அன்றாட வாழ்வில், மனிதன் எடுக்கும் முடிவுகள் அனைத்தும், அதுநாள்வரை அவன்பெற்ற தகவல்கள் மற்றும் அவனது அனுபவங்களின் அடிப்படியிலேயே அமைகின்றன. மனிதன், அவன்வாழ்நாளின் அடுத்தடுத்த நிமிடங்களில் புதுப்புது அனுபவங்களை பெறுகிறான். அதுபோல், வெகுதூரத்தில் ஒலிக்கும் வானொலியின் செய்திச்சுருக்கமும், எதேச்சையாக பார்க்கநேர்ந்த செய்திதொலைக்காட்சியின் அன்றைய முக்கிய செய்திகளும், டீயின் சூட்டை போக்குவதற்கு, கண்ணாடி டம்ப்ளரை அலசும் அந்த குறுகிய நேரத்தில், அனிச்சையாக, பக்கத்தில் அமர்ந்திருப்பவர் படித்துக்கொண்டிருக்கும் செய்திதாளில் கண்கள் மேயும்போது, மனதில்பதியும் செய்திகளும், மனிதனுக்கு அவன் விருப்பம் இல்லாமலேயே தகவல்களை கொண்டுசேர்க்கின்றன. ஆகவே, புதிய அனுபவமும், புதிய தகவல்களும் மனிதனின் மனதில், அடுத்தடுத்த நொடிகளில் ஏற்படும் வெற்றிடங்களை நிரப்பிக்கொண்டேயிருக்கின்றன. அனுபவமும், தகவல்களும் முடிவுகளை தீர்மானிக்கும் என்பதால், மனிதன் பெரும் தவாறான அல்லது ஒருசார்பான தகவல்கள், அன்றாடவாழ்வில் அவனெடுக்கும் முடிவை நேரடியாக பாதிக்கின்றன. 

உதாரத்திற்கு, அப்துல்கலாம் குறித்து ஊடகங்கள் வடித்துதந்த பிம்பங்களும், "அணுசக்தி இந்தியாவை வல்லரசாக மாற்றும்" என்ற கலாமின் போதனைகளும், பல இளைஞர்கள், அணுசக்தியின் அபாயங்கள் குறித்து யோசிப்பதைகூட தடுக்கின்றன. அப்துல்கலாம் குறித்து அவன் மூலையில் பதிந்த செய்திகள், அணுசக்தி குறித்து அவனெடுக்கும் முடிவை பாதிக்கின்றன. இடிந்தகரையிலுள்ள குழந்தைகளின் நிலைகுறித்து அவனுக்கு கொடுக்கப்பட்ட செய்திகளை விட, அப்துல்கலாம் சந்தித்த, உரையாடிய, கை குளுக்கிய குழந்தைகள் பற்றிய செய்திகளே அவனை அதிகம் சென்றடைந்துள்ளன. ஆகவே, அவன்பெற்ற தகவல் மற்றும் அனுபவங்களின் வெளிப்பாடாகவே, அணுசக்தி தேவை என்ற முடிவுக்குவருகிறான். 

செய்தியாளர்களாய், நம்முடைய அன்றாடபணியின் முக்கியத்துவத்தை உணர்த்த, இதுவே ஒரு சிறந்த உதாரணம். மனிதனின் முடிவுகள் செயல்பாடாக மாறுகின்றன. செயல்பாடுகளை தொகுப்பு, விளைவுகளை உருவாக்குகின்றன. அந்த விளைவுகள், மாற்றத்தை நோக்கிய பயணத்தின் வேகத்தை நிர்ணயிக்கின்றன. ஆகவே, நாம்தரும் செய்திகள், மக்கள் எடுக்கவேண்டிய முடிவுகளை நேரடியாக பாதிக்கின்றன என்பதை உணர்ந்து, செய்திகளின் முக்கியத்துவம் மற்றும் சமூக தேவை ஆகியவற்றை கருத்தில்கொண்டு, அச்செய்திகளை மக்களுக்கு புரியும் வகையில் எளிமைபடுத்தி வழங்கவேண்டியது, நம் அனைவரின் சமூக கடமையாகும். 

நமது கடமையை நாம் சிறப்பாக செய்ய, நமக்குள் சில புரிதல்கள் எட்டப்படவேண்டிய அவசியம் உள்ளது. அன்றாட நிகழ்வுகள், அரசின் முடிவுகள் மற்றும் மக்களின் எதிர்வினைகள் குறித்து நம்மிடையே பல்வேறு கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், பல்வேறு கருத்துக்கள் முட்டி மோதுவது, "ஒரு புதிய வழியை" கண்டுபிடிப்பதில் முடியும் என்பதில், நமக்குள் கருத்துவேறுபாடு இல்லாமல் இருப்பதே, புதியதை கண்டுபிடிக்கும் முயற்சியில் நாம் அனைவரும் ஒருங்கிணைவோம். நம்முடைய தேடல்கள், நம்மை ஒருங்கிணைப்பதில் முடியட்டும். 

சமீபகாலங்களில் அரசின் செயல்பாடுகளும், புதிய முடிவுகளும், மாற்றத்தை வேண்டிநிற்கும் மக்களின் அணிவகுப்பை உயரச்செய்து வருகின்றன. இந்த அணிவகுப்பின் பின்வரிசையில், தினந்தோறும் இலட்சக்கணக்கான மக்கள் சேர்ந்துகொண்டே வருகின்றனர். "மாற்றம் என்பதே மாறாது " என கூறுகிறது தத்துவம். அந்த மாற்றத்தை உருவாக்கப்போகும் மக்களுக்கு, தேவையான செய்திகளை கொண்டுசேர்ப்பதன் மூலம், மாற்றம் என்ற வினைக்கு, நாம் வினையூக்கியாக செயல்படவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். ஏனென்றால், அந்த அணிவகுப்பின் பின்வரிசையில் நாமும் நின்றுகொண்டிருக்கின்றோம்.... 

ஒருங்கிணைவுக்கான கருத்து பகிர்வு....



கூடங்குளம்---> உண்மை விவரம்


 கூடங்குளம் அணு உலையின் மொத்த மின்னுற்பத்தி = 2*1000 = 2000 MW

(குறிப்பு : கூடங்குளத்தின் மொத்த உற்பத்தியான 2*1000 என்பது தற்போது இரசியாவில் நடைபெற்று வரும் ஒப்பந்தம் முடிவுக்கு வரும் பொழுது 4*1000 என மாறும் )



2. அணு உலைகளால் சராசரியாக 60% மின் உற்பத்தியே செய்ய முடியும் = 1200MW

(குறிப்பு : எந்த ஒரு மின்னுற்பத்தி நிலையமும் 100% மின் உற்பத்தியை கொடுக்க முடியாது. இங்கு ஆண்டு மின் உற்பத்தி 60% எனக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் கல்பாக்கம் அணு உலையே கடந்த 4 ஆண்டுகளாக தான் 40-50% மின்னுற்பத்தியை கொடுக்க தொடங்கியுள்ளது.)



