பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் 6 தலித்கள் பலி: உண்மை அறியும் குழு அறிக்கை



பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் 6 தலித்கள் பலி:
உண்மை அறியும் குழு அறிக்கை

21.09.2011
மதுரை

கடந்த செப்டம்பர் 11, 2011 அன்று பரமக்குடி ஐந்து முக்குச்சாலையில் தமிழக காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 6 தலித்கள் கொல்லப்பட்டும், சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றும் உள்ளதை பல்வேறு அரசியல் கட்சிகளும், மனித உரிமை அமைப்பினரும் கண்டித்துள்ளனர். இதுதொடர்பாக பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் கொண்ட உண்மை அறியும் குழு  ஒன்று கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்டது.

உறுப்பினர்கள்

1. பேரா.அ.மார்க்ஸ் - மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை.
2. கோ.சுகுமாரன் - மக்கள் உரிமை கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி
3. வழக்குரைஞர் ஏ. முஹம்மது யூசுப், NCHRO – தமிழ்நாடு
4.வழக்குரைஞர் ரஜினி, PUHR, மதுரை
5. பேரா. ஜி.கே.ராமசாமி  மக்கள் ஜனநாயக மன்றம் (PDF), கர்நாடகா
6. வழக்குரைஞர் கார்த்திக் நவயான் - தேசிய தலித் முன்னணி  (NDF), ஆந்திர மாநிலம்
7. ரெனி அய்லின்,  தேசிய ஒருங்கிணைப்பாளர், NCHRO,
கேரளம்
8. பேரா.பிரபா.கல்விமணி - மக்கள் கல்வி இயக்கம், திண்டிவனம்
9. பி.எஸ்.ஹமீது - SDPI, தமிழ்நாடு
10. பேரா.சே.கோச்சடை - மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), காரைக்குடி
11. ஏ. சையது ஹாலித் - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, இராமநாதபுரம்
12. மு.சிவகுருநாதன் - PUHR, திருவாரூர்
13. கவிஞர் குட்டி ரேவதி - ஆவணப்பட இயக்குநர், சென்னை
14. முனைவர் தி.பரமேஸ்வரி - கவிஞர், காஞ்சிபுரம்
15. கு.பழனிச்சாமி – PUHR, மதுரை
16. வழக்குரைஞர் முஹம்மது சுஹைப் செரீஃப் – NCHRO,கர்நாடகம்
17. வழக்குரைஞர் தய்.கந்தசாமி – தலித் பண்பாட்டுப் பேரவை,  திருத்துறைப்பூண்டி
18. தகட்டூர் ரவி - PUHR, கல்பாக்கம்

இக்குழு செப்டம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் பரமக்குடி, சுற்றுவட்ட கிராமங்கள், இராமநாதபுரம், மதுரை ஆகிய பகுதிகளுக்குச் சென்று சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களையும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பவர்களையும், அரசு அதிகாரிகளையும், பொதுமக்களையும் சந்தித்து, விரிவாக அவர்களிடம் பேசி அவற்றை ஒலி - ஒலி நாடாக்களில் பதிவு செய்து கொண்டது. முதல் தகவல் அறிக்கைகள், காவலில் வைக்கப்பட்டோருடைய விவரங்கள் ஆகியவற்றையும் தொகுத்துக் கொண்டது.
பின்னணி
பரமக்குடி, கமுதி, இராமநாதபுரம் முதலானவை சாதி முரண்பாடுகள் கூர்மையடைந்துள்ள பகுதிகள். கடந்த 50 ஆண்டுகளாகவே இங்கு பல கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. 1957ல் நடைபெற்ற முதுகுளத்தூர் கலவரம் அனைவரும் அறிந்த ஒன்று. அப்போது கொலை செய்யப்பட்ட இம்மானுவேல் சேகரன் அப்பகுதி தேவேந்திரகுல வேளாளர்களின் வணக்கத்திற்குரிய பெருந்தலைவராக (icon) உருப்பெற்றுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் எப்படி தேவர்கள் மத்தியில் ஒரு திருஉருவாக உருப்பெற்றுள்ளாரோ அதே வடிவில் தேவேந்திரர்களுக்கு இம்மானுவேல் சேகரன் உருவாகியுள்ளார்.
முத்துராமலிங்கத் தேவருடைய குருபூஜை அவர்களது சமூகத்தவர்களால் அவரது பிறந்த நாளன்று பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. ‘தெய்வத்திருமகனார்’ என அவர் வழிபடப்படுகிறார்.

இப்பகுதியில்  குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில்   தேவேந்திரர்கள் வசிக்கின்றனர்.  கல்வி முதலிய வளர்ச்சிகளின் விளைவாக இம்மானுவேல் சேகரனின் காலம் தொடங்கி அமைப்பு ரீதியாக  ஒருங்கு திரளும் போக்கு இவர்கள் மத்தியில்  உருவாகியுள்ளது. ஒடுக்குமுறையை ஏற்காத மனநிலையும், அடையாளத்தை உறுதி செய்துகொள்ளும் சுயமரியாதைப் போக்கும், அதற்குரிய வகையில் வரலாற்று உருவாக்கமும்  நடைபெற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனை இதுகாறும் ஆதிக்கம் செய்து வந்த சாதியினரும், அரசு எந்திரமும் சகித்துக்கொள்ளாத நிலையின் விளைவாக சமூக முரண்கள் கூர்மையடைகின்றன.

கல்வி மற்றும் ஜனநாயக உணர்வுகள் வளர்வதன் ஊடாக மேலெழும் அடித்தள மக்களின் அடையாள உறுதிப்பாட்டை ஆதிக்க சமூகமும், ஆதிக்க சமூகத்தின் மனநிலையைப் பிரதிபலிக்கும் அரசும் ஏற்காததன் உச்சகட்ட வெளிப்படையாகவே இன்று இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.

1987 முதல் பூ. சந்திரபோஸ் அவர்களின் தலைமையிலான ‘தியாகி இம்மானுவேல் பேரவை’ என்கிற அமைப்பு இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை (செப்டம்பர் 11) கொண்டாடத் தொடங்குகிறது. ஆண்டுக்காண்டு கூடுகின்ற கூட்டத்தின் அளவும் அதிகரிக்கிறது. 1995 - 97ல் தென்மாவட்ட சாதிக்கலவரங்கள் ஏற்படுகின்றன. ‘புதிய தமிழகம்’ கட்சியும் இங்கே வேர் பதித்துச் செயல்படத் தொடங்குகிறது. இப்பகுதியில் தேவேந்திரர்களின் முக்கியத் தலைவர்களாக ஜான்பாண்டியன் முதலானோர் உருப்பெறுகின்றனர்.

இதே காலகட்டத்தில் தேவர் குருபூஜை, அரசே பங்கேற்று நடத்தக்கூடிய விழாவாக மாறுகிறது. 2007ல் தேவருடைய மறைவின் 50வது நினைவு நாளை ஒட்டி அவரது நினைவிடத்திற்கு அருகில் வசித்துக் கொண்டிருந்த சுமார் 100 தேவேந்திரர்களின் குடும்பங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன. அரசே முன்னின்று இதைச் செய்தது.

இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளும் இதேபோல பெரிய அளவில் கொண்டாடப்படுவதை ஆதிக்க மனங்கள் ஏற்க மறுத்தன. தங்களைப் போலவே தேவேந்திர குலத்தினரும் இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை  ‘குருபூஜை’ என அழைப்பதையும் அவர்கள் ஏற்கவில்லை. 2007 தொடங்கி ஆகஸ்ட் - செப்டம்பர் - அக்டோபர் ஆகிய மாதங்களில் ஏதேனும் ஒரு வன்முறையை தேவேந்திரர்கள் மீது ஏவும் போக்கு இருந்துள்ளது. 2007ல் வின்சென்ட் என்பவரும் 2009ல் அறிவழகன் என்பவரும், சென்ற ஆண்டு (2010 ஆகஸ்ட் 30 ) “குருபூஜைக்கு அணி திரள்வீர்” என சுவரெழுத்துக்கள் எழுதிய கொந்தகை அரிகிருஷ்ணனும் ஆதிக்கச் சாதியினரால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேவேந்திரர்களின் அரசியல் கட்சியாக அடையாளம் காணப்பட்டுள்ள புதிய தமிழகத்தைச் சேர்ந்த இருவர் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நீண்ட நாள் சிறையிலிருந்த ஜான்பாண்டியனும் விடுதலையடைந்தார். இவையெல்லாம் தேவேந்திரர்கள் மத்தியில் ஒரு எழுச்சியை வேறெப்போதைக் காட்டிலும் அதிகமாக ஏற்படுத்தியுள்ளது. சென்ற ஆண்டு (2010) இம்மானுவேல் சேகரனின் குரு பூஜையில் பங்கேற்ற அ.இ.அ.தி.மு.க தலைவர் நயினார் நாகேந்திரன் தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக நடத்துவோம் என அறிவித்ததும், 2010 அக்டோபர் 9 அன்று இம்மானுவேல் சேகரனின் உருவம் பொறித்த தபால் தலை வெளியிடப்பட்டதும் தேவேந்திரர்கள் மத்தியில் மிகுந்த எழுச்சியையும் நிறைந்த எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியிருந்தது. ஆதிக்க சாதியினர் இதை மிகவும் வெறுப்புடன் பார்த்து வந்தனர். ஆப்ப நாடு மறவர்  சங்கம் வெளியிட்டுள்ள ஒரு சுற்றறிக்கையில் இவ்வாறு இம்மானுவேல் சேகரனின் குருபூஜை முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜைக்குச் சமமாக மேலெழுந்து வருவதைத் தடுக்க வேண்டுமென கூறப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

பூலித்தேவனுக்குச் சமமான மன்னராக ஒண்டி வீரனை அருந்ததியர்கள் முன்னிறுத்துவதை நடராஜன் (சசிகலா) முதலானோர் கண்டித்து வருவது இத்துடன் ஒப்பு நோக்கத்தக்கது.

