அன்றாட வாழ்வில், மனிதன் எடுக்கும் முடிவுகள் அனைத்தும், அதுநாள்வரை அவன்பெற்ற தகவல்கள் மற்றும் அவனது அனுபவங்களின் அடிப்படியிலேயே அமைகின்றன. மனிதன், அவன்வாழ்நாளின் அடுத்தடுத்த நிமிடங்களில் புதுப்புது அனுபவங்களை பெறுகிறான். அதுபோல், வெகுதூரத்தில் ஒலிக்கும் வானொலியின் செய்திச்சுருக்கமும், எதேச்சையாக பார்க்கநேர்ந்த செய்திதொலைக்காட்சியின் அன்றைய முக்கிய செய்திகளும், டீயின் சூட்டை போக்குவதற்கு, கண்ணாடி டம்ப்ளரை அலசும் அந்த குறுகிய நேரத்தில், அனிச்சையாக, பக்கத்தில் அமர்ந்திருப்பவர் படித்துக்கொண்டிருக்கும் செய்திதாளில் கண்கள் மேயும்போது, மனதில்பதியும் செய்திகளும், மனிதனுக்கு அவன் விருப்பம் இல்லாமலேயே தகவல்களை கொண்டுசேர்க்கின்றன. ஆகவே, புதிய அனுபவமும், புதிய தகவல்களும் மனிதனின் மனதில், அடுத்தடுத்த நொடிகளில் ஏற்படும் வெற்றிடங்களை நிரப்பிக்கொண்டேயிருக்கின்றன. அனுபவமும், தகவல்களும் முடிவுகளை தீர்மானிக்கும் என்பதால், மனிதன் பெரும் தவாறான அல்லது ஒருசார்பான தகவல்கள், அன்றாடவாழ்வில் அவனெடுக்கும் முடிவை நேரடியாக பாதிக்கின்றன.
உதாரணத்திற்கு, அப்துல்கலாம் குறித்து ஊடகங்கள் வடித்துதந்த பிம்பங்களும், "அணுசக்தி இந்தியாவை வல்லரசாக மாற்றும்" என்ற கலாமின் போதனைகளும், பல இளைஞர்கள், அணுசக்தியின் அபாயங்கள் குறித்து யோசிப்பதைகூட தடுக்கின்றன. அப்துல்கலாம் குறித்து அவன் மூலையில் பதிந்த செய்திகள், அணுசக்தி குறித்து அவனெடுக்கும் முடிவை பாதிக்கின்றன. இடிந்தகரையிலுள்ள குழந்தைகளின் நிலைகுறித்து அவனுக்கு கொடுக்கப்பட்ட செய்திகளை விட, அப்துல்கலாம் சந்தித்த, உரையாடிய, கை குளுக்கிய குழந்தைகள் பற்றிய செய்திகளே அவனை அதிகம் சென்றடைந்துள்ளன. ஆகவே, அவன்பெற்ற தகவல் மற்றும் அனுபவங்களின் வெளிப்பாடாகவே, அணுசக்தி தேவை என்ற முடிவுக்குவருகிறான்.
செய்தியாளர்களாய், நம்முடைய அன்றாடபணியின் முக்கியத்துவத்தை உணர்த்த, இதுவே ஒரு சிறந்த உதாரணம். மனிதனின் முடிவுகள் செயல்பாடாக மாறுகின்றன. செயல்பாடுகளை தொகுப்பு, விளைவுகளை உருவாக்குகின்றன. அந்த விளைவுகள், மாற்றத்தை நோக்கிய பயணத்தின் வேகத்தை நிர்ணயிக்கின்றன. ஆகவே, நாம்தரும் செய்திகள், மக்கள் எடுக்கவேண்டிய முடிவுகளை நேரடியாக பாதிக்கின்றன என்பதை உணர்ந்து, செய்திகளின் முக்கியத்துவம் மற்றும் சமூக தேவை ஆகியவற்றை கருத்தில்கொண்டு, அச்செய்திகளை மக்களுக்கு புரியும் வகையில் எளிமைபடுத்தி வழங்கவேண்டியது, நம் அனைவரின் சமூக கடமையாகும்.
நமது கடமையை நாம் சிறப்பாக செய்ய, நமக்குள் சில புரிதல்கள் எட்டப்படவேண்டிய அவசியம் உள்ளது. அன்றாட நிகழ்வுகள், அரசின் முடிவுகள் மற்றும் மக்களின் எதிர்வினைகள் குறித்து நம்மிடையே பல்வேறு கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், பல்வேறு கருத்துக்கள் முட்டி மோதுவது, "ஒரு புதிய வழியை" கண்டுபிடிப்பதில் முடியும் என்பதில், நமக்குள் கருத்துவேறுபாடு இல்லாமல் இருப்பதே, புதியதை கண்டுபிடிக்கும் முயற்சியில் நாம் அனைவரும் ஒருங்கிணைவோம். நம்முடைய தேடல்கள், நம்மை ஒருங்கிணைப்பதில் முடியட்டும்.
சமீபகாலங்களில் அரசின் செயல்பாடுகளும், புதிய முடிவுகளும், மாற்றத்தை வேண்டிநிற்கும் மக்களின் அணிவகுப்பை உயரச்செய்து வருகின்றன. இந்த அணிவகுப்பின் பின்வரிசையில், தினந்தோறும் இலட்சக்கணக்கான மக்கள் சேர்ந்துகொண்டே வருகின்றனர். "மாற்றம் என்பதே மாறாது " என கூறுகிறது தத்துவம். அந்த மாற்றத்தை உருவாக்கப்போகும் மக்களுக்கு, தேவையான செய்திகளை கொண்டுசேர்ப்பதன் மூலம், மாற்றம் என்ற வினைக்கு, நாம் வினையூக்கியாக செயல்படவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். ஏனென்றால், அந்த அணிவகுப்பின் பின்வரிசையில் நாமும் நின்றுகொண்டிருக்கின்றோம்....
ஒருங்கிணைவுக்கான கருத்து பகிர்வு....
0 comments:
Post a Comment