3. ஆண்டு மொத்த மின்னுற்பத்தி – அணு உலையை இயக்குவதற்கான ஆண்டு மின்தேவை(அணு உலையில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் 10% மின்சாரம் அணு உலையை இயக்குவதற்கு தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது) = 1080 MW

(குறிப்பு : இந்திய அணு உலைகள் செயல்படுவதற்கு ஆண்டிற்கு 12.5% மின்சாரம் தேவைப்பட்டாலும், இங்கு 10% கணக்கில் எடுத்துகொள்ளப்பட்டுள்ளது.)



4. தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் பங்கு 50% (1080ல் 50%) = 540 MW

(குறிப்பு : ஊடகங்களில் வந்துள்ள செய்திகளின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு 50% பங்கு மின்சாரம் கிடைக்குமென கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு வரும் முறையில் அணு உலை வைத்திருக்கும் மாநிலங்களுக்கு 30% பங்கே கொடுக்கப்படும்)



5. மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில்(T&D Loss) ஏற்படும் 25% இழப்பிற்கு பின் தமிழகத்திற்கு கிடைக்கும் மொத்த மின்சாரம் = 405 MW

(குறிப்பு : மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில் ஏற்படும் 25% என கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் தேசிய அளவு இழப்பு 27% ஆகும்.)



6. இறுதி பயன்பாட்டின் போது ஏற்படும் 20% மின் இழப்பையும் கணக்கில் கொண்டால் பயனாளருக்கு கிடைக்கும் மொத்த மின்சாரத்தின் அளவு = 305MW

(குறிப்பு : பிரயாசு என்ற நிறுவனத்தின் ஆய்வின் படி வீட்டு உபயோகத்தின் போது 20% மின் இழப்பு ஏற்படுகின்றது. இதில் தொழிற்சாலைகளிலும், விவசாய பயன்பாட்டின் போதும் ஏற்படும் மின் இழப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை)



7. இதில் பேச்சுவார்த்தை நலம்பட முடிந்து மேலும் இரண்டு அணு உலைகளையும் சேர்த்தால் 4 அணு உலைகளாக கொண்டால் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் மொத்த மின்சாரம் = 610MW



தற்பொழுதுள்ள மின்னுற்பத்தியை வைத்தே நாம் பின்வரும் சேமிப்புகளை மேற்கொள்ளலாம்.



1. மாநிலத்திலுள்ள குண்டுபல்புகளை (Tungsten Blub 60watts) மாற்றுவதன் மூலமாக கிடைக்கும் சேமிப்பு = 500 MW

(குறிப்பு : இந்தியாவில் உள்ள குண்டுபல்புகளை (Tungsten Blub 60watts) மாற்றுவதன் மூலம் 10,000 மெகாவாட்டிற்கும் அதிகமான மின்சேமிப்பு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது)



2. மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில்(T&D Loss) ஏற்படும் 25% இழப்பை 10% ஆக குறைப்பதன் மூலம் கிடைக்கும் சேமிப்பு = 1575 MW

(குறிப்பு : தமிழ்நாட்டின் மொத்த மின்னுற்பத்தியான 10,500 மெகாவாட்டில் 15% சேமிப்பதன் மூலம் கோடைகாலத்தின் அதியுயர் மின் தேவையை நிறைவ்ய் செய்ய முடியுமென மைய மின்சார வாரிய அறிக்கை கூறுகின்றது)



3. தமிழ்நாட்டின் பல்வேறு பிரிவுகளில் பயன்பாட்டில் ஏற்படும் இழப்பை குறைப்பதன் மூலம் கிடைக்கும் சேமிப்பு = 2,625 MW

(குறிப்பு : இதன் மூலம் தமிழ்நாட்டின் மொத்த மின் தேவையில் 25% நிறைவாகின்றது. அதுமட்டுமின்றி சரியாக மதிப்பிட்டால் இதன் மூலம் நமக்கு கிடைக்கும் சேமிப்பு மிகவும் அதிகமாகும்.)





புதுப்பிக்கப்பட்ட மின் மூலங்கள் மூலம் கிடைக்கும் பயன்கள்



1. காற்றாலை = 700 MW

(குறிப்பு : தமிழ்நாட்டின் மொத்த 5,500 மெகாவாட் காற்றாலை மின் திறனில் இதுவரை 4,790 மெகாவாட் அளவிற்கு மின்னுற்பத்தி செய்யப்படுகின்றது.(பார்க்க- தமிழ்நாடு மின்சார வாரிய அறிக்கை))



2. உயிர்ம எரிபொருள் = 900 MW

(குறிப்பு : உயிர்ம எரிபொருளில் இருந்தும், சக்கரை ஆலை கழிவுகளிலிருந்தும் 900 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். .(பார்க்க- தமிழ்நாடு மின்சார வாரிய அறிக்கை))



3. வீடுகளின் கூறைகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் தகடுகளை பதித்தல்(2கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் தகடுகளை 25 இலட்சம் வீடுகளில் பதியுதல்) = 5000 MW

(குறிப்பு : தமிழ்நாட்டில் உறுதியாகவும், பொருளாதார வகையில் நல்ல நிலையில் உள்ள வீடுகளில் 25% கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வீடுகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் தகட்டை பதியலாம்.)



4. வீடுகளின் கூறைகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் தகடுகளை பதித்தல், சூரிய ஒளியின் மூலம் நீரை சூடேற்றும் கருவிகளை மற்ற கட்டிடங்களில் வைத்தல் = மிக அதிக அளவு சேமிப்பு

(குறிப்பு : பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், அரசு கட்டிடங்கள், வணிக வளாகங்கள்……..)



மரபு சார் மின்னுற்பத்தி நிறுவனங்களைப் போலல்லாமல் புதுப்பிக்கதக்க மின்மூலங்கள் அதிக செலவு கொண்டதும், நம்பக்கூடியதுமல்ல என்ற வாதங்களும் உள்ளன. நீண்ட கால பயன்பாட்டில் புதுப்பிக்கதக்க மின் மூலங்களுக்காக அரசு செலவிடும் தொகை என்பது மிகவும் குறைவே. நம்மிடம் உள்ள மாற்று வழிகளை எல்லாம் சரியாக ஒருங்கிணைப்பதன் மூலம் கூடங்குளம் அணு உலையின் தேவையே இல்லாமல் செய்வது மட்டுமல்லாமல், கல்பாக்கம் அணு உலையையும் வருங்காலத்தில் மூடிவிடலாம். சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் எடுப்பதற்காக ஆகும் செலவான கடந்த சில ஆண்டுகளாக வெகுவாக குறைந்து வருகின்றது. இது ”தேசிய சூரிய ஒளி மின்சார ஆணையத்தின்” இரண்டாவது ஒப்பந்தப்புள்ளி கோரலிலும் எதிரொலித்துள்ளது என்பது இங்கே நினைவு கூறத்தக்கது. இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குள் சூரிய ஒளி மூலம் மின்சாரம் எடுப்பதற்காக ஆகும் செலவும் நிலக்கரி மூலம் மின்சாரம் எடுப்பதற்கு ஆகும் செலவும் ஒன்றாகிவிடும்.