இந்தப் பின்னணியில் தான் செப்டம்பர் 9ம் தேதியன்று கமுதிக்கு அருகில் உள்ள மண்டல மாணிக்கம் கிராமத்தை ஒட்டிய பள்ளப்பச்சேரி எனும் தலித் கிராமத்தைச் சேர்ந்த பழனிக்குமார் என்கிற 16 வயது தேவேந்திரர் குலச் சிறுவன் கொடுமையாக வெட்டிக் கொல்லப்பட்டான். இது தொடர்பாக தேவர் சாதியைச்  சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டனர். கொல்லப்பட்ட சிறுவனுக்கு அஞ்சலி செலுத்த வந்த ஜான்பாண்டியன் தடுக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டார்.

இதே நேரத்தில் (செப்டம்பர் 7 ) அரசுப் போக்குவரத்து கழக பட்டியல் சாதித் தொழிற்சங்கத்தினர் “தேசியத் தலைவர் தெய்வத் திருமகனார்” என இம்மானுவேல் சேகரனை விளித்து, பிளக்ஸ் போர்டு ஒன்றை பரமக்குடி நகரத்தில் வைத்தனர். உடனடியாக இதனை எதிர்த்து ‘மறத்தமிழர் சேனை’ என்கிற அமைப்பும் தேவர் சாதியைச் சேர்ந்த வழக்குரைஞர்களும்  களம் இறங்கினர். காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினருக்கு அழுத்தம் கொடுத்தனர்.தெய்வத்திருமகனார் என்கிற அடைமொழியைத் தேவருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இம்மானுவேல் சேகரனுக்குப் பயன்படுத்தக்கூடாது என்று அவர்கள் புகார் செய்தனர்.

இது பட்டியல் சாதியினரின் சட்டப்பூர்வமான உரிமை என்று கூறி பாதுகாப்பளித்திருக்க வேண்டிய ரெவின்யூ நிர்வாகமும், காவல் துறையும் பட்டியல் சாதி அமைப்பினரை வரவழைத்து, அந்த ஃப்ளக்ஸ் போர்டிலுள்ள  இவ்வார்த்தைகளை நீக்க வேண்டுமென வற்புறுத்தின. அவர்களும் பணிந்து அச்சொற்களை நீக்கினர். இது தேவேந்திரர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தவே தெய்வத் திருமகனார் என இம்மானுவேல் சேகரனை விளித்து பல பிளக்ஸ் போர்டுகளை ஆங்காங்கு அடுத்தடுத்த நாட்களில் அவர்கள் நிறுவினர். இதைக் கண்டு இப்போது ஆதிக்க சாதியினர் மட்டுமல்ல, காவல் துறையும் அரசு நிர்வாகமும் சேர்ந்து ஆத்திரமடைந்தது.  பரமக்குடியிலுள்ள எந்த ஃப்ளக்ஸ் போர்டு அச்சகமும் இதுபோன்ற ஃப்ளக்ஸ் போர்டுகளை அச்சிடக் கூடாதென  காவல்துறை மிரட்டியது.

இந்தப் பின்னணியில் தான் செப்டம்பர் 11 அன்று இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்த மக்களுக்கும் காவல் துறைக்கும் இடையில் முரண்பாடு எழுந்து, துப்பாக்கிச் சூட்டில் 6 அப்பாவி உயிர்கள் பலியாகவும், ஏராளமானோர் படுகாயமடையவும் நேரிட்டது.

செப்டம்பர் 11 துப்பாக்கிச் சூடு குறித்து நாங்கள் அறிந்த உண்மைகள்

1. துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தி துப்பாக்கிச் சூட்டை விடவும் கொடுமையான மொழியில் சட்டமன்றத்தில் உரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா இரண்டு தவறான தகவல்களைக் கூறியுள்ளார். அவை:
(அ) முத்துராமலிங்கத் தேவரை இழிவு செய்து மண்டல மாணிக்கம் கிராமச் சுவற்றில் எழுதியதாலேயே பழனிக்குமார் கொல்லப்பட்டான் என்றது. இது உண்மையல்ல. மண்டல மாணிக்கம் தேவர் சாதி ஆதிக்கம் உச்சமாக உள்ள ஒரு ஊர். இதன் காரணமகவே  இந்த கிராமத்தில் உள்ள  அரசுப் பள்ளியில் பயில்கிற தேவேந்திரர் குலப் பிள்ளைகள்  மாற்றுச் சான்றிதழ் பெற்றுக்கொண்டு வேறு ஊர்களில் உள்ள பள்ளிகளில் சேர்கின்றனர். 2010-11 கல்வியாண்டில் மண்டல மாணிக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்ற 28 தலித் பிள்ளைகளில் இவ்வாண்டு 23 பேர்  இவ்வாறு டி.சி. பெற்றுச் சென்றுள்ளனர். இக்கிராமத்திற்குள் தலித் மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக  உலவக்கூட முடியாத நிலையில் வேற்றூரில் படிக்கக்கூடிய 16 வயது சிறுவன் பழனிக்குமார் அங்கு சென்று ஏழரை அடி உயரமுள்ள ஒரு சுவற்றில் தேவரை இழிவு செய்து எழுதினான் என்று சொல்வதை யாரும் ஏற்க இயலாது.
(ஆ) ஜான் பாண்டியன் இந்த கிராமத்திற்கு படை திரட்டிச் சென்றதால் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டி வந்தது என்பது முதல்வர் சொன்ன  இரண்டாவது பொய். ஜான் பாண்டியனைப் பொருத்தமட்டில் அன்று தூத்துகுடியில் நடைபெற்ற ஒரு பூப்பு நீராட்டு விழாவிற்கு வருகிறார்.  இம்மானுவேல் சேகரன் நினைவு நாளுக்கு அவர் செல்லக்கூடாதென இராமநாதபுரம் ஆட்சியர் தடையுத்தரவு இட்டதை அறிந்து அவர் திரும்பவும் திருநெல்வேலி செல்கிறார். அப்போது அவர் கைது செய்யப்பட்டு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள துப்பாக்கி சுடும் பயிற்சிப் பள்ளியில் வைக்கப்படுகிறார். எவ்வகையிலும் நிர்வாகம் மற்றும் காவல் துறையின் உத்தரவுகளை மீறுவது என்கிற முனைப்பு ஜான்பாண்டியனிடம்  இருக்கவில்லை என்பதே உண்மை. தடையை மீறி அவர் படைதிரட்டிச் சென்றதாக முதல்வர் கூறியுள்ளது, அதிகாரிகளின் கூற்றை அவர் அப்படியே ஏற்றுக் கொண்டதையே காட்டுகிறது.

2. செப்டம்பர் 11 அன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூடு முழுக்க முழுக்கக் காவல் துறையின் திட்டமிட்ட செயலாகத் தெரிகிறது. தேவேந்திரர்களின் ஓர் அடையாளத் திருவிழாவாக மாறிப்போன ஒரு நாளில், அஞ்சலி செலுத்த வந்த அவ்வினத் தலைவர் ஒருவரைத் தடுத்தது ஒரு முட்டாள்தனமான செயல் மட்டுமல்ல; கலவரத்தைத் தூண்டக்கூடிய செயலும் கூட. தவிரவும், தடுத்தவுடன் பணிந்து திருப்பியவரைக் கைது செய்து, இது குறித்த செய்தி அஞ்சலி செலுத்த வந்த மக்கள் மத்தியில் பரவக் காரணமாக இருந்தது இன்னொரு மிகப்பெரிய வன்முறையைத் தூண்டும் செயலாக அன்று அமைந்துள்ளது.

3. டி.ஐ.ஜி சந்தீப் மிட்டல், ஐந்து முக்கில் பொறுப்பாக நிறுத்தி வைக்கப்பட்ட சென்னை அடையாறு காவல் துறை ஆணையர் செந்தில்வேலன், பரமக்குடி நகர காவல் ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் அன்று தேவேந்திரர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பாடம் புகட்டியே தீரவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் வந்து நின்றதாகவே தெரிகிறது. தியாகி இம்மானுவேல் சேகரன் பேரவைத் தலைவர் பூ.சந்திரபோஸ் அவர்கள் மிகுந்த நல்லெண்ணத்துடன் அதிகாரிகளை அணுகி  ஜான் பாண்டியனை அன்று கைது செய்தது நல்லதல்ல எனவும், அவரை விடுதலை செய்து சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டும் எனவும் கோரிய போது, “சட்டம் ஒழுங்கு பற்றி நீங்கள் பேச வேண்டாம்; முதலில் அவர்களைக் கலைந்து போகச் சொல்லுங்கள்” என சந்தீப் மிட்டல் கூறி எந்தவித சமாதானத்திற்கும் வாய்ப்பளிக்காமல் நடந்துள்ளார்.

4. , ஐந்து முக்கில் அன்று குவிக்கப்பட்டிருந்த காவல் துறையினரின் எண்ணிக்கை சுமார் 2000 என நேரில் பார்த்த பலரும் எங்களிடம் கூறினர். சாலை மறியலுக்கு அமர்ந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 50 தொடங்கி அதிகபட்சமாக 200 அல்லது 300 என்ற அளவிலேயே இருந்துள்ளது. கூட்டம் அதிகமாக வரும் என எதிர்பார்த்து அவ்வழியே போக்குவரத்து முன்னதாகவே தடை செய்யப்பட்டது என்பதை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அருண் ராயே எங்களிடம் ஒத்துக்கொண்டார். தவிரவும் அவ்வழியே இதர மக்கள் சென்று அஞ்சலி செலுத்தி வரவும் அவ்வழியே வந்த வாகனங்கள் சென்று வரவும் சாலை மறியலால் எவ்விதத் தடையும் ஏற்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் 2000 ஆயுதம் தாங்கிய காவல் துறையினர் கூடியிருந்த 200 மக்களை, அவர்கள் உண்மையிலேயே கல்லெறிந்து வன்முறையில் ஈடுபட்டிருந்தால் கூட இலேசான தடியடி அல்லது கண்ணீர்ப்புகையைப் பிரயோகித்துக் கலைத்திருக்க முடியும். ஆனால் எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி துப்பாக்கிச்சூட்டை நடத்தி 6 பேரைக் கொன்றுள்ளனர் சந்தீப் மிட்டல், செந்தில்வேலன், சிவக்குமார் ஆகியோர் தலைமையில் இருந்த காவல் துறையினர்.

