தெலங்கானா: மக்கள், மண், போராட்டம்!

 தெலங்கானா, கடலோர ஆந்திரா மற்றும் 
ராயல் சீமாவை குறிக்கும் வரைபடம்

தெலங்கானா என்று தற்போது அழைக்கப்படும் பகுதி 1742 முதல் 1948  வரை, ஹைதராபாத் நிஜாமால் ஆளப்பட்ட பகுதியாகும். தற்போதைய கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் சில மாவட்டங்களையும், தற்போதைய தெலங்கானா பகுதிகளையும் உள்ளடக்கிய  இந்த நிலப்பரப்பு, ஹைதராபாத் சமஸ்தானம் என்று அழைக்கப்பட்டது. தற்போதைய, கடலோர ஆந்திரா மற்றும் ராயல் சீமா பகுதிகள்(தெலங்கான தவிர்த்த மற்ற பகுதிகள்)அன்றைய சென்னை மாகாணத்தின் (தமிழ் நாட்டின்) ஒருபகுதியாக இருந்தன. தெலங்கானா பகுதி 1952 வரை தனி ஒரு நிலப்பரப்பாகவே இருந்து வந்துள்ளது. அந்த நிலப்பரப்பை, மொகலாயர் காலத்துக்கு பின், ஹைதராபாத் நிஜாம் பரம்பரையினர் ஆண்டுவந்துள்ளனர். பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்திற்கு அடிபணிந்த சிற்றரசுகளில், ஹைதராபாத் நிஜாமும் அடங்குவான். வெல்லஸ்லியின் திட்டப்படி, இவ்வாறு பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்க்கு அடிபணிந்த அரசுகளிடமிருந்து, கப்பம்(வரி) மட்டும் வாங்கிக்கொண்ட கிழக்கிந்திய கம்பனியினர், அந்த சிற்றரசுகளை, பிரிட்டிஷ் இந்தியாவுடன் இணைக்க வில்லை. ஆனால், அந்த சிற்றரசுகளின் பாதுகாப்பு மற்றும் வெளிஉறவு கொள்கைகளை பிரிட்டிஷாரே நிர்ணயம் செய்தனர். அதன் அடிப்படையில், தற்போதைய தெலங்கான பகுதி, பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், இந்தியாவுடன் கூட, இணைந்து இருந்தது கிடையாது.

நிஜாம் மிர் ஒஸ்மான் அலி 

தெலங்கானா சிற்றரசில், அதாவது ஹைதராபாத் சமஸ்தானத்தில் 85 சதவீதத்திற்க்கும் அதிகமான மக்கள், தெலுங்கு மொழி பேசிவந்தனர். மிக குறைவானவர்களே "உருது" மொழி பேசிவந்தனர். ஆனால், நிஜாமின் ஆட்சியில், உருது மொழியே அரசு மொழியாக இருந்தது. பள்ளிகளிலும் உருது மொழியிலேயே பாடம் சொல்லிகொடுக்க பட்டன. ஆங்கிலம் கூட கற்பிக்க படவில்லை. இதனால், உருது பேச தெரியாத தெலங்கானா மக்களுக்கு அரசு வேலைவாய்ப்பு மறுக்க பட்டது. சிறுபான்மையினரான, உருது பேச தெரிந்த முஸ்லிம்களுக்கே அரசுவேலையில் முன்னுரிமை வழங்கப்பட்டது. அந்த காலத்திலேயே, ஹைதராபாத் நிஜாம் உலக பணக்காரர் பட்டியலில், முன்வரிசையில் இடம்பெற்றிருந்தான். அனைத்து வகையான ஆடம்பரங்களிலும் திளைத்துபோய் இருந்த நிஜாம், தன் ஆடம்பர வாழ்க்கைக்கு மக்களை கசக்கி பிழிந்தான். இதில் அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்கள், விவசாயிகளான தெலுங்கு பேசும் மக்களே. நிஜாமால் நியமிக்கப்பட்ட, ஜமீன்தார்களும், ஜாஹிர்தார்களும் விவசாய மக்களிடம் வரிவசூலிக்கும் அதிகாரத்தை பெற்றிருந்தனர். குட்டி ராஜாக்களை போன்று செயல்பட்ட இவர்கள், மக்களிடம் கடுமையாக வரி வசூலித்தனர். வரிகட்ட முடியாத விவசாயிகள் கடுமையாக தண்டிக்க பட்டனர். நிஜாமும், ஜமீன்தார்களும் சுகபோகமாக வாழ்வதற்க்காக, ஏழை விவசாயிகள் பட்டினியுடன் நிலத்தில் உழைத்தனர். விவசாயிகளின் ரத்தத்தி உறிஞ்சி பிழைத்த நிஜாம், உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடம் பிடித்தான்.