அணு உலைக்காக செலவு செய்யப்படும் நேரடி, மறைமுக செலவுகளையும், மாற்று வழிகளின் மூலமாகவும், புதுப்பிக்கதக்க மின் மூலங்களுக்காகவும் செலவு செய்யப்படும் தொகையையும் இவ்விரண்டின் மூலம் மக்களுக்கு கிடைக்கும் பயன்களையும் ஆய்வு செய்தால் நாம் அணு உலைக்கு ஆகும் அதிக செலவையும், அதன் மூலம் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்பையும் தெளிவாக காணலாம். இந்த நாட்டிலேயே ஒரு முன்மாதிரியான மின் கொள்கையை தமிழ்நாடு வருவாக்குவதற்கான வாய்ப்புகள் நன்றாக உள்ளன.



தற்பொழுது செயல்பட்டு வரும் மின்னுற்பத்தி நிலையங்களினால் ஏற்படும் நீண்டகால பாதிப்புகளை குறைப்பதற்கும் , அணு உலை பேரழிவுகளை முற்றிலுமாக தவிர்ப்பதற்கும் வேறு வழியில்லாததால் நாட்டின் மின் தேவை, மின்னுற்பத்தியை சீராக ஆராய வேண்டிய கட்டாயத்தில் இந்த நாடு உள்ளது.



……………………………………………………….



வீட்டில் கிடக்கும் ஒரு பழைய நாற்காலியை பழங்கால பொக்கிசம் என்று ஏமாற்றி விற்பதற்காக சில மன நோயாளிகளை பணக்காரர்கள் போல தயார் செய்து அவர்கள் அனைவரும் அந்த நாற்காலியை ஏலம் எடுப்பதற்காக வந்திருப்பதாகவும், அந்த நாற்காலி பல ஆயிரம் ரூபாய்களுக்கு விற்பனையாகும் என்று ஏலக் கடைக்காரரின் தலையில் கட்டிவிடுவார் நடிகர்.பாண்டியராஜன். அது போலவே மிக அதிக செலவும், அதிக அளவு பிரச்சனையும், மிகக்குறைந்த மின்னுற்பத்தியும் கொண்ட இந்த அணு உலை என்ற பழங்கால நாற்காலியை மக்களின் தலையில் கட்டுவதற்காக இந்த அணு உலைகள் வந்தால் தமிழ்நாடு பெரு வளர்ச்சி அடையும், இருபத்தி நான்கு மணி நேரமும் மின்சாரம் கிடைக்கும், இனி மின் தடையே இல்லை என்பது போன்ற பசப்பு வாதங்களை மத்திய அரசு நம்முன் வைத்து அணு உலை ஒரு பொக்கிசம் என ஏமாற்றிவருகின்றது. நாம் ஏமாறப்போகின்றோமா ????

இதற்கு நடுவில் ஒலிம்பிக்ஸ்....


வெறுக்கவாவது செய்யுங்கள்...

பரப்புங்கள்....

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) யின் பொலிட் பீரோ உறுப்பினர், கிஷன்ஜி (எ) கோடீஸ்வர ராவ் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி போலீசாருடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டதாக அரசு அறிவித்தது. கிஷன்ஜியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுவதற்கு முன் எடுக்கப்பட்ட படங்கள் இவை....








அரசே! நீ கூறியதை நம்பிவிட்டோம்!!!!

