அன்றாட வாழ்வில், மனிதன் எடுக்கும் முடிவுகள் அனைத்தும், அதுநாள்வரை அவன்பெற்ற தகவல்கள் மற்றும் அவனது அனுபவங்களின் அடிப்படியிலேயே அமைகின்றன. மனிதன், அவன்வாழ்நாளின் அடுத்தடுத்த நிமிடங்களில் புதுப்புது அனுபவங்களை பெறுகிறான். அதுபோல், வெகுதூரத்தில் ஒலிக்கும் வானொலியின் செய்திச்சுருக்கமும், எதேச்சையாக பார்க்கநேர்ந்த செய்திதொலைக்காட்சியின் அன்றைய முக்கிய செய்திகளும், டீயின் சூட்டை போக்குவதற்கு, கண்ணாடி டம்ப்ளரை அலசும் அந்த குறுகிய நேரத்தில், அனிச்சையாக, பக்கத்தில் அமர்ந்திருப்பவர் படித்துக்கொண்டிருக்கும் செய்திதாளில் கண்கள் மேயும்போது, மனதில்பதியும் செய்திகளும், மனிதனுக்கு அவன் விருப்பம் இல்லாமலேயே தகவல்களை கொண்டுசேர்க்கின்றன. ஆகவே, புதிய அனுபவமும், புதிய தகவல்களும் மனிதனின் மனதில், அடுத்தடுத்த நொடிகளில் ஏற்படும் வெற்றிடங்களை நிரப்பிக்கொண்டேயிருக்கின்றன. அனுபவமும், தகவல்களும் முடிவுகளை தீர்மானிக்கும் என்பதால், மனிதன் பெரும் தவாறான அல்லது ஒருசார்பான தகவல்கள், அன்றாடவாழ்வில் அவனெடுக்கும் முடிவை நேரடியாக பாதிக்கின்றன. 

உதாரத்திற்கு, அப்துல்கலாம் குறித்து ஊடகங்கள் வடித்துதந்த பிம்பங்களும், "அணுசக்தி இந்தியாவை வல்லரசாக மாற்றும்" என்ற கலாமின் போதனைகளும், பல இளைஞர்கள், அணுசக்தியின் அபாயங்கள் குறித்து யோசிப்பதைகூட தடுக்கின்றன. அப்துல்கலாம் குறித்து அவன் மூலையில் பதிந்த செய்திகள், அணுசக்தி குறித்து அவனெடுக்கும் முடிவை பாதிக்கின்றன. இடிந்தகரையிலுள்ள குழந்தைகளின் நிலைகுறித்து அவனுக்கு கொடுக்கப்பட்ட செய்திகளை விட, அப்துல்கலாம் சந்தித்த, உரையாடிய, கை குளுக்கிய குழந்தைகள் பற்றிய செய்திகளே அவனை அதிகம் சென்றடைந்துள்ளன. ஆகவே, அவன்பெற்ற தகவல் மற்றும் அனுபவங்களின் வெளிப்பாடாகவே, அணுசக்தி தேவை என்ற முடிவுக்குவருகிறான். 

செய்தியாளர்களாய், நம்முடைய அன்றாடபணியின் முக்கியத்துவத்தை உணர்த்த, இதுவே ஒரு சிறந்த உதாரணம். மனிதனின் முடிவுகள் செயல்பாடாக மாறுகின்றன. செயல்பாடுகளை தொகுப்பு, விளைவுகளை உருவாக்குகின்றன. அந்த விளைவுகள், மாற்றத்தை நோக்கிய பயணத்தின் வேகத்தை நிர்ணயிக்கின்றன. ஆகவே, நாம்தரும் செய்திகள், மக்கள் எடுக்கவேண்டிய முடிவுகளை நேரடியாக பாதிக்கின்றன என்பதை உணர்ந்து, செய்திகளின் முக்கியத்துவம் மற்றும் சமூக தேவை ஆகியவற்றை கருத்தில்கொண்டு, அச்செய்திகளை மக்களுக்கு புரியும் வகையில் எளிமைபடுத்தி வழங்கவேண்டியது, நம் அனைவரின் சமூக கடமையாகும். 

