அண்ணன் பராக்! பராக்! பராக்!


              கொடும் செயலுக்கு எதிரான நாள் என்று ஐ.நா அவையால் அறிவிக்கப்பட்டுள்ள ஜூன் இருபத்து ஆறாம் நாள், ஞயிற்றுக்கிழமை மாலை, சென்னை மெரினா கடற்க்கரையில், சிங்கள இனவெறி அரசால், இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்ட ஈழ தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்கு "மே - பதினேழு" இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. (பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டிருந்தாலும், இந்த நிகழ்வை நடத்தியவர்கள் மே -பதினேழு இயக்கத்தினரே). மே -பதினேழு இயக்கத்தின் தலைவர் திருமுருகனிடம், நிகழ்வுக்கு சிலநாட்கள் முன் நாங்கள் பேசியபோது, நிகழ்வில் ஒரு லட்சம் பேர் கூடுவார்கள் என்று அவர் கூறினார். அப்போது அதை மிகைப்படுத்தல் என்று நாங்கள் நினைத்தாலும், நிகழ்வுக்கு வந்த கூட்டத்தை பார்த்தபின், அதுவொன்றும் அவ்வளவு மிகைப்படுத்தல் அல்ல என்று நாங்கள் விளங்கிக்கொண்டோம்.
நிகழ்வு மாலை ஐந்து மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கபட்டிருந்தாலும், மதியம் இரண்டு மணி முதலே மக்கள் கூட தொடங்கி விட்டனர். நேரம் நெருங்க நெருங்க மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கவே, தோழர்கள், மக்களை ஒழுங்கு படுத்தி ஓர் இடத்தில் உட்கார வைப்பதற்குள் பெரும் பாடு பட்டுவிட்டனர். உணர்வு வயப்பட்ட கூட்டத்தினர், தங்கள் கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பத்தொடங்கினர். கடற்கரைக்கு காற்றுவாங்க வந்த மக்களில் பலரும் கூட்டத்தோடு கூட்டமாக கலந்து விட்டனர். 

நேரம் செல்ல செல்ல, தலைவர்கள்(??) ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். அரைவட்டமாக அமர்ந்திருந்த மக்கள் கூட்டத்தின் ஒரு மூலையில், முக்கியமான நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்குதான் தலைவர்களும்(??) அமர்ந்திருந்தனர். அப்போதுதான் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானும் வந்தார். நிகழ்விற்கு, பெரும் கூட்டத்தோடு(????) வந்த சீமான், நேராக தலைவர்கள்(??) அமர்ந்திருக்கும் இடத்திற்கு செல்லாமல், தான் வந்திருப்பதை எல்லோருக்கும் தெரிவிக்கவோ, என்னவோ, அமர்ந்திருந்த மக்கள் கூடத்தின் ஒருமுனையில் இருந்து ஊர்வலமாக நடக்க தொடங்கினார். 

சீமானுடன் வந்திருந்தவர்கள்(????), அண்ணனை பாதுகாக்கிறோம் என்ற பெயரில், கொஞ்சமும் கூச்சப்படாமல், அமர்ந்திருந்த மக்கள் மீது ஏறி நடக்க ஆரம்பித்தனர். மிதிபட்ட மக்கள், அவர்களை திட்டக்கூட முடியாமல் அமர்ந்திருக்க, அந்த கூட்டம் வழக்கறிஞர்கள் அமர்ந்திருந்த இடத்தை அடைந்தது. "ஹே! அண்ணனை தொடாதே!, ஹே! அண்ணனுக்கு வழிவிடு!" என்று கூட்டத்தினரை மிரட்டிக்கொண்டும், மிதித்துக்கொண்டும் வந்தவர்கள், பெண் வழக்கறிஞர் ஒருவரின் காலை மிதித்து விட்டனர். இதை எதிர்த்து கேள்வி கேட்ட அந்த பெண்ணை, "உனக்கு பாதுகாப்பா இருக்கணும் என்று நினைத்தால் ஏன் இங்கு வந்தாய்? பெண்ணாய் அடக்கமாய் வீட்டில் இருந்திருக்க வேண்டியதுதானே" என்று ஏளனமாய் பேசி உள்ளனர் சீமானின் சிஷ்யன்கள்(????). வெகுண்டெழுந்த நம் பெண் வழக்கறிஞர், "பெண் விடுதலையை வாய்கிழிய பேசும் உங்கள் அமைப்பில் பெண்களை இப்படிதான் நடத்துவீர்களா? நீங்கள் எல்லாம் தோழர்களா? நீங்கள் அணிந்திருக்கும் பெரியார் டி-ஷர்ட்டை அவிழ்த்து எறியுன்கடா" என்று திட்டி தீர்த்துள்ளார். 

இதன்பிறகும் கொஞ்சமும் கலக்கமடையாத அந்த கூட்டம், தலைவர்கள்(??) இருந்த பகுதிக்குள் அதே வேகத்துடன் நுழைந்தது. முன்னே நின்றவர்களை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தவர்கள், பின்னே இருந்தவர்களை தள்ளிவிட, அவர்களில் ஒருவர், தலைவர்(??) ஒருவரின் மீது போய் விழுந்தார். இதைக்கண்டு வெகுண்டெழுந்த மற்றொரு தலைவர்(??), சீமானை பார்த்து "சீமான், உன் ஆட்களை ஒழுங்கு படுத்து" என்று கோபமாக கூறினார். அதை பெரிதும் பொருட்படுத்தாத சீமான், பெயருக்காக தன் கூட்டத்தை(????) ஒருமுறை திரும்பி பார்த்து பின்னர் அமர்ந்து கொண்டார். 

"ஹே! அண்ணனை தொடாதே!, ஹே! அண்ணனுக்கு வழிவிடு!" என்ற சப்தம் சீமான், நிகழ்விலிருந்து கிளம்பும் வரை கேட்டுக்கொண்டே இருந்தது. அதன் பிறகு, யார் எல்லாம் மிதிபட்டார்கள் என்பதை கவனிக்கும் முன், இருள் சூழ தொடங்கி விட்டது. மெழுகுவர்த்தியை ஏந்திய மக்கள், நிகழ்வின் இறுதியில் நிகழ்த்தப்பட்ட நாடகத்தை கண்டு கழித்துவிட்டு நகர தொடங்கினர். 

விழா அமைப்பு தோழர்கள், மக்கள் விட்டெறிந்து சென்ற குப்பைகளை மிகவும் பொறுப்புடன் அப்புற படுத்திக்கொண்டு இருந்தனர்.
_________

???? = அள்ளக்கை. 
?? = எனப்படுபவர்கள்.
__________

அசீப்.

Time

Total Page Views

About this blog

நம்மைச்சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகள் , அதன் பின்னணியிலிருக்கும் அரசியல் , அந்த நிகழ்வை நகர்த்தும் அடிப்படை,அதற்கான தேவை, என நாங்கள் புரிந்துகொண்டதை , நாங்களே பகிர்ந்து கொள்ளவும் , நாங்கள் பகிர்ந்து கொண்டதை , உங்களோடு பகிர்ந்து கொள்ளவுமே இந்தத் தளம்.
Powered by Blogger.

Followers

Blog Archive