விஜயகாந்த் என்றொரு.....?

விஜயகாந்த் என்றொரு.....?



"இந்த நீதிமன்றம் எத்தனையோ விசித்திரமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது'' என்கிற இச்சொற்றோடர் அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட பழைய திரைப்பட வசனம் ஆகும். ஆனால், இப்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் வசனம் எழுத வேண்டுமானால் பின்வருமாறுதான் எழுதவேண்டும். “தமிழ்நாடு எத்தனையோ விசித்திரமான அரசியல்வாதிகளைச் சந்தித்திருக்கிறது. ஆனால் விஜயகாந்த் போல் ஒரு விசித்திரமான அரசியல்வாதியை கண்டதில்லை''. இதுவரை நம் நாட்டில் மற்ற அரசியல்வாதிகள் செய்யாத எந்தத் தவறை அவர் புதிதாகச் செய்துவிட்டார்? அவருக்கும் ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பார்க்கலாமே என்று நமது தமிழக வாக்காளர்கள் சிலர் கருதுகின்றனர். பகுத்தறிந்து கேட்க வேண்டி எத்தனையோ கேள்விகளைக் கேட்கவேண்டிய தருணங்களில் நமது மக்கள் கேட்டிருந்தால் நமக்கு விஜயகாந்தைப் பற்றியெல்லாம் எழுதுகின்ற அவலநிலை வந்திருக்காது.
சாதி ஒழிப்பு, தமிழ்த்தேசியம், பெண்ணியம் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் எனப் பரந்துபட்டு விவாதித்து வந்த நாம் விஜயகாந்த்துக்காக இருபக்கங்களை ஒதுக்கும் கேடான அரசியல் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம். நமது முற்போக்குச் சிந்தனை கொண்ட இதழ்களில் எதிர்மறையாக விமர்சிக்கக்கூட தகுதியில்லாத நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்தான் விஜயகாந்த். அந்த திரைப்படங்களின் மூலம் தனக்குக் கிடைத்த விளம்பரத்தைத் தமிழ்நாட்டு மக்களிடம் அரசியலாக்க முயற்சிக்கிறார் இந்தப் புரட்சிக் கலைஞர்(!)
யார் இந்த விஜயகாந்த்? முப்பது வருடங்களுக்கு முன் மதுரை வீதிகளில் ரஜினிகாந்தைப் போல் தானும் ஒரு பெரிய நடிகனாக வேண்டும் என்று இலட்சிய வெறியோடு கனவு கண்டவர்தான் விஜயராஜுலு என்று அழைக்கப்பட்ட இந்த விஜயகாந்த், எப்பேர்ப்பட்ட உயர்ந்த லட்சியம்(!) பார்த்தீர்களா தோழர்களே. (ரஜினிகாந்த் எப்பேர்பட்ட பகுத்தறிவு சிந்தனையாளர்(?) என்று நான் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன்). ரஜினிகாந்த் மீது தான் கொண்ட மோகத்தின் காரணமாகத்தான் விஜயராஜுலு என்கிற தன்னுடைய பெயரை விஜயகாந்த் என்று மாற்றி வைத்துக் கொண்டார். எம்.ஜி.ஆர். மற்றும் கலைஞரைப் போல் பெயர் மாற வேண்டும் என்பதற்காக “புரட்சித் தலைவர்'' பட்டத்திலிருந்து புரட்சியையும், கலைஞர் என்ற பட்டத்தையும் சேர்த்து “புரட்சிக் கலைஞர்'' என்று தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொண்டார். தன்னுடைய பெயரிலிருந்து, அடைமொழி வரை சுயமாகச் சிந்திக்க எதுவும் இல்லாத ஒரு தனித்தன்மை மிக்க நபர்தான் விஜயகாந்த்.
மதுரையில் அவரது நெருங்கிய நண்பர்களாக இருந்த லியாகத் அலிகான், இப்ராகிம் ராவுத்தர் ஆகிய இருவரும் இவரது சினிமா வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்தவர்கள். லியாகத் அலிகானுடைய அரசியல் அனல் பறக்கும் வசனங்களைப் பேசி மக்களிடம் கைத்தட்டு வாங்கினார். பின்னர் அந்த இரு இசுலாமிய நண்பர்களுடன் மோதல் ஏற்பட்டு விஜயகாந்த் தனித்து விடப்பட்டார்.
அதற்குப் பிறகு அவர் நடித்த (வல்லரசு, நரசிம்மா, வாஞ்சிநாதன்) பல படங்களில் இசுலாமியர் எதிர்ப்பு அரசியலை முன் வைத்தார். இந்தியாவில் பல மசூதிகள் இருக்கு. ஆனால், பாகிஸ்தானில் ஒரு இந்துக் கோயில் இருக்காடா? என்று “நரசிம்மா'' படத்தில் வெளிப்படையாகவே “இந்துத்துவ'' ஆதரவு வசனங்களைப் பேசியிருப்பார். தொழுகை செய்யும் இசுலாமியர்களை வில்லன்களாக அறிமுகப்படுத்தும் அருவடைய பல படங்கள் “தேசப்பற்று'' மிக்க படங்களாக அடையாளப்படுத்தப்பட்டன.
80களில் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தார் விஜயகாந்த், பெண்கள் மீதான பாலியல் வன்புணர்ச்சிக் காட்சிகளை அதிக நேரம் காண்பித்தவர்கள் என்கிற பட்டம் கொடுப்பதாக இருந்தால் விஜயகாந்த்க்கும் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் கண்டிப்பாக கொடுக்கலாம். சிவப்பு மல்லி, சட்டம் ஒரு இருட்டறை தொடங்கி பல படங்களை நாம் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். கதாநாயகனின் தங்கை மற்றும் மனைவியைப் பாலியல் வன்புணர்ச்சி கொள்ளும் காட்சிகளின் மூலம் ஆண்களின் வக்கிர உணர்ச்சிகளைக் காசாக்கிப் பார்த்தார்கள் இருவரும். தொடர்ச்சியாக இது போன்ற படங்களில் நடித்ததன் மூலம் அடித்தட்டு மக்களின் நாயகனாக, வர்க்கப் போராளியாக இவர் அடையாளம் காட்டப்பட்டார்.