நமது கடமையை நாம் சிறப்பாக செய்ய, நமக்குள் சில புரிதல்கள் எட்டப்படவேண்டிய அவசியம் உள்ளது. அன்றாட நிகழ்வுகள், அரசின் முடிவுகள் மற்றும் மக்களின் எதிர்வினைகள் குறித்து நம்மிடையே பல்வேறு கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், பல்வேறு கருத்துக்கள் முட்டி மோதுவது, "ஒரு புதிய வழியை" கண்டுபிடிப்பதில் முடியும் என்பதில், நமக்குள் கருத்துவேறுபாடு இல்லாமல் இருப்பதே, புதியதை கண்டுபிடிக்கும் முயற்சியில் நாம் அனைவரும் ஒருங்கிணைவோம். நம்முடைய தேடல்கள், நம்மை ஒருங்கிணைப்பதில் முடியட்டும். 

சமீபகாலங்களில் அரசின் செயல்பாடுகளும், புதிய முடிவுகளும், மாற்றத்தை வேண்டிநிற்கும் மக்களின் அணிவகுப்பை உயரச்செய்து வருகின்றன. இந்த அணிவகுப்பின் பின்வரிசையில், தினந்தோறும் இலட்சக்கணக்கான மக்கள் சேர்ந்துகொண்டே வருகின்றனர். "மாற்றம் என்பதே மாறாது " என கூறுகிறது தத்துவம். அந்த மாற்றத்தை உருவாக்கப்போகும் மக்களுக்கு, தேவையான செய்திகளை கொண்டுசேர்ப்பதன் மூலம், மாற்றம் என்ற வினைக்கு, நாம் வினையூக்கியாக செயல்படவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். ஏனென்றால், அந்த அணிவகுப்பின் பின்வரிசையில் நாமும் நின்றுகொண்டிருக்கின்றோம்.... 

ஒருங்கிணைவுக்கான கருத்து பகிர்வு....



கூடங்குளம்---> உண்மை விவரம்


 கூடங்குளம் அணு உலையின் மொத்த மின்னுற்பத்தி = 2*1000 = 2000 MW

(குறிப்பு : கூடங்குளத்தின் மொத்த உற்பத்தியான 2*1000 என்பது தற்போது இரசியாவில் நடைபெற்று வரும் ஒப்பந்தம் முடிவுக்கு வரும் பொழுது 4*1000 என மாறும் )



2. அணு உலைகளால் சராசரியாக 60% மின் உற்பத்தியே செய்ய முடியும் = 1200MW

(குறிப்பு : எந்த ஒரு மின்னுற்பத்தி நிலையமும் 100% மின் உற்பத்தியை கொடுக்க முடியாது. இங்கு ஆண்டு மின் உற்பத்தி 60% எனக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் கல்பாக்கம் அணு உலையே கடந்த 4 ஆண்டுகளாக தான் 40-50% மின்னுற்பத்தியை கொடுக்க தொடங்கியுள்ளது.)



3. ஆண்டு மொத்த மின்னுற்பத்தி – அணு உலையை இயக்குவதற்கான ஆண்டு மின்தேவை(அணு உலையில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் 10% மின்சாரம் அணு உலையை இயக்குவதற்கு தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது) = 1080 MW

(குறிப்பு : இந்திய அணு உலைகள் செயல்படுவதற்கு ஆண்டிற்கு 12.5% மின்சாரம் தேவைப்பட்டாலும், இங்கு 10% கணக்கில் எடுத்துகொள்ளப்பட்டுள்ளது.)



4. தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் பங்கு 50% (1080ல் 50%) = 540 MW

(குறிப்பு : ஊடகங்களில் வந்துள்ள செய்திகளின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு 50% பங்கு மின்சாரம் கிடைக்குமென கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு வரும் முறையில் அணு உலை வைத்திருக்கும் மாநிலங்களுக்கு 30% பங்கே கொடுக்கப்படும்)



5. மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில்(T&D Loss) ஏற்படும் 25% இழப்பிற்கு பின் தமிழகத்திற்கு கிடைக்கும் மொத்த மின்சாரம் = 405 MW

(குறிப்பு : மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில் ஏற்படும் 25% என கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் தேசிய அளவு இழப்பு 27% ஆகும்.)



