எந்த விஷயத்திலும் தடாலடியாக முடிவெடுக்கும் ஜெயலலிதா, வழக்கத்துக்கு மாறாக, தற்போது எல்லா விஷயங்களிலும் கொஞ்சம் நிதானம்(நரி தனம்) காட்டிவருகின்றார்.
ஆ.தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பின் தமிழக அரசியலில் ஏற்பட்டுவரும் சூறாவளி மாற்றங்களை எதிர்கொள்வதில், அதாவது மக்கள் போராட்டங்களை திசை திருப்புவதிலும், தன்னால் எதுவும் செய்யமுடியாது என மக்களே நம்பும் வகையில் அவர்களை ஏமாற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் என, கைதேர்ந்த அரசியல்வாதியை போல் செயல்பட்டு வருகின்றார் ஜெயலலிதா.
இலங்கை அரசாங்கதிற்கு எதிராக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதன் மூலம், போலி புலி ஆதரவாளர்களிடம் (உண்மையான தமிழ் தேசியவாதிகளிடம் அல்ல), "ஒற்றை தமிழட்சி" என்ற பட்டத்தை பெற்றுகொண்டார். முருகன், சாந்தன், பேரறிவாளனின் தூக்குதண்டனையை ரத்துசெய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியதன் மூலம், உண்மையான(ஓரளவுக்கு) தமிழ் தேசியம் பேசிவந்தவர்களை கூட நம்பவைத்து, "நல்ல முதல்வர்" என்ற பெயரை வாங்கிக்கொண்டார். இதற்க்குமேல் அம்மூவர் விவகாரத்தில் தன்னால் எதுவும் செய்யமுடியாது என்று கூறி, முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்துள்ளார் ஜெயலலிதா. அதையும் மக்களை நம்பவைத்துள்ளார். கூடங்குளம் அணுமின்நிலைய விவகாரத்தில், மீண்டும் ஒருமுறை தன்னால் எதுவும் செய்யமுடியாது என்றும், மத்திய அரசின் கையில்தான் எல்லாம் உள்ளது என்று கூறி, மீண்டும் ஒரு தீர்மானம் நிறைவேற்றி ஏமாற்று நாடகம் நடத்தியுள்ளார் ஜெயலலிதா.
இம்மூன்று விஷயங்களையும் மேலோட்டமாக பார்க்கும்போது, யாரும் எளிதில் ஏமாந்து விடும்வண்ணம், அழகாக காய் நகர்த்தியுள்ளார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் இந்த நாடகங்களில் "போலி புலி ஆதரவாளர்களும்", "போலி தமிழ்தேசியவாதிகளும்" லயித்துபோய் இருந்தபோது, பரமக்குடியில் தாழ்த்தப்பட்ட மக்களின் மீது ரத்தவெறியாட்டம் நடத்தியுள்ளார் ஜெயலலிதா. தேவர்திருமகனை(????) இழிவுபடுத்தினால் இப்படிதான் நடக்கும் என்று, சட்டபேரவையில் ஆதிக்க சாதி வெறிபிடித்து கொக்கரித்துள்ளார் ஜெயலலிதா. முஸ்லிம் சிறுபான்மை மக்களை கொன்றொழிக்கும் ஒரே லட்சியத்துடன் ஆட்சி செய்துகொண்டிருக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் உண்ணாவிரத நாடகத்துக்கு, வெளிப்படையாக ஆதரவளித்ததுடன், மோடியின் கொள்கையும் என் கொள்கையும் ஒன்றுதான் என்று இறுமாப்புடன் பேசியுள்ளார் ஜெயலலிதா.
தன் சாதூர்ய அரசியல் காய் நகர்த்தலுக்கு, இந்திய அளவில் பெயர் பெற்றவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. ஜெயலலிதாவின் தற்போதைய நடவடிக்கைகள், கருணாநிதியையும் மிஞ்சிவிடும் வகையில் அமைந்துள்ளது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. மக்கள் போராட்டங்களை நேரடியாக எதிர்கொள்பவர்களை விட, சாதூர்யமாக ஒடுக்குபவர்களை கையாள்வதில், கூடுதல் கவனம் வேண்டும். இதை புரிந்துகொள்ளாமல் புலி துதிபாடிகளும், போலி தமிழ்தேசியவாதிகளும் அம்மாவிடம் சரணடைந்திருப்பது மக்களை அடகு வைப்பதற்க்கு சமம்.
-அசீப்
0 comments:
Post a Comment