நிழல்களுக்கு நேர்ந்துள்ள ஆபத்து!

நிழல்களுக்கு நேர்ந்துள்ள ஆபத்து!

லஞ்ச ஒழிப்புத் துறை என்றழைக்கப்படும் கண்காணிப்பு & ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் கலைஞரின் நிழலாக கடந்த ஆட்சியில் வலம்வந்த முன்னாள் தமிழக உளவுத்துறை கூடுதல் இயக்குனராக இருந்த ஜாபர் சேட் (தற்போது இவர் மண்டபம் அகதிகள் சிறப்பு முகாம் கூடுதல் இயக்குனராக உள்ளார்), கலைஞரின் முன்னாள் செயலாளர் ராஜமாணிக்கம், தற்போதைய உதவியாளர் சண்முகநாதன், கலைஞரின் பாதுகாப்பு அதிகாரிகளான கணேசன், வாசுதேவன், பாண்டியன், கலைஞரை கைத்தாங்கலாக பார்த்துக்கொள்ளும் நித்தியன், நாக்கீரன் பத்திரிகை துணை ஆசிரியர் காமராஜ், ஆகியோரின் வீடுகளில் செவ்வாய்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரும் கலைஞரைச் சுற்றி இருந்த மற்றும் இருப்பவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது!

கடந்த ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு 'அப்பழுக்கற்ற ஊழியர்' என்ற அந்தஸ்திலும், சமுதாயத்திற்கு சேவை புரிந்தவர்களுக்கு 'சமூக சேவகர்' என்ற அந்தஸ்திலும், மேலும் பத்திரிகையாளர்களுக்கும் தமிழா நாடு வீட்டு வசதி வாரியம் சார்பாக வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் விதிமீறல்கள் நடந்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டது. இது அப்போது பெரும் புயலைக் கிளப்பியதால் கடந்த தி.மு.க. ஆட்சியின் கடைசி ஆளுநர் உரையில் 'விருப்ப ஒதுக்கீடு' முறை இத்தோடு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. ஆட்சி மாறினால் காட்சியும் மாறும் என்பதற்கிணங்க கடந்த தி.மு.க. ஆட்சியில் முறைகேடாக ஒதுக்கப்பட்ட வீடுகள் குறித்து விசாரணை துவங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாகத்தான் செவ்வாய்க்கிழமை அனைவரின் வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

சோதனைக்குப் பிறகு ஜாபர் சேட்டின் மனைவி பர்வின்,  நக்கீரன் காமராஜ் மனைவி ஜெயசுதா, ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர், பாண்டியனின் மனைவி மீனா மற்றும் வினோதன், கணேசன் ஆகியோர்மீது தவறான ஆவணங்கள் மூலம் வீடுகள் ஒதுக்கீடுப் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறை முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்துள்ளது. தேவைபட்டால் மேலும் இதுபற்றி விசாரணை மேற்கொள்ள இவர்கள் அனைவரும் நேரில் ஆஜராக வேண்டியிருக்கும் என தெரிகிறது!.



குறிப்பு: 

இவர்களில் மிகவும் முக்கியமான நபர் ஜாபர் சேட்தான். ஏனெனில் கடந்த ஆட்சியில் அணைத்து அதிகாரங்களும் பொருந்தியவராக வலம் வந்தவர் இவர்தான். 
- முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி விஜயகாந்தும், விஜயகாந்தைப் பற்றி ஜெயலலிதாவும் தரக்குறைவாக பேசியதுபோல் டேப் (ஒலிநாடா) தயாரித்து இருவருக்கும் அனுப்பியது,
- ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா கொலை செய்யப்பட்ட வழக்கு,
- அதன் பின்னணியாக விளங்கக்கூடிய 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு, 
- பலகோடி ரூபாய் நிலம் கையகப்படுத்தியது, 
உள்ளிட்ட பல வழக்குகள் வரிசை கட்டி நிற்கின்றன இவர்மீது! 
இவரைப்பற்றி முழுமையாக எழுத வேண்டுமானால் தனி கட்டுரை தேவைப்படும். விரைவில் முழு தகவல்களோடு ஜாபர் சேட் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

- உமர் முக்தார்
(Email:   reporteromar@gmail.com
 Mobile: +919840669935).

லயன்ஸ் டென் (lion's den)


அர்ஜென்டினா படமான லயன்ஸ் டென், பாப்லோ ட்ரபரோ என்பவரால் இயக்கப்பட்டுள்ளது. தன்னிடமிருந்து பிரிக்கப்பட்ட தன் குழந்தையை மீட்பதற்க்காக, தாய் எடுக்கும் முடிவுடன் அழகாக படத்தை முடித்துள்ளார் பாப்லோ. செய்யாத குற்றத்திற்க்காக சிறைக்குசெல்லும் ஜூலியா, அங்கு தோமஸ் என்ற ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறாள். சக சிறைவாசியான, மார்த்தா மற்றும் அவளின் இரண்டு குழந்தைகளுடன் ஜூலியாவும், தோமஸ்சும் சேர்ந்து ஒரு குடும்பமாக வாழ்கின்றனர். 