முல்லைப் பெரியாறு அணை: கேரள தமிழக உணர்ச்சி அரசியல்

கோயம்புத்தூரிலிருந்து இதை எழுதிக் கொண்டிருக்கின்றேன். தமிழக கேரள எல்லை மாவட்டங்களில் ஒன்று இது. எல்லாக் கடைகளிலும் தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் பெயர்ப்பலகைகள் இருக்கும். மலையாளச் செய்தித் தாள்கள் எங்கும் கிடைக்கும். உள்ளூர் மக்களில் பெரும்பாலோர் மலையாள மொழியைப் புரிந்து கொள்வார்கள். ஒரு மணி நேரப் பேருந்துப் பயணத்தில் பாலக்காடு கணவாயைத் தாண்டினீர்களானால் இயற்கை அழகு கொஞ்சும் மலயாள பூமி தொடங்கிவிடும். பாலக்காடு நகரம் தமிழ்நாட்டின் ஒரு பகுதியைப் போலத்தான் காட்சியளிக்கும். எல்லோரும் அங்கே தமிழ் பேசுவார்கள். தென்கோடித் தமிழகமான கன்னியாகுமரி மாவட்டத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. தொல்காப்பியரின் ஆசான் பிறந்த அதங்கோடு இங்கேதான் இருக்கிறது. இங்கே பேசப்படும் மலையாளங் கலந்த தமிழை ‘எல்லைத் தமிழ்’ என்பாருண்டு. அங்கிருந்து மேற்குக் கடற்கரையோரமாகப் பயணித்தீர்களானால் கேரளத் தலைநகரமான திருவனந்தபுரம் வரை நீங்கள் சரளமாக யாருடனும் தமிழ் பேசலாம்.
அரிசி, காய்கறிகள், பால், இறைச்சி எல்லாம் கேரளத்திற்கு தமிழகத்திலிருந்துதான் போகின்றன. தமிழகத்தின் எந்த ஊரிலும் ஒரு மலையாளத்தாரின் தேநீர்க்கடை இருக்கும். கிட்டத்தட்ட தமிழக முக்கிய நகரங்கள் எல்லாவற்றிலும்  மலையாள ஆலுக்காஸ் குழும நகைக் கடைகளும், முத்தூட் நிதி நிறுவனங்களும் சமீப காலமாகப் பரவியுள்ளன. மலையாளத்தார்கள் மத்தியிலுள்ள ஒற்றுமை உணர்வு, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமை, இன உணர்வு, தொழில் முனைவு ஆகியன குறித்து தமிழர்கள் மத்தியில் ஒருவகை ஏக்கமும் கோபமும்  உண்டு. சமீபத்தில் நான் சவூதி சென்றிருந்த பொழுது அங்கே மத உணர்வைத் தாண்டி தமிழர்கள் மத்தியிலுஞ்சரி, மலையாளிகள் மத்தியிலுஞ்சரி இந்த மொழி அடையாளம் கூடுதலாக இருந்ததைப் பார்க்க முடிந்தது.
சமீபகாலமாக இருதரப்பிலும் இந்த இன உணர்வும் அதன் இன்னொரு பக்கமான இன வெறுப்பும் கூடுதலடைவதில் முல்லைப் பெரியார் அணைப் பிரச்சினை ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது. இரு பக்கத்திலும் இன உணர்வு இயக்கங்கள் மட்டுமின்றி எல்லா அரசியல் கட்சிகளுமே இதற்குக் காரணமாகியுள்ளன. கேரளத்தைப் பொருத்த மட்டில் பரம வைரிகளான கம்யூனிஸ்ட் கட்சிகளும் காங்கிரசும் இந்த விசயத்தில் ஒரே குரலில் முழங்குகின்றன. அங்கே இன உணர்வு இயக்கம் என்று பெரிதாக எதுவும் இல்லாவிட்டாலும் எல்லா மையநீரோட்ட அரசியல் கட்சிகளுமே அந்தக் ‘குறை’யைப் போக்கக் கூடியனவாகவே உள்ளன.
கடந்த நான்கைந்து  நாட்களாக இரு மாநிலங்களிலும் எல்லையோரங்களில் பதட்டங்கள் ஏற்பட்டுள்ளன. இரு மாநிலங்களிலும் மற்ற மாநிலத்தவர்களின் கடைகள் தாக்கப்படுகின்றன. இன்றைய நாளிதழ்ச் செய்திகளின்படி இங்கே கோவையில் மட்டும் 37 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்திலிருந்து வேலைக்குச் சென்ற தொழிலாளிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களெல்லாம் கேரளத்தில் தாக்கப்படுன்றனர். தற்போது நடந்து கொண்டுள்ள இந்த வன்முறைகளையும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளையும் பொருத்த மட்டில் கேரள அரசியல்வாதிகளுக்கே பெருத்த பங்கிருக்கிறது. சென்ற மாதம் பெய்த கடும் மழையில் முல்லைப் பெரியார் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கிய உடனேயே கட்சி வேறுபாடுகளின்றி அணை உடையும் பீதிப் பிரச்சாரத்தைப் பல்வேறு வடிவங்களில் அவர்கள் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர். பெரிய அளவில் போட்டிபோட்டுக் கொண்டு போராட்டங்களையும் கேரளக் கட்சிகள் நடத்தத் தொடங்கின. இது இங்கேயும் கடும் எதிர்வினைகளைத் தோற்றுவித்தது. இயக்கங்கள் நடத்திய போராட்டங்களுக்கு அப்பால் முல்லைப் பெரியாறு அணைப் பாசன விவசாயிகள் தன்னெழுச்சியாகத் திரண்டு கேரளத்திற்குச் செல்லும் வாகனங்களைத் தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாக அமைந்தது.
முல்லைபெரியாறு அணை 116 ஆண்டுகளுக்கு முன்னர் கேரள-தமிழ்நாடு எல்லையில், கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்திலுள்ள தேக்கடியில் கட்டப்பட்டது. 1886ம் ஆண்டில் திருவிதாங்கூர் மன்னருடன் அன்றைய பிரிட்டிஷ் அரசின் சென்னை மாகாணம் செய்துகொண்ட  ஒப்பந்தத்தின்படி நீர்த்தேக்கத்திற்கென 8000 ஏக்கர் நிலத்தையும் அணைக்கென மேலும் 100 ஏக்கர் நிலத்தையும் 999 ஆண்டு குத்தகைக்கு திருவிதாங்கூர் அரசு அளித்தது. கேரளத்தில் ஒடுகிற பெரியாறின் மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதியான 4576 சதுர கி.மீட்டரில் 114 சதுர கி.மீ மட்டுமே தமிழக எல்லையில் அமைந்துள்ளது. எனினும் ஆண்டுதோறும் நீரோடும் இந்த ஆற்று நீர், அணை கட்டப்படுவதற்கு முன், எவ்விதப் பயனும் இன்றி கேரள எல்லைக்குள் ஓடி அரபிக் கடலில் கலந்தது. அதே நேரத்தில் மழை மறைவுப் பகுதியில் அமைந்துள்ள தமிழகத்தின் தென் மாவட்டங்களான மதுரை மற்றும் இராமானாதபுரத்தின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் நீரின்றிக் காய்ந்து கிடந்ததை ஒட்டி பிரிட்டிஷ் அரசு முல்லை ஆறும் பெரியாறும் கலக்கும் இந்த இடத்தில் இப்படி ஒரு அணையைக் கட்டி, மேற்குத் திசையிலோடி அரபிக் கடலில் கலந்த பெரியாற்று நீரைக் கிழக்குத் திசையில் வங்கக் கடலை நோக்கித் திருப்பியது.
1887- 1895 ஆண்டுகளில் இராணுவ உதவியுடன் மேஜர் பென்னிகுயிக் என்கிற பொறியாளர் சுண்ணாம்பையும் செஞ்சாந்தையும் கொண்டு இந்த அணையைக் கட்டி முடித்தார். அருகில் சிற்றணை ஒன்றும் இத்துடன் இணைந்துள்ளது. திருப்பப்பட்ட நீர் வைகை ஆற்றையும் அணையையும் நிரப்பித் தமிழ்ப் பகுதிகளில் பாசனத்திற்கு வழி செய்தது. பின்னர் மின்சார உற்பத்திக்கும் இந்நீர் பயன்படுத்தப்பட்டது. அணையைக் கட்டிய பென்னிகுயிக் இன்றளவும் இப்பகுதி தமிழ் விவசாயிகளால் நன்றியுடன் நினைவுகூறப்படுகிறார். மதுரையிலுள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தில் அவருக்கொரு சிலையும் உண்டு. அணையை கட்டிக் கொண்டிருந்தபோது ஏற்பட்டப் பணப் பற்றாக் குறையைச் சரிகட்ட தனது மனைவியின் நகைகளை அவர் விற்றார் எனவும் சொல்லப்படுகிறது.
தரை மட்டத்திலிருந்து 881 அடி உயரத்தில் அமைந்துள்ள இவ் அணை 176 அடி உயரம் உடையது. 22.5 டி.எம்.சி நீர் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு இதன் மூலம் கிடைக்கிறது. அணை கேரளப் பகுதியில் அமைந்துள்ள போதிலும் அணையின் நிர்வாகம், அணையின் நீர்ப் பயன்பாடு எல்லாம் தமிழகத்திற்கே உரியது. இதற்கென திருவிதாங்கூர் அரசுக்குச் சென்னை மாகாண அரசு ஆண்டொன்றுக்கு ஏக்கருக்கு 5 ரூபாய் குத்தகை அளிக்க வேண்டும் என்பது ஒப்பந்தம். பிரிட்டிஷ் ஆட்சி போனபின் (1947), ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கப் பலமுறை (1950, 58, 69) பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, இறுதியில் அச்சுதமேனன் கேரள முதலமைச்சராக இருந்தபோது (1970) ஏக்கர் ஒன்றிற்குக் குத்தகைத் தொகை ரூ 30ம், உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு கிலோவாட்டுக்கு ரூ12ம் கொடுக்க வேண்டுமென ஒப்பந்தம் திருத்தப்பட்டது. இதன்படி தற்போது ஆண்டொன்றுக்கு 2.5 லட்ச ரூபாய் நில வாடகையாகவும், 7.5 லட்ச ரூபாய் மின்சார உற்பத்திக்காகவும் தமிழக அரசு கேரளத்திற்குக் கொடுத்து வருகிறது. எனினும் இந்த ஒப்பந்தம் கேரள அரசுக்குத் திருப்தியளிக்கவில்லை. வழக்குகள் நிலுவையிலுள்ளன.