சிவப்புச் சிந்தனையாளராகவும், தி.மு.க. அனுதாபியாகவும், சில காலம் காலத்தை ஓட்டினார் விஜயகாந்த். ரஜினிகாந்த் இனிமேல் அரசியலுக்கு வரமாட்டார் என்று திட்டவட்டமாக தெரிந்துகொண்ட பிறகு, அந்த இடத்தை நிரப்புவதற்கு, அரசியல் கட்சியைத் தொடங்கினார். ஊழல் கட்சிகள் என்று இவர் விமர்சித்த இருகட்சிகளில் உரிய அங்கீகாரம் கிடைக்காத பல பேர் இவர் கட்சியில் இணைந்தனர்.
இந்த லட்சியத் தொண்டர்களை வைத்துக்கொண்டும், தனது கறுப்புப் பணத்தை வைத்துக் கொண்டும் “ஊழலை ஒழிப்போம்" என்று நகைச்சுவையாகப் பேசிவருகிறார் விஜயகாந்த். திராவிட இயக்க அரசியல், தமிழ்தேசிய அரசியல், இந்துத்துவ அரசியல் என்று தனக்கென்று எந்தக் கருத்தியலும் இல்லாதவர், இன்னும் சொல்லப்போனால் இது குறித்த எந்தப் புரிதலும் இல்லாதர் படங்களின் மூலம் தனக்குக் கிடைத்த அறிமுகமே தனது அரசியல் வாழ்விற்கான மாபெரும் தகுதியாக நினைத்துக் கொள்பவர்,
வெற்றிடத்தைக் காற்று நிரப்பும் என்பது பௌதீக விதி. விஜயகாந்திடம் வெற்றிடமாக இருக்கும் அரசியல் அறிவை “இந்துத்துவ சக்திகள்'' (சோ, சுப்பிரமணியசுவாமி, சங்கரமடம்) நிரப்பிக் கொள்ளும் கட்சி ஆரம்பிக்கும் போதே கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட சங்கரமடாதிபதி வாழ்த்து தெரிவித்தார் என்றால் அதன் உள் அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும் “தேசியம்'', "முற்போக்கு'', “திராவிடர்'', “கழகம்'' இந்த நான்கு வார்த்தைகளில் ஒரு வார்த்தைக்குக் கூட அர்த்தம் சொல்லத் தெரியாத விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனரும் தலைவரும் ஆவார். இந்துத்துவ அமைப்புகள், ரஜினி ரசிகர் மன்றம், அஜித் ரசிகர் மன்றம் மற்றும் பிற்போக்கு அமைப்புகளையும் தாங்கிப்பிடித்துக் கொண்டிருக்கும் நமது தாழ்த்தப்பட்ட தோழர்கள் இந்த அரசியல் காமெடியர் விஜயகாந்த்தையும் தாங்கி கொண்டிருக்கின்றனர்.
வடமாவட்டங்களில் வன்னியர் வகுப்பைச் சார்ந்தவர்களும், “பறையர்'' என்று அடையாளப்படுத்துகின்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களும் விஜயகாந்த்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர். மேலும் தமிழ்நாடு முழுவதும் “அருந்ததியர்கள்'' என அழைக்கப்படுபவர்களும் விஜயகாந்தின் வெற்றிக்கு முக்கிய காரணிகளாக உள்ளனர். சாதி ஒழிப்பு, இடஒதுக்கீடு என்ற எந்தச் சமூகநீதி அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாத இந்த அரைவேக்காட்டுத் தலைவன் பின்னால் தாழ்த்தப்பட்ட மக்கள் அணி வகுத்து நிற்பது முற்போக்குச் சிந்தனையாளர்களை வேதனையடையச் செய்கிறது. விஜயகாந்த் பொதுமேடையில் தனது வேட்பாளரை அடிப்பதைக் கூட, அக்கட்சி தொண்டர்கள் நியாயப்படுத்தவே செய்கின்றனர். ஏனெனில் ஒரு முதலாளிக்கு தனது தொழிலாளியை அடிக்கும் உரிமை இருக்கிறது என்ற நிலவுடைமைச் சமூக மனப்பான்மையே விஜயகாந்த் தொண்டர்களிடம் காணப்படுகிறது.
விஜயகாந்த்தின் வெற்றி என்பது நிலவுடைமைச் சமூக மனநிலைக்குக் கிடைக்கும் வெற்றியாகும். விஜயகாந்த்தின் அரசியல் இருத்தல் என்பது, சமூகம் வளர்ச்சி நிலையில் பின்னோக்கிப் பயணிக்கிறது என்பதைப் பட்டவர்த்தமாகக் காட்டுகிறது. பெரியாரியம், அம்பேத்கரியம், பெண்ணியம், பின்நவீனத்துவம், மற்றும் மார்க்சியம் எனப் பல்வேறு பரிமாணங்களில் பயணித்துக் கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில், விஜயகாந்த் போன்ற கோமாளி ஆளுமையின் பின்னால் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் இருப்பது வருத்தப்பட வைக்கிறது. நம்முடைய அரசியல் எதிரி என்று அடையாளப்படுத்தும் அளவிற்குக் கூட தகுதியில்லாத விஜயகாந்த் பற்றி இக்கட்டுரைக்கு என்ன பெயர் சூட்டலாம்? என்பதில் எனக்கு குழப்பம் இருப்பதால், இக்கட்டுரைக்கு பெயர் வைக்கும் வேலையை நான் உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
- ஜீவசகாப்தன்.