6. இறுதி பயன்பாட்டின் போது ஏற்படும் 20% மின் இழப்பையும் கணக்கில் கொண்டால் பயனாளருக்கு கிடைக்கும் மொத்த மின்சாரத்தின் அளவு = 305MW

(குறிப்பு : பிரயாசு என்ற நிறுவனத்தின் ஆய்வின் படி வீட்டு உபயோகத்தின் போது 20% மின் இழப்பு ஏற்படுகின்றது. இதில் தொழிற்சாலைகளிலும், விவசாய பயன்பாட்டின் போதும் ஏற்படும் மின் இழப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை)



7. இதில் பேச்சுவார்த்தை நலம்பட முடிந்து மேலும் இரண்டு அணு உலைகளையும் சேர்த்தால் 4 அணு உலைகளாக கொண்டால் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் மொத்த மின்சாரம் = 610MW



தற்பொழுதுள்ள மின்னுற்பத்தியை வைத்தே நாம் பின்வரும் சேமிப்புகளை மேற்கொள்ளலாம்.



1. மாநிலத்திலுள்ள குண்டுபல்புகளை (Tungsten Blub 60watts) மாற்றுவதன் மூலமாக கிடைக்கும் சேமிப்பு = 500 MW

(குறிப்பு : இந்தியாவில் உள்ள குண்டுபல்புகளை (Tungsten Blub 60watts) மாற்றுவதன் மூலம் 10,000 மெகாவாட்டிற்கும் அதிகமான மின்சேமிப்பு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது)



2. மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில்(T&D Loss) ஏற்படும் 25% இழப்பை 10% ஆக குறைப்பதன் மூலம் கிடைக்கும் சேமிப்பு = 1575 MW

(குறிப்பு : தமிழ்நாட்டின் மொத்த மின்னுற்பத்தியான 10,500 மெகாவாட்டில் 15% சேமிப்பதன் மூலம் கோடைகாலத்தின் அதியுயர் மின் தேவையை நிறைவ்ய் செய்ய முடியுமென மைய மின்சார வாரிய அறிக்கை கூறுகின்றது)



3. தமிழ்நாட்டின் பல்வேறு பிரிவுகளில் பயன்பாட்டில் ஏற்படும் இழப்பை குறைப்பதன் மூலம் கிடைக்கும் சேமிப்பு = 2,625 MW

(குறிப்பு : இதன் மூலம் தமிழ்நாட்டின் மொத்த மின் தேவையில் 25% நிறைவாகின்றது. அதுமட்டுமின்றி சரியாக மதிப்பிட்டால் இதன் மூலம் நமக்கு கிடைக்கும் சேமிப்பு மிகவும் அதிகமாகும்.)





புதுப்பிக்கப்பட்ட மின் மூலங்கள் மூலம் கிடைக்கும் பயன்கள்



1. காற்றாலை = 700 MW

(குறிப்பு : தமிழ்நாட்டின் மொத்த 5,500 மெகாவாட் காற்றாலை மின் திறனில் இதுவரை 4,790 மெகாவாட் அளவிற்கு மின்னுற்பத்தி செய்யப்படுகின்றது.(பார்க்க- தமிழ்நாடு மின்சார வாரிய அறிக்கை))



2. உயிர்ம எரிபொருள் = 900 MW

(குறிப்பு : உயிர்ம எரிபொருளில் இருந்தும், சக்கரை ஆலை கழிவுகளிலிருந்தும் 900 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். .(பார்க்க- தமிழ்நாடு மின்சார வாரிய அறிக்கை))



3. வீடுகளின் கூறைகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் தகடுகளை பதித்தல்(2கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் தகடுகளை 25 இலட்சம் வீடுகளில் பதியுதல்) = 5000 MW

(குறிப்பு : தமிழ்நாட்டில் உறுதியாகவும், பொருளாதார வகையில் நல்ல நிலையில் உள்ள வீடுகளில் 25% கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வீடுகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் தகட்டை பதியலாம்.)



4. வீடுகளின் கூறைகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் தகடுகளை பதித்தல், சூரிய ஒளியின் மூலம் நீரை சூடேற்றும் கருவிகளை மற்ற கட்டிடங்களில் வைத்தல் = மிக அதிக அளவு சேமிப்பு

(குறிப்பு : பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், அரசு கட்டிடங்கள், வணிக வளாகங்கள்……..)