இதே வேளையில், அன்றைய சென்னை மாகாணத்தில்(தமிழ் நாட்டில்) இணைந்திருந்த, கடலோர ஆந்திரா மற்றும் ராயல் சீமா பகுதியை சேர்ந்த தெலுங்கு பேசும் மக்கள், பிரிட்டிஷார் கொண்டு வந்த கல்வி, விவசாயம் மற்றும் பல சீர்திருத்தங்களால், தெலுங்கானா(ஹைதராபாத் சமஸ்தானம்) மக்களை விட கல்வி அறிவு மற்றும் சமூக வாழ்வியலில் ஓரளவிற்கு முன்னேறி இருந்தனர். பிரிட்டிஷார் கொண்டுவந்த இந்த சீர்திருத்தங்கள், தங்கள் சுயநலத்துக்குதான் என்றாலும், அது சாதியில் சில தளர்வை ஏற்படுத்தியதுடன் கல்வியில் ஒடுக்க பட்ட மக்களுக்கு சில உரிமைகளை வழங்கியது. பிரிட்டிஷ் ஆட்சிபரப்பில், கல்விகூடங்களில் ஆங்கிலம் பயிற்றுவிக்கப்பட்டது.  பிரிட்டிஷார் ஜமிந்தாரி முறையை ஒழித்தனர். இதனால் தெலங்கானா பகுதி விவசாயிகள் அளவிற்க்கு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த விவசாயிகள் துன்பம் அனுபவிக்க வில்லை(இதை சரியாக புரிந்து கொள்ளவேண்டும்). ஆகவே, கடலோர ஆந்திரா மற்றும் ராயல் சீமா மக்களுக்கு மட்டும் ஆங்கிலம் பயில வாய்ப்பு இருந்தது. இப்பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி கற்க தொடங்கினர். தெலங்கானா பகுதியை விட, இப்பகுதியில் விவசாயிகள் ஓரளவிற்க்கு முன்னேறி இருந்தனர். இவர்களுக்கும், தெலங்கானா பகுதி மக்களுக்கும் இருந்த ஒரே ஒற்றுமை, இருவரும் தெலுங்கு பேசினர். அதைத்தாண்டி, சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டில் தெலங்கானா மக்கள் இவர்களிடமிருந்து வேறுபட்டனர்.
மக்கள் விடுதலை படை, அப்போது.

1946 ஆம் ஆண்டு, ஹைதராபாத் சமஸ்தானத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(அப்போது கம்யூனிஸ்ட் கட்சி ஒன்று மட்டுமே இருந்தது), ஒடுக்கப்பட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி நிஜாமுக்கு எதிராக ஆயுத போராட்டத்தை துவங்கியது. இந்தியாவிலேயே, இப்போரட்டம்தான், முதல்முறையாக மக்களை திரட்டி, ஓர் அரசியல் கோரிக்கைக்காக நடத்தப்பட்ட, ஒழுங்கமைக்கபட்ட போராட்டமாகும். நிஜாமின் பேய் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் தெலங்கானா விவசாயிகள் முன்னணி படையினராய் விளங்கினர். மக்கள் போராட்டத்தை கண்டு அஞ்சிய நிஜாம், மிர்வாஸ் என்ற தன் கொடுங்கோல் படையினை கொண்டு கடுமையாக தாக்கினான். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் அரசியல் பூர்வமாக ஒருங்கிணைந்த மக்கள், நிஜாமின் கூலிப்படையை வீரத்துடன் எதிர்த்து நின்றனர். மக்களின் ரத்தத்தை உறிஞ்சி பிழைத்த ஜமிந்தார்களும், ஜாஹிர்தார்களும் மக்கள் விடுதலை படையினரால் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து கைப்பற்றபட்ட நிலங்கள் விவசாயிகளுக்கு பிரித்து கொடுக்கபட்டது. போராட்டம் தொடங்கிய முதல் வருடங்களிலேயே, 3000 கிராமங்களுக்கு மேல் நிஜாமின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை அடைந்தது. அவ்வாறு உருவான கிராமங்களில், சோவியத் யூனியனை போல், கம்யூன்கள் அமைக்கபட்டு மக்கள் தங்களை தாங்களே ஆட்சி செய்துகொண்டனர்.
மக்கள் விடுதலை படை, தற்போது.

1947 பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறினர். அச்சமயம், இந்தியாவில், ஹைதராபாத் சமஸ்தானத்தை போல் கிட்டத்தட்ட 500 க்கும் மேற்பட்ட சுதந்திர சமஸ்தானங்கள் இருந்தன. இந்த சமஸ்தானங்கள் தங்கள்  விருப்பத்தின் அடிப்படையில் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தான் உடனோ இணைந்து கொள்ளலாம் என்றும் அல்லது தனி நாடாக இருக்கலாம் என்றும் பிரிட்டிஷார் கூறினர். ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க நேரு விரும்பினார்(வழக்கம்போல்). இது குறித்து நிஜாமுக்கு தெரிவிக்க பட்டது. ஏற்கனவே, உள்நாட்டில் மக்கள் போராட்டம் உச்சத்தில் இருந்த நிலையில், தன்னை பாதுகாத்து கொள்வதற்க்காக, ஹைதராபாத் சமஸ்தானத்தை பாகிஸ்தான் உடன் இணைக்க, நிஜாம் விரும்பினான். சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைப்பதா? பாகிஸ்தானுடன் இணைப்பதா? அல்லது தனிநாடாக இருப்பதா என்பது குறித்து தெலங்கானா(ஹைதராபாத் சமஸ்தானம்) மக்களிடம் நேருவும் கேட்கவில்லை, நிஜாமும் கேட்கவில்லை. நிஜாம் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க விரும்பாததால், நேருவின் கட்டளைக்கு இணங்க, சர்தார் வல்லபாய் பட்டேல், இந்திய ராணுவத்தை தெலங்கானா மக்கள் மீது ஏவிவிட்டார்.

இந்திய ஆக்கிரமிப்பு ராணுவம்.