5. செந்தில் வேலன் ஐ.பி.எஸ் ஏற்கனவே இதே பகுதியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்தவர். அவர் இங்கு பணியாற்றியபோது இதேபோல இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களை நியாயமற்ற முறையில் கைது செய்து (2008 செப்டம்பர் 11) தலித் விரோத அதிகாரி என்கிற பெயரை ஈட்டியவர். இவரை அடையாறில் இருந்து  இங்கு கொண்டு வந்து அன்றைய தினத்தில் ஐந்து முக்கில் நிறுத்தியதும் உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட செயலாகவே தெரிகிறது.

6. காவல் துறையின் ‘வஜ்ரா’ வாகனத்தைக் கலவரக்காரர்கள் எரித்தனர் என்று சொல்வதையும் நம்ப இயலவில்லை. ஐந்து முக்கில் சாலை மறியல் செய்து கொண்டிருந்தவர்களைக் கலைப்பதற்குக் கொண்டு வந்து நிறுத்தப்பட்ட காவல் துறையினர் மதுரை- இராமநாதபுரம் சாலையில் நீளவாக்கில் நின்றிருந்தனர். தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டவுடன் மக்கள் எதிரே உள்ள முதுகுளத்தூர் சாலையில் ஓடுவது மட்டுமே அன்று சாத்தியமாக இருந்தது. இந்நிலையில் காவல் துறை அணிவகுப்பிற்குப் பின்னால் வந்து நின்ற வஜ்ரா வாகனத்தை கலவரக்காரர்கள் எரித்தனர் என்று சொல்வது ஏற்கத்தக்கதாக இல்லை.

7. துப்பாக்கிச் சூட்டின்போது அங்கு நின்று நெற்றிப்பொட்டில் குண்டடிபட்டு, இன்று மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணிக்கம், குண்டடிபட்டு இறந்த ஒருவரை தூக்கிச் சென்று காப்பாற்ற முயன்ற மணிநகர் அம்பேத்கர் இளைஞர் மன்றச் செயலாளர் சுரேஷ், கடுமையாக அடிக்கப்பட்டு இன்று இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்  வெள்ளைச்சாமி உள்ளிட்ட பலரும் எம்மிடம் நேரில் கூறியதிலிருந்து, அன்று எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி தண்ணீர் பீய்ச்சியடித்தல், கண்ணீர்ப்புகை பிரயோகம் முதலிய முன் நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாமல் திடீரென்று துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர். அதே நாளில் மதுரை சிந்தாமணி அருகே  நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து இன்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் திரு.வைகோ அவர்களால் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 19 வயதான டி.ஜெயபிரசாந்தும் அவ்வாறே கூறினார். துப்பாக்கிச்சூடு நடந்து ரொம்ப நேரத்திற்கு பிறகு உள்துறை அமைச்சகத்திடமிருந்து வந்த செய்தி மூலமாகவே தான் அதைத் தெரிந்து கொண்டதாக மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.சகாயம் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பல நிமிடங்கள் கழித்தே தானும் தெரிந்து கொண்டதாகத்தான் இராமநாதபுர மாவட்ட ஆட்சியரும் எங்களிடம் தெரிவித்தார்.

 8. துப்பாக்கிச் சூட்டையும் தடியடியையும் மேற்கொண்ட காவல் துறையினரும் அதிகாரிகளும் கடும் தலித் விரோதப் போக்குடன் இருந்துள்ளனர். சாதியைச் சொல்லி இழிவாகப் பேசிய வண்ணமே அவர்களை அடித்தும் சுட்டும் வீழ்த்தியுள்ளது பற்றி எம்மிடம் பலரும் முறையிட்டனர். இது அரசு நிர்வாகத்தின் மேல்சாதி ஆதரவு மனப்பான்மை, தலித் விரோதப் போக்கு, தலித்கள் என்றாலே கலவரம் செய்யக்கூடியவர்கள் என்கிற எண்ணத்துடன் அவர்கள் செயல்படுவது ஆகியவற்றிற்குச் சான்றாக உள்ளது.

9. துப்பாக்கிச் சூட்டில்  பல்லவராயனேந்தல் கணேசன் ( 55),  வீராம்பலைச் சேர்ந்த பன்னீர் செல்வம் ( 50),  மஞ்சூரைச் சேர்ந்த ஜெயபால் ( 19),  கீழ்க்கொடுமாநல்லூர் தீர்ப்புக்கனி ( 25),  காட்டுப் பரமக்குடியைச் சேர்ந்த முத்துகுமார் ( 25),  காக்கனேந்தல் வெள்ளைச்சாமி ( 55) ஆகிய ஆறு பேர்கள்  கொல்லப்பட்டுள்ளனர். கணேசன், வெள்ளைச்சாமி, ஜெயபால் ஆகிய மூவரின் இல்லங்களுக்கும் சென்று அவர்களது உறவினர்களைச் சந்தித்தோம். இவர்கள் அனைவருமே அந்த நேரத்தில் அங்கு வந்து சிக்கிக் கொண்டவர்களே அன்றி, அஞ்சலி செலுத்தும் நோக்குடன் வந்தவர்களோ ஜான் பாண்டியனின் அமைப்பைச் சேர்ந்தவர்களோ அல்ல. கணேசன் தன் மகளின் திருமண அழைப்பிதழை விநியோகிக்கச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களைக் கலகம் செய்ய வந்தவர்கள் என காவல் துறை கூறுவதை ஏற்க இயலாது. பெரும்பாலான துப்பாக்கிச் சூடு இடுப்புக்கு மேலேயே நடத்தப்பட்டுள்ளது. மாணிக்கம் நெற்றிப்பொட்டில் சுடப்பட்டுள்ளார்.

10. சுடப்பட்டவர்களில் சிலர் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் காப்பாற்றப்பட்டிருக்கலாம். இன்று இறந்து போயுள்ள தீர்ப்புக்கனி உயிரிருக்கும் போதே பிணவறையில் கொண்டுவந்து போடப்பட்டுள்ளார். பிணவறையில் உயிருடன் ஆட்கள் இருப்பதை அறிந்து புகார் செய்தபின் உயிருடன் இருந்த குமார் என்பவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.  அதற்குள் தீர்ப்புக்கனி இறந்துள்ளார். தவிரவும் கொல்லப்பட்டவர்களில் குறைந்தபட்சம் இரண்டு பேரேனும் காவல் துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டுப்  பின்னர் சுடப்பட்டுள்ளனர் என்ற ஐயம் பலருக்கும் உள்ளது. வெள்ளைச்சாமியின் உடலைக் கொண்டு வந்த காவல் துறையினர் அவரின் உடலை விரைவாக எரிக்கச் சொல்லி உறவினர்களைக் கட்டாயப்படுத்தியுள்ளனர். அவர்களும் அச்சத்தில் அவ்வாறே செய்துள்ளனர். அவரின் உடலில் குண்டுக்காயம் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை எனவும் அவருடைய உறவினர்கள் எம்மிடம் தெரிவித்தனர். இறந்துபோன ஜெயபாலின் காலிலும் கூட துப்பாக்கிக் கட்டையால் அடித்து உடைத்தது போன்ற காயம் இருந்ததாக அவரது மாமியார் குறிப்பிட்டார். இவையெல்லாம் மக்களின் சந்தேகத்தில் உண்மை இருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன.

11. குண்டடிபட்டு இறந்துபோன ஜெயபால் மற்றும் அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுவரும் ஜெயபிரசாந்த் ஆகியோருக்கு குண்டுகாயம் முதுகுப்புறத்திலிருந்தே தொடங்குகிறது. அவர்கள் தப்பி ஓடும்போது காவல் துறையினர் சுட்டிருக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரியவருகிறது.

12. காயம்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. நெற்றியில் குண்டடிபட்ட மாணிக்கம், ஜெயபிரசாந்த் ஆகியோர் இதை எம்மிடம் கூறினார். ஸ்கேன் எடுப்பது முதலான ஒவ்வொன்றிற்கும்  ஜெயபிரசாந்த்திடம் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. “வைகோ அய்யா தான் என் மகனின் உயிரைக் காப்பாற்றினார்” என்று அவரது பெற்றோரக்ள் எம்மிடம் புலம்பினர். நீதிமன்றத்தை அணுகி இன்று மாணிக்கம், கார்த்திக் ராஜா ஆகிய இருவரும் மதுரை அப்பல்லோவில் சிகிச்சை பெற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்...

1. சுமார் 10 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யாரை வேண்டுமானாலும் கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யத்தக்கதாக இந்த முதல் தகவல் அறிக்கைகள் எழுதப்பட்டுள்ளன. 1500 பேருக்கு மேல் கைது செய்ய இருப்பதாக காவல் துறை திட்டமிட்டுச் செய்திகளை ஊடகங்களில் பரப்பி மக்கள் மத்தியில் பீதியை ஊட்டுகிறது. தவிரவும், அவ்வப்போது கிராமங்களுக்குச் சென்று பேருந்து முதலிய பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டிற்காக கைது செய்ய ஆட்களைக் கொடுங்கள் எனவும் காவல் துறையினர் மிரட்டுகின்றனர். பரளை என்ற கிராமத்திலிருந்து வந்த நாகவல்லி, ரேணுகாதேவி உள்ளிட்ட பெண்கள் செப்டம்பர் 18ம் தேதியன்று ஒரு போலிஸ் வேனில் வந்த காவல் துறையினர் இவ்வாறு மிரட்டியதை எம்மிடம் குறிப்பிட்டனர். தவிரவும், சாதாரண உடையில் வந்த போலிசார் சீருடையில் இருந்த போலிசாரை நோக்கிக் கற்களை வீசித்தாக்குவது போல பாவனை செய்து வீடியோ படம் எடுத்ததாகவும் எம்மிடம் குறிப்பிட்டனர். நயினார்கோயில், பரமக்குடி, முதுகுளத்தூர், இராமநாதபுரம் ஆகியவற்றைச் சுற்றியுள்ள சுமார் 50 கிராமங்களில் இரவில் ஆண்கள் பயந்து வீட்டில் தங்காத நிலை இன்று உள்ளது. எஸ்.காவனூர் என்கிற ஊரில் இருந்த அடிப்பட்ட ஒருவரைக் காண இரவு 8 மணி வாக்கில் நாங்கள் வாகனங்களில் சென்றதைக் கண்ட அக்கிராமத்திலுள்ள அத்தனை ஆண்களும், வருவது காவல்துறையோ என அஞ்சி ஓடியதை நாங்கள் நேரில் கண்டோம்.

