சமச்சீர் கல்வி தேவையா?


ஜெயலலிதா முதல்வர் ஆனவுடன், "இந்தமுறையாவது அம்மா, தடாலடியான முடிவுகள் எதுவும் எடுக்காமல் இருப்பாரா?" என்பதே பெரும்பாலானவர்கள் பேசக்கேட்டோம். அப்படி கேட்டவர்களின் மூக்கை உடைப்பதற்காகவோ என்னவோ, எடுத்த எடுப்பிலேயே, எதைபற்றியும் யோசிக்காமல், யாரைபற்றியும் கவலைபடாமல் தினந்தோறும் எதாவது ஒரு அதிர்ச்சி தரும் அறிவிப்புகளை வெளிட்டு கொண்டிருக்கிறார் நம் முதல்வர்.

இதில், கிடப்பில் போடப்பட்ட புதிய தலைமைச்செயலகம், மறைமுகமாக, மூடுவிழா கானபோவதாக அறிவிக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவை அடங்கும். இதுபோன்ற முடிவுகள் அரசின் பணத்தை வீணடிக்கும் செயல் என்ற அளவில், இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடியாக, பெரும் அளவுக்கு பாதிப்பு ஏற்படபோவதில்லை. ஆனால், சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்கபோவதாக அ.தி.மு.க அரசு எடுத்துள்ள முடிவு, இனிவரும் காலங்களில், ஜெயலிதாவின் அராஜக நடவடிக்கைகள், "டாப் டென்" பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கபோவது உறுதி. ஏனென்றால், இந்த முடிவு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் அந்த அளவுக்கு குழப்பத்தை உண்டாக்கி உள்ளது. 

தற்போது செயல்படுத்த போவதாக அறிவிக்கப்பட்ட, சமச்சீர் கல்வி என்பதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால், அரசு பள்ளியில், கிழிந்த சட்டையை அணிந்துகொண்டு, பசித்த வயிற்றுடன் இலவசமாக(இது அரசின் கடமை) படிக்கும் மாணவனும், தனியார் பள்ளியில் ஆயிரம் ஆயிரம் ரூபாய்களை செலவழித்து அணைத்து வசதிகளுடனும் படிக்கும் மாணவனும், ஒரே பாட திட்டத்தில் பயில்வதாகும். அதாவது, அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவன், கூட்டல் கழித்தல் விதிகளை கற்றுக் கொண்டிருக்கும்போது, தனியார் பள்ளியில் பயிலும் மாணவன், அதைவிட மேலான அல்ஜீப்ரா விதிகளை கற்றுகொண்டிருப்பது என்று இல்லாமல். அனைத்து பள்ளி மாணவர்களும் ஒரேவகையான பாடத்திட்டத்தில் பயிலும் வகையில் ஏற்படுத்தபட்ட திட்டம்தான் இந்த சமச்சீர் கல்விதிட்டம்.

நாம் ஏற்கனவே சொன்னதுபோல், கிழிந்த சட்டையை அணிந்துகொண்டு பணக்கார மாணவன் படிக்கும் பாடத்திட்டத்தை படிப்பதால் மட்டும், நம் ஏழை மாணவனுக்கு கல்வியில் சமத்துவம் கிடைத்து விட்டதாக நாம் கருத முடியாது. ஆனால், தற்போது இருந்துவரும் நான்கு வகையான(ஏற்ற, தாழ்வான) கல்வித்திட்டத்தை விட, இந்த சமச்சீர் கல்வி திட்டம் முற்போக்கான விஷயம் என்றவகையில் நாம் இதை ஆதரித்தே ஆகவேண்டும். கல்வியில் உண்மையான சமத்துவத்தை நிலைநாட்ட, எதையும் புரிந்துகொள்ளாமல், வெறுமனே மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் கல்விமுறையை மாற்றி, அறிவியல்பூர்வமான கல்விமுறையை உருவாக்க, ஆசிரியர் என்ற சர்வாதிகாரி(பெரும்பாலானோர்) கற்பிக்கும் பாடத்தை, எதிர்கேள்வி கேட்காமல் கவனிக்கும் அடிமை கல்விமுறையை மாற்றி, ஜனநாயக கல்விமுறையை உருவாக்க நடத்தப்பட்டுவரும் போராட்டத்தில் சமச்சீர் கல்விமுறையை அமுல்படுத்த வைப்பது ஒரு முக்கியமான மைல் கல் என்பதை நாம் உணரவேண்டும். 