1948 ஆம் வருடம், செப்டம்பர் 13 ஆம் தேதி, இந்தியாவின் ஆக்கிரமிப்பு ராணுவம் தெலங்கானா(ஹைதராபாத் சமஸ்தானம்) பகுதிக்குள் நுழைந்தது. இதற்க்கு நேரு "ஆபரேஷன் போலோ" என்று பெயரிட்டார். பிறகு ராணுவம் என்ன செய்திருக்கும் என்பது சொல்லாமல் விளங்கக்கூடியதே. நிஜாமின் பேய் ஆட்சிக்கு எதிராக போராடி பெற்ற சுதந்திரத்தை, தெலங்கானா மக்கள் இந்திய ராணுவத்திற்கு இரையாக்க விரும்பவில்லை. ராணுவத்தின் கடும் அடக்குமுறைக்கு மத்தியில், போராடி பெற்ற விடுதலை பிரதேசங்களை, ஏறக்குறைய 3 ஆண்டுகள், மக்கள் தங்கள் கட்டுபாட்டில் வைத்திருந்தனர். மக்கள் விடுதலை படை, விடுதலை பிரதேசங்களை இந்திய ராணுவம் ஆக்கிரமித்து விடாமல், இரவு பகலாக காப்பாற்றியது. இச்சமயம், கடலோர ஆந்திரா மற்றும் ராயல் சீமா பகுதியை சேர்ந்த தெலுங்கு பேசும் மக்கள், தெலங்கானா பகுதிக்கு வரவைக்கபட்டு, இந்திய அரசால், அரசுவேலைகளில் அமர்த்தப்பட்டனர். தெலங்கானா பகுதியை இந்திய அரசு, ஹைதராபாத் மாநிலம் என்று அழைத்தது. இறுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த தவறான நிலைப்பாட்டால் மக்களின் வீரம் செறிந்த போராட்டம், ராணுவத்திற்கு காவு கொடுக்க பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அப்போது எடுத்த தவறான முடிவு இன்று வரை விமர்சிக்கபட்டு வருகின்றது.
பொட்டி ஸ்ரீராமுலு,
இறந்தபின் இந்திய அரசின் அஞ்ச(ல்)லி.

இதனிடையே, சென்னை மாகாணத்தை(தமிழ்நாட்டை) பிரித்து, ஆந்திரா தனிமாநிலம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை தெலுங்கு பேசும் மக்களிடம் வலுப்பெற்றுவந்தது. தெலுங்கு பேசும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், ஆந்திரா என்ற தனிமாநிலத்தை உருவாக்கி அதற்க்கு சென்னையை(சென்னை நகரை) தலைநகராக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுருத்தி பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் அக்டோபர் 19 ஆம் தேதி 1952 ஆம் வருடம், சாகும் வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார். இதுகுறித்து சிறிதும் கவலைப்படாத நேரு, அவரின் உண்ணாவிரதத்தை முடித்துவைக்க எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த பொட்டி ஸ்ரீராமுலு 1952  டிசம்பர் 15 ஆம் நாள் நள்ளிரவு, உயிரிழந்தார். இது தெலுங்கு பேசும் மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொட்டி ஸ்ரீராமுலு வின் இறுதி ஊர்வலம், சென்னை மவுண்ட் ரோடை கடக்கும்போது பெரும் கலவரம் வெடித்தது. தெலுங்கு பேசும் பகுதியில்(அதாவது, கடலோர ஆந்திரா மற்றும் ராயல் சீமா) தனி ஆந்திர மாநில கோரிக்கையை வலியுரித்தி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். சுமார் 7 பேர் கொல்லப்பட்டதாக அரசு அறிவித்தது. தெலுங்கு பேசும் பகுதிகள் பற்றி எரிந்தன. இறுதியில் டிசம்பர் 19 ஆம் தேதி, ஆந்திரா தனிமாநில அறிவிப்பை நேரு வெளியிட்டார். இருந்தபோதும், சென்னை நகரம் ஆந்திராவுக்கு கொடுக்கபடவில்லை. 1953 ஆம் ஆண்டு, அக்டோபர் 1 ஆம் தேதி, குர்நூலை தலைநகராக கொண்ட தனி ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது. அப்போதும்கூட, தெலங்கானா பகுதி புதிதாக உருவான ஆந்திர மாநிலத்துடன் இணைக்க படவில்லை. ஆந்திர மாநிலம் உருவானபின் அடுத்த மூன்று வருடம் தெலங்கானா தனி மாநிலமாகவே (ஹைதராபாத் என்ற பெயரில்) இருந்துவந்தது.

 ஆந்திர மாநிலம், தெலங்கானாவுடன்.

மொழிவாரி மாநிலங்களை உருவாக்க அமைக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரையையும் மீறி,1956 நவம்பர் 1 ஆம் தேதி, தாய் தெலங்கானாவை ஆந்திராவுடன் இணைத்தது இந்திய அரசு. தெலங்கானா பகுதியில் இருந்த ஹைதராபாத் ஆந்திராவின் புதிய தலைநகராக அறிவிக்க பட்டது. கொடுங்கோலன் நிஜாமின் ஆட்சியின் கீழ் வாழ்ந்த படிப்பறிவு குறைவான, சமூக அளவுகோளில் மிகவும் பின்தங்கிய தெலங்கானா மக்கள், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ஓரளவிற்க்கு படித்த, சமூக அளவில் உயர்ந்த மக்களுடன் இணைக்கப்பட்டனர். இதற்க்கும் மேல் சொல்லி விளங்கவைக்க தேவை இல்லை. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வாழ்ந்த உயர் சாதி ஆந்திரமக்கள், அதாவது, கடலோர ஆந்திரா மற்றும் ராயல் சீமாவை சேர்ந்த தெலுங்கு பேசும் மக்கள், அனைத்து துறைகளிலும் முன்னேறினர். பெரும்பாலும் தலித் சமூகத்தை சேர்ந்த விவசாயிகளான தெலங்கானா மக்கள் தொடர்ந்து பின்தங்கியே இருந்து வருகின்றனர். அரசு வேலைவாய்ப்பிலும்  படித்தவர்கள் எண்ணிக்கையிலும், தெலங்கானா மக்கள் பெரும் அளவிற்க்கு முன்னேற்றம் பெறாமலே உள்ளனர். வளம் மிக்க தாய் தெலங்கானா பகுதியை, தெலங்கானா அல்லாத பகுதியை சேர்ந்த உயர்சாதியினர் மற்றும் அரசியல்வாதிகள் அனுபவிப்பதுடன், பன்னாட்டு முதலாளிகளுக்கும் தாரைவார்த்து வருகின்றனர். இதனாலேயே, தெலங்கானா மக்கள் தாங்கள் முன்னர் இருந்தது போலவே தனிமாநிலமாக இருக்க விரும்புகின்றனர். தெலங்கான தனி மாநிலம் கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.