2. தொடக்கத்தில் இரவு நேரத்தில் இவ்வாறு கிராமங்களுக்குச் சென்று மிரட்டினோம் எனவும், பின்னர் அதை நிறுத்திக் கொண்டதாகவும் எம்மிடம் விரிவாகப் பேசிய இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அருண்ராய் கூறினார். ஆனால் மறுபடியும் பேருந்துகள்மீது கல்வீச்சுகள் நடந்ததால் அப்படிச் செய்ய வேண்டி இருந்தது எனவும், இனி அப்படி நடக்காது எனவும் அவர் எங்களிடம் குறிப்பிட்டார்.

3. 21 பேர் இன்று ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். வேறு யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் பலர் பிடித்துச் செல்லப்பட்டு, அடித்துப் பின்னர் விடப்பட்டுள்ளனர். மற்றபடி நகர்ப்புறங்களில் 144 தடை உத்தரவு  இருந்த போதிலும் பெரிய கெடுபிடிகள் இல்லை. எங்கள் குழு சென்று வருவதற்கும், மக்களைச் சந்திப்பதற்கும் பெரிய தடை எதுவும் இருக்கவில்லை. எனினும், பெரிய அளவில் பரமக்குடி பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டிருப்பது, வருவோர் போவோர் அனைவரும் வீடியோவில் பதிவு செய்யப்படுவது முதலான நிகழ்வுகள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை தொடர்ந்து ஏற்படுத்தியுள்ளது.

4. இறந்துபோனவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 இலட்சம் மட்டும் அரசால் வழங்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு ரூ. 15,000 கொடுக்கப்பட்டுள்ளது. பலர், அந்தத் தொகை இன்னும் தங்களுக்கு வந்து சேரவில்லை என எங்களிடம் குறிப்பிட்டனர். இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு தி.மு.க சார்பாக 1 இலட்சமும், காங்கிரஸ் கட்சி  சார்பாக ரூ. 50,000மும் கொடுக்கப்பட்டுள்ளது.

கோரிக்கைகள்

1.  சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்திப்  பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடும் தலித் விரோதப்போக்குடனும், உயர்சாதி ஆதிக்க ஆதரவுப் போக்குடனும் அது வெளிப்பட்டுள்ளது.  இது தலித் மக்கள் மத்தியில் தமக்கு எந்தவிதமான நீதியும் கிடைக்காது  என அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது. முதல்வர் தம் பேச்சிற்கு வருத்தம் தெரிவித்து, அதைத் திரும்பப் பெற வேண்டும். பாதிக்கப் பட்டவர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்த இது உதவும்.

2. துப்பாக்கிச் சூடு குறித்து அரசு நியமித்துள்ள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விசாரணை வெறும் கண்துடைப்பே. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியும் கிடைக்காது. பணியில் உள்ள நீதிபதி ஒருவரின் தலைமையில்  விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.

3. தாக்குதல் நடத்திய போலிஸ் அதிகாரிகளிடமே புலன் விசாரணையை அளித்திருப்பது கேலிக்குரியது. சி.பி.ஐ விசாரணை ஒன்று உயர்நீதிமன்ற மேற்பார்வையின்கீழ் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

4. சந்தீப் மிட்டல், செந்தில் வேலன், சிவக்குமார் ஆகிய காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் மீது வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்பட வேண்டும்.

5. இறந்தவர்களின் குடும்பத்திற்கு அளிக்கப்பட்டுள்ள வெறும் 1 இலட்சம் ரூபாய் இழப்பீடு கேலிக்கூத்தாக உள்ளதை அரசியல் தலைவர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த இழப்பீட்டுத் தொகையை 10 இலட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும். அது, சத்துணவு உதவியாளர் என்பது போன்ற வேலைகளாக அல்லாமல் வேறு உயர்ந்த வேலைகள் அளிக்கப்பட வேண்டும்.

6. காயமடைந்தவர்களுக்கு அவர்களது காயத்திற்குத் தகுந்தாற்போல, குறைந்தபட்சம் 1 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

7. தலித் கிராமங்கள் பலவும் கடுமையாக அரசால் புறக்கணிக்கப்பட்டுள்ள  நிலையை நாங்கள் நேரில் கண்டோம். எடுத்துக்காட்டாக,  கொல்லப்பட்ட பழனிகுமாரின் பள்ளப்பச்சேரி கிராமத்தில் குடிநீர் வசதி, சாலை வசதி ஏதுமில்லை. சாதி இறுக்கம் மிகுந்த மண்டல மாணிக்கம் ஊரின் வழியாகவே வெளியூர் செல்லக்கூடிய நிலை மாற்றப்பட்டு புறவழிச்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்பது அவர்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. அரசு இவற்றில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

8. மண்டல மாணிக்கம் போன்ற கிராமங்களில் உள்ள பள்ளிகளில் தலித் குழந்தைகள் மாற்றுச் சான்றிதழ் பெற்று வெளியேறுவது மிகவும் கவலையளிக்கக்கூடியதாக உள்ளது. இது குறித்த விசாரணை ஒன்றை மாவட்டக் கல்வி அலுவலரும், ஆதி திராவிட நலத்துறையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

9. பரமக்குடி, இராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை, வருவாய்த்துறை, உளவுத்துறை ஆகியவற்றிலுள்ள அதிகாரிகளில் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு பேர், தலித்கள் எவ்வளவு பேர்  என்ற விவரத்தை அரசு வெளியிட வேண்டும். இந்தத் துறைகள் ஒவ்வொன்றிலும் போதிய அளவில் இப்பகுதிகளில் தலித் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.

10. இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அல்லது பிறந்த நாளை அரசு அங்கீகரித்து விழா எடுக்க வேண்டும். இம்மானுவேல் சேகரனின் நினைவிடம் உள்ள சா
லை அகலப்படுத்தித் தூய்மை செய்யப்பட வேண்டும்.

11. அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகள் மத்தியில் தலித் விரோத மன நிலையும், ஆதிக்கச் சாதி ஆதரவுப் போக்கும் உள்ள நிலைக்கு எதிராக அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். திருமதி. சிவகாமி ஐ.ஏ.எஸ். ஆதிதிராவிட நலத்துறைச் செயலாளராக இருந்தபோது, அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு தலித் பிரச்சனைகளில் உணர்வூட்டுதல் என்ற பயிற்சியைத் தொடங்கினார். எனினும், அது விரைவில் நிறுத்தப்பட்டு விட்டது. அரசு இதைத் தொடர வேண்டும். அருண்ராய் போன்ற இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடமே தலித் தலைவர்கள் என்றால் ரவுடிகள் என்பது போன்ற ஒரு பார்வையும், ஆதிக்கச் சாதிக்குச் சமமாக அடித்தள மக்கள் உரிமை கோரும்போது, அது சட்டப்பூர்வமானதாக இருப்பினும் பொறுப்பற்ற செயல் என்பதாகக் கருதும் போக்கும் இருப்பது கவலையளிக்கிறது.

12. துப்பாக்கிச் சூட்டை அரசியல் கட்சிகள் பலவும் கண்டித்துள்ளன. சாதிக் கட்சிகள், குறிப்பாக முக்குலத்தோர் சார்ந்த சாதிக் கட்சிகள் கண்டிக்காதது வருந்தத்தக்கது. துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்துள்ள அரசியல் கட்சிகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்த அழுத்தத்தைத் தொடர்ந்து அரசுக்கு அளிக்க வேண்டும்.

13. பாதிக்கப்பட்டோருக்காக நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடிவரும் வழக்கறிஞர்கள் பொ.இரத்தினம், பசுமலை, ரஜினி ஆகியோரை இக்குழு பாராட்டுகின்றது.


நன்றி-அ.மார்க்ஸ் 

"தியாகமும், நட்பும்"

           

                                                                                     

                                             