சமச்சீர் கல்வி திட்டம் என்பது, ஏதோ செவ்வாய் கிரகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட திட்டம் என்பதை போல் பலர் யோசிக்கின்றனர். உண்மையில், தமிழ்நாட்டை தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் சமச்சீர் கல்விமுறை பலவருடங்களாக நடைமுறையில் உள்ளது. அப்படியென்றால், மற்ற மாநிலங்களில், மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என்று, பள்ளிகளில் பலவகைகள் கிடையாது, அதாவது ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு பாடத்திட்டம், அந்த பாடதிட்டத்திற்கு ஏற்றாற்போல் ஒவ்வொரு கட்டணம் என்றெல்லாம் கிடையாது. இந்த மாநிலங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் எல்லோரும் முட்டாள்களா? சமச்சீர் கல்வித்திட்டத்தை நடைமுறை படுத்துவதால், அவர்களின் கல்வித்திட்டம் சீரழிந்து விட்டதா? இல்லைதானே? அப்படியென்றால், இத்தனை நாளும் தமிழ்நாட்டில், இப்படிப்பட்ட வெவ்வேறு பாடத்திட்டங்களை கொண்ட பள்ளிகள், சிறந்த படிப்பை தருகிறேன் என்ற பெயரில், கல்வியை கேவலமாக வியாபாரம் செய்துவந்ததை நாம் பார்த்துகொண்டுதானே இருந்திருக்கிறோம்? 

கல்வியை வியாபாரிகளிடமிருந்து மீட்டெடுத்து, மெக்கானிக் கடைகளிலும், டீ கடைகளிலும், வனாந்தரங்களில் ஆடு மேய்த்துக் கொண்டும், தங்கள் எதிர்காலத்தை தொலைத்துகொண்டிருக்கும் நம் குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க, காலம் காலமாக நடத்தப்பட்டு வரும் நீண்ட போரட்டத்தில், சமச்சீர் கல்வி என்ற ஒரு சிறு கோரிக்கையை நிறைவேற்ற சம்மதித்தது தி.மு.க அரசு. பிஞ்சுகைகள் காய்த்துப்போக வேலை செய்யும் நம் குழந்தைகள் பற்றியோ, அவர்களை படிக்கவைக்க வழிதெரியாமல் தற்கொலை செய்துகொள்ளும் நமது தாய்மார்கள் பற்றியோ, கொஞ்சம்கூட கவலைபடாமல், கேவலம் அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக, அதோடுகூட, கல்வியை வியாபாரமாக்கி அதன்மூலம் கோடி கோடியாக சம்பாதிக்கும் திருட்டு கும்பலுக்கு ஆதரவாக, சமச்சீர் கல்வியை நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது அ.தி.மு.க அரசு.

இதைபற்றி கொஞ்சமும் கவலைகொள்ளாமல், அம்மாவின் தாளத்திற்கு தப்பாமல் ஆடிக்கொண்டு இருக்கின்றது தே.மு.தி.க என்ற, பெயரளவிலான எதிர்கட்சி. பொதுவுடைமை பேசிக்கொண்டு, தங்களை கம்யூனிஸ்ட்கள் என்று கூறிக்கொள்ளும், சி.பி.ஐ, சி.பி.எம் கட்சிகளும் கூட இதுகுறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை. இதனிடையே, சமச்சீர் கல்வி சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ள அரசு, அதன்மூலம் அடுத்த கல்வி ஆண்டில்கூட தாங்கள் விரும்பினால்தான் சமச்சீர் கல்வி திட்டத்தை செயல்படுத்துவோம் என்று மறைமுகமாக கூறியுள்ளது. அதாவது, இனிமேல் சமச்சீர் கல்வி திட்டம் வந்தால் வரலாம், வராமலும் போகலாம் என்ற நிலை உருவாகிஉள்ளது.

இனி இந்த அரசியல் கட்சிகளை நம்பி பயன் இல்லை. மக்கள் ஒருங்கிணைந்து சமச்சீர் கல்வியை நடைமுறை படுத்தவேண்டி நடத்தும் போராட்டமே ஆட்சியாளர்களை செவிசாய்க்க வைக்கும் என்பதை எல்லோரும் உணரவேண்டும். சமச்சீர் கல்வியை நடைமுறை படுத்த மக்கள் இயக்கத்தை கட்டி அமைப்பதும், அந்த இயக்கத்திற்க்கு அனைத்துதரப்பு மக்களின் ஆதரவையும் பெறுவதுமே இப்போது நம் முன் உள்ள கடமையாகும்.