மரம் ஓய்வை விரும்பினாலும், காற்று விடுவதில்லை!

தெலங்கானா மக்கள் எதை இழந்தாலும், தங்கள் போராட்ட குணத்தை இன்னும் இழக்கவில்லை. நிஜாமின் ஆதிக்கத்தையும், இந்திய ராணுவத்தின் அடக்குமுறையையும் எதிர்த்து ஆயுத போராட்டத்தை நடத்திய ஒரு தலைமுறை, தங்கள் பிள்ளைகளுக்கு போரட்டகுணத்தை ஊட்டி சென்றுள்ளது. போராடி பெற்ற விடுதலை பிரதேசத்தில் வாழ்ந்து பழகிய தாய்மார்கள், தங்கள் பிள்ளைகளுக்கு சுதந்திரத்தின் சுவையை பாலை ஊட்டியுள்ளனர். அதனால்தான் சுதந்திர கனல் பற்றி எரிகிறது தெலங்கானாவில்.

ஜெய் தெலங்கானா!

தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் இந்திய அரசின் கொள்கையை எதிர்ப்போம்!
சுயநிர்ணய உரிமைக்கான தெலங்கானா மக்களின் போராட்டதிற்க்கு தோள்கொடுப்போம்!
சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை கட்டியமைப்போம்!

அசீப்.

ஆவணப்படம்: "ஸ்ரீலங்கா கொலைக்களம்"!

பிரிட்டனின், சேனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய, இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்திய இனப்படுகொலைக்கு ஆதாரமான, "ஸ்ரீலங்கா கொலைகளம்" ஆவணப்படம் கீழ்காணும் தேதிகளில் "Headlines Today" மற்றும் "Aaj Tak " தொலைக்கட்சிகளில் ஒளிபரப்பப்பட உள்ளது. 
  • 07/07/2011 - 10.00 (இரவு)
  • 08/07/2011 - 11.00 (இரவு)
  • 09/07/2011 - 10.00 (இரவு)
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கும், இந்திய அரசின் ஏகாதிபத்திய ஆதரவு கொள்கையை எதிர்ப்போம்!
தமிழகத்தில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை கட்டி அமைப்பதன் மூலம், ஈழ போராட்டத்திற்க்கு தோள்கொடுப்போம்!

ஈழ படுகொலைக்கு நீதி, சுதந்திர தமிழ் ஈழம்!
போராட்டமே அதை அடையும் வழி! 

சமச்சீர் கல்வி: நீதி கிடைக்குமா?

உச்சநீதி மன்றத்தின் உத்தரவுபடி, தமிழக அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு(??), சமச்சீர் கல்வி புத்தகங்கள் குறித்த தங்கள் ஆய்வு அறிக்கையை இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அவர்கள் சமச்சீர் புத்தகங்கள் குறித்து கூறியுள்ள சில கருத்துக்கள் இவை. 
  • புத்தகங்கள் அவசரகதியில் தயாரிக்க பட்டுள்ளன.
  • மாணவர்களின் சிந்தனை திறனை வளர்க்கும் விதத்தில் புத்தகங்கள் இல்லை.
  • சமச்சீர் புத்தகம் உலக தரத்தில் இல்லை. 
இந்திய கல்வி முறை, கிட்டத்தட்ட இருநூறு ஆண்டு பழமையானது. இன்னும் எத்தனை நிபுணர் குழுக்களை அமைத்தாலும், அவர்கள் தயாரிக்கும் புத்தகங்கள் வேண்டுமென்றால் சிறந்ததாக இருக்கலாம். ஆனால், கல்வி கற்பிக்கும் முறையில் மாற்றம் கொண்டு வரப்படாமல், மாணவர்களின் சிந்தனை திறனை மாற்றி அமைக்க முடியமா?
  • "பாடத்திட்ட வடிவமைப்புக்கான தேசிய கவுன்சில்" கூறியுள்ள வழிகாட்டுதல்கள், சமச்சீர் புத்தகம் தயாரிக்கப்பட்ட போது, முறையாக கடைபிடிக்க படவில்லை.
அப்படி என்றால், பாட புத்தகத்தில், வந்தே மாதரம் பாடல் இடம் பெறவில்லையோ? பகத் சிங்கை தீவிரவாதி என்று கூறாமல், மறந்து போய், விடுதலை போராட்ட வீரன் என்று கூறி விட்டார்களோ? தமிழக வரைபடத்தில் மறதியாக, கச்சதீவை சேர்த்து விட்டார்களோ? தமிழக மாணவர்களுக்கான பாடத்திட்டம் எப்படி அமைக்கப்படவேண்டும் என்பதை, தேசிய கவுன்சில்-இல் உள்ளவர்கள் நிர்ணயிக்க வேண்டுமாம்!!!

     இன்னும் இதுபோல் பல்வேறு விஷயங்களை கண்டுபிடித்து கூறியுள்ளது நமது நிபுணர் குழு(????)

     சமச்சீர் கல்வி குறித்த வழக்கை வரும் வியாழன் முதல் தினமும் விசாரிக்க போவதாக அறிவித்துள்ளது சென்னை உயர்நீதி மன்றம். வரும் திங்கள் அல்லது செவ்வாய்கிழமை அன்று தமிழக மாணவர்களுக்கு நீதி(??) கிடைக்கும் என்று எதிர் பார்க்க படுகிறது. 

அசீப்

சரிகிறது சாம்ராஜ்யம்: சக்சேனா கைது!