தமிழர்களின் வெற்றிக்கு முதல் படி!

தமிழர்களின் வெற்றிக்கு முதல் படி!

இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வட பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றது. 

இலங்கையில் மொத்தம் உள்ள 65 மாகாண சபைகளுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

வட பகுதியில் மொத்தம் உள்ள 26 மாகாண சபைகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில் 18 மாகாண சபைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. மற்றொரு தமிழ் அமைப்பான தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி (டியுஎல்எப்) இரண்டு மாகாண சபைகளையும் கைப்பற்றியுள்ளன., ராஜபட்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 2 சபைகளை மட்டுமே கைப்பற்றி உள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, இத்தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது.

இக்கட்சியைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா ராஜபட்ச அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். இதனால்தான் வட பகுதியில் இரு மாகாண சபைகளை ராஜபட்ச கட்சி பெற முடிந்தது.

தேசிய அளவில் இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 45 மாகாண சபைகளை கைப்பற்றி உள்ளது. இலங்கையின் தெற்குப் பகுதியில் உள்ள பெரும்பாலான மாகாண சபைகளில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டவர்கள் மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

 இத்தேர்தலில் இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சிகள் படுதோல்வி அடைந்துள்ளன.
 குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் ஜேவிபி ஆகிய கட்சிகள் ஒரு மாகாண கவுன்சிலைக்கூட கைப்பற்றவில்லை.