நண்பர்களே! நமக்கு தெரிந்த வழிகளில், சமச்சீர் கல்வியின் முக்கியதுவத்தை அனைவரும் உணரும்படி செய்வோம்! நம் குழந்தைகளின் எதிர்காலத்தை ஒளிபெற செய்வோம்!

இனப்படுகொலை நினைவுநாள் நிகழ்வு

சிங்கள இனவெறி அரசினால், ஈழத்தமிழர்கள் இன படுகொலை செய்யப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு,   "மாற்றத்திற்கான செய்தியாளர்கள்"  நடத்திய புகைப்பட கண்காட்சி, மற்றும் கருத்து பகிர்வு நிகழ்வின் புகைப்பட தொகுப்பு.



சிங்கள இனவெறி அரசு நடத்திய, ரத்த வேட்டைக்கு ஆதாரமான புகைப்படங்கள்.
கருத்துபகிர்வு நிகழ்வில் வரவேற்ப்புரை: செய்தியாளர் விஜய்.

நிகழ்வின் தலைமை: செய்தியாளர் நெல்சன்.

உணர்வை வெளிப்படுத்தி, போராட்ட காலத்தில் இணைய வந்த நண்பர்கள்! 

ஈழ தமிழினத்தின் வரலாறு: செய்தியாளர் ஆனந்த்.

ஈழ தமிழினத்தின் வரலாறு: தோழர்  

இனப்படுகொலை: செய்தியாளர் ஜீவசகாப்தன். 

ஈழ தமிழினத்தின் வரலாறு: தோழர் வினோத்.

ஈழ தமிழினத்தின் வரலாறு: செய்தியாளர் தமிழரசன்.

உணர்வை உரசிப்பார்க்க கவிதை வாசிப்பு: செய்தியாளர் எழிலரசன்.

மானமுள்ள, மக்கள் செய்தியாளர் "லாசந்தா விக்கரமசிங்கே" பற்றி: செய்தியாளர் தனபாலன்.
என்ன செய்ய வேண்டும்?: செய்தியாளர் அசீப்.



ஆபரேஷன் - 17 நாள்!

        
         Standing Soldiers Clip Art
ஆட்சி பொறுப்பேற்ற பதினேழு நாட்களில், அம்மாவின் நேரடி கட்டளையின் கீழ் நடந்த, சில அதிரடி ஆபரேஷன்களை மக்களுக்கு நியாபகபடுத்த விரும்புகின்றோம்!

1 ஆபரேஷன் "செயின்ட் ஜார்ஜ் கோட்டை"
   செலவு - 1100 கோடி.
   
ஆங்கிலேயர் கோட்டைக்குள் இரவோடு இரவாக இறங்கிய அரசுத்துறை அதிகாரிகள், எதிரிகளுடனான (பூச்சி, புழுக்கள், ஒட்டடை) கடும் சண்டைக்கு பிறகு, "செம்மொழி தமிழ் ஆய்வு மையம்" என்ற பெயர்பலகையை கழற்றி எடுத்துவிட்டு, "தமிழ்நாடு தலைமை செயலகம்" என்ற பெயர் பலகையை வெற்றிகரமாக மாட்டி விட்டு, பத்திரமாக தங்கள் தளத்துக்கு(அட! வீட்டுக்குதாங்க) திரும்பினர்.

2 ஆபரேஷன் "சமச்சீர் கல்வி"
   செலவு - 200 கோடி.

அரசு அச்சகத்துக்குள், அதிரடியாக நுழைந்த கல்வித்துறை அதிகாரிகள், 200 கோடி ரூபாய் செலவில் அச்சடிக்கப்பட்டு வைத்திருந்த, சமச்சீர் கல்விக்கான புத்தகங்களை கைப்பற்றி, இனி அப்புத்தகங்கள், மக்கள் நலன் கருதி, குழந்தைகளின் மலத்தை துடைக்க பயன்படுத்தப்படும், என அறிவித்தனர். 

இதுபோன்று, மக்கள் நலம் கருதி பல்வேறு ஆபரேஷன்களை நடத்த, ஜெயலலிதா அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மக்களே உஷார்!


அடிமை கல்வி!