அர்ஜென்டினா சட்டப்படி நான்கு வயதுக்குமேல் குழந்தைகள் சிறைக்குள் இருக்க கூடாது. இதை சுட்டிக்காட்டி, தோமஸ்சை தன்னிடம் தந்துவிடும்படி, ஜூலியாவின் தாய் கேட்கிறாள். ஜூலியா தரமறுக்கிறாள். சாமார்த்தியமாக, தோமஸ் ஜூலியாவிடமிருந்து பிரிக்கபடுகிறான். செய்யாத குற்றத்திற்க்காக தண்டனை அனுபவிக்கும் ஜூலியாவுக்கு இருந்த ஒரே ஆறுதல் தோமஸ் தான். பிள்ளையை பிரிந்த ஜூலியா மனம் உடைந்து போகிறாள். அதற்க்குள், எஞ்சியிருந்த ஒரே ஆறுதலான மார்த்தாவும் தண்டனை முடிந்து வெளியே செல்கிறாள். ஜூலியா, இனியும் குழந்தையை பிரிந்து சிறைக்குள் இருக்க முடியாது என்ற முடிவுடன் படத்தை அழகாக முடித்துள்ளார் இயக்குனர். 


படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தமிழக சிறையில் கடந்த பத்தொன்பது வருடங்களாக அடைக்கபட்டிருக்கும் ஒரு பெண் சிறைவாசியை நியாபகபடுத்துகிறாள் ஜூலியா. அந்த பெண்ணும் ஜூலியாவை போலவே சிறைக்கு செல்லும்போது கர்பிணியாக இருந்தால். சிறையில் தன் பிள்ளையுடன் சிறிதுகாலம் வாழ்ந்த அவளிடமிருந்து பிள்ளை பறிக்கப்பட்டுள்ளது. படத்தின் முடிவில் ஜூலியாவை போல், நம் தமிழ் பெண்ணுக்கும் ஒரு நல்ல முடிவு வந்துவிடாதா என்ற எண்ணம் தோன்றுகிறது. 

அசீப்

சீமானின் அரசியல்


சீமானின் அரசியல்!

