ராஜீவ் கொலைவழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள்ள முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளனுக்கு தூக்குதண்டனையை உறுதிசெய்துள்ளது இந்திய அரசு. இதை தொடர்ந்து அவர்கள் எந்நேரமும் தூக்கிலிடபடலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. கடந்த இருபது வருடங்களாக, தன் மகனின் விடுதலைக்காக தன்னந்தனியாக போராடிவரும், பேரறிவாளனின் தாய் அற்புதம்மாவை இச்செய்தி தவிடுபொடியாக்கி உள்ளது.
இன்று, செய்தியாளர்களை சந்தித்த அந்த தாய், தன் மகனை காப்பாற்ற, ஏதேனும் செய்யுங்களேன் என்று கதறி அழுதது, அனைவரையும் கண்கலங்க செய்துவிட்டது. இருபது வருடங்களுக்கு முன், விசாரணை என்று கூறி தன் மகன் அழைத்து செல்லப்பட்ட அந்தநாளை நினைவு கூர்ந்த அந்த தாய், அன்று முதல் இன்றுவரை, நம் காவல்துறையும் நீதித்துறையும் ஒருவரை மற்றவர் மிஞ்சும் வகையில், மாறி மாறி நடத்திவரும் நாடகத்தை பட்டியலிட்டு கூறினார்.
தானே முன்வந்து விசாரணைக்கு சென்ற பேரறிவாளனை, கண்காணாத இடத்துக்கு அழைத்து சென்ற சி.பி.ஐ, ஒருவாரம் கழித்து, தலைமறைவாக இருந்தவரை தேடி கண்டுபிடித்ததாக கூறிய முதல் பொய் தொடங்கி தற்போது வரை அனைவராலும் நம்பப்பட்டுவரும் பொய்களையும் பட்டியலிட்டு கூறினார். தன் மகனின் வழக்கு விசாரணையில் நடைபெற்ற அநியாயங்களை நேரில் பார்த்த அந்த தாய், 'தடா' கருப்பு சட்டத்தின் கொடுமைகளை அதன்மூலம் விளக்கினார். தன் தரப்பு நியாயங்களை எடுத்துவைக்க கூட அனுமதி மறுக்கும் அந்த கொடும் சட்டத்தினால், தன் மகன் செய்யாத குற்றத்திற்கு, இருபது வருடங்களாக சிறைதண்டனை அனுபவித்து வருவதை கூறி அழுதார் அந்த தாய். மகனுடன் சேர்ந்து, இருபது வருடங்களாக தானும் தண்டனை அனுபவித்து வருவதாக அவர் கூறினார். அரசின் கோரபற்களில் சிக்கி, முழுவதும் மென்று துப்பப்பட்ட அந்த தாய், வேறு வழி ஏதும் இல்லாமல், தன் மகனுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குதண்டனையை நிறுத்த, முதல்வர் ஜெயலலிதா முன்வரவேண்டும் என்று பணிந்து கேட்டுகொண்டார். பேரறிவாளன் மட்டுமல்லாமல் முருகனுக்கும், சாந்தனுக்கும் உறுதிசெய்யப்பட்டுள்ள தூக்கு தண்டனையும் ரத்து செய்யப்படவேண்டும் என்று அவர் கேட்டுகொண்டார்.
இத்தனை செய்தியாளர்கள், வழக்கறிஞர்கள், மனிதஉரிமை ஆர்வலர்கள் மற்றும் சமூக சேவகர்கள் இருந்தும், இருபது வருடங்கள் கடந்தும், என் மகன் தரப்பு நியாயம், பெருவாரியான மக்களிடம் சென்றடையாதது குறித்து வருந்திக்கொண்டார் அந்த தாய். தன்மகன் குற்றம் எதுவும் செய்யவில்லை என்று அடித்துகூறும் அற்புதம்மா(அறிவம்மா), இறுதியாக, பேரறிவாளன் சிறையிலிருந்து எழுதிய புத்தகத்தை அனைவரும் படிக்கும்படி வேண்டிக்கொண்டார் .
என்ன செய்ய போகின்றோம்...?