ஆனால் விடுதலைப்புலிகளுக்கு எதிரான வீரசிங்கம் ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி 2 மாகாண சபைகளைக் கைப்பற்றி உள்ளது.

 இத்தேர்தலில் ரஜபட்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 512 இடங்களிலும்,
 தமிழ் தேசியக் கூட்டமைப்பு 183 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளன. அதுபோல்
 முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி 137 இடங்களிலும் ஜேவிபி 13 மற்றும் தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

தேர்தல் குறித்து இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னே கூறுகையில்,
"இலங்கையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு வட பகுதியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. மொத்தம் 2,200 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு நடந்தது. ஒருசில சிறிய சம்பவங்களைத் தவிர தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது" என்றார்.
                        
ராஜபட்சவின் போர்க்குற்றம் உலகமே குற்றம் சாட்டிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் தற்போது சிங்களர்களும் அது பற்றிய உண்மையை புரிந்து கொண்டிருப்பதாகவே இத்தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுகிறது!

வெற்றிக்கான முதல் படியைத் தாண்டியுள்ளனர் தமிழர்கள். விரைவில் மொத்த இலங்கையும் தமிழர்களின் கையில் மீண்டும் கிடைக்கும் என உலகத் தமிழர்கள் மத்தியில் நம்பிக்கை பிறந்துள்ளது!

- உமர் முக்தார்.

பாதியில் வெளியேறிய அழகிரி! விஸ்வரூபம் எடுத்த குடும்பச்சண்டை!

பாதியில் வெளியேறிய அழகிரி! விஸ்வரூபம் எடுத்த குடும்பச்சண்டை!

தமிழக சட்டசபைத் தேர்தலில் தோற்று, எதிர்க்கட்சி அந்தஸ்துக்கூட இல்லாத நிலையில் தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு சனி மற்று ஞாயிறு ஆகிய இரு நாட்கள் கோவையில் நடைபெற்றது. தி.மு.க. தோற்கக் காரணமாக இருந்த 'குறுநில மன்னர்களாக' செயல்பட்ட மாவட்டச் செயலாளர்கள் பதவியைத் தூக்கிவிட்டு, நாடாளுமன்ற தொகுதி செயலாளர்கள் என்ற புதிய பதவியை உருவாக்கலாமென ஸ்டாலினும், கலைஞரும் எண்ணி அது பற்றி கருத்தும் கேட்டிருந்தார்கள். ஆனால் இதற்கு மா. செ. க்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது, வீரபாண்டியார் நேரிலேயே கலைஞரை மிரட்டிவிட்டு வந்தார். ஸ்டாலினின் இச்செயல் அழகிரிக்கும் பிடிக்கவில்லை. மேலும் ஸ்டாலின்தான் அடுத்தத் தலைவர் என்ற பேச்சும் கிளம்பியதால், இருவருக்கும் குடும்பச் சண்டை முற்றியது!

இந்நிலையில் சனிக்கிழமை செயற்குழுவும், ஞாயிற்றுக்கிழமை பொதுக்குழுவும் கூடியது. செயற்குழுவில் ஒருவர் 'ஸ்டாலினை செயல் தலைவராக்க வேண்டும்' என கூறியபோது, 'நான் பதவி விலக வேண்டுமென அந்தத் தொண்டர் விரும்புகிறாரா?' என காட்டமாக கேள்வி எழுப்பினார் கலைஞர். 

பிறகு செயற்குழுவின் முடிவில், 'சட்டப்பேரவையில் ஏற்பட்டத் தோல்வி நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்ட முடிவு என்றும், தி.மு.க. ஒரு எக்குக் கோட்டை, யாராலும் அழிக்க முடியாது' என்றும் வீரவசனம் பேசினார் கலைஞர்.

இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்குழுவில் ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கும், அழகிரி ஆதரவாளர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டதாகத் தெரிகிறது. பொதுக்குழுவில் முன்னாள் எம்.பி. ஒருவர் 'கட்சியின் அடுத்தத் தலைவர் யார்' என கேள்வி கேட்டார். அதற்கு அங்குக் குழுமியிருந்தவர்கள், 'ஸ்டாலின்' 'ஸ்டாலின்' என கோரசாக கூறினார்கள். இதன் பிறகு மதிய உணவு இடைவேளை விடப்பட்டு, மீண்டும் கூடியபோது இரண்டாவது அமர்வில் அழகிரி வரவில்லை. இதனால் பொதுக்குழுவில் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்டாலினைத் தூக்கிவைத்துப்பேசியது அழகிரிக்குப்பிடிக்கவில்லை. ஒரு மாத காலமாக புலனாய்வுப் பத்திரிகைகள் கூறிவந்த குடும்பச் சண்டை உண்மை என்பதை நிரூபித்து விட்டார் அழகிரி. அதன் பிறகு மாலையில் 'தனக்கு கட்சியில் உயர் பதவி எதுவும் வேண்டாம்' என (பெருந்தன்மையோடு?!) மறுத்து விட்டார் ஸ்டாலின்!

எதை எதிர்பார்த்து தொண்டர்கள் வந்தார்களோ அது நடக்கவில்லை. தி.மு.க.வை வலுப்படுத்த அமைப்புச்செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் குழு ஒன்று அமைத்தும், 'கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்கவிடாமல் சி.பி.ஐ. உள்நோக்கத்தோடு தடுக்கிறது, ஓட்டுப்பதிவு நடத்தி தனி ஈழம் பெற்றுத்தரவேண்டும், நில மோசடி புகார்கள் மீதான தமிழக அரசின் செயல்களை கண்டிப்பது' என்பன உள்ளிட்ட இருபத்தி ஐந்து தீர்மானங்களை ஒப்புக்காக நிறைவேற்றிவிட்டு கலைந்தது பொதுக்குழு!

முடிவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கலைஞர், 'தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது என்றும், ராசா, மாறன் ஆகியோருக்கு மாற்றாக வேறு அமைச்சர்களை தாங்கள் கேட்கப்போவதில்லை என்றும், காங்கிரஸ் தலைவர்கள் தி.மு.க.வை விமர்சித்துப் பேசுவது கண்டிக்கத் தக்கது என்றும், ஊடகங்களுக்கு தலைப்புச்செய்தியாக வேண்டும் என்பதற்காக கட்சித் தலைமையை மாற்ற மாட்டோம் என்றும், தி.மு.க. ஒரு ஜனநாயாக கட்சி என்றும், உட்கட்சித் தேர்தல் நடத்தி தலைவரைத் தேர்ந்தெடுக்கலாம்' என்றும் தெரிவித்துவிட்டுச் சென்றார்.

எது எப்படியோ, தீர்க்கலாமென நினைத்திருந்த குடும்பச்சண்டை மேலும் பெரிதானதுதான் மிச்சம்!

- உமர் முக்தார்.

சமச்சீர் கல்விக்கு மறைமுக தடை!



சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே நடைமுறை படுத்தவேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை அமுல் படுத்தாமல், மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்த ஜெயலிதா அரசுக்கு, உச்சநீதி மன்றம் சரியான சவுக்கடி கொடுக்கும் என்று அனைவரும் எதிர் பார்த்தனர். ஆனால் நடந்ததோ வேறு. வழக்கை விசாரணைக்கு ஏற்றுகொண்ட உச்ச நீதிமன்றம், வரும் 22 ஆம் தேதிக்குள் சமச்சீர் புத்தகங்களை அனைத்து பள்ளிகளுக்கும் விநியோகம் செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய கால கெடுவை, ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளது. மேலும், இறுதி விசாரணை வரும் 26 ஆம் தேதி நடைபெறும் என்று உத்தரவிட்டுள்ளது. உண்மையில், உயர்நீதி மன்றத்தின் உத்தரவுக்கு, உச்சநீதி மன்றம் மறைமுகமாக இடைக்கால தடை வழங்கி உள்ளதாகவே இதை கருத முடியும். இதை புரிந்து கொள்ளாமல், நம் ஊடகங்கள், சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவுக்கு தடைவிதிக்க, உச்சநீதி மன்றம் மறுப்பு தெரிவித்ததாக, செய்திவெளியிட்டு வருகின்றனர். 

