிராக போராடி பெற்ற சுதந்திரத்தை, தெலங்கானா மக்கள் இந்திய ராணுவத்திற்கு இரையாக்க விரும்பவில்லை. ராணுவத்தின் கடும் அடக்குமுறைக்கு மத்தியில், போராடி பெற்ற விடுதலை பிரதேசங்களை, ஏறக்குறைய 3 ஆண்டுகள், மக்கள் தங்கள் கட்டுபாட்டில் வைத்திருந்தனர். மக்கள் விடுதலை படை, விடுதலை பிரதேசங்களை இந்திய ராணுவம் ஆக்கிரமித்து விடாமல், இரவு பகலாக காப்பாற்றியது. இச்சமயம், கடலோர ஆந்திரா மற்றும் ராயல் சீமா பகுதியை சேர்ந்த தெலுங்கு பேசும் மக்கள், தெலங்கானா பகுதிக்கு வரவைக்கபட்டு, இந்திய அரசால், அரசுவேலைகளில் அமர்த்தப்பட்டனர். தெலங்கானா பகுதியை இந்திய அரசு, ஹைதராபாத் மாநிலம் என்று அழைத்தது. இறுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த தவறான நிலைப்பாட்டால் மக்களின் வீரம் செறிந்த போராட்டம், ராணுவத்திற்கு காவு கொடுக்க பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அப்போது எடுத்த தவறான முடிவு இன்று வரை விமர்சிக்கபட்டு வருகின்றது.
பொட்டி ஸ்ரீராமுலு,
இறந்தபின் இந்திய அரசின் அஞ்ச(ல்)லி.

இதனிடையே, சென்னை மாகாணத்தை(தமிழ்நாட்டை) பிரித்து, ஆந்திரா தனிமாநிலம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை தெலுங்கு பேசும் மக்களிடம் வலுப்பெற்றுவந்தது. தெலுங்கு பேசும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், ஆந்திரா என்ற தனிமாநிலத்தை உருவாக்கி அதற்க்கு சென்னையை(சென்னை நகரை) தலைநகராக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுருத்தி பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் அக்டோபர் 19 ஆம் தேதி 1952 ஆம் வருடம், சாகும் வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார். இதுகுறித்து சிறிதும் கவலைப்படாத நேரு, அவரின் உண்ணாவிரதத்தை முடித்துவைக்க எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த பொட்டி ஸ்ரீராமுலு 1952  டிசம்பர் 15 ஆம் நாள் நள்ளிரவு, உயிரிழந்தார். இது தெலுங்கு பேசும் மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொட்டி ஸ்ரீராமுலு வின் இறுதி ஊர்வலம், சென்னை மவுண்ட் ரோடை கடக்கும்போது பெரும் கலவரம் வெடித்தது. தெலுங்கு பேசும் பகுதியில்(அதாவது, கடலோர ஆந்திரா மற்றும் ராயல் சீமா) தனி ஆந்திர மாநில கோரிக்கையை வலியுரித்தி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். சுமார் 7 பேர் கொல்லப்பட்டதாக அரசு அறிவித்தது. தெலுங்கு பேசும் பகுதிகள் பற்றி எரிந்தன. இறுதியில் டிசம்பர் 19 ஆம் தேதி, ஆந்திரா தனிமாநில அறிவிப்பை நேரு வெளியிட்டார். இருந்தபோதும், சென்னை நகரம் ஆந்திராவுக்கு கொடுக்கபடவில்லை. 1953 ஆம் ஆண்டு, அக்டோபர் 1 ஆம் தேதி, குர்நூலை தலைநகராக கொண்ட தனி ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது. அப்போதும்கூட, தெலங்கானா பகுதி புதிதாக உருவான ஆந்திர மாநிலத்துடன் இணைக்க படவில்லை. ஆந்திர மாநிலம் உருவானபின் அடுத்த மூன்று வருடம் தெலங்கானா தனி மாநிலமாகவே (ஹைதராபாத் என்ற பெயரில்) இருந்துவந்தது.

 ஆந்திர மாநிலம், தெலங்கானாவுடன்.