                                                 ஜெர்மனியில் ரைன் நதிக்கரையில் உள்ள டிரிவஸ் நகரில் 5.5.1918 அன்று வழக்கறிஞர் மகனாக காரல் மார்க்ஸ் பிறந்தார்.அதே ஜெர்மனியில் ஊப்பர் நதிக்கரையில் பார்மன் என்ற சிற்றூரில் 28 .11 .1820  அன்று மிகப்பெரிய  தொழிலதிபருக்கு மகனாக பிரட்ரிக்  ஏங்கல்ஸ்  பிறந்தார்.ஆம்!!ரைன் நதிக்கரையலும் ஊப்பர்  நதிக்கரையலும் பிறந்த இந்த இரண்டு ஜீவநதிகளும் எதிர்காலத்தில் தொழிலாளி வர்க்கதிற்காக இணைந்து பணியாற்றுவோம் என்ற என்னமின்றியே வளர்ந்தனர்.
                                                கார்ல் மார்க்ஸ் வழக்கறிஞராக வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் அவருடைய தந்தையால் வளர்க்கப்பட்டார்.ஆனால் கார்ல் மார்க்ஸ் சிறுவயதிலையே மக்கள் படும்பாட்டை கவனித்திருந்தால் தத்துவத்தில் கவனம் செலுத்தி,அதில் முனைவர் பட்டம் பெற்று பத்திரிக்கை பணியில் சேர்ந்தார். 
                                             பிரட்ரிக்  ஏங்கல்ஸ் தொழிலதிபராக வேண்டும் என்ற  எண்ணத்தோடுதான் அவருடைய தந்தையால் வளர்க்கப்பட்டார்.குதிரை சவாரி,வாள் சண்டை,ராணுவத்தில் பீரங்கி படையில் பணி என வளர்ந்த எங்கல்ஸ் சுற்றி வாழும் மக்களின் நிலைகண்டு அவர்களின் வாழ்வுக்காக வாழ வேண்டுமென்று முடிவு செய்தார்.ஆம்!!மார்க்ஸ் , எங்கல்ஸ் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் விசியத்தில் தோற்றனர்.ஆனால் உலக தொழிலாளி வர்க்கம் இரண்டு ஆசான்களை பெற்றது!  
                                              பார்மன் கிராமத்தில் இருந்தபோதே 'ரைன்லாந்து கெஜெட்' என்ற பத்திரிக்கையில் கார்ல் மார்க்ஸ் எழுதிய புரட்சிகரமான கட்டுரைகளைப் படித்த எங்கல்ஸ் இருவர் சிந்தனையும் இணைந்திருப்பதை கண்டு வியந்தார்.மார்க்சை சந்திக்க வேண்டுமென்று எங்கல்ஸ் விரும்பினார்.அதற்கான சந்தர்பத்திற்காக எங்கல்ஸ் காத்திருந்தார்.
                                             மான்செஸ்டரில் ஏங்கல்சின் தந்தை பங்குதாரராக இருந்த 'எர்மன் அண்ட் எங்கல்' என்ற துணி ஆலையைக் கவனிக்க ஏங்கல்சை மான்செஸ்டர் அனுப்பி வைத்தார்.. செல்லும் வழியில் கோலன் என்ற நகரில் கார்ல் மார்க்சை எங்கல்ஸ் சந்தித்தார்.இருவரும் கருத்து பரிமாற்றம் செய்தனர் .. ஒருவரை ஒருவர் அறிவுகரன்களால் ஆரத்தழுவி கொண்டனர்.வாய்ப்பு கிடைத்தால் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்து கொண்டனர்.அதன் பின்  துணி ஆலையைக் கவனிக்க மான்செஸ்டர் சென்ற ஏங்கல் விருப்பமின்றியே அந்த வேலையே செய்து கொண்டு இருந்தார்.
                                            மூன்று ஆண்டுகளில் துணி ஆலைபணியை தூக்கி எரிந்து விட்டு மார்க்ஸ்சோடு இணைந்தார்  எங்கல்ஸ் .தனியாகவும் மார்க்ஸ்சோடு இணைந்தும் புத்தகங்களை எங்கல்ஸ் எழுதினர்.அறிவிலும் மேதமையிலும் தனக்கு இணையானவர்  எங்கல்ஸ் என்று திடமாக நம்பினார் மார்க்ஸ்.அதனால்தான்,'நியூயார்க் டெய்லி ட்ரிப்யுனல்' என்ற பத்திரிக்கையில் தொடர்ந்து மார்க்சை கட்டுரை எழுதும்படி அந்த பத்திரிக்கை உரிமையாளர் வலியுறுத்தியபோது அதற்கு ஒப்புக்கொண்ட மார்க்ஸ் இரண்டு,மூன்று காட்டுரைகளை எழுதி விட்டு,அதன் பின் 'மூலதனம்' நூல் எழுத வேண்டிய பணியுருந்ததல்'நியூயார்க் டெய்லி ட்ரிப்யுனல்'பத்திரிக்கைக்கு தன் பெயரில் ஏங்கல்சை எழுத வைத்தார்.
                                           காலம் நடந்து .... மார்க்ஸ் குடும்பம் வறுமையில் வாடியது... 
                                           ஏங்கல்ஸ் குடும்பத்தார் மன்செஸ்டர் சென்று தொழிற்சாலையைக் கவனிக்கும்படி வலியுறுத்தினர்..உடனே அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டார்  ஏங்கல்ஸ்.. இந்த பனியின் மூலம் கிடைத்த வருமானத்தின் பெரும் பகுதியை மார்க்ஸுக்கு அனுப்பிவிட்டு அவருடைய எழுத்துபணியை தொடரத் தூண்டினார் ஏங்கல்ஸ்.இப்படி 16 ஆண்டுகள் உழைத்து கிடைத்த பணத்தின் பெரும்பகுதியை மார்க்ஸ் குடும்பத்திற்கு அனுப்பி வைத்து அந்த குடும்பத்தின் தாய்ப் பறவையாகத் திகழ்ந்தார் ஏங்கல்ஸ்..
                                          பணியிலிருந்து விடுபட்டபோது கிடைத்த பணத்துடன் வந்து மார்க்ஸ் வீட்டிற்கு அருகிலையே குடியிருந்துகொண்டு மார்க்சின் எழுத்து பணிக்கு தோள் கொடுத்தார் ஏங்கல்ஸ்.இதற்கிடையில்  ஏங்கல்சின் காதல் மனைவியும் இறந்தார்;அதன்பின் ஏங்கல்ஸ் திருமணம் செய்த காதல் மனைவியின் தங்கையும் இறந்தார்.இத்தனை இழப்புகளால் ஏற்பட்ட சோகங்களை எல்லாம் நெஞ்சுக்குள் பூட்டி வைத்து கொண்டு கார்ல் மார்க்ஸ் குடும்பத்தை கவனிப்பதிலையும் அவரது எழுத்து பணிகளுக்கு துணை புரிவதிலையும் ஏங்கல்ஸ் காலத்தை செலவிட்டார்.இடையிடையே ஏங்கல்ஸ் எழுதவும் மறக்வில்லை..
                                         கார்ல் மார்க்சின் 'மூலதனம்' முதல் பாகம் வெளிவந்தது.ஆனால் இந்த நூலை எவரும் கண்டுகொள்ளவில்லை.அதனால் "ஒரு பத்திரிக்கையில் புனைபெயரில் 'மூலதனம்'இப்படி ஒரு புத்தகம் வெளிவந்திருக்கிறது.ஆபத்தான விளைவுகளை இந்த புத்தகம் ஏற்படுத்தும் ஆதனால் இந்த புத்தகத்தை தடை செய்யவேண்டும்" என்று ஏங்கல்ஸ் எழுதினர்.இதன் பின்புதான் மூலதனத்தை பலரும் படிக்க தொடங்கினர்.எதிர்த்தும்,ஆதரித்தும் கருத்துகள் வெளிவந்தன..
                                        மார்க்ஸ் மனைவி ஜென்னி இறந்தபின் மார்க்ஸ் மிகவும் மனமுடைந்துவிட்டார்.இந்த வேளையில் எங்கல்சின் துணையே மார்க்ஸுக்கு பக்கபலமாக இருந்தது.இருப்பினும் ஒரு நாள் மார்க்ஸும் இறந்துவிட்டார்.இதன்பின் மார்க்ஸ் படைப்புக்களை வெளிக்கொண்டுவருவது,மார்க்ஸ் படைப்புகளுக்கு எதிரான கருத்துகளுக்கு பதில் சொல்லுவது,மார்க்சின் வரிகளை காப்பாற்றுவது என ஏங்கல்ஸ்க்கு பணிகள் அதிகரித்தன..
                                       கார்ல் மார்க்சின் 'மூலதனம்'இரண்டாம் ,மூன்றாம் பாகங்களை பெருமுயற்சி எடுத்து ஏங்கல்ஸ் வெளிக் கொண்டுவந்தார்.மார்க்சின் கடிதங்களை தொகுத்து வெளியிடும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது தான்  ஏங்கல்ஸ் இறந்தார்.இரபதற்கு முன் தன் சொத்துகளை எல்லாம் கார்ல் மார்க்ஸ் வாரிசுகளுக்கு சேரும் வகையில் ஏங்கல்ஸ் உயில் எழுதி வைதிருந்தார்..ஆம்!! கார்ல் மார்க்சின்  தோழனாய்,நண்பனாய்,சகபோரலிய,மார்க்சின் குழந்தைகளுக்கு பாதுகாவலனை வாழ்ந்து சிறந்தவர் ஏங்கல்ஸ்..
                                      தன்னை முன்னித்ருதுவதைவிட கார்ல்மர்க்சை  முன்னித்ருதவேண்டும்.தன் படைப்புக்களை முன்னித்ருதுவதைவிட மார்க்ஸ் படைப்புக்களை முன் நிறுத்த வேண்டும்.அது தான் உலக தொழிலாளி   வர்கத்திற்கு   உதவி என்று புரிந்து வாழ்ந்தவர் ஏங்கல்ஸ்.இவர்களது நட்பு போற்றத்தக்கது,இணை இல்லாதது,                                                          
                                     உலக இதிகாசங்களிலும்,புராணங்களிலும் சொல்லப்பட்ட அணைத்து நட்புகளை காட்டிலும் ஜீவனுள்ள நட்பு கார்ல் மார்க்ஸ்,ஏங்கல்ஸ் நட்பு தான்....



                                  

என் அருமை தமிழ் மக்களே!



எந்த விஷயத்திலும் தடாலடியாக முடிவெடுக்கும் ஜெயலலிதா, வழக்கத்துக்கு மாறாக, தற்போது எல்லா விஷயங்களிலும் கொஞ்சம் நிதானம்(நரி தனம்)  காட்டிவருகின்றார். 

ஆ.தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பின் தமிழக அரசியலில் ஏற்பட்டுவரும் சூறாவளி மாற்றங்களை எதிர்கொள்வதில், அதாவது மக்கள் போராட்டங்களை திசை திருப்புவதிலும், தன்னால் எதுவும் செய்யமுடியாது என மக்களே நம்பும் வகையில் அவர்களை ஏமாற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் என, கைதேர்ந்த அரசியல்வாதியை போல் செயல்பட்டு வருகின்றார் ஜெயலலிதா.