எது எப்படியோ, மாணவர்கள் தாங்கள் எந்த பாடத்திட்டத்தின் கீழ் படிக்கபோகிறோம் என்பதை தெரிந்து கொள்ள, இன்னும் இரண்டுவாரமாவது காத்திருக்க வேண்டும். பள்ளி திறந்து நாற்பது நாட்களுக்கு மேல் ஆன நிலையில், படிப்பதற்கு எந்த புத்தகமும் இல்லாமல் மாணவர்கள் பள்ளி சென்று வரும் அவலத்தை என்னவென்று சொல்வது? ஆட்சியாளர்களின் அகங்காரத்தால், மாணவர் சமுதாயம் பாதிக்கபடுகிறது என்று, ஒருவர் தெருவோர மேடையில் முழங்கிக்கொண்டிருக்கையில், "பசங்க இப்பதான் ஸ்கூலுக்கு ஜாலியா போறாங்க" என்று சிரித்தபடி கூறிச்சென்ற அந்த பாமரனை போல் நாமும் இருக்க போகிறோமா?


                                                                     
                                                    "நாடகமே சிறந்த ஊடகம் "
                                                                                                   
                                                     நாடகம் என்றால் மேற்கத்திய நாடுகளை நினைத்துகொண்டு மிரள வேண்டாம். நமது மரபில் எவ்வளவோ நாடகத்தன்மை கொண்ட,நமது அடையாளங்களுடன் கூடிய அம்சங்களை கொண்ட கலைகள் உள்ளன. அவற்றை கண்டெடுத்து சரியாக நாடகத்தில் புகுத்தினாலே நாடகம் பெரும் சக்தியாக உருவாக முடியும்.
                                                   சமுதாயத்தில் இருக்கின்ற ,வரபோகின்ற எண்ணற்ற அவலங்களை நன்றாக காட்சிபடுத்தினால் நிறைய நாடகங்கள் உருவாகும். அது மட்டுமல்லாமல் பிரச்சனைகள் குறித்து, மக்களிடம் எளிதில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்.
                                                 மக்களுக்கு பணி செய்வதாக கூறி ஒரு சில அல்ல, ஒட்டுமொத்த ஊடகங்களும் தனது முதலாளிகளின் சொந்த லாப நஷ்டத்துக்காக மட்டும் தான் இயங்கிகொண்டும் ,இயக்கபட்டும் வருகின்றன. 
                                                நாடகத்தால் பல்வேறு மாற்றங்கள் நம்நாட்டில் நிகழ்த்தப்பட்டு உள்ளன. குறிப்பாக சுதந்திர போராட்டத்தில் நாடகம் பெரும் பங்கை வகித்தது. ஆனால் "சுதந்திரமே" நாடகம் என்பதை உணர்த்துவதற்கு இன்று கட்டாயம் நாடகங்கள் தேவைபடுகின்றன.
                                             "ஊடகத்தால் உணர்த்துவதை விட நாடகத்தால் நிச்சயம் நடத்தி காட்ட முடியும்"
                                            நாம் சினிமாவில் ஆழமாய் ஊரிவிட்டதால், நாடகத்திலும் அதன் தன்மையை எதிர்பார்க்கிறோம். நாடகத்தின் தனித்தன்மை வேறு ,சினிமாவின் தன்மை வேறு. ஆனால் நாடகத்தினால் ஏற்படும் அனுபவம் அளப்பரியது.
                                           நாடகம் ஒரு கட்டுபாடற்ற கலை. எந்த கலையை விடவும் கூடுதல் பாதிப்பை நாடகம் மூலம் ஏற்படுத்த முடியும். சொல்லவரும் கருதிட்கேட்ப, பிரட்சனைகளுக்கேட்ப, சூழலை ஏற்படுத்தி நடித்தால், நிச்சியம் மக்களுக்கு கருத்தை எளிதில் விளங்க வைக்க முடியும்.
                                          ஊடகத்தின் வாயிலாக உண்மைகளை மறைத்தும் உண்மைக்கு புறம்பாக செய்திகளை வெளியிட்டு வரும் இந்த காலத்தில், நல்ல கருத்துடைய நாடகங்களை கலைஞ்ர்கள் இயக்க முன் வரவேண்டும்.
                      "மக்களுக்கான கலைஞ்னே!   உண்மையான கலைஞன்!!"
                                    நல்ல கருத்துகளை நாடகங்களின் வாயிலாக அறிகின்ற போதுதான், போலிகளை மக்கள் அடையாளம் காணமுடியும். நல்ல நாடகங்களின் வழியாக சமூகத்தில் இல்லாமல் போன ஜனநாயகத்தை எளிதில் புரிந்து மற்றும் புரியவைக்க முடியும்.
                               எல்லையற்று, கட்டுபாடற்று விரிந்து கொண்டிருக்கும் ஊடகங்களின் பொய் பிரச்சாரங்களை, நாடகத்தின் மூலம் கட்டாயம் கட்டுபடுத்த வேண்டும்...    