999 ஆண்டு கால ஒப்பந்தம், தங்கள் ஆற்று நீரின் பயன்பாட்டைத் தமிழக மக்கள் அனுபவிப்பது ஆகியவற்றைக் கேரள அரசியல்வாதிகளின் மனம் ஏற்க மறுத்தது. இதை வைத்து ஒரு உணர்ச்சி அரசியலொன்று அங்கே கட்டமைக்கப் பட்டது. இதற்கிடையில் முல்லைப்பெரியாறு அணைக்குக் கீழாக 50 கி.மீ தொலைவில் மூன்று மடங்கு அதிகக் கொள்ளளவு உள்ள இடுக்கி அணையைக் கேரள அரசு கட்டியது. 1979ல் மோர்வி அணை உடைந்து சேதம் ஏற்படுத்தியதை ஒட்டி காலத்தால் பழசாகிப் போனதும், நீர்க்கசிவு உடையதும், ரொம்பப் பழைய தொழில்நுட்பத்தால் கட்டப்பட்டதும், புவி அதிர்ச்சிப் பகுதியில் அமைந்துள்ளதுமான முல்லைப் பெரியாறு அணை உடையும் பட்சத்தில் இடுக்கி, ஆலப்புழை, பந்தனந்திட்டாப் பகுதிகளில் வாழும் சுமார் 40 இலட்சம் மக்கள் அழிவது உறுதி எனப் பீதியூட்டிப் பிரச்சாரங்கள் செய்யப் பட்டன.  பெரியாறு அணை உடைந்தால் கீழே உள்ள இடுக்கி உட்பட மேலும் இரண்டு அணைகள் சேர்ந்து உடைந்து சேதத்தை அதிகமாக்கும் எனவும் அரிய உயிரினங்களும் இயற்கை வளங்களும் நிறைந்த பெரியாறு வனப் பகுதியும் அழியும் எனவும் பிரச்சாரம் செய்யப்பட்டது.
அணை உறுதியாக உள்ளது. அது உடைவதற்கு வாய்ப்பே கிடையாது. உடைந்தாலும் மும்மடங்கு அதிகக் கொள்ளளவு உள்ள இடுக்கி அணை நீர்ப்பெருக்கைத் தாங்கிக் கொள்ளும். முற்றிலும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கக்கூடிய புதிய அணை ஒன்றைக் கட்டுவதற்கான சதி முயற்சியாகவே கேரள அரசும் அரசியல் கட்சிகளும் இப்பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர் என்பது தமிழகத் தரப்பில் பேசப்படும் நியாயம். முல்லைப் பெரியாறு அணையைச் செயலிழக்கச் செய்தாலோ நீர் நிர்வாகத்தைக் கேரள அரசு வைத்துக்கொண்டாலோ அது மிகப்பெரிய இழப்பாக முடியும் என்கிற நியாயமான  அச்சம் தமிழக விவசாயிகளைச் சூழ்ந்தது.
கேரள அரசு, அணைப் பாதுகாப்பு குறித்து எழுப்பிய பிரச்சினையை ஒட்டி மத்திய நீர் ஆணையம், அணையிலுள்ள நீரின் அளவை 142.2 அடியிலிருந்து 136 அடியாகக் குறைத்துக் கொள்ள ஆணையிட்டது. தமிழக அரசு பணிந்த போதும் அணையின் உயரத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் எனவும் அதன்மூலம் மேலும் 11.25 டி.எம்.சி நீர் தமிழகத்திர்குக் கிடைப்பதைத் தடுக்கக்கூடாது எனவும் கோரிக்கை வைத்தது. உச்ச நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது. குறைந்த பட்சம்  145 அடி உயரம் வரையேனும் நீரைத் தேக்கி வைக்க அனுமதி வேண்டும் என்பதே தமிழக மக்களின் கோரிக்கையாக உள்ளது. கேரள அரசு இதை ஏற்காததைத் தொடர்ந்து அணைப் பாதுகாப்பைக் கண்டறிய உச்ச நீதிமன்றம் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது.  தமிழக, கேரள அரசுகளின் சார்பாக ஒவ்வொரு பிரதிநிதிகள் அக்குழுவில் இருந்தனர்.
அணை பாதுகாப்பாக உள்ளது எனவும், 142 அடி வரை நீரைத் தேக்கி வைக்கலாம் எனவும் நிபுணர் குழு அளித்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவ்வாறே ஆணையிட்டது. அணையில் தேவையான பராமரிப்புப் பணிகளச் செய்யவும் தமிழக அரசுக்கு அனுமதி அளித்தது. நீதிமன்ற ஆணையை ஏற்க மறுத்த கேரள அரசு சட்டமன்றத்தைக் கூட்டி சென்ற மார்ச் 2006ல் அணைப் பாதுகாப்புச் சட்டம் ஒன்றை இயற்றியது. அதன்படி 136 அடிக்கு மேல் தமிழக அரசு நீர்மட்டத்தை உயர்த்த அனுமதி மறுக்கப்பட்டது. சேதம் விளைவிக்க்க் கூடிய அணை தொடர்பான நடவடிக்கைகள் எதுவாயினும் கேரள அரசின் ஒப்புதலில்லாமல் மேற்கொள்ளக் கூடாது எனவும் அச்சட்டம் வரையறுத்துள்ளது. அணையில் பராமரிப்புப் பணிகள் செய்வதற்கும் கெரளத் தரப்பில் இடையூறுகள் செய்யப்படுகின்றன..
உச்ச நீதி மன்றத் தீர்ப்பிற்கு எதிராகக் கேரள அரசு இயற்றியுள்ள இச்சட்டம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது என அறிவிக்க வேண்டுமென தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தை அணுகியது. அப்படியான ஒரு ஆணையை இட மறுத்த நீதிமன்றம், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் மீண்டும் ஒரு குழுவை நியமித்தது. இரு அரசுகளும் ஒவ்வொரு உறுப்பினரை இக்குழுவில் நியமித்துக் கொல்ளலாம் என்பதைத் தமிழக அரசு புறக்கணித்துள்ளது. மேலும் ஒரு குழு எதற்கு என்கிற நியாயமான கேள்வியைத் அது எழுப்புகிறது. கேரள அரசோ ஓய்வு பெற்ற நீதிபதி கே.டிதாமஸை இகுழுவிற்கு நியமித்துள்ளது.
நில அதிர்வுப் பீதியைக் கேரள அரசு எழுப்பியதையொட்டி தமிழக அரசு அணைப் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய அமைத்த  நால்வர் குழு இந்தியத் தர நிர்ணயங்களின்படி அணை பாதுகாப்பாக உள்ளதாக அறிவித்தது. இப்பகுதியில் நில அதிர்வு மூன்றாம் அளவு நிலைக்குள்ளேயே உள்ளது என்பதால் ஆபத்துக்கு வாய்ப்பில்லை என்பதும் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
எனினும் கேரள அரசு ஐ.ஐ.டி நிறுவனத்தை ஆய்வு செய்யச் சொல்லி அது அளித்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.  அணை நில அதிர்வைத் தாங்காது என்பது அவ்வறிக்கையின் சாரம். இந் நிறுவனம் நீதிமன்றத்திற்கு வந்து அதன் கூற்றை நிரூபிக்கவில்லை என முன்னாள் முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டினார்.
இந்தப் பின்னணியில்தான் இன்றைய விரும்பத்தகாத நிகழ்வுகள் நிறைவேறியுள்ளன. இப்படியான ஒரு உணர்ச்சி அரசியல் உருவாகியுள்ளது மிகவும் கவலையளிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. பீதியையும், உணர்ச்சியையும் தூண்டும் வகையில்  பேசுவதை இரு தரப்பு அரசியல்வாதிகளும், ஊடகங்களும் தவிர்க்க வேண்டும். கூடங்குளப் பிரச்சினையில் இரு மாநில மக்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள ஒற்றுமையைக் குலைக்கும் நோக்குடன் இந்திய அரசு செயல்படுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளதை இரு தரப்பினரும் பொறுப்புடன் சிந்திக்க வேண்டிய தருணம் இது. தமிழக விவசாயிகளின் அச்சம், அணைப் பாதுக்காப்பு குறித்த கேரள மக்களின் கவலை இரண்டிலுமுள்ள நியாயங்களை இரு தரப்பும் பொறுப்புடன் யோசிக்க வேண்டும். வன்முறைகளைக் கைவிடுமாறு இரு தரப்பினரும் கூட்டறிக்கைகளை விட வேண்டும். உச்ச நீதி மன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு, அதன்பின் கேரள அரசு தனது கவலைகள் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டும். தேவையானால் தமிழகப் பகுதியில் மேலும் இரு சிற்றணைகளைக் கட்டி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் கட்டுக்குள் வைக்கும் திட்டத்தையும் யோசிக்க வேண்டும். இதுபோன்ற பிரச்சினைகளில் பாரம்பரிய உரிமைகளை மதித்தலும், பேச்சுவார்த்தைகளும் மட்டுமே பலனளிக்கும். இனவாத உணர்ச்சி அரசியல், பிரச்சினைகளை மிகைப்படுத்துவதற்கே இட்டுச் செல்லும். ஆனால் அத்தகைய கருத்துக்களே இங்கு முகநூல் முதலான இணயத் தளங்களிலும் பிரச்சாரம் செய்யப்படுகின்றன. ‘மலையாள மனோபாவம்” என்றெல்லாம் வெறுப்புப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவது கவலை அளிக்கிறது. இது போன்ற பிரச்சாரங்கள் அங்கும் மேற்கொள்ளப்படுகின்றன. முகநூல் பக்கங்களில் அறிவார்ந்த கட்டுரைகள் எழுதுகிற பல நண்பர்கள் காட்டும் மவுனமும் கவலை அளிக்கிறது.
இன் நிலையில் நேற்று (டிச 9) புதுச்சேரியில் தோழர் சுகுமாரன் ஏற்பாடு செய்திருந்த மனித உரிமைப் பயிற்சி முகாம் ஒன்றில் கலந்து கொண்ட தோழர் கல்யாணி ( பேரா. கல்விமணி ) அவர்கள் தமிழகத்தில் மலையாளிகளின் கடைகள் தாக்கப்படுவது குறித்தும், அங்கே தமிழர்கள் கடைகள் தாக்கப்படுவது குறித்தும் கண்டன அறிக்கை ஒன்றை நாம் வெளியிட வேண்டும் என்று் கருத்துத் தெரிவித்தது ஆறுதலாக இருந்தது.