இலங்கை அரசாங்கதிற்கு எதிராக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதன் மூலம், போலி புலி ஆதரவாளர்களிடம் (உண்மையான தமிழ் தேசியவாதிகளிடம் அல்ல), "ஒற்றை தமிழட்சி" என்ற பட்டத்தை பெற்றுகொண்டார். முருகன், சாந்தன், பேரறிவாளனின் தூக்குதண்டனையை ரத்துசெய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியதன் மூலம், உண்மையான(ஓரளவுக்கு) தமிழ் தேசியம் பேசிவந்தவர்களை கூட நம்பவைத்து, "நல்ல முதல்வர்" என்ற பெயரை வாங்கிக்கொண்டார். இதற்க்குமேல் அம்மூவர் விவகாரத்தில் தன்னால் எதுவும் செய்யமுடியாது என்று கூறி, முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்துள்ளார் ஜெயலலிதா. அதையும் மக்களை நம்பவைத்துள்ளார். கூடங்குளம் அணுமின்நிலைய விவகாரத்தில், மீண்டும் ஒருமுறை தன்னால் எதுவும் செய்யமுடியாது என்றும், மத்திய அரசின் கையில்தான் எல்லாம் உள்ளது என்று கூறி, மீண்டும் ஒரு தீர்மானம் நிறைவேற்றி ஏமாற்று நாடகம் நடத்தியுள்ளார் ஜெயலலிதா.





இம்மூன்று விஷயங்களையும் மேலோட்டமாக பார்க்கும்போது, யாரும் எளிதில் ஏமாந்து விடும்வண்ணம், அழகாக காய் நகர்த்தியுள்ளார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் இந்த நாடகங்களில் "போலி புலி ஆதரவாளர்களும்", "போலி தமிழ்தேசியவாதிகளும்" லயித்துபோய் இருந்தபோது, பரமக்குடியில் தாழ்த்தப்பட்ட மக்களின் மீது ரத்தவெறியாட்டம் நடத்தியுள்ளார் ஜெயலலிதா. தேவர்திருமகனை(????) இழிவுபடுத்தினால் இப்படிதான் நடக்கும் என்று, சட்டபேரவையில் ஆதிக்க சாதி வெறிபிடித்து கொக்கரித்துள்ளார் ஜெயலலிதா. முஸ்லிம் சிறுபான்மை மக்களை கொன்றொழிக்கும் ஒரே லட்சியத்துடன் ஆட்சி செய்துகொண்டிருக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் உண்ணாவிரத நாடகத்துக்கு, வெளிப்படையாக ஆதரவளித்ததுடன், மோடியின் கொள்கையும் என் கொள்கையும் ஒன்றுதான் என்று இறுமாப்புடன் பேசியுள்ளார் ஜெயலலிதா.



தன் சாதூர்ய அரசியல் காய் நகர்த்தலுக்கு, இந்திய அளவில் பெயர் பெற்றவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. ஜெயலலிதாவின் தற்போதைய நடவடிக்கைகள், கருணாநிதியையும் மிஞ்சிவிடும் வகையில் அமைந்துள்ளது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. மக்கள் போராட்டங்களை நேரடியாக எதிர்கொள்பவர்களை விட, சாதூர்யமாக ஒடுக்குபவர்களை கையாள்வதில், கூடுதல் கவனம் வேண்டும். இதை புரிந்துகொள்ளாமல் புலி துதிபாடிகளும், போலி தமிழ்தேசியவாதிகளும் அம்மாவிடம் சரணடைந்திருப்பது மக்களை அடகு வைப்பதற்க்கு சமம்.

-அசீப் 

பரமக்குடி கலவரம்: 5 பேர் சாவு!


பரமக்குடி கலவரம்: 5 பேர் சாவு

பரமக்குடியில் வன்முறைக் கும்பலைக் கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசும் போலீஸார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கலவரத்தை அடக்க, போலீஸôர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.
 
வன்முறையாளர்களின் கல்வீச்சில் டி.ஐ.ஜி., டி.எஸ்.பி. உள்பட ஏராளமானோர் காயமடைந்தனர். இதையடுத்து, மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலவரக்காரர்களைக் கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பரமக்குடியைச் சேர்ந்த பாண்டி மகன் ஜெயபால் (29), பரமக்குடி அருகே வீரம்பல் கிராமத்தைச் சேர்ந்த திரவியம் மகன் பன்னீர்செல்வம் (50), வல்லான்வலசையைச் சேர்ந்த ராமர் மகன் கணேசன் ஆகிய மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
 
பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் 54-வது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து, அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் பரமக்குடியில் அவரது நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.
 
தடை உத்தரவு: பள்ளிக்கூட மாணவர் ஒருவர் சனிக்கிழமை கொலை செய்யப்பட்டதால் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே வெளி மாவட்டங்களைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள், தலைவர்கள் பரமக்குடிக்கு வர போலீஸôர் தடை விதித்திருந்தனர்.
 
சாலை மறியல்: தூத்துக்குடியில் இருந்து பரமக்குடிக்கு வர முயன்ற தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியனை போலீஸôர் வல்லநாடு அருகே கைது செய்தனர். இத் தகவல் கிடைத்த அவரது ஆதரவாளர்கள், பரமக்குடி ஐந்து சாலை சந்திப்பில் பகல் 12 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 
சம்பவ இடத்துக்கு வந்த ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. காளிராஜ் மகேஷ்குமார், சென்னை அடையாறு துணை ஆணையாளர் செந்தில்வேலன் (இவர் முன்பு ராமநாதபுரம் எஸ்.பி.யாக இருந்தவர்) ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்தினர்.
 
கல்வீச்சில் போலீஸôர் காயம்: இந்நிலையில், அஞ்சலி செலுத்திவிட்டு வந்த வாகனங்களுக்கு வழிவிட மறுத்து, அவர்கள் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீஸôர் தடியடி நடத்தினர். ஆனால், மறியலில் ஈடுபட்டவர்கள் போலீஸôரை நோக்கி கற்களை வீசியதில் போலீஸôர் பலர் காயமடைந்தனர்.
 
வாகனங்களுக்குத் தீவைப்பு: போலீஸôரின் அதிரடிப்படை வாகனமான வஜ்ரா உள்ளிட்ட 10 வாகனங்களும், 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும், சுகாதாரத் துறை ஆய்வாளர் துணை இயக்குநர் அலுவலகத்துக்குச் சொந்தமான 3 ஆம்புலன்ஸ்கள், 3 ஜீப்புகள், 1 கார் ஆகியவையும் பலத்த சேதமடைந்தன. போலீஸ் ஜீப்புக்கும் தீ வைத்தனர்.
 
துப்பாக்கிச்சூடு: நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே போலீஸôர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். ரகளை தொடர்ந்ததால் போலீஸôர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர்.
 
கல்வீச்சில் ராமநாதபுரம் டி.ஐ.ஜி. சந்தீப் மித்தல், அடையாறு துணை ஆணையாளர் செந்தில்வேலன், பரமக்குடி டி.எஸ்.பி. கணேசன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீஸôர் காயமடைந்தனர். 4 மணி நேரத்துக்குப் பிறகு கலவரம் கட்டுக்குள் வந்தது.
 
மதுரையிலும்... மதுரையில் குருபூஜைக்கு லாரியில் சென்றோருக்கும் போலீஸôருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் பாட்டத்தைச் சேர்ந்த ராமர் மகன் பாலகிருஷ்ணன் (18), தனபால் மகன் ஜெயப்பிரசாத் (19) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். கல்வீச்சில் அவனியாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கஜேந்திரன், அவனியாபுரம் பெண் போலீஸ் காளியம்மாள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகநாதன் ஆகியோர் காயமடைந்தனர்.
 
சிவகங்கை மாவட்டம், பாட்டம் கிராமத்திலிருந்து 40-க்கும் மேற்பட்டோர் லாரியில் பரமக்குடி செல்லும் வழியில், அவர்களை சிந்தாமணி சோதனைச் சாவடியில் போலீஸôர் திருப்பி அனுப்பினர்.
 
மீண்டும் வன்முறை: சிறிது நேரத்தில் அவர்கள் மீண்டும் சிந்தாமணி சோதனைச் சாவடி அருகே வந்து, சாலை மறியல் செய்தனர். அரசு பஸ்கள், வாகனங்கள் மீது அவர்கள் கல் வீசியதில் கண்ணாடிகள் உடைந்தன. பஸ்ஸýக்குத் தீ வைக்கவும் சிலர் முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.
 
நிலைமை மோசமடைவதைக் கண்ட போலீஸôர், கும்பலை விரட்ட முயன்றனர். சம்பவ இடத்துக்கு உயர் போலீஸ் அதிகாரிகளும் வந்தனர். ஆனால், லாரியில் வந்தவர்களில் சிலர் தொடர்ந்து கல்வீச்சில் ஈடுபட்டு, போலீஸ் வாகனமான வஜ்ரா உள்ளிட்டவற்றை சேதப்படுத்தினர். இதையடுத்து, போலீஸôர் துப்பாக்கியால் வானை நோக்கிச் சுட்டனர். மேலும், வன்முறை தொடர்ந்ததால், போலீஸôர் துப்பாக்கிச் சூடு நடத்தி கும்பலை விரட்டினர்.
 
12 பஸ்கள் சேதம்: கல்வீச்சில் 12 பஸ்கள் சேதமடைந்தன. 2 மினி பஸ் மற்றும் கண்டெய்னர் லாரியும் சேதமடைந்தன. இதில் அரசு பஸ் டிரைவர் மூக்கையா (37) என்பவர் காயமடைந்தார்.

- உமர் முக்தார் 

துவங்கியது அ.தி.மு.க. - தே.மு.தி.க. சண்டை! துவக்கிவைத்தார் முதல்வர்!

துவங்கியது அ.தி.மு.க. - தே.மு.தி.க. சண்டை! துவக்கிவைத்தார் முதல்வர்!



தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர் திரு.அருள் சுப்பிரமணி, 'அண்ணா அறிவாலயம் விதிமுறைகளை மீறி ஆக்கிரமிப்பு சித்து கட்டப்பட்டதாக முதலில் கூறியது தான்தான்' என்று புதன்கிழமை (07.09.11) சட்டமன்றப் பேரவையில் கூறினார். அப்போது குறுக்கிட்ட அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் திரு.வெற்றிவேல், 'கடந்த 1999 ஆம் ஆண்டுமுதல் சென்னை மாநகராட்சி மன்றத்திலேயே தொடர்ந்து தான் வலியுறுத்தி வந்ததாக' கூறினார். அதை மறுத்த தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர் திரு.அருள் சுப்பிரமணி, மீண்டும் அதே கருத்தை தெரிவித்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்வர் ஜெயலலிதா, 'கடந்த 2001 - 2006 அ.தி.மு.க. ஆட்சியிலேயே அதுபற்றி பேசப்பட்டு கடிதம் அனுப்பியதாகவும், தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர் ஆதாரத்துடன் விரிவாக தெரிவிக்க வேண்டுமென்றும், ஆதாரமில்லாமல் பேசுவது அதிகாரிகளை குற்றம் சுமத்துவதுபோல் உள்ளதென்றும், தெரிவித்தார். மேலும், தே.மு.தி.க. உறுப்பினர்கள் புதியவர்கள் என்றும், அ.தி.மு.க.விற்கு பாலபாடம் நடத்தக்கூடாது என்றும் கூறிய முதல்வர், மேட்டூர் தொகுதியில் உள்ளது மேட்டூர் அணை, ஆறுபடை வீடுகளில் ஐந்தாவது படை திருத்தணி என்று பேசுவது தங்களுக்கு தெரியாதது அல்ல என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

அ.தி.மு.க. - தே.மு.தி.க. ஆகிய இரு கட்சிகளுக்குள் எப்போது சண்டை வரும் என எண்ணியவர்களுக்கு வந்து சேர்ந்துள்ளது இனிப்பான செய்தி! முதல்வர் அவ்வாறு கூறியபொழுது சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த் அவையில் இல்லாததால் பண்ருட்டியார் உட்பட தே.மு.தி.க. உறுப்பினர்களால் எதுவும் பேச இயலவில்லை. வருகிற உள்ளாட்சித் தேர்தலுக்குள் இரு கட்சிகளும் பிரிந்துவிடும் என பரவலாகப் பேசப்பட்டு வரும் இவ்வேளையில் முதல்வரே சண்டையை துவக்கிவைத்திருப்பது அதை உறுதி படுத்துவதுபோல் இருக்கிறது! ஆனால், அ.தி.மு.க. கூட்டணியில் இருந்ததால்தான் தே.மு.தி.க.வால் 29 தொகுதிகளைப் பெற முடிந்தது, எனவே உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணியிலேயே இருந்து கவுன்சிலர், பஞ்சாயத்துத் தலைவர் பதவிகளை பெறுவதே விஜயகாந்திற்கு ஏற்புடையதாக இருக்கும்!

- உமர் முக்தார் 

இந்திய ஊடகங்கள் பரப்பும் ‘இந்துத்துவ வெளி’


இந்திய ஊடகங்கள் பரப்பும் ‘இந்துத்துவ வெளி’



கசாப் - இந்த பெயர் சில மாதங்களுக்கு முன் இந்தியா முழுவதும் அனைவராலும் உச்சரிக்கப்பட்ட பெயர். இந்தியாவிலுள்ள அனைத்து ஆங்கில ஊடகங்களாலும் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தப்பட்ட பெயர். மும்பையில் அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகளில் ஒருவன்தான் கசாப். சரி, இது அப்படியே இருக்கட்டும். ‘சாத்வி பிரக்யா’ என்கிற பெயரை இந்தியாவில் எத்தனை பேருக்கு தெரியும்? மாலேகால் குண்டு வெடிப்பு சம்பவம் பொதுமக்கள் எத்தனை பேருக்கு தெரிந்திருக்க வாயப்பு இருக்கிறது? மேலே குறிப்பிட்ட அந்தப் பெயரும், அந்த சம்பவமும், திரளான மக்களுக்கு சென்றடையாத செய்திகளாகவே இன்றளவும் உள்ளன.
2007, பிப்ரவரி 18ல் தில்லி – லாகூர் இடையிலான சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 68 பேர் உயரிழந்தனர். 68 அப்பாவி பொதுமக்கள் இறப்பதற்குக் காரணமாக இருந்து செயல்பட்டவை ‘இந்து’ தீவிரவாத அமைப்புகள். அந்த ‘இந்து' தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்தான் சாத்வி பிரக்யா என்பவரும், அவரது கூட்டாளியான சுனில் ஜோஸி என்பவரும். ‘இந்து’ தீவிரவாதம் என்கிற வார்த்தையே நம் மக்களுக்கு புதிய சொல்லாகத்தான் இருக்கும். ஏனென்றால், இந்து தீவிரவாத அமைப்பு, இந்து தீவிரவாதிகள் போன்ற செய்திகளை நமது ஊடகங்கள் நமக்கு எடுத்துச் சொல்வதில்லை. சொல்ல விரும்புவதுமில்லை. எழுத்து ஊடகம், காட்சி ஊடகம் மற்றும் சினிமா என மக்களிடம் நேரடியாக பேசும் எந்த அமைப்பும் இந்து தீவிரவாதத்தை பற்றி மக்களுக்கு துளி அளவும் சொன்னதில்லை. அதே நேரத்தில் இசுலாமிய தீவிரவாதம், தீவிரவாதிகள் என்றாலே இசுலாமியர்கள் என்கிற சித்தரிப்பை ஊடகங்கள் திட்டமிட்டு செய்து வருகின்றன.
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ‘கசாப்’ என்கிற 22 வயது இளைஞனுக்கு மரண தண்டனை ஏன் வழங்க வேண்டும், மரணம் எந்த வகையில் அவனுக்கு அமைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தண்டனை முறைகளை ஆங்கில ஊடகங்கள் அரசுக்கு ஆலோசனைகளாக வழங்கின. சிறுமி முதல் பெரியவர் வரை ‘கசாப்’ மரண தண்டனை குறித்து கருத்து கேட்டு, இந்தியா முழுவதும் ‘கசாப்’ சாக வேண்டியவன் என்கிற பிரச்சாரத்தை செய்தன. மும்பை தொடர்வண்டி நிலையத்தில் இறந்து போன அப்பாவி மக்கள் மீது தாங்கள் காட்டும் கருணையாக, கசாப் சாகவேண்டும் என்று நினைப்பதே தேசப்பற்றுள்ள இந்தியனின் கடமை என்பது போலவும், ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்து தீவிரவாதி ‘சாத்வி பிரக்யாவால்’ சுட்டு கொல்லப்பட்ட 68 பேரும், இந்தியர்கள்தான். இந்த 68 பேர் இறந்துபோன செய்தியையும், இதற்குக் காரணமான இந்துத்துவ அமைப்புகளைப் பற்றியும், இப்பாதகச் செயலை செய்த சாத்வி பிரக்யாவை தூக்கில் போட வேண்டும் என்றும், எந்த ஊடகமும் இதுவரை பிரச்சாரம் செய்யவில்லை. தங்களை நடுநிலையாளர்களாக சொல்லி கொள்ளும் ஆங்கில ஊடகங்களின் உண்மை முகம் இதுதான்.
ஊடகம் என்பது இந்திய அளவில் பார்ப்பன, பனியாக்களின் தலைமையில் செயல்படும் அமைப்பாகவே இருக்கிறது. இந்திய வல்லாதிக்க கூறுகளான, 'தேசிய இனங்களின்' மீதான ஒடுக்குமுறை, இசுலாமியர்கள் மீதான பொய் சித்தரிப்பு, தரகு தேசிய முதலாளிகளுக்கான ஆதரவு மனநிலை, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கருத்தியல், பிராந்திய உணர்வுகள் கொண்ட மாநில கட்சிகளை சிறுமைப்படுத்துதல் என அனைத்து கருத்தாக்கங்களையும் பெருந்திரளான மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் வேலையைத்தான் இங்குள்ள ஊடகங்கள் செய்து கொண்டு இருக்கின்றன. சமூக நீதிக்கு முரணான இந்திய தேசிய கட்டமைப்பை, இந்துத்துவா உணர்வை, இந்தி மொழி திணிப்பை இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் பொது புத்தியாக உருவாக்கும் அரசியலைத்தான் இந்த ஊடகங்கள் திட்டமிட்டு செய்து வருகின்றன.
மாலேகான் குண்டு வெடிப்பு, அஜ்மீர் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு, பழனிபாபா படுகொலை என இந்துத்துவா அமைப்புகள் நடத்திய வன்முறைத் தாக்குதல்களை இதுவரை எந்த ஊடகமும் வெளிச்சம் போட்டுக் காட்டியதில்லை. 1984-ல் விஷ்வ இந்து பரிஷத் தொடங்கிய பிறகு தான் இந்திய அளவில் மதக்கலவரங்களும், வன்முறை தாக்குதல்களும் பரவலாகின. குண்டுவெடிப்பு கலாச்சாரத்தை இந்நாட்டில் துவங்கி வைத்த இந்த்துவ பார்ப்பனிய அமைப்புகளை தீயசக்திகள் என்கிற பிரச்சாரத்தை எந்த ஊடகங்களும் செய்ததில்லை. தீவிரவாத அமைப்புகள் என்றால், தேசிய இன விடுதலை அமைப்புகள் மற்றும் இசுலாமிய மத அமைப்புகள்தான் என்பதை பொதுமக்கள் மத்தியில் ஆழமாகப் பதிவு செய்வதில் முகாமையான பங்கை இந்த ஊடகங்கள் வகிக்கின்றன.
1995க்குப் பிறகு தமிழகத்தில் இசுலாமிய அமைப்புகளில் சில தலைவர்கள் தங்களது மத இறுக்கத்தை விடுத்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து சமூகநீதிக்கான பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பித்தனர். பார்ப்பனியத்திற்கு எதிராக, பிற்படுத்தப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரை ஒருங்கிணைத்து குரல் கொடுத்தவர்களில் முதன்மையானவர் பழனிபாபா. அமெரிக்காவில் உள்ள பிடாலபியாவில் 25 ஆண்டுகளுக்கு முன்னரே, முதலாளித்துவத்தின் கோரமுகத்தையும், நுகர்வு கலாச்சாரத்தை அதிகரிக்கும் அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கைகளையும் கண்டித்து பேசிய ஆற்றல்மிகு பேச்சாளர் பழனிபாபா. 1997ல் இந்து தீவிரவாதி ஒருவனால் வெட்டிக்கொல்லப்பட்டார் பழனிபாபா. இந்துத்துவத்திற்கு எதிராக இசுலாமிய அடிப்படைவாத சக்தியாக இல்லாமல் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் உதவியுடன் சமூக நீதிக்காக களம் கண்டவர் பழனிபாபா. அதன் காரணமாகவே பார்ப்பனியத்திற்கு பலியானார்.
‘சாத்வி பிரக்யா’ என்கிற இந்து தீவிரவாதியை மக்களுக்கு அடையாளம் காட்டாமல் இந்திய தேசியகட்டமைப்பு எப்படி பாதுகாத்து வருகிறதோ, அதேபோல் பழனிபாபா போன்ற இந்துவத்திற்கு எதிரான ஆளுமைகளையும் மறைத்து வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சட்டக் கல்லூரியில் தலித் மாணவர்களுக்கும், சாதி இந்து மாணவர்களுக்கும் இடையே நடந்த வன்முறையை ஊடகங்கள் மீண்டும் மீண்டும் பலமுறை ஒளிபரப்பின. ஆண்டாண்டு காலமாக தலித்களின் மீதான வன்கொடுமைகளை பரவலாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்காத ஊடகங்கள் தலித் கையில் ஆயுதமேந்தியவுடன் அதனை வெளிச்சம் போட்டுக் காட்டுவதன் மூலம் ஊடகங்களின் விஷமப் பிரச்சாரத்தை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.
ஈழவிடுதலைக்காக உயிர் துறந்த முத்துக்குமரன் முதல் சமீபத்தில் கொலை செய்யப்பட்ட முத்துக்குமார் வரை தமிழின உணர்வாளர்களின் போராட்டங்களையும், அர்ப்பணிப்பு வாழ்வையும் திட்டமிட்டு மறைத்து வருகிறது இந்திய வல்லாதிக்கத்திற்கு துணை நிற்கும் இந்த ஊடகங்கள். ராகுல்காந்தி போன்ற கத்துக்குட்டி அரசியல்வாதி தலித்கள் வீட்டில் தங்கினாரென்றும், அவர்களை தொட்டுப் பேசினார் என்றும் கற்பனைவாத சோசலிச கருத்துக்களைப் பரப்பும் இந்த ஊடகங்கள் ஈழத்திற்குச் சென்று சிங்கள ராணுவத்தால் கொடுமைப்படுத்தப்பட்ட தோழர் அங்கையர்கண்ணியைப் பற்றியும், சிங்களக் காடையர்களால் வன்தீண்டலுக்கு ஆளான தோழர் திருமலையைப் பற்றியும் இன்று வரை ஏன் பேசவில்லை?
பாலியில் வன்முறை, குழந்தைகளை கடத்தி கொலைச்செய்தல் போன்ற சம்பவங்களை மையமாக வைத்து ஊடகங்கள் தங்கள் கவலையை சமீபகாலமாக வெளிப்படுத்தி வருகின்றன. சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்தான் அவை. இருப்பினும், கோவையில் மார்வாடிக் குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டு இறந்த பிறகே, இந்திய தேசிய கட்டமைப்பும் ஊடகங்களும் இப்பிரச்சனையை கவனத்தில் எடுத்துக் கொண்டன. சேரிக் குழந்தைகள் பலபேர் அரசு மருத்துவமனையில் கடத்தப்படுவதும், அக்குழந்தைகள் பிச்சைக்காரர்களாக்கப்படுவதும், சாதி இந்துக்களால் தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு கட்டாயப்படுத்தப்படுவதும், நகர்ப்புறங்களிலும், ஊர்ப்புறங்களிலும், ஆண்டாண்டு காலமாக நடைபெறும் சமூக அவலங்கள். அதிகார வர்க்கத்திற்கு பாதிப்பு ஏற்படும்போது மட்டும்தான் ஊடகங்களும், இந்திய அரசும் அப்பிரச்சனையில் அக்கறை கொள்கின்றன.
தமிழக அமைச்சர் ஒருவருக்கு டெல்லியில் ஆங்கிலம் பேசத் தெரியாவிட்டால், இந்தியாவின் அனைத்து பத்திரிகைகளிலும் அது கேலிச்சித்திரமாகிறது. ஆனால், வெளியுறவுதுறை அமைச்ர் எஸ்.எம்.கிருஷ்ணா ஐ.நா.பாதுகாப்பு அவை உரையின்போது, வேறு நாட்டு உரையை வாசித்தால் அது வெறும் செய்தியாக மட்டுமே வருகிறது. இதே தவறை தமிழ்நாட்டைச் சேர்ந்த மந்திரி செய்திருந்தால் சும்மா விட்டிருக்குமா இந்த ஊடகங்கள்? மாநில உரிமைகளுக்கான போராட்டத்தை ஒடுக்குதல், தமிழ்தேசியப் போராட்டத்தை பகடி செய்தல், பழங்குடிகளின் வரலாற்றை மறைத்தல், சிறுபான்மை மக்களை அந்நியப்படுத்துதல் உள்ளிட்ட இந்திய வல்லாதிக்க கனவுகளை சராசரி குடிமகனின் பொதுப் புத்தியாக கொண்டு வருவதில் இந்திய ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. ‘சாத்வி பிரக்யா’ போன்ற இந்து தீவிரவாதிகளை திட்டமிட்டே மறைத்து, பாதுகாத்து வருகிறது இந்திய தேசிய கட்டமைப்பு. இதன் இத்துத்துவ, ஒடுக்குமுறையை உடைத்தெறிந்து, தமிழ்தேசிய இன அடையாளத்தையும், தமிழ்தேசிய கட்டமைப்பையும் வளர்த்தெடுக்க வேண்டிய பெரும்பணி நமக்கு இருக்கிறது.
- ஜீவசகாப்தன்