இணையதளத்தில் முகநூலில் (FACE BOOK) எனது நண்பர்களுடன் நாட்டு நடப்பு குறித்து விவாதங்களில் ஈடுபடுவது என் வழக்கம். சில நாட்களுக்கு முன்னாள் முகநூலில் (FACE BOOK) நான் பார்த்த ஒரு புகைப்படம் எனக்கு மிக அரிதான ஒன்றாகவும், ஆச்சரியமான ஒன்றாகவும் இருந்தது. முத்துராமலிங்கத் தேவரை இடப்புறமாகவும், பெரியாரை வலப்புறமாகவும் கொண்டு முத்துராமலிங்கத் தேவரைப் பெரியார் வாழ்த்தியிருப்பது போலவும், அவரது சமூக தொண்டினைப் பெரியார் பாராட்டியிருப்பது போலவும் அச்சிடப்பட்டிருந்தது. இந்தச் சுவரொட்டியை வெளியிட்டிருப்பவர்கள் “நாம் தமிழர்'' அமைப்பினர். இந்த சுவரொட்டியை கண்டித்து இணையதளத்தில் பல்வேறு கருத்துக்களை நண்பர்கள் பதிவு செய்திருந்தனர்.
பெரியாரிய உணர்வாளர்கள் பலர், பெரியார் முத்துராமலிங்க தேவரை இப்படிப் பாராட்டியதாக வரலாறு இல்லை எனவும், குடி அரசு இதழிலும், பெரியாரைப் பற்றிய திறனாய்வு நூல்களிலும் இதற்கான சான்றுகள் இல்லை எனவும் வாதிட்டனர்.
பெரியாரியவாதிகளின் இந்த குற்றச்சாட்டிற்கு “நாம் தமிழர்'' அமைப்பினர் இதுவரை பதில் தரவில்லை. சரி, அந்த சுவரொட்டியில் அப்படி என்ன இருந்தது என்று பார்ப்போமா? மூக்கையா தேவரின் சமூகப் பணிகளை பாராட்டியும், முத்துராமலிங்கத் தேவரைப் போலவே மூக்கையத் தேவரும் பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி, வேலைவாய்ப்புக்கான அரசியலை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்று பெரியார் மூக்கையாத் தேவரையும், முத்துராமலிங்கத் தேவரையும் மாறி மாறிப் பாராட்டியுள்ளார். இப்படியொரு சம்பவம் நடந்திருக்குமா? நடந்திருக்காதா? என்ற வரலாற்று ஆய்வுக்குள் நான் போகவிரும்பவில்லை. என்னுடைய கேள்வியெல்லாம் நம் நண்பர் சீமானுக்குத் தேவரையும், பெரியாரையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்திப் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏன் வந்தது? அவர் மட்டும் ஏன் இதுவரை எந்த அரசியல் ஆளுமையும் சிந்திக்காத வண்ணம் வித்தியாசமாக சிந்தித்து கொண்டிருக்கிறார்? என்று நான் சிந்திக்கும்போதுதான் அவருடைய அரசியல் பிரவேசம் எனக்கு ஞாபகத்தில் வந்தது.
முத்துராமலிங்கத் தேவரை சீமான் துதிபாடுவது இன்று, நேற்று நடக்கும் சம்பவங்கள் அல்ல. அவரது முதல் படமான "பாஞ்சாலங் குறிஞ்சி'யில் “மன்னாதி மன்னருங்க மறவர் குல மாணிக்கமுங்க, முக்குலத்து சிங்கமுங்க முத்துராமலிங்கமுங்க'' என்று பாடல் வரிகளை அமைத்துத் தனது தேவரின் விசுவாசத்தை வெளிப்படுத்தியிருப்பார்.
'தம்பி' படத்தில் தமிழ் உணர்வாளரான கதாநாயகன் வீட்டில் முத்துராமலிங்க தேவரின் படம் தொடங்கவிடப்பட்டிருக்கும். அதன் அருகிலேயே பெரியார் படம் தொங்கவிடப்பட்டிருக்கும். (இதுபோன்ற‌ நகைச்சுவை காட்சிகள் அத்திரைப்படத்தில் அதிகம் இருப்பதற்கு இந்த ஒரு உதாரணம் போதும்). எனவே, சீமான் கடந்த பதினான்கு ஆண்டுகளாக முத்துராமலிங்க தேவரைத் தலைவராக வணங்கி வருகிறார். இப்போது அவர் அரசியல் கட்சி ஆரம்பித்துவிட்டதால் தென்மாவட்டங்களில் அதிகமுள்ள முக்குலத்தோர் வாக்கு வங்கியைப் பெறுவதற்கு, சராசரி வாக்கு வங்கி அரசியல்வாதிகளைப் போலவே, (வை.கோ.வில் தொடங்கிப் பொதுவுடைமை இயக்கத்தினர் வரை அனைவரும் தேவர் சிலைக்கு மாலை போடுகிறார்கள்) சீமானும் ஆயுத்தமாகி விட்டார். குறிப்பாக அவருடைய இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள மறவர்களின் வாக்கும், ஆதரவும் சீமானுக்குத் தேவைப்படுகிறது. ஆகவே, முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்துத் தனது அரசியல் முகத்தை மக்களுக்கு காட்டுகிறார். (அப்படியானால் தமிழ்த் தேசிய அடையாளம்(!) என்ன ஆனது?). இவர் ஏற்றுக் கொண்ட தமிழ்த் தேசிய கொள்கைக்கும், முத்துராமலிங்கத் தேவருக்கும் துளி அளவும் தொடர்பு இல்லை என்பது கற்றறிந்த தமிழ் உலகத்திற்கு நன்கு தெரியும்.
“தேசியமும் தெய்வீகமும்'' தனது இரு கண்கள் என முழங்கியவர் தேவர். தமிழ் தேசியத்திற்கு எதிரான இந்திய தேசியத்தையும், தமிழர்களை “வேசி மகன்'' என்று அழைத்த இந்து மதத்தையும் போற்றி பாதுகாத்தவர். முத்துராமலிங்கத் தேவர். சுயமரியாதை இயக்கம் தமிழகத்தில் மக்களைச் சென்று சேர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில், இந்து மத வெறியர் “கோலால்கரை'' (ஆர்.எஸ்.எஸ். நிறுவனர்களில் ஒருவர்) அழைத்துத் தமிழகத்தில் பொதுக்கூட்டம் நடத்தி, இந்துமதப் பாசிசத்தை தமிழகத்தில் பரப்புவதற்கு உறுதுணையாக இருந்தவர். இன்னும் சொல்லப்போனால், தமிழ் சமூகமான மறவர் சமூகத்தை, பெரியாரின் இனஉணர்வுச் சிந்தனையிலிருந்தும், பகுத்தறிவு உணர்விலிருந்தும் அப்பாற்பட்டு சாதி உணர்வுக்கும், இந்திய தேசியத்திற்கும் அச்சமூகத்தைப் பலியாக்கியதில் முத்துராமலிங்கத்திற்கு முகாமையான பங்கு உண்டு.