மொழிவாரி மாநிலங்களை உருவாக்க அமைக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரையையும் மீறி,1956 நவம்பர் 1 ஆம் தேதி, தாய் தெலங்கானாவை ஆந்திராவுடன் இணைத்தது இந்திய அரசு. தெலங்கானா பகுதியில் இருந்த ஹைதராபாத் ஆந்திராவின் புதிய தலைநகராக அறிவிக்க பட்டது. கொடுங்கோலன் நிஜாமின் ஆட்சியின் கீழ் வாழ்ந்த படிப்பறிவு குறைவான, சமூக அளவுகோளில் மிகவும் பின்தங்கிய தெலங்கானா மக்கள், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ஓரளவிற்க்கு படித்த, சமூக அளவில் உயர்ந்த மக்களுடன் இணைக்கப்பட்டனர். இதற்க்கும் மேல் சொல்லி விளங்கவைக்க தேவை இல்லை. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வாழ்ந்த உயர் சாதி ஆந்திரமக்கள், அதாவது, கடலோர ஆந்திரா மற்றும் ராயல் சீமாவை சேர்ந்த தெலுங்கு பேசும் மக்கள், அனைத்து துறைகளிலும் முன்னேறினர். பெரும்பாலும் தலித் சமூகத்தை சேர்ந்த விவசாயிகளான தெலங்கானா மக்கள் தொடர்ந்து பின்தங்கியே இருந்து வருகின்றனர். அரசு வேலைவாய்ப்பிலும்  படித்தவர்கள் எண்ணிக்கையிலும், தெலங்கானா மக்கள் பெரும் அளவிற்க்கு முன்னேற்றம் பெறாமலே உள்ளனர். வளம் மிக்க தாய் தெலங்கானா பகுதியை, தெலங்கானா அல்லாத பகுதியை சேர்ந்த உயர்சாதியினர் மற்றும் அரசியல்வாதிகள் அனுபவிப்பதுடன், பன்னாட்டு முதலாளிகளுக்கும் தாரைவார்த்து வருகின்றனர். இதனாலேயே, தெலங்கானா மக்கள் தாங்கள் முன்னர் இருந்தது போலவே தனிமாநிலமாக இருக்க விரும்புகின்றனர். தெலங்கான தனி மாநிலம் கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.


மரம் ஓய்வை விரும்பினாலும், காற்று விடுவதில்லை!

தெலங்கானா மக்கள் எதை இழந்தாலும், தங்கள் போராட்ட குணத்தை இன்னும் இழக்கவில்லை. நிஜாமின் ஆதிக்கத்தையும், இந்திய ராணுவத்தின் அடக்குமுறையையும் எதிர்த்து ஆயுத போராட்டத்தை நடத்திய ஒரு தலைமுறை, தங்கள் பிள்ளைகளுக்கு போரட்டகுணத்தை ஊட்டி சென்றுள்ளது. போராடி பெற்ற விடுதலை பிரதேசத்தில் வாழ்ந்து பழகிய தாய்மார்கள், தங்கள் பிள்ளைகளுக்கு சுதந்திரத்தின் சுவையை பாலை ஊட்டியுள்ளனர். அதனால்தான் சுதந்திர கனல் பற்றி எரிகிறது தெலங்கானாவில்.

ஜெய் தெலங்கானா!

தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் இந்திய அரசின் கொள்கையை எதிர்ப்போம்!
சுயநிர்ணய உரிமைக்கான தெலங்கானா மக்களின் போராட்டதிற்க்கு தோள்கொடுப்போம்!
சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை கட்டியமைப்போம்!

அசீப்.

0 comments:

Post a Comment

Time

Total Page Views

About this blog

நம்மைச்சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகள் , அதன் பின்னணியிலிருக்கும் அரசியல் , அந்த நிகழ்வை நகர்த்தும் அடிப்படை,அதற்கான தேவை, என நாங்கள் புரிந்துகொண்டதை , நாங்களே பகிர்ந்து கொள்ளவும் , நாங்கள் பகிர்ந்து கொண்டதை , உங்களோடு பகிர்ந்து கொள்ளவுமே இந்தத் தளம்.
Powered by Blogger.

Followers

Blog Archive