தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல், பணத்துக்காக ஓட்டுக்கள் விற்கப்படுவதை தடுக்கவும் வழக்கமாக நடைபெரும் தேர்தல் திருவிழா கலாச்சாரத்தை மாற்றும் நோக்கில் அடுக்கடுக்கான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தவர்! வாக்களர்களுக்கு பணம், மது, மற்றும் பரிசுப்பொருட்களை கொடுக்கவிடாமலும் தேர்தல் பிரசாரத்துக்காக அதிக செலவு செய்யவிடாமலும் வேட்பாளர்களை திக்குமுக்காட செய்தவர்!
அவர் வேறு யாருமல்ல? தமிழகத்தின் தற்போதைய கதாநாயகனாக பத்திரிகைகளால் வருணிக்கப்படும் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார்தான்!
அரசு அமைப்புகளின் சட்ட, திட்டங்கள் மற்றும் விதிமுறைகளை சரியான முறையில் அமல்படுத்தும் பொறுப்பு அதிகாரியின் கையில்தான் இருக்கிறது. அதுபோல கடுமையான தேர்தல் விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்தி மிகவும் தைரியத்துடன் செயல்படுத்தியதற்காக பொதுமக்கள் மற்றும் நடுநிலையாளர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளார் பிரவீன்குமார்.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அவர் கடந்த ஆகஸ்ட் முதல் தமிழகத்தில் பணியாற்றி வருகிறார். பணியில் சேர்ந்த மிக குறுகிய காலத்திலேயே தமிழை பேசவும் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டார். இதற்கு முன் தேர்தல் அதிகாரியாக இருந்த நரேஷ் குப்தாவை போலவே மிகவும் எளிமையும் அமைதியான சுபாவமும் கொண்டவர். புன்சிரிப்புக்கு சொந்தக்காரர். அதிகாரிகளை கடிந்துகொள்ளாமல் அரவணைத்து செல்பவர். மிகவும் கெடுபிடியாக நடந்துகொண்டதற்காக அரசியல் கட்சியினரின் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானவர் பிரவீன். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனக்கு வழங்கப்பட்ட பணியை நேர்மையாகவும் செவ்வனே செய்து தமிழக சட்டப்பேரவை தேர்தலை அமைதியாகவும் நேர்மையாகவும் நடத்தி முடித்திருக்கிறார். தமிழக தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக 78 சதவீத வாக்குகள் பதிவாக மூல கர்த்தாவாக இருந்து ஒரு சாதனை படைத்திருக்கிறார். அது மட்டுமின்றி பணப்பட்டுவாட தொடர்பாக கட்சியினர் மீது பதிவான வழக்குகளில் என்பத்து ஐந்து சதவீத வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய பணிகளை கச்சிதமாக செய்து முடித்த பிரவீன் எவ்வித ஆரவாரமின்றி கடந்த 11ம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, மக்களின் உறுதுணையுடன் அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்புடன் உங்களின் உதவியுடன் வெற்றிகரமாக இப்பணிகளை வெற்றிகரமாக செய்ய முடிந்தது என்று மிகவும் அடக்கமாக பதில் அளித்தார். இது என் கடைசி பேட்டி என்று கூறிவிட்டு விடைபெற்றுக்கொண்டார். பின்னர் வெளியான வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக அமோக வெற்றிபெற்றது. தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளும் ஆட்சிமாற்றத்திற்கு ஒரு காரணமாகிவிட்டது. கடந்த மார்ச் முதல் மே வரை ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த அவர் இந்த மூன்று மாத காலத்தில் முதல்வராக தமிழகத்தை ஆட்சி செய்து இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இந்த 2011 ம் ஆண்டு தேர்தல் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. எது எப்படியோ வரும் காலங்கழிலும் இதே போன்றதொரு தேர்தல் தமிழகத்திலும் ஏன் நாடு முழுவதிலும் நடைபெற வேண்டும் என்பதே மக்களின் மிகுந்த எதிர்பார்ப்பு.
இந்நிலையில், அதிகாரி பிரவீன் பதினாறாம் தேதி ஜெயலலிதா தலைமையில் சென்னை பல்கலைகழகத்தில் நடந்த புதிய அரசு பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றார். இது, அவர் தேர்தலில் அதிமுகவுக்கு சாதகமாக நடந்துகொண்டாரோ என்று மக்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.