சொத்து விவரங்கள்!

சொத்து விவரங்கள் வெளியீடு!

பிரதமர் அலுவலகம்
      மன்மோகன் சிங்


தகவல் அறியும் சட்டத்தின் கீழ், பிரதமர் மன்மோகன் சிங்கின் சொத்து விவரத்தை வெளியிட்டுள்ளது பிரதமர் அலுவலகம். அவருடைய மொத்த சொத்து மதிப்பு 4.8 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு தெற்கு தில்லியில் வசந்த் குஞ்ச் பகுதியில் ஒரு பிளாட்டும், சண்டிகரில் ஒரு வீடும் உள்ளன. அவருக்குச் சொந்தமாக மாருதி 800 (1996 மாடல்) கார் ஒன்று உள்ளது. அவருக்குச் சொந்தமாக நிலம் எதுவும் இல்லை என்றும் 150 கிராம் அளவுக்கு தங்க நகைகள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் மற்ற அமைச்சர்களின் சொத்து விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. 

அடேங்கப்பா கமல்நாத்!

                        கமல்நாத்

மத்திய அமைச்சர்களிலேயே ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.கமல்நாத்துதான் அதிக சொத்து உள்ள அமைச்சர், அரசியல்வாதி! அவருக்கு 263 கோடி ரூபாய் சொத்து உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதியில்லாத நிதி அமைச்சர்!

              பிரணாப் முகர்ஜி

மத்திய நிதி அமைச்சரான திரு.பிரணாப் முகர்ஜிக்கு 1 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பரம்பரைப் பணக்காரர் ப.சிதம்பரம்!

                      ப.சிதம்பரம்

மத்திய உள்துறை அமைச்சரான திரு.ப.சிதம்பரத்துக்கு 11 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளும், அவரது மனைவி பெயரில் 12 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளும் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

              சரத் பவார் 

மத்திய வேளாண் துறை அமைச்சரான திரு.சரத் பவாருக்கு 12 கோடி ரூபாய் சொத்துகளும், 

                முரளி தியோரா

திரு.முரளி தியோராவுக்கு 15 கோடி ரூபாய் சொத்துகளும், 

      தயாநிதி மாறன் 

ஜவுளித்துறை அமைச்சராக இருந்த தி.மு.க.வைச் சேர்ந்த திரு.தயாநிதி மாறனுக்கு வெறும் 3 கோடி ரூபாய் சொத்துகளும், 

             எஸ்.எம்.கிருஷ்ணா

வெளியுறவுத்துறை அமைச்சரான திரு.எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு 2 கோடியே 34 லட்சம் அசையா சொத்துகளும், 4 கோடியே 81 லட்சம் அசையும் சொத்துகளும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

பாவமான பாதுகாப்புத்துறை அமைச்சர்!

                               ஏ.கே.அந்தோனி

மத்திய அமைச்சர்களிலேயே பாதுகாப்புத்துறை அமைச்சரான திரு.ஏ.கே.அந்தோனிக்குதான் குறைவான சொத்துகள் உள்ளன. அவருக்கு 1 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பிலான சொத்துகளும், அவரது மனைவி பெயரில் 30 லட்சம் மதிப்பிலான சொத்துகளும் இருப்பதாகவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

             நாராயணசாமி

சில அமைச்சர்களின் சொத்துகள் மட்டுமே இன்று (03.09.2011) வெளியிடப்பட்டுள்ளது. இதை வெளியிட்ட பிரதமர் அலுவலகத்தை கவனித்துவரும் பிரதமர் அலுவலக விவகாரத்துறை அமைச்சரான திரு.நாராயணசாமியின் சொத்து விவரங்கள் வெளியிடப்படவில்லை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது!

- உமர் முக்தார்.


Time

Total Page Views

About this blog

நம்மைச்சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகள் , அதன் பின்னணியிலிருக்கும் அரசியல் , அந்த நிகழ்வை நகர்த்தும் அடிப்படை,அதற்கான தேவை, என நாங்கள் புரிந்துகொண்டதை , நாங்களே பகிர்ந்து கொள்ளவும் , நாங்கள் பகிர்ந்து கொண்டதை , உங்களோடு பகிர்ந்து கொள்ளவுமே இந்தத் தளம்.
Powered by Blogger.

Followers

Blog Archive