நன்றி: அ.மார்க்ஸ்.


அப்துல் கலாமின் அட்டகாசங்கள்....
              அப்துல் கலாம் அவர்கள் இரண்டு நாட்களாகத் தமிழ்நாட்டில் அடிக்கும் லூட்டி தாங்க முடியவில்லை. மத்திய அரசின் கைப்பாவையாக இங்கே வந்து அணு உலை ஆதரவுப் பிரச்சாரத்தைச் செய்துகொண்டுள்ளார். கலாமுக்கு மக்கள் மத்தியில் ஒரு மரியாதையும் அங்கீகாரமும் இருக்கிறது. அவரது புத்தகங்கள் இங்கே ஏராளமாக விற்பனையாகின்றன. ஒரு முஸ்லிமாகப் பிறந்திருந்தும், முஸ்லிம் அடையாளம் எதையும் தரித்துக் கொள்ளாததாலும், முஸ்லிம்களின் உரிமைகள் குறித்தோ, அவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்தோ வாய் திறவாமல் இருப்பதாலும் அவர் ஒரு “நல்ல முஸ்லிமாக” பொதுப் புத்தியில் அடையாளம் காணப்படுகிறார் (“முஸ்லிம்னா இப்டி இருக்கணும்பா”). அந்த அளவுக்குத் தனது பிற அடையாளங்களை அமுக்கிக் கொண்டு “விஞ்ஞானி” என்கிற ஒற்றை அடையாளத்தைத் துருத்தி நிறுத்திக்கொண்டவர் அவர். நான் ஒரு முறை அவரை விமர்சித்து ஏதோ எழுதியபோது ‘விஞ்ஞானி’ என அவரை விளித்திருந்தேன். தொலைபேசியில் அழைத்த நண்பர் ராமாநுஜம், “அவரை ஏன் விஞ்ஞானி எனச் சொல்கிறீர்கள். அவரைக் குறிக்க ‘technocrat’ என்பதுதான் சரியான சொல்” என்றார்.
ராமாநுஜம் சொன்னது நுற்றுக்கு நூறு சரி. Technocrat என்கிற சொல்லுக்கு ஏ.சி. செட்டியார் அகராதி சொல்லும் பொருள்: “தொழில்நுட்ப அறிஞராட்சிக் கோட்பாட்டாளர்”. ஆம், அப்துல் கலாம் போன்றவர்கள் தொழில்நுட்ப அறிஞர்கள் மட்டுமல்ல. “ஆட்சிக் கோட்பாட்டாளர்களும்” கூட.  Bureaucrat என்கிற சொல் எத்தனை வெறுப்புக்குரியதோ அத்தனை வெறுப்புக்குரிய சொல் Technocrat என்பதும். “சிவில் அதிகார வர்க்கம்” எப்படி அரசதிகாரத்தின் பிரதிநிதியாக இருந்து மக்களை அலட்சியப்படுத்தி முடிவுகளைச் செயல்படுத்துகின்றதோ அப்படியே இந்த விஞ்ஞான அதிகாரவர்க்கமும் மக்களை மயிரளவும் மதிப்பதில்லை. இதற்கொரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு கலாம். விஞ்ஞானத்தை வழிபடுபவர். விஞ்ஞானத்தையும் தொழில்நுட்பத்தையும் ஏழை/பணக்காரன், உயர்ந்தோர்/தாழ்ந்தோர் முதலான எல்லாவிதமான வேறுபாடுகளுக்கும், கருத்தியல்களுக்கும் அப்பாற்பட்டவையாக நம்புபவர். குறிப்பாக அரசியல் மற்றும் பொருளாதார நலன்களிலிருந்து முற்றாக விஞ்ஞானத்தைப் பிரித்துப் பார்ப்பவர். ஃபுகுஷிமா விபத்திற்குப் பின் தனது நாட்டில் புதிய அணு உலைகளைக் கட்டுவதை நிறுத்தி வைப்பது என முடிவெடுத்துள்ள ஜப்பான், அதே நேரத்தில் வியட்நாம் உள்ளிட்ட சிறு நாடுகளுக்கு அணு உலைகளை விற்பதைத் தொடர்வது ஏன் என்பது போன்ற கேள்விகளை எழுப்பி மனத்தைச் சஞ்சலப்படுத்திக் கொள்ளாதவர். ஜப்பானின் இந்த இரட்டை நிலைப்பாட்டை அங்குள்ள மனச்சாட்சி உடைய அறிவுஜீவிகள் எதிர்த்துள்ளனர். டோஷிபா, மிட்சுபிஷி, சுஸுகி என்கிற மூன்று ஜப்பானிய நிறுவனங்கள் சென்ற நிதி ஆண்டில் இத்தகைய விற்பனைகளின் மூலம் பல பில்லியன் டாலர்களைச் சம்பாதித்துள்ளதுதான் இந்த இரட்டை நிலைபாட்டிற்குக் காரணம். விஞ்ஞானம், தொழில்நுட்பம் எல்லாம் அரசியலுக்கும், கருத்தியலுக்கும் அப்பாற்பட்டதெனச் சொல்வது எத்தனை அபத்தம்.