'தீராத விளையாட்டு பிள்ளை ' படத்தின் தயாரிப்பாளரிடம் 90 லட்சம் ருபாய் ஏமாற்றியதாக அவர்மீது கமிஷனர்ரிடம் புகார்  அளிக்கப்பட்டதன் பெயரில், அசோக்நகர் காவல்துறை, சக்சேனாவை ஏர்போர்ட்ல் சுற்றிவளைத்து கைது செய்துள்ளது.நேற்றே சைதாபேட்டை நீதிபதிகள் குடியிருப்பில் ஆஜர்படுத்தப்பட்டு, 14 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சக்சேனா. 
இதே சக்சேனா மீது, 
- செக்கர்ஸ் ஹோட்டல் அடித்து உடைத்த வழக்கு, 
- காவலன் பட தயாரிப்பாளரிடம் பணம் ஏமாற்றிய வழக்கு, 
- மக்சிஸ் நிறுவனம் சன் DTH-இல் முதலீடு செய்த 2G ஸ்பெக்ட்ரம் வழக்கு, 
என பல வழக்குகள் பாய தயாராக உள்ளன! அவை அனைத்திற்கும் அச்சாரமாகவே நேற்று சக்சேனா கைது செய்யப்பட்டுள்ளார்.முதல் 2 வழக்குகளை தமிழ்நாடு போலீஸ் விசாரிக்கக இருக்கும் நிலையில், மூன்றாவது வழக்கை CBI விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது!CBI விசாரிக்க துவங்கினால் தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் ஆகியோரும் சிக்கக்கூடும் என கூறப்படுகிறது! 

அண்ணன் பராக்! பராக்! பராக்!


              கொடும் செயலுக்கு எதிரான நாள் என்று ஐ.நா அவையால் அறிவிக்கப்பட்டுள்ள ஜூன் இருபத்து ஆறாம் நாள், ஞயிற்றுக்கிழமை மாலை, சென்னை மெரினா கடற்க்கரையில், சிங்கள இனவெறி அரசால், இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்ட ஈழ தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்கு "மே - பதினேழு" இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. (பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டிருந்தாலும், இந்த நிகழ்வை நடத்தியவர்கள் மே -பதினேழு இயக்கத்தினரே). மே -பதினேழு இயக்கத்தின் தலைவர் திருமுருகனிடம், நிகழ்வுக்கு சிலநாட்கள் முன் நாங்கள் பேசியபோது, நிகழ்வில் ஒரு லட்சம் பேர் கூடுவார்கள் என்று அவர் கூறினார். அப்போது அதை மிகைப்படுத்தல் என்று நாங்கள் நினைத்தாலும், நிகழ்வுக்கு வந்த கூட்டத்தை பார்த்தபின், அதுவொன்றும் அவ்வளவு மிகைப்படுத்தல் அல்ல என்று நாங்கள் விளங்கிக்கொண்டோம்.
நிகழ்வு மாலை ஐந்து மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கபட்டிருந்தாலும், மதியம் இரண்டு மணி முதலே மக்கள் கூட தொடங்கி விட்டனர். நேரம் நெருங்க நெருங்க மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கவே, தோழர்கள், மக்களை ஒழுங்கு படுத்தி ஓர் இடத்தில் உட்கார வைப்பதற்குள் பெரும் பாடு பட்டுவிட்டனர். உணர்வு வயப்பட்ட கூட்டத்தினர், தங்கள் கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பத்தொடங்கினர். கடற்கரைக்கு காற்றுவாங்க வந்த மக்களில் பலரும் கூட்டத்தோடு கூட்டமாக கலந்து விட்டனர். 

நேரம் செல்ல செல்ல, தலைவர்கள்(??) ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். அரைவட்டமாக அமர்ந்திருந்த மக்கள் கூட்டத்தின் ஒரு மூலையில், முக்கியமான நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்குதான் தலைவர்களும்(??) அமர்ந்திருந்தனர். அப்போதுதான் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானும் வந்தார். நிகழ்விற்கு, பெரும் கூட்டத்தோடு(????) வந்த சீமான், நேராக தலைவர்கள்(??) அமர்ந்திருக்கும் இடத்திற்கு செல்லாமல், தான் வந்திருப்பதை எல்லோருக்கும் தெரிவிக்கவோ, என்னவோ, அமர்ந்திருந்த மக்கள் கூடத்தின் ஒருமுனையில் இருந்து ஊர்வலமாக நடக்க தொடங்கினார். 

சீமானுடன் வந்திருந்தவர்கள்(????), அண்ணனை பாதுகாக்கிறோம் என்ற பெயரில், கொஞ்சமும் கூச்சப்படாமல், அமர்ந்திருந்த மக்கள் மீது ஏறி நடக்க ஆரம்பித்தனர். மிதிபட்ட மக்கள், அவர்களை திட்டக்கூட முடியாமல் அமர்ந்திருக்க, அந்த கூட்டம் வழக்கறிஞர்கள் அமர்ந்திருந்த இடத்தை அடைந்தது. "ஹே! அண்ணனை தொடாதே!, ஹே! அண்ணனுக்கு வழிவிடு!" என்று கூட்டத்தினரை மிரட்டிக்கொண்டும், மிதித்துக்கொண்டும் வந்தவர்கள், பெண் வழக்கறிஞர் ஒருவரின் காலை மிதித்து விட்டனர். இதை எதிர்த்து கேள்வி கேட்ட அந்த பெண்ணை, "உனக்கு பாதுகாப்பா இருக்கணும் என்று நினைத்தால் ஏன் இங்கு வந்தாய்? பெண்ணாய் அடக்கமாய் வீட்டில் இருந்திருக்க வேண்டியதுதானே" என்று ஏளனமாய் பேசி உள்ளனர் சீமானின் சிஷ்யன்கள்(????). வெகுண்டெழுந்த நம் பெண் வழக்கறிஞர், "பெண் விடுதலையை வாய்கிழிய பேசும் உங்கள் அமைப்பில் பெண்களை இப்படிதான் நடத்துவீர்களா? நீங்கள் எல்லாம் தோழர்களா? நீங்கள் அணிந்திருக்கும் பெரியார் டி-ஷர்ட்டை அவிழ்த்து எறியுன்கடா" என்று திட்டி தீர்த்துள்ளார். 