பெரியாரின் சமூகநீதி கருத்துகளால் உந்தப்பட்டு எழுச்சி பெற்ற வன்னியர், நாடார், தலித் போன்ற சமூகங்கள் இன்று கல்வி அளவிலும், மாற்றத்தை நோக்கிச் சிந்திக்கும் முறையிலும் வியத்தகு பரிணாம வளர்ச்சியைப் பெற்று வளர்ந்து வருகின்றனர் என்பது கண்கூடு. ஆனால், பெரியாரின் இந்தச் சமூகநீதி அரசியலைத் தேவர் சமூகம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியாவண்ணம் இந்து மத அரசியலையும், இந்திய தேசிய அரசியலையும் அவர்கள் மீது திணித்து அந்த மக்களை, தமிழ்த்தேசிய அரசியலில் பின்னோக்கி இருக்கச் செய்ததில் முத்துராமலிங்கத் தேவரின் பங்கு அதிகம். ஒருவருக்கொருவர் முரண் அரசியல் பார்வை கொண்ட பெரியாரையும், தேவரையும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான தலைவர் என்று நேர்கோட்டு பாதையில் இருவரையும் நிறுத்துகிறார் சீமான்.
அரசியலில் இது போன்ற நிகழ்வுகள் சாதாரணம் என்று நகைச்சுவை நடிகர் பாணியில் நம்மவர்கள் இதற்கு பதில் சொல்லலாம். ஆனால், இதற்குப் பின்னால் அரசியல் இருப்பதை நாம் உணர வேண்டும். சமீபகாலமாக, பெங்களூர் குணா அவர்களின் கருத்தாக்கப்படி, “பெரியார் ஒரு கன்னடர், அவர் உருவாக்கிய திராவிட இயக்க அரசியல் மரபுதான் தமிழ்த் தேசியத்தை எழுச்சி பெறவிடாமல் தடுத்துக் கொண்டு இருக்கிறது என்கிற கருத்தியலை உள்வாங்கிக் கொண்டார் சீமான். ஆகையால், தனது தலைவர்கள் பட்டியலில் இருந்து பெரியாரை நீக்கிவிட்டேன் என்று அறிவித்தார். அவரது “நாம் தமிழர்'' அமைப்புச் சுவரொட்டிகளில், பெரியாரோ, திராவிட இயக்க முன்னோடிகளோ இதுவரை இடம் பெற்றதில்லை. பார்ப்பன எதிர்ப்பை முன்னிறுத்தாமல், திராவிட அரசியலை விமர்சிக்கும் சீமான், மும்பை சென்றபோது பால்தாக்கரே போன்ற இந்துத்துவ சிந்தனைவாதியை மரியாதைக்குரிய தலைவர் என்று விளித்தார்.
சீமானுக்கு, முத்துராமலிங்கத் தேவர், பெரியார், சேகுவாரோ, பால்தாக்கரே என எல்லோருமே தேவைப்படுகிறார்கள், அரசியலுக்காக. அப்படியானால் அவருடைய கொள்கைத்தான் என்ன? நாம் கேட்க வேண்டியுள்ளது. சீமானின் இந்தக் குழப்பமான அரசியல் சிந்தனையின் தொடர்ச்சியாகத் தான் பெரியாரும், முத்துராமலிங்கத் தேவரும் ஒத்த சிந்தனையுடையவர்கள் என்றும், இருவரும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்டவர்கள் என்றும் சீமான் கருத்து தெரிவித்திருக்கிறார். பெரியாரின் கருத்துக்களை மறுக்கவோ, எதிர்த்துப் பேசுவதோ சீமானின் தனிப்பட்ட சனநாயக உரிமை. ஆனால், பெரியாரின் கருத்துக்களைத் திரித்துப் பேசுவதற்கு சீமானுக்கு எந்த உரிமையும் கிடையாது. நமது நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் சாதிகளின் தலைவர் என்று எவரும் கிடையாது. தான் பிறந்த சாதிக்குத்தான் ஒவ்வொருவரும் தலைவராகிறார்கள். ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கும் யாரும் இதுவரை தலைவராக இருந்தது கிடையாது. தன் சாதியைத் தாண்டி சிந்திப்பவன், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் தலைவனாகி விடுகிறான். அந்த வகையில், பெரியார், ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்திற்குமான மகத்தான தலைவர். அப்படிப்பட்ட தமிழினப் போராளி பெரியாரைப் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் தலைவராகப் பார்ப்பது சீமானின் பிழையான பார்வையைப் பட்டவர்த்தனமாக காட்டுகிறது.
ஒரு வாழ்நாள் முழுவதும் இன மேம்பாட்டிற்காக உழைத்த ஒரு தலைவரை, இந்தியத் தேசியத்திற்கும், மத அடிப்படைவாத சிந்தனைக்கும் தன் வாழ்நாள் முழுவதும் சேவகம் செய்த ஒருவருடன் ஒப்பிட்டதன் மூலம், தனக்கோ, தனது அமைப்பிற்கோ தெளிவான சிந்தனை இல்லை என்பதைச் சீமான் வெளிப்படுத்தியுள்ளார். 'நாம் தமிழர்' இளைஞர்களுக்குச் சாதி ஒழிப்பு சிந்தனையோ, நாத்திகச் சிந்தனையோ, பார்ப்பன எதிர்ப்போ வர்க்க விடுதலையோ பயிற்றுவிக்கப்படுவதில்லை. எந்த முற்போக்கு சிந்தனையையும் பயிற்றுவிக்காமல், பொருள் முதல்வாதச் செயல்பாடுமில்லாமல் இவர்கள் எப்படிட்ட தமிழ்த்தேசியத்தைக் கட்டமைக்க போகிறார்கள் என்று நமக்குப் புரியவில்லை.
சீமான் வாக்கு அரசியலுக்கு முத்துராமலிங்கத்தையும், தமிழ்த்தேசிய அரசியலுக்கு மேதகு பிரபாகரனையும் முற்போக்கு அடையாளத்துக்குத் தந்தை பெரியாரையும் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார். ஒரு சட்டசபை தேர்தலைக் கூட சந்திக்காத சீமான், பழம்பெரும் அரசியல்வாதியைப் போல் தேர்தல் நுணுக்கங்களை எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார். எது எப்படியோ, பெரியார் படத்திற்குப் பூசை புனஸ்காரம் செய்து நானும் 'திராவிடன்' என்று சொல்லிக் கொள்ளும் புது அரசியல்வாதி நடிகர் விஜயகாந்தை போலவே, நமது சீமானும் தமிழ்த்தேசிய போராளி(!) என்று சொல்லிக்கொண்டு திரையுலகத்திலிருந்து அரசியலுக்குக் குதித்திருக்கிறார் என்றுதான் நாம் எண்ணிக் கொள்ள வேண்டும்.
- ஜீவசகாப்தன் ( jeebiosagapthan@yahoo.com)