மக்கள் குறுகிய நோக்கத்துடனும், உடனடிப் பலாபலன்களையும் கருதிச் செயல்படக் கூடியவர்கள்; ஆனால் தாங்களோ தொலை நோக்கிலும், ஒட்டு மொத்தமான நாட்டு நலன் என்கிற  அடிப்படையிலும் சிந்திப்பவர்கள் என்கிற எண்ணமே அதிகார வர்க்கம் மக்களை அலட்சியம் செய்வதன் அடிப்படை. சில உடனடிப் பயன்களை மக்களிடம் காட்டினால் அவர்கள் மனம் மாறி விடுவார்கள் என்கிற எண்ணத்தில்தான் கலாம் இன்று கூடங்குளத்து மக்கள் முன் 200 கோடி ரூபாய் வளர்ச்சித் திட்டங்களை அவிழ்த்து விட்டுள்ளார். இவற்றில் பலவும் எல்லா கிராம மக்களுக்கும் நிறைவேற்றப்பட வேண்டிய நலத் திட்டங்கள்தான்.  கூடங்குள மக்களுக்கு மட்டும் இந்தத் திட்டங்கள் என்பதன் பொருளென்ன? அவர்களின் சம்மதம் கோரிக் கொடுக்கப்படும் லஞ்சமா? இல்லை, பின்னால் வரப்போகிற ஆபத்திற்காக முன்கூட்டியே வழங்கப்படும் இழப்பீடா?

கூடங்குள அணு உலைகளால் எந்த ஆபத்தும் இல்லை என அடித்துச் சொல்கிறார் கலாம். ஏற்கனவே அணு உலை அதிகார வர்க்கம் சொல்லி வந்ததையே கிளிப் பிள்ளை போலத் திருப்பிச் சொல்லியுள்ளார். எனில் பெல்ஜியம், ஜப்பான் முதலிய நாடுகள் சுமார் 14 அணு உலைகளை மூட முடிவு செய்திருப்பதும், ஸ்விஸ் முதலான நாடுகளும் அப்படியான முடிவுக்கு வந்துள்ளதும் எப்படி?  இது குறித்து ஏன் அவரிடம் இத்தனை பெரிய மௌனம்?

கூடங்குளம் அணு உலைகள் 6 ரிக்டர் நிலநடுக்கம் வரை தாங்கும் என உத்தரவாதம் அளிக்கிறார். இன்றைய நாளிதழ் ஒன்று கேலி செய்திருப்பதைப் போல 7 அல்லது 8 ரிக்டர் நில நடுக்கம் வந்தால் என்னாவது? வராது என்பதற்கு ஏதாவது உத்தரவாதம் உண்டா? 2004ல் அத்தனை பெரிய சுனாமி எப்படி வந்தது? 25 சத அணுக் கழிவை ஒன்றும் செய்ய முடியாது என்பதை அவரே ஒத்துக்கொள்கிறார். அவருடைய இந்தக் கணக்கீட்டையே நாம் முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படியே வைத்துக் கொண்டாலும் இந்தக் கழிவை என்ன செய்வது? கழிவுகளைத் தானே எடுத்துக் கொள்கிறேன் என்று ஏற்கனவே வாக்குறுதி அளித்திருந்த ரஷ்யா ஏன் திடீரெனப் பின்வாங்கியது?

பயந்தால் வரலாற்றுச் சதனைகளைப் படைக்க முடியாது என்கிறார் கலாம். நில நடுக்கம் வந்து வீழ்த்தினால் என்ன செய்வது என்று பயந்திருந்தால் ராஜராஜ சோழன் பிருகதீச்வரப் பெருவுடையார் கோவிலைக் கட்டியிருப்பானா எனச் சொல்லிப் புன்னகைக்கிறார். கதிரியக்க ஆய்வினூடாக கதிர்வீச்சுக்குப் பலியான மேடம் க்யூரியை நினைவுகூர்ந்து கண்கலங்குகிறார். தமிழ்நாட்டுக்கு மிகப் பெரிய அளவில் இதன் மூலம் மின்சாரம் கிடைக்கப் போகிறது எனச் சொல்லிக் கைதட்டிக் குதூகலிக்கிறார். ஆகா ஒரு நாடகமன்றோ நடக்குது.

அப்துல் கலாம் மிகப் பெரியவர். நமது நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்தவர். கறை படாத கரங்களுக்குச் சொந்தமானவர். எளிமைக்குப் பெயர் போனவர். அவசரப்பட்டு நான் ஏதும் அவரைப்பற்றிச் சொல்லிவிடக் கூடாது. ஆனால் இதெல்லாம் என்ன ஒப்பீடுகள் சார்? வரலாற்றுச் சாதனைக்காக எத்தனையோ ஆயிரம் பேர்களை நசுக்கிப் பிழிந்த உதிரத்தால் கட்டப்பட்டத்துதான் தஞ்சைப் பெரிய கோவில். அதன் பின்னிருந்த அரசியலை வரலாற்றாசிரியர்கள் இனங்கண்டுள்ளனர். இதையெல்லாம் கூட விட்டுவிடுவோம். அப்படியே ஒரு கலைச் சின்னம் நில நடுக்கத்தால் அழிந்துபடுகிறதென்றே வைத்துக் கொள்வோம். அணு உலை வெடித்துச் சிதறுவதும் வரலாற்றுச் சின்னமொன்று பொடிந்து வீழ்வதும் இரண்டும் ஒன்றுதானா? ஒரு வரலாற்றுச் சின்னம் அழிவது வேதனைகுரிய ஒன்றுதான். ஆனால் அந்த அழிவு வரலாற்றுச் சின்னம் ஒன்றின் அழிவோடு முடிந்து விடுகிறது. மீண்டும் கூட அதை நாம் கட்டிவிடலாம். ஶ்ரீரங்கம் கோவிற் கோபுரம் கட்டப்படவில்லையா? ஆனால் ஒரு அணு உலை அழிந்தால் எத்தனை ஆயிரம் உயிர்கள் அத்தோடு சேர்ந்தழியும்? எத்தனை ஆயிரம் ஆண்டுகள் அதன் பலனை மனிதகுலம் சுமக்க வேண்டியிருக்கும்? ஒரு கலைச் சின்னத்தின் பயன்பாடு அது நிலைத்திருக்கும் வரை தொடரும். ஆனால் உங்கள் அணு உலையின் ஆயுள் எத்தனை ஆண்டுகள் அய்யா? அதன் பயன்பாடு ஓய்ந்தபின் இன்னும் எத்தனை ஆண்டுகள் அதன் சுமையை எந்தப் பயன்பாடும் இல்லாமல் நமது சந்ததிகள் சுமக்க வேண்டும் அய்யா?