இதன்பிறகும் கொஞ்சமும் கலக்கமடையாத அந்த கூட்டம், தலைவர்கள்(??) இருந்த பகுதிக்குள் அதே வேகத்துடன் நுழைந்தது. முன்னே நின்றவர்களை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தவர்கள், பின்னே இருந்தவர்களை தள்ளிவிட, அவர்களில் ஒருவர், தலைவர்(??) ஒருவரின் மீது போய் விழுந்தார். இதைக்கண்டு வெகுண்டெழுந்த மற்றொரு தலைவர்(??), சீமானை பார்த்து "சீமான், உன் ஆட்களை ஒழுங்கு படுத்து" என்று கோபமாக கூறினார். அதை பெரிதும் பொருட்படுத்தாத சீமான், பெயருக்காக தன் கூட்டத்தை(????) ஒருமுறை திரும்பி பார்த்து பின்னர் அமர்ந்து கொண்டார். 

"ஹே! அண்ணனை தொடாதே!, ஹே! அண்ணனுக்கு வழிவிடு!" என்ற சப்தம் சீமான், நிகழ்விலிருந்து கிளம்பும் வரை கேட்டுக்கொண்டே இருந்தது. அதன் பிறகு, யார் எல்லாம் மிதிபட்டார்கள் என்பதை கவனிக்கும் முன், இருள் சூழ தொடங்கி விட்டது. மெழுகுவர்த்தியை ஏந்திய மக்கள், நிகழ்வின் இறுதியில் நிகழ்த்தப்பட்ட நாடகத்தை கண்டு கழித்துவிட்டு நகர தொடங்கினர். 

விழா அமைப்பு தோழர்கள், மக்கள் விட்டெறிந்து சென்ற குப்பைகளை மிகவும் பொறுப்புடன் அப்புற படுத்திக்கொண்டு இருந்தனர்.
_________

???? = அள்ளக்கை. 
?? = எனப்படுபவர்கள்.
__________

அசீப்.

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்:


2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்:


  • ஸ்பெக்ட்ரம் (அலைக்கற்றை) என்றால் என்ன?
ஸ்பெக்ட்ரம் என்றால் வேவ்ஸ் என்று சொல்லப்படும் மின் காந்த அலைகள். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திலிருக்கும் ஒருவருக்கு தொடர்பு கொண்டு பேச உதவும் கம்பியில்லா அலைகள்.ரேடியோ, டிவி, செயற்கைக்கோள் என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகையான ஸ்பெக்ட்ரம் பிரீகுவென்சி ஒதுக்கப்படும்.

  • 2 ஜி ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன?
ஜி என்பது ஜெனரேஷன் - தலைமுறை என்பதைக் குறிக்கும். 1 ஜி என்பது முதல் தலைமுறை. லேண்ட்லைன் டெலிபோன், வாக்கி டாக்கி உள்ளிட்டவை முதல் தலைமுறை ஸ்பெக்ட்ரத்தில் அடங்கும். இரண்டாம் தலைமுறையின் கீழ் செல்போன் வரும். 3 ஜி - மூன்றாம் தலைமுறை செல்போனிலேயே முகம் பார்த்துப் பேசுவது.