விஜயகாந்த் என்றொரு.....?

விஜயகாந்த் என்றொரு.....?



"இந்த நீதிமன்றம் எத்தனையோ விசித்திரமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது'' என்கிற இச்சொற்றோடர் அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட பழைய திரைப்பட வசனம் ஆகும். ஆனால், இப்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் வசனம் எழுத வேண்டுமானால் பின்வருமாறுதான் எழுதவேண்டும். “தமிழ்நாடு எத்தனையோ விசித்திரமான அரசியல்வாதிகளைச் சந்தித்திருக்கிறது. ஆனால் விஜயகாந்த் போல் ஒரு விசித்திரமான அரசியல்வாதியை கண்டதில்லை''. இதுவரை நம் நாட்டில் மற்ற அரசியல்வாதிகள் செய்யாத எந்தத் தவறை அவர் புதிதாகச் செய்துவிட்டார்? அவருக்கும் ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பார்க்கலாமே என்று நமது தமிழக வாக்காளர்கள் சிலர் கருதுகின்றனர். பகுத்தறிந்து கேட்க வேண்டி எத்தனையோ கேள்விகளைக் கேட்கவேண்டிய தருணங்களில் நமது மக்கள் கேட்டிருந்தால் நமக்கு விஜயகாந்தைப் பற்றியெல்லாம் எழுதுகின்ற அவலநிலை வந்திருக்காது.
சாதி ஒழிப்பு, தமிழ்த்தேசியம், பெண்ணியம் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் எனப் பரந்துபட்டு விவாதித்து வந்த நாம் விஜயகாந்த்துக்காக இருபக்கங்களை ஒதுக்கும் கேடான அரசியல் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம். நமது முற்போக்குச் சிந்தனை கொண்ட இதழ்களில் எதிர்மறையாக விமர்சிக்கக்கூட தகுதியில்லாத நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்தான் விஜயகாந்த். அந்த திரைப்படங்களின் மூலம் தனக்குக் கிடைத்த விளம்பரத்தைத் தமிழ்நாட்டு மக்களிடம் அரசியலாக்க முயற்சிக்கிறார் இந்தப் புரட்சிக் கலைஞர்(!)
யார் இந்த விஜயகாந்த்? முப்பது வருடங்களுக்கு முன் மதுரை வீதிகளில் ரஜினிகாந்தைப் போல் தானும் ஒரு பெரிய நடிகனாக வேண்டும் என்று இலட்சிய வெறியோடு கனவு கண்டவர்தான் விஜயராஜுலு என்று அழைக்கப்பட்ட இந்த விஜயகாந்த், எப்பேர்ப்பட்ட உயர்ந்த லட்சியம்(!) பார்த்தீர்களா தோழர்களே. (ரஜினிகாந்த் எப்பேர்பட்ட பகுத்தறிவு சிந்தனையாளர்(?) என்று நான் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன்). ரஜினிகாந்த் மீது தான் கொண்ட மோகத்தின் காரணமாகத்தான் விஜயராஜுலு என்கிற தன்னுடைய பெயரை விஜயகாந்த் என்று மாற்றி வைத்துக் கொண்டார். எம்.ஜி.ஆர். மற்றும் கலைஞரைப் போல் பெயர் மாற வேண்டும் என்பதற்காக “புரட்சித் தலைவர்'' பட்டத்திலிருந்து புரட்சியையும், கலைஞர் என்ற பட்டத்தையும் சேர்த்து “புரட்சிக் கலைஞர்'' என்று தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொண்டார். தன்னுடைய பெயரிலிருந்து, அடைமொழி வரை சுயமாகச் சிந்திக்க எதுவும் இல்லாத ஒரு தனித்தன்மை மிக்க நபர்தான் விஜயகாந்த்.
மதுரையில் அவரது நெருங்கிய நண்பர்களாக இருந்த லியாகத் அலிகான், இப்ராகிம் ராவுத்தர் ஆகிய இருவரும் இவரது சினிமா வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்தவர்கள். லியாகத் அலிகானுடைய அரசியல் அனல் பறக்கும் வசனங்களைப் பேசி மக்களிடம் கைத்தட்டு வாங்கினார். பின்னர் அந்த இரு இசுலாமிய நண்பர்களுடன் மோதல் ஏற்பட்டு விஜயகாந்த் தனித்து விடப்பட்டார்.
அதற்குப் பிறகு அவர் நடித்த (வல்லரசு, நரசிம்மா, வாஞ்சிநாதன்) பல படங்களில் இசுலாமியர் எதிர்ப்பு அரசியலை முன் வைத்தார். இந்தியாவில் பல மசூதிகள் இருக்கு. ஆனால், பாகிஸ்தானில் ஒரு இந்துக் கோயில் இருக்காடா? என்று “நரசிம்மா'' படத்தில் வெளிப்படையாகவே “இந்துத்துவ'' ஆதரவு வசனங்களைப் பேசியிருப்பார். தொழுகை செய்யும் இசுலாமியர்களை வில்லன்களாக அறிமுகப்படுத்தும் அருவடைய பல படங்கள் “தேசப்பற்று'' மிக்க படங்களாக அடையாளப்படுத்தப்பட்டன.
80களில் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தார் விஜயகாந்த், பெண்கள் மீதான பாலியல் வன்புணர்ச்சிக் காட்சிகளை அதிக நேரம் காண்பித்தவர்கள் என்கிற பட்டம் கொடுப்பதாக இருந்தால் விஜயகாந்த்க்கும் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் கண்டிப்பாக கொடுக்கலாம். சிவப்பு மல்லி, சட்டம் ஒரு இருட்டறை தொடங்கி பல படங்களை நாம் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். கதாநாயகனின் தங்கை மற்றும் மனைவியைப் பாலியல் வன்புணர்ச்சி கொள்ளும் காட்சிகளின் மூலம் ஆண்களின் வக்கிர உணர்ச்சிகளைக் காசாக்கிப் பார்த்தார்கள் இருவரும். தொடர்ச்சியாக இது போன்ற படங்களில் நடித்ததன் மூலம் அடித்தட்டு மக்களின் நாயகனாக, வர்க்கப் போராளியாக இவர் அடையாளம் காட்டப்பட்டார்.
