சமச்சீர் கல்வி தீர்ப்பு!
கடந்த தி.மு.க. ஆட்சியில் 2010-2011 ஆம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு ஆகிய இரு வகுப்புகளுக்கு மட்டும் சமச்சீர் கல்வியை அமுல்படுத்தபட்டது. மீதமுள்ள 2,3,4,5,7,8,9,10 ஆகிய வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வியை அமல்படுத்த, அதன் சாதக, பாதகங்களை ஆராய கல்வியாளர் முத்துக்குமரன் தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைத்தது தி.மு.க. அரசு.
முத்துக்குமரன் குழு, முழுவதையும் ஆராய்ந்து 109 கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. அவை அனைத்தையும் உடனடியாக அமல்படுத்த வாய்ப்பில்லாததால், வெறும் நான்கு கோரிக்கையை மட்டுமே தி.மு.க. அரசு அமல்படுத்தியது. மேலும், மீதமுள்ள வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வியை அமல்படுத்தி, அதற்காக இரு நூறு கோடி செலவில் புத்தகங்களையும் அச்சிட்டது.
அதற்குள் சட்டப்பேரவைத் தேர்தல் வந்து, அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியையும் பிடித்தது. கருணாநிதியாக இருந்தாலும், ஜெயலலிதாவாக இருந்தாலும் கடந்த கால ஆட்சியில் செய்தவற்றை புதிதாக பொறுப்பேற்றதும் நிறுத்திவிடுவது வழக்கம். அதுபோல்தான் தி.மு.க. அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வித் திட்டத்தை அ.தி.மு.க. அரசு, சமச்சீர் கல்வி சட்டத்தில், திருத்தம் கொண்டுவந்து கலைத்தது.
அதற்கான காரணம், தி.மு.க. அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வி மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன் மற்றும் ஓரியண்டல் ஆகியவற்றைவிட தரத்தில் குறைவாக உள்ளது என்றும், வெறும் புத்தக அளவிலேயே சமச்சீராக உள்ளது என்றும் அ.தி.மு.க. அரசு கூறியது. (கலைஞரின் கவிதை இடம் பெற்றதும் ஒரு காரணம் என்பது வேறு விஷயம்). எனவே, சமச்சீர் கல்வி தரத்தை உலகளவில் உயர்த்த, மீண்டும் ஒரு நிபுணர் குழு அமைக்கப்படுமெனவும் அரசு கூறியது.
இதை எதிர்த்தும், சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்தக் கோரியும், "பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை" என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் திரு.பிரின்ஸ் கஜேந்திரபாபு உட்பட, ஆறுபேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தனர். அவ்வழக்கில், சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பதற்கு தடை விதித்து, சமச்சீர் கல்வி இந்த கல்வியாண்டே தொடர வேண்டுமெனவும் உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. தங்களது கருத்தையும் இவ்வழக்கில் கேட்க்க வேண்டுமெனக் கூறி மனுதாரர்கள் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இது அவசர வழக்காக ஏற்கப்பட்டு விசாரணைக்கு வந்தது. இதில் பழையபடி ஒண்டு மற்றும் ஆறு ஆகிய இரு வகுப்புகளுக்கு மட்டும் சமச்சீர் கல்வி தொடரவேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மீதி வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி தேவையா? இல்லையா? என்பது பற்றி ஆராய தமிழக அரசு நிபுணர் குழு அமைக்கவேண்டும் என்றும் அக்குழுவில், இந்திய பாடத்திட்டக் கழகத்தைச் சேர்ந்த 2 தமிழக அதிகாரிகள் உட்பட 4 பேரும், 2 கல்வியாளர்களும், பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர், இயக்குனர் ஆகியோர் இடம்பெற்று இருக்கவேண்டுமெனவும், அதன் தலைவராக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நியமிக்கப்படவேண்டும் எனவும் நிபந்தனை விதித்து, 2 வாரத்திற்குள் அக்குழு தனது அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது 1 மற்றும் 6 ஆகிய வகுப்புகளுக்கு சிக்கல் தீர்ந்தாலும், மீதமுள்ள வகுப்புகளுக்கு பழைய பாடத்திட்டமே தொடரப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 2 வார காலத்திற்குள் நிபுணர் குழு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் கூறியதால் 15 ஆம் தேதி (புதன்கிழமை) திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படுமா? என்ற கேள்வியும், திறக்கப்பட்டாலும் எந்த பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு அமல்படுத்த வேண்டும் என்றும் தெரியாத ஒரு புதிரான நிலை பள்ளிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே தி.மு.க. அரசு அச்சடித்த சமச்சீர் கல்வி பாடத்திட்ட புத்தகங்களால் 200 கோடி ருபாய் வீண் ஆனது. தற்போது, அ.தி.மு.க. அரசு அச்சடித்துள்ள பழைய பாடத்திட்ட புத்தகங்களால் பல கோடி ருபாய் வீணாக வாய்ப்புள்ளது.
தமிழக அரசின் இந்த முடிவுக்கு கல்வியின் மீதான அக்கறையா? அல்லது கருணாநிதியின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியா? புதிய அரசு சொல்வது உண்மையாக இருந்தாலும் தேவை இல்லா பகுதியை மட்டும் நீக்கிவிட்டு மற்றவற்றை,அமல்படுத்த நடவடிக்கை எடுக்கலாம். இந்த திட்டத்தை இக்கல்வியாண்டில் செயல்படுத்திவிட்டு படிப்படியாக மாற்றுவதே ஆரோக்கியமானது. தவறே நிகழ்ந்து இருந்தாலும் சமச்சீர் கல்வி என்பது கல்வியின் முன்னோக்கு சிந்தனையே! மீண்டும் நான்கு வழி பாடத்திட்டத்திற்கு செல்வது பிற்போக்கைத் தவிர வேறொன்றுமில்லை!
தரம் குறைவாக உள்ளது என்பது மாநில பாடத்திட்டம் அல்லாத மற்ற பாடதிட்டங்களோடு ஒப்பிடும்போது மட்டுமே. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் மூலம் படிப்பவர்களே அதிகம். எனவே, தமிழக அரசு சமச்சீர் கல்விபாடத்திட்டத்தை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே அனைவரின் கருத்தாக உள்ளது!
- உமர் முக்தார், செய்தியாளர், வின் தொலைக்காட்சி
0 comments:
Post a Comment