மதுப் பழக்கம்
மதுப் பழக்கம் - அதிகரிக்கும் விழுக்காடு
தமிழகத்தில் தெருக்கு தெரு திறந்துள்ள மதுக்கடைகளால், படித்த இளைஞர்களிடையே மதுப்பழக்கம் அதிகரித்துள்ளது. போதைக்கு அடிமையாகும் இவர்களுக்கு அளிக்கப்படும் கொடுமையான சிகிச்சைகளால், உயிரிழப்பும் நேரிடுகிறது. முழு மது விலக்கு மூலம் மட்டுமே, மதுவால் சீரழியும் தமிழகத்தை வீழ்ச்சியில் இருந்து காப்பாற்ற முடியும்.
விடிந்ததும் அரசு மதுக்கடைகளில் நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள்! மதுவை அருந்தி விட்டு சுயநினைவு இழந்து சாலை ஓரங்களில் வீழ்ந்து கிடக்கும் கூலித் தொழிலாளிகள் !! மாநிலத்தில் ஆறாக ஓடும் மது கலாச்சாரத்தால், படித்த இளைஞர்கள் இடையே, அதிகரித்து வரும் மதுப்பழக்கம்.
இப்படி தமிழகம் தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில், அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், ஆண்டுக்கு 2 ஆயிரம் இளைஞர்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பொது இடங்களில் மதுக்கடைகளை திறப்பது தொடர்பாக விதிகள் இருந்தாலும், அவை காற்றில் பறக்க விடப்படுவதால், பெண்கள் படும் வேதனைகளுக்கு அளவே இல்லை. சமிபத்தில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிடுகிறேன்.
மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு சில தனியார் நடுவங்கள் சிகிச்சை அளிக்கின்றன. ஆனால், சிகிச்சை என்ற பெயரில் போதைக்கு அடிமையானவர்கள் இங்கு கடுமை தாக்கப்படுகின்றனர். இதனால் சிலர் உயிரிழக்கும் ஆபத்தும் ஏற்படுகிறது. மேலும், பல ஆண்டுகள் மதுப்பழக்கம் வீட்டின் அமைதியை சீர்குலைத்து விடுகிறது.
சென்னை கின்டியைச் சேர்ந்தவர் முகமதுரபிஃக். இவர் நீன்ட நாட்களாக மதுவிற்கு அடிமையாகி தன் வாழ்வை தொலைத்துவிட்ட நிலையில் உயிரையும் பறிகொடுக்கும் அபாயத்தில் இருந்தார். மதுப்பழக்கத்தால் இவர் மட்டுமின்றி மனைவி மற்றும் குழந்தைகளும் பெரும் அவதிப்பட்டுவந்தனர். குடும்பம் படும் கஷ்டத்தைப் பார்த்து மது பழக்கத்தை நிறுத்திவிடலாம் என பல முறை முயற்சி செய்தும் பலன் இல்லை. இந்நிலையில் நண்பர் ஒருவர் மூலம் மறுவாழ்வு மையம் பற்றி அறிந்து அங்கு சென்று போதைப்பழக்கத்தில் இருந்து விடுபட சிகிச்சை மேற்கொள்ள முடிவுசெய்து அந்த மையத்தில் இனைந்தார்.
அங்கு சிகிச்சை என்ற பெயரில் மனிதர்களை மாட்டையடிப்பது போல் அடிப்பது, இருட்டு அறையில் அடைத்து வைப்பது, உணவில்லாமல் பட்டினி போடுவது என முற்றிலும் மனித உரிமைகளுக்க எதிரான முறையில் நோயாளிகள் நடத்தப்பட்டனர். அவர்கள் மேற்கொண்ட சிகிச்சையை தாங்கமுடியாத முகமது ரபிஃக் ஒரு வாரத்தில் பரிதாபமாக உயிரிலந்தார்.
மனம் திருந்தி மறுவாழ்வு வாழ நினைத்து சிகிச்சைக்கு சென்றவர் மரணித்து பிணமாக வீடு திரும்பினார். அவரின் மனைவியும் குழந்தைகளும் இப்போது நடுத்தெருவில் நிற்கின்றனர்.
தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என சமூக நலனில் அக்கறையுள்ள பலர், தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இதனை ஏனோ அரசு காதில் வாங்கிக் கொள்வதே இல்லை. வருவாயை மட்டுமே கவனத்தில் கொள்ளாமல் தமிழகத்தின் எதிர்காலமான, இளைஞர்களின் வாழ்வை கருத்தில் கொண்டு மதுக்கடைகளை மூட அரசு முன்வர வேண்டும். இதன்மூலம் மட்டுமே நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்.
மக்கள் ஆனந்த் குமார்