சென்னை பல்கலைக்கழகத்தில், இருதினங்களுக்கு முன், குற்றவியல் துறையில் பயின்ற மாணவர்களுக்கு, பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிவதற்கான, வேலை உறுதி சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய, பல்கலைகழக துணைவேந்தர் திருவாசகம், பல்கலைகழகத்தில் மொத்தம் உள்ள துறைகளில், எழுபத்து ஐந்து சதவீத துறைகளில் பயிலும் மாணவர்களுக்கு, தங்கள் படிப்பை முடித்த உடன், வளாகத்தில் நடைபெறும் நேர்காணலில்(கேம்பஸ் இன்டர்வியு), நூறு சதவீதம் வேலை கிடைப்பதாக கூறினார். மேலும், அயல்மொழி துறையில்(ஜெர்மன், பிரெஞ்சு, ரஷ்யன்) படிக்கும் மாணவர்களுக்கும், நூறு சதவீத வேலைவாய்ப்பு கிடைப்பதாக கூறினார்.

குற்றவியல் துறையை பொறுத்தவரை, அதன் பாடத்திட்டங்கள் தயாரிக்கும் குழுவில், பன்னாட்டு நிறுவனங்களின், அதிகாரிகளும் இடம்பெறுவதாக கூறினார். மேலும், பன்னாட்டு நிறுவனங்களை சேர்ந்த வல்லுனர்கள், இத்துறையில் படிக்கும் மாணவர்களுக்கு, கௌரவ பேராசிரியர்களாக வந்து பாடம் எடுப்பதாகவும் கூறினார். இதனால்தான், இந்தத்துறையில் பயின்ற அனைத்து மாணவர்களுக்கும் வளாகத்தில் நடைபெற்ற நேர்காணலில் வேலை கிடைத்துள்ளதாக கூறினார். இதேபோல், பல்கலைகழகத்தில் உள்ள மற்ற துறைகளிலும், குற்றவியல் துறையில் மேற்கொள்ளும் நடைமுறையை கொண்டுவரபோவதாக கூறினார். 

அதாவது, பல்கலைகழகத்தின் பாடத்திட்டங்களை வகுக்கும் குழுவில், பன்னாட்டு நிறுவனங்களின் அதிகாரிகளை இடம்பெரசெய்வதும், அந்த அதிகாரிகளை கொண்டு, மாணவர்களுக்கு பாடம் சொல்லிதரசெய்வதுமே இந்த திட்டம். இதனால் மாணவர்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்கலாம்? பிரச்சனை உள்ளது. அது என்னவென்றால், இனி மாணவர்கள் தாங்கள் பயிலும் துறையை முழுமையாக கற்க தேவைஇல்லை, அதாவது, வளாகத்தில் நடைபெறுவுள்ள நேர்காணலுக்கு தகுந்தாற்போல் பாடத்திட்டம் உருவாக்க பட்டிருக்கும், அதை மட்டும் படித்தால் போதும். படிப்பு முடிந்ததும் உடனடியாக வேலை. உதாரனத்திற்க்கு, ஹச்.சி.எல் என்ற நிறுவனம், வங்கிகளுக்கு மென்பொருள் தயாரித்து கொடுப்பதாக வைத்துக்கொள்வோம், அந்த நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி, குற்றவியல் துறை பாடத்திட்டம் தயாரிக்கும் குழுவில் இடம்பெற்றால், அவர் நிச்சயம் வங்கி சார்ந்த பாடதிட்டங்களுக்கே அதிகம் அழுத்தம் கொடுப்பார். இதேபோல் மற்ற நிறுவனங்களும் தாங்கள் ஈடுபட்டுள்ள தொழிலுக்கு ஏற்ப பாடத்திட்டம் அமையவேண்டும் என்றே விரும்புவர். 

இதனால், அந்த துறையில் இயல்பாக கற்கவேண்டிய விஷயங்களை மாணவர்கள் கற்க முடியாமல் போகும். காலபோக்கில், ஒரு துறையில், ஆதி அந்தங்களை அளந்து, அதில் ஆராய்ச்சி செய்து, புதிய கண்டுபிடிப்புகளை செய்யவேண்டும் என்ற எண்ணம் மாணவர்களிடமிருந்து விலகிவிடும். இதனால், அந்த துறையில் பயிலும் மாணவர்களுக்கு சுயமாக சிந்திக்கும் எண்ணம் கொஞ்சமும் இருக்காது. இப்படி பட்ட மாணவர்கள் எப்படி தாங்கள் சார்ந்த துறையில் வல்லுனதுவம் பெற்று, அந்நியர்களிடம் கையேந்தாமல் சுயமாக புதிய கண்டுபிடிப்புகளை நாட்டிற்க்கு வழங்கமுடியும்? 