சிவப்புச் சிந்தனையாளராகவும், தி.மு.க. அனுதாபியாகவும், சில காலம் காலத்தை ஓட்டினார் விஜயகாந்த். ரஜினிகாந்த் இனிமேல் அரசியலுக்கு வரமாட்டார் என்று திட்டவட்டமாக தெரிந்துகொண்ட பிறகு, அந்த இடத்தை நிரப்புவதற்கு, அரசியல் கட்சியைத் தொடங்கினார். ஊழல் கட்சிகள் என்று இவர் விமர்சித்த இருகட்சிகளில் உரிய அங்கீகாரம் கிடைக்காத பல பேர் இவர் கட்சியில் இணைந்தனர்.
இந்த லட்சியத் தொண்டர்களை வைத்துக்கொண்டும், தனது கறுப்புப் பணத்தை வைத்துக் கொண்டும் “ஊழலை ஒழிப்போம்" என்று நகைச்சுவையாகப் பேசிவருகிறார் விஜயகாந்த். திராவிட இயக்க அரசியல், தமிழ்தேசிய அரசியல், இந்துத்துவ அரசியல் என்று தனக்கென்று எந்தக் கருத்தியலும் இல்லாதவர், இன்னும் சொல்லப்போனால் இது குறித்த எந்தப் புரிதலும் இல்லாதர் படங்களின் மூலம் தனக்குக் கிடைத்த அறிமுகமே தனது அரசியல் வாழ்விற்கான மாபெரும் தகுதியாக நினைத்துக் கொள்பவர்,
வெற்றிடத்தைக் காற்று நிரப்பும் என்பது பௌதீக விதி. விஜயகாந்திடம் வெற்றிடமாக இருக்கும் அரசியல் அறிவை “இந்துத்துவ சக்திகள்'' (சோ, சுப்பிரமணியசுவாமி, சங்கரமடம்) நிரப்பிக் கொள்ளும் கட்சி ஆரம்பிக்கும் போதே கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட சங்கரமடாதிபதி வாழ்த்து தெரிவித்தார் என்றால் அதன் உள் அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும் “தேசியம்'', "முற்போக்கு'', “திராவிடர்'', “கழகம்'' இந்த நான்கு வார்த்தைகளில் ஒரு வார்த்தைக்குக் கூட அர்த்தம் சொல்லத் தெரியாத விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனரும் தலைவரும் ஆவார். இந்துத்துவ அமைப்புகள், ரஜினி ரசிகர் மன்றம், அஜித் ரசிகர் மன்றம் மற்றும் பிற்போக்கு அமைப்புகளையும் தாங்கிப்பிடித்துக் கொண்டிருக்கும் நமது தாழ்த்தப்பட்ட தோழர்கள் இந்த அரசியல் காமெடியர் விஜயகாந்த்தையும் தாங்கி கொண்டிருக்கின்றனர்.
வடமாவட்டங்களில் வன்னியர் வகுப்பைச் சார்ந்தவர்களும், “பறையர்'' என்று அடையாளப்படுத்துகின்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களும் விஜயகாந்த்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர். மேலும் தமிழ்நாடு முழுவதும் “அருந்ததியர்கள்'' என அழைக்கப்படுபவர்களும் விஜயகாந்தின் வெற்றிக்கு முக்கிய காரணிகளாக உள்ளனர். சாதி ஒழிப்பு, இடஒதுக்கீடு என்ற எந்தச் சமூகநீதி அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாத இந்த அரைவேக்காட்டுத் தலைவன் பின்னால் தாழ்த்தப்பட்ட மக்கள் அணி வகுத்து நிற்பது முற்போக்குச் சிந்தனையாளர்களை வேதனையடையச் செய்கிறது. விஜயகாந்த் பொதுமேடையில் தனது வேட்பாளரை அடிப்பதைக் கூட, அக்கட்சி தொண்டர்கள் நியாயப்படுத்தவே செய்கின்றனர். ஏனெனில் ஒரு முதலாளிக்கு தனது தொழிலாளியை அடிக்கும் உரிமை இருக்கிறது என்ற நிலவுடைமைச் சமூக மனப்பான்மையே விஜயகாந்த் தொண்டர்களிடம் காணப்படுகிறது.
விஜயகாந்த்தின் வெற்றி என்பது நிலவுடைமைச் சமூக மனநிலைக்குக் கிடைக்கும் வெற்றியாகும். விஜயகாந்த்தின் அரசியல் இருத்தல் என்பது, சமூகம் வளர்ச்சி நிலையில் பின்னோக்கிப் பயணிக்கிறது என்பதைப் பட்டவர்த்தமாகக் காட்டுகிறது. பெரியாரியம், அம்பேத்கரியம், பெண்ணியம், பின்நவீனத்துவம், மற்றும் மார்க்சியம் எனப் பல்வேறு பரிமாணங்களில் பயணித்துக் கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில், விஜயகாந்த் போன்ற கோமாளி ஆளுமையின் பின்னால் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் இருப்பது வருத்தப்பட வைக்கிறது. நம்முடைய அரசியல் எதிரி என்று அடையாளப்படுத்தும் அளவிற்குக் கூட தகுதியில்லாத விஜயகாந்த் பற்றி இக்கட்டுரைக்கு என்ன பெயர் சூட்டலாம்? என்பதில் எனக்கு குழப்பம் இருப்பதால், இக்கட்டுரைக்கு பெயர் வைக்கும் வேலையை நான் உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
- ஜீவசகாப்தன்.