  • யார் ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்குவது?
இந்திய அரசாங்கம் ஸ்பெக்ட்ரத்தை நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யும். மத்திய தொலைத்தொடர்புத் துறை மூலமும், ட்ராய் என்றழைக்கப்படும் டெலிகாம் ரெகுலாரிட்டி ஆத்தாரிட்டி ஆப் இந்தியா (தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) மூலம் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யும்.
  • ஊழல் எவ்வாறு நடந்தது?
'முதலில் வருபவருக்கு முன்னுரிமை' என்ற விதியை ட்ராய் வகுத்தது. அதன் அர்த்தம் எந்த நிறுவனம் முதலில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுக்கு விண்ணப்பம் செய்கிறதோ அதிலிருந்தே கணக்கு எடுத்துக்கொள்ளப்படவேண்டும். ஆனால் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சரான ராசாவோ தனக்கு வேண்டப்பட்ட, கொல்லைப்புறமாக பணம் கொடுத்த நிறுவனங்களுக்கு முன்பே ரகசியமாக தெரிவித்துவிட்டு, வேண்டப்படாத நிறுவனங்களுக்கு சொல்லாமல் திடீரென்று ஒரு தேதியை குறிப்பிட்டு, அத்தேதியில் குறிப்பிட்ட 45 நிமிடத்திற்குள் கோடிக்கணக்கான பணத்தை வங்கிகளிலிருந்து டிடியாக எடுத்து வரவேண்டுமென்றும் உத்தரவிட்டார். முன்பே சொல்லாமலிருந்தால் எவ்வாறு 45 நிமிடத்திற்குள் கோடிக்கணக்கான ரூபாயை வங்கியிலிருந்து எடுக்கமுடியும்? அவ்வாறு பணம் கட்டிய ஸ்வான் டெலிகாம், யூனிடெக் உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டன. இதில் ஸ்வான் டெலிகாம் ஸ்பெக்ட்ரத்தைப் பெற்று அதை துபாயைச் சேர்ந்த எடிசலாட் என்ற நிறுவனத்திற்கு விற்றது. அந்த எடிசலாட் நிறுவனம் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு தொடர்புள்ள நிறுவனமென்றும், அதன் இயக்குனர் ஷாஹித் பால்வா, மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி என்றும் கூறப்படுகிறது. யூனிடெக் என்பது ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் (தினத்தந்தி நாழிதளில் அடிக்கடி முதல் பக்கத்தில் விளம்பரம் வரும்). யூனிடெக் ஸ்பெக்ட்ரத்தை வாங்கி, பலமடங்கு லாபாம் பார்த்து நார்வேயைச்சேர்ந்த டெலினார் என்ற நிறுவனத்திற்கு விற்றது. (யூனிடெக் மற்றும் டெலினார் இரண்டு பெயரையும் சேர்த்து யூனினார் என்று நிறுவனத்தை துவக்கினார்கள்). மேலும் டாடா நிறுவனமும் ஸ்பெக்ட்ரத்தை வாங்கி ஜப்பான் நாட்டு நிறுவனமான டொகோமொவிடம் பன்மடங்கு லாபம் வைத்து விற்றுவிட்டது.
மேலும் முக்கியமானது விலை. 2001ல் சர்க்கரை விலை 12 ரூபாயாக இருந்திருக்கும். அதே 2008ல் 16 ரூபாயாக உயர்ந்திருக்கும். ஆனால் 2001 ஆம் ஆண்டின் விலையிலேயே 2008 ஆம் ஆண்டிலும் விற்றால் 4 ரூபாய் நஷ்டம் ஏற்படும். அதே கதைதான் ஸ்பெக்ட்ரம் ஊழலிலும் நடந்தது. 2001 ஆம் ஆண்டின் விலையிலேயே 2008 ஆம் ஆண்டும் ஸ்பெக்ட்ரத்தை ராசா விற்றார். இதனால் அரசுக்கு 1 லட்சத்து 76 ஆறாயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதென்று இந்திய கணக்குத தணிக்கைக் குழு தெரிவித்துள்ளது. இவ்வாறு குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரம் விற்றதால் ராசா கொல்லைப்புறமாக 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக பெற்று, அதை தன்னை வளர்த்த கட்சிக்கும், தனது தலைவருக்கும், நெருங்கியவர்களுக்கும் (கனிமொழி) பங்கிட்டு கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்புள்ள எடிசலாட் நிறுவனத்திற்கும், சீனா ராணுவத்துடன் தொடர்புள்ள டெலினார் நிறுவனத்திற்கும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கக்கூடாது என நிதி அமைச்சகம் கூறியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அப்போது நிதி அமைச்சராகயிருந்த ப.சிதம்பரம் அவ்விதியைத் தளர்த்தி ஸ்வான் மற்றும் யூனிடெக் நிறுவங்கள் மூலம் ராசாவுடன் சேர்ந்துகொண்டு ஸ்பெக்ட்ரம் வழங்க உதவியதாகவும், ராசாவின் நடவடிக்கை அனைத்திற்கும் ப.சிதம்பரத்திற்கும் தொடர்பிருப்பதாகவும், அடுத்தடுத்த குற்றப்பதிரிகையில் தற்போது உள்துறை அமைச்சராக இருக்கும் ப.சிதம்பரம் பெயரும் இடம்பெறக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
ராசாவுக்கு முன்பு அப்பதவியிலிருந்த தயாநிதி மாறனிடம் ஏர்செல் நிறுவனத்தைத் துவங்கிய சிவசங்கரன் ஸ்பெக்ட்ரம் வேண்டி விண்ணப்பம் செய்தார். ஆனால் ஸ்பெக்ட்ரம் வழங்க மறுத்த மாறன், மலேசியாவைச் சேர்ந்த  இலங்கைத் தமிழர் அனந்தகிருஷ்ணன் என்பவருக்கு ஏர்செல் நிறுவனத்தை விற்கச்சொல்லி மிரட்டினார். மிரட்டல் தாங்க முடியாமல் சிவசங்கரனும் ஏர்செல்லை விற்றுவிட்டார். அடுத்த சில மாதங்களில் ஏர்செல்லுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டது. இது ஏனெனில், ஏர்செல்லை வாங்கியவர் நடத்திவரும் மேக்சிஸ் நிறுவனம், தயாநிதி மாறனின் சகோதரராகிய கலாநிதி மாறனுடைய சன் டி.டி.ஹெச்.ல் முதலீடு செய்துள்ளது. அதன் காரணமாகவே தயாநிதி மாறன் அவ்வாறு செய்தார் என கூறப்படுகிறது. அதன் மூலம் தயாநிதி மாறன் 625 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாகவும், சி.பி.ஐ.யிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் சிவசங்கரன். ஜூன் 30 ஆம் தேதி தாக்கலாகவுள்ள 3 வது குற்றப்பத்திரிக்கையில் தயாநிதி மாறன் பெயர் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. 

  • கனிமொழி சிக்கியது எப்படி?


தயாநிதி மாறனுடன் மோதல் ஏற்பட்டபோது, சன் டிவியிலிருந்து பங்குகளை திரும்பப்பெற்றுக்கொண்டு கலைஞர் டிவி துவக்கப்பட்டது. வெறும் 5 கோடி ரூபாய் அளவே முதலீடு கொண்ட கலைஞர் டிவிக்கு 214 கோடி ரூபாய் கடனாக டி.பி. ரியாலிட்டி நிறுவனம் கொடுத்துள்ளது. அத்தொகையையும் வட்டி 31 கோடி ரூபாயையும் சேர்த்து திரும்பக்கொடுத்து விட்டதாக கலைஞர் கூறுகிறார். கலைஞர் டிவி துவங்கி இரண்டு வருடமே ஆகிறது, பின் எவ்வாறு இவ்வளவு பெரிய தொகையை அவர்கள் திரும்பக்கொடுத்தார்கள்?