-தமிழரசன்

ஹிலாரியுடன் ஒரு நாள்





 ஹிலாரியுடன் ஒரு நாள் 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஹிலாரி, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்,  ஐ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு அமெரிக்கா உதவி செய்யும்¢ என்றார். இலங்கையில் அதிக அளவில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக குற்றம்சாட்டிய ஹிலாரி, அங்கு தமிழர்கள் சம உரிமையுடன் வாழ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவை, அவர் 45 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார். அப்போது இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இலங்கையில் போர் முடிவுக்கு வந்து 2 ஆண்டுகள் கடந்த பிறகும் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை சொந்தஇடங்களில் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஹிலாரி உறுதியளித்தார். 

தமிழத்தில் முதல¦டு செய்ய அமெரிக்கா முன்வர வேண்டும் என ஹிலாரி கிளின்டனிடம் முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். 


இதைத்தொடர்ந்து கலாஷேத்ராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹிலாரி கிளின்டன் பங்கேற்றார். தமிழக கலை, கலாச்சாரம் தம்மை வெகுவாக கவர்ந்ததாகவும் ஹிலாரி மகிழ்ச்சி தெரிவித்தார்.   

                                                                                                   Ýùï¢î¢°ñ£ó¢

மாற்று கை பொருத்து அறுவை சிகிச்சை


மாற்று கை பொருத்து அறுவை சிகிச்சை

வளர்ந்து கொண்டே இருக்கும் சிகிச்சை முறை வந்து கொண்டே இருக்கும் புதிய கண்டுபிடிப்புகள் என தினம் தினம் முன்னேரிக்கொண்டுள்ளது இன்றைய மருத்துவத்துறை. பிறவியிலோ, விபத்துகளிலோ அல்லது யுத்தங்களிலோ கை கால் போன்ற அவயங்களை இழந்த மக்கள் உலகம் முழுவதும் ஊனமுற்றவர்கள் என்ற பேரில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கெல்லாம் நம்பிக்கையூட்டும் வகையில் தற்ப்போது மாற்று கை பொருத்து அறுவைசிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்கின்றனர் மருத்துவர்கள்.

இதுநாள் வரை மூளைச் சாவடைந்தவர்களின் உடலிலிருந்து உள்ளுருப்புகள் மட்டமே தானமாகப் பெறப்பட்டு மற்றவகளுக்கு பொருத்தப்பட்டு வந்தது எனவும் இக்கண்டுபிடிப்பின் மூலம் மூளைச் சாவடைந்தவர்களின் கைகளையும் தானமாகப்பெற்று கை இல்லாதவர்களுக்கு பொருத்த முடியும் எனவும், தமிழகத்தில் இந்த அறுவைசிகிச்சைக்கான அனுமதியை சென்னை ஸ்டான்லி மருத்துவமனை பெற்றிருப்பதாகவும் கூறுகின்றனர் மருத்துவர்கள்.

மூளைச் சாவடைந்தவர்களின் உடலிலிருந்து உள்ளுருப்புகள் தானம் கொடுப்பது போலவே கைகளையும் தானம் செய்ய அவர்களின் குடும்பத்தினர் முன்வரவேண்டும். அதனால் பலரின் வாழ்வு பிரகாசிக்கும் எகின்றனர் மருத்தவர்கள்.

                                                                                                                               ஆனந்த்குமார் .

Time

Total Page Views

About this blog

நம்மைச்சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகள் , அதன் பின்னணியிலிருக்கும் அரசியல் , அந்த நிகழ்வை நகர்த்தும் அடிப்படை,அதற்கான தேவை, என நாங்கள் புரிந்துகொண்டதை , நாங்களே பகிர்ந்து கொள்ளவும் , நாங்கள் பகிர்ந்து கொண்டதை , உங்களோடு பகிர்ந்து கொள்ளவுமே இந்தத் தளம்.
Powered by Blogger.

Followers

Blog Archive