26 ஆண்டுகளுக்கு முன் “பிரமிடுகளும் அணு உலைகளும்” என்றொரு கட்டுரை எழுதியிருந்தேன (பார்க்க: எனது ‘தேவையா இந்த அணு உலைகள்?’ நூலின் முதல் கட்டுரை [amarx.org]). அதில்,

“எகிப்திய பரோவாக்கள் பிரமிடுகளைக் கட்டினார்கள். இராசராச  சோழர்கள் பெரிய கோவில்களை எழுப்பினார்கள். பிரமிடுகளும் பெரிய கோவில்களும் பண்டைய கலைஞர்களின் மகத்தான சாதனைகள் மட்டுமல்ல. அன்றைய ஆட்சியாளர்களின் பிரதான வெளிப்பாடுகள் மட்டுமல்ல. அன்றைய ஆட்சியை நிலை நிறுத்தும் ஆதார அம்சங்களாகவும் அவையே விளங்கின………இன்றைய இந்திராக்களும் ராஜீவ்களும் பரோவாக்களிலிருந்தும் இராசராசன்களிலிருந்தும் அவ்வளவு வேறுபட்டவர்களல்ல…..ஆனால் கவிஞர் இன்குலாப் சொன்னது போல இடையில் ஆயிரம் ஆண்டுகள் தான் ஓடிவிட்டன. இன்றும் பிரமிடுகளையும் பெரிய கோவில்களையும் கட்டிக் கொண்டிருக்க முடியாது. அதனாலென்ன? ஆர்யபட்டா, கலர் டெலிவிஷன், அணு உலை…இவை இல்லையா? வாருங்கள் இவற்றோடு 21ம் நூற்றாண்டுக்குள் ராஜீவைப் பின்தொடர்வோம்”

என்று குறிப்பிட்டிருந்தேன். என்னுடைய அன்றைய சொற்களுக்கு எத்தனை சரியான நிரூபணமாக அமைந்துள்ளது பார்த்தீர்களா இன்றைய அப்துல் கலாமின் உரை. எகிப்திய பரோவா, இராசராச சோழன், இந்திரா, ராஜீவ், மன்மோகன், இந்த வரிசையை நியாயப்படுத்தும் அப்துல் கலாம்…ஆகா, என்ன ஒரு தொடர்ச்சி.

இரு மாதங்களுக்கு முன், ஐ. நா மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பும்போது விமானத்திலிருந்தவாறே மன்மோகன் அளித்த பேட்டியில்  இன்றைய பொருளாதாரச் சிக்கலைப் பற்றிச் சொல்ல வரும்போது, “எல்லாம் உலகமயத்தின் பின் விளைவுகள்” என அலுத்துக் கொண்டதைப் படித்திருப்பீர்கள். இந்தியப் பொருளாதாரத்தையும் சந்தையையும் உலகமயத்திற்குத் திறந்து விட்டவரென மார் தட்டிக் கொண்ட மன்மோகன் சிக்கல் வரும்போது எல்லாம் உலகமயத்தின் விளைவு எனச் சொல்லிக் கை கழுவுவதை நாம் கவனிக்க வேண்டும். நாளைக்கு ஏதேனும் ஒரு அணு உலை வெடித்துச் சிதறினால், புவி அதிர்ச்சியும் சுனாமியும் ஒன்றாக வரும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றோ, அணு உலை என்றால் எப்போதாவது ஒரு முறை இப்படி நடக்கத்தான் செய்யும் என்றோ அப்போதைக்கு ஏதாவது சொல்லி இவர்கள் நழுவத்தான் போகிறார்கள்.

இந்தியாவை வலுவாக்குவது என்பது குறித்து இரு வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. ரொம்பவும் புரட்சிகரமான கருத்துக்களை நான் இதில் சேர்க்கவில்லை. உலக அளவில் ஏற்றுக்கொள்ளப் பட்ட மைய நீரோட்டக் கருத்துக்களிலேயே இரு ஒன்றுக்கொன்று எதிரான நிலைபாடுகள் உள்ளன. அவற்றைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்களாக நாம் இங்கே இருவரை அடையாளம் காணலாம்.

ஒருவர் அப்துல் கலாம். இவரைப் பொருத்த மட்டில் இந்தியாவை வலுவாக்குவது என்பது ஏவுகணைகள், துணைக் கோள்கள், அணு குண்டுகள், அணு உலைகள், உயர் தொழில் நுட்பங்கள், நேநோ டெக்னாலஜி, நால் வழிச் சாலைகள் முதலான அகக் கட்டுமானங்கள் ஆகியவற்றை உருவாக்குதல் என்கிற மட்டத்தில் அமைகிறது.

மற்றவர் அமார்த்ய சென். இவரது அணுகல் முறை முற்றிலும் எதிரானது. இது கீழிருந்து வலுப்படுத்தும் அணுகல் முறை. எல்லோருக்கும் சிறந்த கல்வி, சிறந்த மருத்துவ நலம், வேலை வாய்ப்பு ஆகியவற்றை அளித்து வலுமிக்க குடிமக்களை உருவாக்கி அதன் மூலம் வலுவான நாட்டை உருவாக்குவது என்பது இவரது அணுகல் முறை.

அப்துல் கலாம் கூடங்குளப் பிரச்சினையில் என்ன பேசுவார் என எதிர்பார்த்தோமோ அதைத்தான் அவர் பேசியுள்ளார். இதில் வியப்பேதுமில்லை.

Tail Piece: அப்துல் கலாம் அவர்களை ‘நல்ல முஸ்லிம்’ என்று சொன்னேன். எந்த அளவிற்கு நல்ல முஸ்லிம் என்றால் குடியரசுத் தலைவர் பதவிக்கு பா.ஜ.க வேட்பாளராகத் தெர்வு செய்யப்படும் அளவிற்கு ‘நல்ல முஸ்லிம்’. இவருக்கு முன் அந்தப் பதவியில் இருந்த கே. ஆர். நாராயணன் அவர்கள் தான் பதவியில் இருந்த காலம் வரை பா.ஜ.க அரசு முன்மொழிந்ததை ஏற்று பாராளுமன்றத்தில் சாவர்கரின் படத்தைத் திறக்கச் சம்மதிக்கவில்லை. கலாம் அந்தப் பதவியில் அமர்ந்தவுடன் கிஞ்சித்தும் தயக்கமின்றி  காந்தி படத்திற்கு எதிரில் சாவர்கரின் படத்தைத் திறந்து வைத்தார். அந்த அளவிற்கு கலாம் ஒரு ‘நல்ல முஸ்லிம்’.
அ. மார்க்ஸ்


Time

Total Page Views

About this blog

நம்மைச்சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகள் , அதன் பின்னணியிலிருக்கும் அரசியல் , அந்த நிகழ்வை நகர்த்தும் அடிப்படை,அதற்கான தேவை, என நாங்கள் புரிந்துகொண்டதை , நாங்களே பகிர்ந்து கொள்ளவும் , நாங்கள் பகிர்ந்து கொண்டதை , உங்களோடு பகிர்ந்து கொள்ளவுமே இந்தத் தளம்.
Powered by Blogger.

Followers

Blog Archive