அன்றைய கூட்டத்தில், இதுகுறித்த சந்தேகம், துணைவேந்தர் திருவாசகத்திடம் செய்தியாளர்களால் கேட்கப்பட்டது. அதற்க்கு அவர் நேரடியாக பதில்சொல்லாமல், குற்றவியல் துறையின் தலைவரை அதற்க்கு பதில் அளிக்க சொன்னார். கேட்கப்பட்ட கேள்விக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் அவர் பதில் அளிக்க, ஒளிப்பதிவாளர் ஒருவர், உணர்ச்சிவசப்பட்டு "நம்ம கேட்டது ஒன்னு, அவர் சொல்லுறது ஒண்ணா இருக்கே" என்று சக ஒளிப்பதிவாளர்களிடம் கூறி சிரித்துகொண்டார். இதிலிருந்து புரிந்துகொள்ளுங்கள் அந்த துறையின் தலைவர் எப்படி நழுவலாக பதில் அளித்திருப்பார் என்று.

மாணவர்கள் கவனத்திற்க்கு 

ஏற்க்கனவே உயர்கல்விக்கு வழங்கிவந்த மானியங்களை, அரசு கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக்கொண்டு வருகின்றது.

ஆராய்ச்சி படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கான, ஆய்வு கூடங்கள் எந்த கல்லூரியிலும், பல்கலைகழகத்திலும் இல்லாத காரணத்தினால், வெளிநாடுகளுக்கு சென்று படிக்கவேண்டிய சூழ்நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகிறார்கள். 

அப்படி வெளிநாடு செல்லும் மாணவர்கள், அந்த நாடுகளில் தாங்கள் கண்டுபிடிக்கும் புதியவிஷயங்கள் இந்தியர்களுக்கு வந்தடைவதற்க்கு சிலநேரங்களில், ஒரு நூற்றாண்டு கூட ஆகிவிடுகின்றது.

ஆகவே, உயர்கல்விக்கு உரிய மானியம் வழங்க அரசை நிர்பந்திக்க வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது.

வேலையை மட்டும் குறிகோளாக வைத்து கற்று கொடுக்கப்படும், அடிமை கல்வியை எதிர்க்க வேண்டிய கடமை மாணவர்களுக்கு உள்ளது.

இந்நிலையில், ஐ.ஐ.டி இல் பயிலும் மாணவர்கள், பொறியியல் பயில்வதற்கு இனிமேல் வருடத்திற்க்கு இரண்டரை லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்தவேண்டும் என, அரசு அறிவிக்க உள்ளதாக ஒரு செய்தியை படிக்க நேர்ந்தது, மேலும் நமது வருத்தத்தை அதிகரித்துள்ளது.

சிறுபான்மை மக்களின் பாதுகாவலர்!


தனி பெரும்பான்மையுடன் அ.தி.மு.க ஆட்சியை கைப்பற்றியது, தி.மு.க வை விட, அ.தி.மு.க வில் உள்ள மற்ற கூட்டணி கட்சிகளுக்கே பெரும் இடியாக உள்ளது. அமைச்சரவையில் பங்குகேட்பதை அ.தி.மு.கவுக்கு அடுத்து அதிகமான இடங்களில் வெற்றிபெற்றுள்ள தே.மு.தி.க வே கனவிலும் எதிர்பார்க்க முடியாத நிலையில், வெறும் ஒன்றிரண்டு இடங்களில் வென்றுள்ள மற்ற கூட்டணி கட்சிகள், பதவியேற்பு விழாவிற்க்காவது தங்களை அழைப்பார்களா என்ற சந்தேகத்தில் மூழ்கவைத்ததுதான் உண்மை. 

பதவியேற்பு விழாவிற்க்கு, குஜராத்(கொலைகார) முதலமைச்சர் மோடிக்கு, ஜெயலலிதா, அழைப்பு விடுத்தது, கூட்டணியில் உள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. குஜராத்தில் முஸ்லிம் மக்களை கொன்று குவித்த மோடி, கலந்துகொள்ளும் விழாவில், முஸ்லிம் மக்களின் வோட்டின்(நம்பிக்கையின்) மூலம் வெற்றி பெற்ற மனித நேய மக்கள் கட்சி கலந்துகொள்வது சரிதான என்று அக்கட்சி சற்று தயங்கியது. 