தமிழர்களின் வெற்றிக்கு முதல் படி!

தமிழர்களின் வெற்றிக்கு முதல் படி!

இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வட பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றது. 

இலங்கையில் மொத்தம் உள்ள 65 மாகாண சபைகளுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

வட பகுதியில் மொத்தம் உள்ள 26 மாகாண சபைகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில் 18 மாகாண சபைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. மற்றொரு தமிழ் அமைப்பான தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி (டியுஎல்எப்) இரண்டு மாகாண சபைகளையும் கைப்பற்றியுள்ளன., ராஜபட்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 2 சபைகளை மட்டுமே கைப்பற்றி உள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, இத்தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது.

இக்கட்சியைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா ராஜபட்ச அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். இதனால்தான் வட பகுதியில் இரு மாகாண சபைகளை ராஜபட்ச கட்சி பெற முடிந்தது.

தேசிய அளவில் இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 45 மாகாண சபைகளை கைப்பற்றி உள்ளது. இலங்கையின் தெற்குப் பகுதியில் உள்ள பெரும்பாலான மாகாண சபைகளில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டவர்கள் மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

 இத்தேர்தலில் இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சிகள் படுதோல்வி அடைந்துள்ளன.
 குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் ஜேவிபி ஆகிய கட்சிகள் ஒரு மாகாண கவுன்சிலைக்கூட கைப்பற்றவில்லை.

ஆனால் விடுதலைப்புலிகளுக்கு எதிரான வீரசிங்கம் ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி 2 மாகாண சபைகளைக் கைப்பற்றி உள்ளது.

 இத்தேர்தலில் ரஜபட்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 512 இடங்களிலும்,
 தமிழ் தேசியக் கூட்டமைப்பு 183 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளன. அதுபோல்
 முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி 137 இடங்களிலும் ஜேவிபி 13 மற்றும் தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

தேர்தல் குறித்து இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னே கூறுகையில்,
"இலங்கையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு வட பகுதியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. மொத்தம் 2,200 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு நடந்தது. ஒருசில சிறிய சம்பவங்களைத் தவிர தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது" என்றார்.
                        
ராஜபட்சவின் போர்க்குற்றம் உலகமே குற்றம் சாட்டிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் தற்போது சிங்களர்களும் அது பற்றிய உண்மையை புரிந்து கொண்டிருப்பதாகவே இத்தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுகிறது!

வெற்றிக்கான முதல் படியைத் தாண்டியுள்ளனர் தமிழர்கள். விரைவில் மொத்த இலங்கையும் தமிழர்களின் கையில் மீண்டும் கிடைக்கும் என உலகத் தமிழர்கள் மத்தியில் நம்பிக்கை பிறந்துள்ளது!

- உமர் முக்தார்.

பாதியில் வெளியேறிய அழகிரி! விஸ்வரூபம் எடுத்த குடும்பச்சண்டை!

பாதியில் வெளியேறிய அழகிரி! விஸ்வரூபம் எடுத்த குடும்பச்சண்டை!

தமிழக சட்டசபைத் தேர்தலில் தோற்று, எதிர்க்கட்சி அந்தஸ்துக்கூட இல்லாத நிலையில் தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு சனி மற்று ஞாயிறு ஆகிய இரு நாட்கள் கோவையில் நடைபெற்றது. தி.மு.க. தோற்கக் காரணமாக இருந்த 'குறுநில மன்னர்களாக' செயல்பட்ட மாவட்டச் செயலாளர்கள் பதவியைத் தூக்கிவிட்டு, நாடாளுமன்ற தொகுதி செயலாளர்கள் என்ற புதிய பதவியை உருவாக்கலாமென ஸ்டாலினும், கலைஞரும் எண்ணி அது பற்றி கருத்தும் கேட்டிருந்தார்கள். ஆனால் இதற்கு மா. செ. க்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது, வீரபாண்டியார் நேரிலேயே கலைஞரை மிரட்டிவிட்டு வந்தார். ஸ்டாலினின் இச்செயல் அழகிரிக்கும் பிடிக்கவில்லை. மேலும் ஸ்டாலின்தான் அடுத்தத் தலைவர் என்ற பேச்சும் கிளம்பியதால், இருவருக்கும் குடும்பச் சண்டை முற்றியது!

இந்நிலையில் சனிக்கிழமை செயற்குழுவும், ஞாயிற்றுக்கிழமை பொதுக்குழுவும் கூடியது. செயற்குழுவில் ஒருவர் 'ஸ்டாலினை செயல் தலைவராக்க வேண்டும்' என கூறியபோது, 'நான் பதவி விலக வேண்டுமென அந்தத் தொண்டர் விரும்புகிறாரா?' என காட்டமாக கேள்வி எழுப்பினார் கலைஞர். 

பிறகு செயற்குழுவின் முடிவில், 'சட்டப்பேரவையில் ஏற்பட்டத் தோல்வி நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்ட முடிவு என்றும், தி.மு.க. ஒரு எக்குக் கோட்டை, யாராலும் அழிக்க முடியாது' என்றும் வீரவசனம் பேசினார் கலைஞர்.

இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்குழுவில் ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கும், அழகிரி ஆதரவாளர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டதாகத் தெரிகிறது. பொதுக்குழுவில் முன்னாள் எம்.பி. ஒருவர் 'கட்சியின் அடுத்தத் தலைவர் யார்' என கேள்வி கேட்டார். அதற்கு அங்குக் குழுமியிருந்தவர்கள், 'ஸ்டாலின்' 'ஸ்டாலின்' என கோரசாக கூறினார்கள். இதன் பிறகு மதிய உணவு இடைவேளை விடப்பட்டு, மீண்டும் கூடியபோது இரண்டாவது அமர்வில் அழகிரி வரவில்லை. இதனால் பொதுக்குழுவில் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்டாலினைத் தூக்கிவைத்துப்பேசியது அழகிரிக்குப்பிடிக்கவில்லை. ஒரு மாத காலமாக புலனாய்வுப் பத்திரிகைகள் கூறிவந்த குடும்பச் சண்டை உண்மை என்பதை நிரூபித்து விட்டார் அழகிரி. அதன் பிறகு மாலையில் 'தனக்கு கட்சியில் உயர் பதவி எதுவும் வேண்டாம்' என (பெருந்தன்மையோடு?!) மறுத்து விட்டார் ஸ்டாலின்!

எதை எதிர்பார்த்து தொண்டர்கள் வந்தார்களோ அது நடக்கவில்லை. தி.மு.க.வை வலுப்படுத்த அமைப்புச்செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் குழு ஒன்று அமைத்தும், 'கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்கவிடாமல் சி.பி.ஐ. உள்நோக்கத்தோடு தடுக்கிறது, ஓட்டுப்பதிவு நடத்தி தனி ஈழம் பெற்றுத்தரவேண்டும், நில மோசடி புகார்கள் மீதான தமிழக அரசின் செயல்களை கண்டிப்பது' என்பன உள்ளிட்ட இருபத்தி ஐந்து தீர்மானங்களை ஒப்புக்காக நிறைவேற்றிவிட்டு கலைந்தது பொதுக்குழு!

முடிவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கலைஞர், 'தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது என்றும், ராசா, மாறன் ஆகியோருக்கு மாற்றாக வேறு அமைச்சர்களை தாங்கள் கேட்கப்போவதில்லை என்றும், காங்கிரஸ் தலைவர்கள் தி.மு.க.வை விமர்சித்துப் பேசுவது கண்டிக்கத் தக்கது என்றும், ஊடகங்களுக்கு தலைப்புச்செய்தியாக வேண்டும் என்பதற்காக கட்சித் தலைமையை மாற்ற மாட்டோம் என்றும், தி.மு.க. ஒரு ஜனநாயாக கட்சி என்றும், உட்கட்சித் தேர்தல் நடத்தி தலைவரைத் தேர்ந்தெடுக்கலாம்' என்றும் தெரிவித்துவிட்டுச் சென்றார்.

எது எப்படியோ, தீர்க்கலாமென நினைத்திருந்த குடும்பச்சண்டை மேலும் பெரிதானதுதான் மிச்சம்!

- உமர் முக்தார்.

சமச்சீர் கல்விக்கு மறைமுக தடை!



சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே நடைமுறை படுத்தவேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை அமுல் படுத்தாமல், மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்த ஜெயலிதா அரசுக்கு, உச்சநீதி மன்றம் சரியான சவுக்கடி கொடுக்கும் என்று அனைவரும் எதிர் பார்த்தனர். ஆனால் நடந்ததோ வேறு. வழக்கை விசாரணைக்கு ஏற்றுகொண்ட உச்ச நீதிமன்றம், வரும் 22 ஆம் தேதிக்குள் சமச்சீர் புத்தகங்களை அனைத்து பள்ளிகளுக்கும் விநியோகம் செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய கால கெடுவை, ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளது. மேலும், இறுதி விசாரணை வரும் 26 ஆம் தேதி நடைபெறும் என்று உத்தரவிட்டுள்ளது. உண்மையில், உயர்நீதி மன்றத்தின் உத்தரவுக்கு, உச்சநீதி மன்றம் மறைமுகமாக இடைக்கால தடை வழங்கி உள்ளதாகவே இதை கருத முடியும். இதை புரிந்து கொள்ளாமல், நம் ஊடகங்கள், சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவுக்கு தடைவிதிக்க, உச்சநீதி மன்றம் மறுப்பு தெரிவித்ததாக, செய்திவெளியிட்டு வருகின்றனர். 

எது எப்படியோ, மாணவர்கள் தாங்கள் எந்த பாடத்திட்டத்தின் கீழ் படிக்கபோகிறோம் என்பதை தெரிந்து கொள்ள, இன்னும் இரண்டுவாரமாவது காத்திருக்க வேண்டும். பள்ளி திறந்து நாற்பது நாட்களுக்கு மேல் ஆன நிலையில், படிப்பதற்கு எந்த புத்தகமும் இல்லாமல் மாணவர்கள் பள்ளி சென்று வரும் அவலத்தை என்னவென்று சொல்வது? ஆட்சியாளர்களின் அகங்காரத்தால், மாணவர் சமுதாயம் பாதிக்கபடுகிறது என்று, ஒருவர் தெருவோர மேடையில் முழங்கிக்கொண்டிருக்கையில், "பசங்க இப்பதான் ஸ்கூலுக்கு ஜாலியா போறாங்க" என்று சிரித்தபடி கூறிச்சென்ற அந்த பாமரனை போல் நாமும் இருக்க போகிறோமா?

Time

Total Page Views

About this blog

நம்மைச்சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகள் , அதன் பின்னணியிலிருக்கும் அரசியல் , அந்த நிகழ்வை நகர்த்தும் அடிப்படை,அதற்கான தேவை, என நாங்கள் புரிந்துகொண்டதை , நாங்களே பகிர்ந்து கொள்ளவும் , நாங்கள் பகிர்ந்து கொண்டதை , உங்களோடு பகிர்ந்து கொள்ளவுமே இந்தத் தளம்.
Powered by Blogger.

Followers

Blog Archive