மரபு சார் மின்னுற்பத்தி நிறுவனங்களைப் போலல்லாமல் புதுப்பிக்கதக்க மின்மூலங்கள் அதிக செலவு கொண்டதும், நம்பக்கூடியதுமல்ல என்ற வாதங்களும் உள்ளன. நீண்ட கால பயன்பாட்டில் புதுப்பிக்கதக்க மின் மூலங்களுக்காக அரசு செலவிடும் தொகை என்பது மிகவும் குறைவே. நம்மிடம் உள்ள மாற்று வழிகளை எல்லாம் சரியாக ஒருங்கிணைப்பதன் மூலம் கூடங்குளம் அணு உலையின் தேவையே இல்லாமல் செய்வது மட்டுமல்லாமல், கல்பாக்கம் அணு உலையையும் வருங்காலத்தில் மூடிவிடலாம். சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் எடுப்பதற்காக ஆகும் செலவான கடந்த சில ஆண்டுகளாக வெகுவாக குறைந்து வருகின்றது. இது ”தேசிய சூரிய ஒளி மின்சார ஆணையத்தின்” இரண்டாவது ஒப்பந்தப்புள்ளி கோரலிலும் எதிரொலித்துள்ளது என்பது இங்கே நினைவு கூறத்தக்கது. இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குள் சூரிய ஒளி மூலம் மின்சாரம் எடுப்பதற்காக ஆகும் செலவும் நிலக்கரி மூலம் மின்சாரம் எடுப்பதற்கு ஆகும் செலவும் ஒன்றாகிவிடும்.



அணு உலைக்காக செலவு செய்யப்படும் நேரடி, மறைமுக செலவுகளையும், மாற்று வழிகளின் மூலமாகவும், புதுப்பிக்கதக்க மின் மூலங்களுக்காகவும் செலவு செய்யப்படும் தொகையையும் இவ்விரண்டின் மூலம் மக்களுக்கு கிடைக்கும் பயன்களையும் ஆய்வு செய்தால் நாம் அணு உலைக்கு ஆகும் அதிக செலவையும், அதன் மூலம் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்பையும் தெளிவாக காணலாம். இந்த நாட்டிலேயே ஒரு முன்மாதிரியான மின் கொள்கையை தமிழ்நாடு வருவாக்குவதற்கான வாய்ப்புகள் நன்றாக உள்ளன.



தற்பொழுது செயல்பட்டு வரும் மின்னுற்பத்தி நிலையங்களினால் ஏற்படும் நீண்டகால பாதிப்புகளை குறைப்பதற்கும் , அணு உலை பேரழிவுகளை முற்றிலுமாக தவிர்ப்பதற்கும் வேறு வழியில்லாததால் நாட்டின் மின் தேவை, மின்னுற்பத்தியை சீராக ஆராய வேண்டிய கட்டாயத்தில் இந்த நாடு உள்ளது.



……………………………………………………….



வீட்டில் கிடக்கும் ஒரு பழைய நாற்காலியை பழங்கால பொக்கிசம் என்று ஏமாற்றி விற்பதற்காக சில மன நோயாளிகளை பணக்காரர்கள் போல தயார் செய்து அவர்கள் அனைவரும் அந்த நாற்காலியை ஏலம் எடுப்பதற்காக வந்திருப்பதாகவும், அந்த நாற்காலி பல ஆயிரம் ரூபாய்களுக்கு விற்பனையாகும் என்று ஏலக் கடைக்காரரின் தலையில் கட்டிவிடுவார் நடிகர்.பாண்டியராஜன். அது போலவே மிக அதிக செலவும், அதிக அளவு பிரச்சனையும், மிகக்குறைந்த மின்னுற்பத்தியும் கொண்ட இந்த அணு உலை என்ற பழங்கால நாற்காலியை மக்களின் தலையில் கட்டுவதற்காக இந்த அணு உலைகள் வந்தால் தமிழ்நாடு பெரு வளர்ச்சி அடையும், இருபத்தி நான்கு மணி நேரமும் மின்சாரம் கிடைக்கும், இனி மின் தடையே இல்லை என்பது போன்ற பசப்பு வாதங்களை மத்திய அரசு நம்முன் வைத்து அணு உலை ஒரு பொக்கிசம் என ஏமாற்றிவருகின்றது. நாம் ஏமாறப்போகின்றோமா ????

இதற்கு நடுவில் ஒலிம்பிக்ஸ்....


வெறுக்கவாவது செய்யுங்கள்...

பரப்புங்கள்....

Time

Total Page Views

About this blog

நம்மைச்சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகள் , அதன் பின்னணியிலிருக்கும் அரசியல் , அந்த நிகழ்வை நகர்த்தும் அடிப்படை,அதற்கான தேவை, என நாங்கள் புரிந்துகொண்டதை , நாங்களே பகிர்ந்து கொள்ளவும் , நாங்கள் பகிர்ந்து கொண்டதை , உங்களோடு பகிர்ந்து கொள்ளவுமே இந்தத் தளம்.
Powered by Blogger.

Followers

Blog Archive