பதவியேற்பு விழாவில், மனித நேய மக்கள் கட்சியின் பிரதிநிதிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை. இதைதொடர்ந்து, அக்கட்சி விழாவை புறக்கணித்து விட்டதாக தகவல்கள் பரவின. இது, வோட்டளித்த மக்களுக்கு அக்கட்சி உண்மையாக செயல்படுவதைபோன்ற பிம்பத்தை உருவாக்கியது. அ.தி.மு.க வின் அதிகார மையத்தை, தங்களுடைய கொள்கைக்காக எதிர்க்கும் தைரியமுள்ள ஒரு கட்சியும் உள்ளதே! என்று நினைத்து யாமும் மகிழ்ச்சியடைந்தோம். ஆனால் அந்த மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்க வில்லை. 

மனித நேய மக்கள் கட்சி சார்பாக, சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட தமீம் அன்சாரி, மோடி அழைக்கபட்டதன் காரணமாகவே தங்கள் கட்சி விழாவை புறக்கணிப்பதாக செய்தியாளர்கள் சிலரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர் ஒருவர், அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வை தொடர்புகொண்டு பேசியபோது, அவர், தமீம் அன்சாரி கூறியதை மறுத்துள்ளார். மேலும், போக்குவரத்து நெரிசல் காரணமாகவே தன்னால் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார். அக்கட்சியின் சார்பாக வெற்றிபெற்ற மற்றொரு சட்டமன்ற உறுப்பினருக்கு, அழைப்பிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், அவராலும் கலந்துகொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதற்க்குள், தமீம் அன்சாரி, செய்தியாளர்கள் சிலரை தொடர்புகொண்டு, தான் முன்னர் சொன்ன தகவலை செய்தியாக வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேபோல், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமியை சந்தித்த செய்தியாளர்கள், அவரிடம், புதிய தலைமை செயலகத்தை அ.தி.மு.க புறக்கணிப்பது பற்றி கேட்டபோது, அது அவர்களின் விருப்பம் என்று பதில் அளித்தார்.அக்கேள்வியை மற்றொரு முறை செய்தியாளர்கள், தெளிவாக கேட்டபோது, தான் முன்னர் சொன்னபதிலை எண்ணி, அசடு வழிந்துகொண்டு, தயவு செய்து தன்னை சங்கடத்தில் மாட்டிவிட்டுடாதீங்க என்பதுபோல் கேட்டுகொண்டார். 

மக்களின் கவனத்திற்க்கு


அ.தி.மு.க அதிகார மையத்திற்கு முன், எப்பெயர் பெற்ற கட்சியும் அடிபணிந்து தீரவேண்டும் என்பதே உண்மை.

சிறுபான்மை மக்களின் நலன்களை உண்மையாக பாதுகாக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், அ.தி.மு.க அதிகாரத்தை எதிர்க்க தயாராக வேண்டும்.

இதைவிடுத்து, எந்த தலைவராவது உங்களிடம், சகோதரி ஜெயலலிதா, (அல்லது அம்மா அவர்கள்), சிறுபான்மை மக்களின் பாதுகாவலர் என்று, வசனம் பேசினால், தயவுசெய்து நம்பிவிடாதீர்கள்!

மனமார்ந்த நன்றி .

22.05.2011 அன்று சென்னை தேனாம்பேட்டையில் நடை பெற்ற ஈழ தமிழர் இன படுகொலை நினைவு நாள் நிகழ்விற்கு வருகை தந்து ,நிகழ்வில் கலந்து கொண்ட அத்தனை தோழர்களுக்கும் மாற்றத்திற்க்கான செய்தியாளர்கள் சார்பாக மனமார்ந்த நன்றி .
  

ஈழ தமிழர் இனப்படுகொலை நினைவு நாள் நிகழ்ச்சி


Time

Total Page Views

About this blog

நம்மைச்சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகள் , அதன் பின்னணியிலிருக்கும் அரசியல் , அந்த நிகழ்வை நகர்த்தும் அடிப்படை,அதற்கான தேவை, என நாங்கள் புரிந்துகொண்டதை , நாங்களே பகிர்ந்து கொள்ளவும் , நாங்கள் பகிர்ந்து கொண்டதை , உங்களோடு பகிர்ந்து கொள்ளவுமே இந்தத் தளம்.
Powered by Blogger.

Followers

Blog Archive