கலைஞர் டிவிக்கு கொடுக்கப்பட்ட பணமும் நேரடியாக கொடுக்கப்படவில்லை. தலையைச்சுற்றி மூக்கைத் தொடுவதுபோல், ஸ்வான் டெலிகாமின் துணை நிறுவனமான டி.பி. ரியாலிட்டிகுச்சென்று, அங்கிருந்து அதன் துணை நிறுவனமான குசெகான் ப்ரூட்ஸ் அண்ட் விஜிடேபில்ஸ்  நிருவனத்திற்குச்சென்று , அங்கிருத்து அதன் துணை நிறுவனமான சினியுக் நிருவனத்திற்குச்சென்று, அங்கிருந்து கலைஞர் டிவிக்கு வந்துள்ளது. டி.பி. ரியாலிட்டி, குசெகான் ப்ரூட்ஸ் அண்ட் விஜிடேபில்ஸ், சினியுக் என அட்ரஸ் இல்லாத நிறுவனங்களைச் சுற்றி வந்ததாலும், அந்த நிறுவனங்கள் அனைத்தும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியிருப்பதாலும், 214 கோடி ரூபாய் ஊழல் பணமே என்று சி.பி.ஐ. கூறுகிறது. ஒழுங்கான பணமாக இருந்திருந்தால் நேரடியாக கொடுக்கப்பட்டிருக்கும், கருப்புப்பனமாக இருப்பதாலேயே இவ்வளவு தூரம் சுற்றி வந்துள்ளது என்றும் சி.பி.ஐ. நினைக்கிறது. இதன் காரணமாகவே 20 சதவீத கலைஞர் டிவி பங்கு வைத்திருக்கும் கனிமொழியும், அதே 20 சதவீத பங்கு வைத்திருக்கும் கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத் குமாரும் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். வயதானவர் என்பதால் 60 சதவீதம் பங்கு வைத்திருக்கும் கலைஞரின் இரண்டாவது மனைவியான தயாளு அம்மாள் பெயரைச் சேர்க்கவில்லை என சி.பி.ஐ. கூறியது. சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என மூன்றும் கனிமொழி, சரத் குமாரின் ஜாமீன் மனுக்களை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

  • இனி என்ன நடக்கும்?


கழகத்திற்காக உழைத்த தன்னைக் காட்டிக்கொடுத்ததால் ராசாவும், 214 கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை நடந்தபோது கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் பதவியில் இல்லாமலேயே மாட்டிய  சரத் குமாரும் அப்ரூவர் ஆக வாய்ப்புள்ளது!. அதிகபட்சமாக 11 குற்றப்பத்திரிகை தாக்கலாகவுள்ளதாக கூறப்படுகிறது. அதுவரையில் கனிமொழி, ராசா, சரத் குமார் ஆகியோர் ஜெயிலேயே இருக்க நேரிடும். தயாநிதி மாறன், ப.சிதம்பரம் ஆகியோரையடுத்து மேலும் சில தி.மு.க., காங்கிரஸ் தலைகளின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற வாய்ப்புள்ளது.
குற்றப்பத்திரிகை எல்லாம் நீதிமன்றத்தில் தாக்கலான பிறகு, வழக்கு விசாரணைக்கு வரும், அதன் பிறகே குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும். இவ்வழக்கு முழுமையாக முடிய எப்படியும் குறைந்தது இரண்டு வருடங்களுக்கு மேலாகலாம் எனவும் கூறப்படுகிறது!. வழக்கு முடிந்து குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒவ்வொருவருக்கும் குறைந்தது 7 வருடம் சிறை தண்டனை கிடைக்கக்கூடும். ஆக வாழ்நாளின் பெரும்பகுதி ராசா, கனிமொழி, சரத் குமார், ஷாஹித் பால்வா உள்ளிட்டவர்கள் சிறையிலேயே கழிக்க நேரிடும்!.


'ஊழல் செய்பவர்கள் இவ்வழக்கைக் கண்டாவது பயந்து படிப்பினைப் பெறவேண்டுமென்பதே அனைவரின் விருப்பமும்!'.


- உமர் முக்தார் 

ஏன் வேண்டும் ஈழம் ?

ஏன் வேண்டும் ஈழம் ?

  • இலங்கை விடுதலை அடைந்தபோது தமிழர்களின் எண்ணிக்கை : 35,00,000.
  • சிங்களர்களின் எண்ணிக்கை : ஒன்றரை கோடி.
  • தற்போது தமிழர்களின் எண்ணிக்கை : 35,00,000.
  • சிங்களர்களின் எண்ணிக்கை : இரண்டரை கோடி. 
  • முப்பது வருட அகிம்சை வழி போராட்டம்.
  • முப்பது வருட ஆயுத போராட்டம்.
  • இரண்டு தலைமுறைகளை தாண்டி நடந்துவரும் உரிமைக்கான போர்.
  • ஆசியாவிலேயே, நெடுங்காலமாக நடந்துவரும் ஒரே போராட்டம்.
  • இதுவரை கொள்ளப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை: 3,00,000.
  • சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் தமிழர்களின் எண்ணிக்கை: 50,000 - 1,00,000.
  • இறுதி யுத்தத்தில், மூன்றே நாட்களில் கொள்ளப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை: 30,000.
  • உயிர் பலிகளுக்கு வேண்டும் நியாயம். 
  • ஒடுக்குமுறைக்கு எதிராக, வேண்டும் நீதி.
  • வாழ்வதற்க்கு வேண்டும் நாடு. 
  • ஒரே லட்சியம்: ஈழம் 
  • அடைவதற்கான வழி: போராட்டம்.
  • எனவே, 
                       ...........தொடரும் இந்த போராட்டம்.

தமிழர்களே!

        நாம் இழந்துவரும், சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க, போராட்டத்தை கட்டியமைப்போம்!
        உண்மையான சுயநிர்ணய உரிமை என்னவென்பதை ஒவ்வொரு தமிழ்நாட்டு, தமிழனுக்கும் உணர்த்துவோம்!
        உலகம் முழுவதும், உரிமைக்காக நடத்தப்படும் போராட்டங்களை, தீவிரவாதம் என்ற பெயரில் ஒடுக்கிவரும் ஏகாதிபத்தியத்தை எதிர்போம்!
        இதுவே உண்மையான விடுதலைக்கு வழி!

     



Time

Total Page Views

About this blog

நம்மைச்சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகள் , அதன் பின்னணியிலிருக்கும் அரசியல் , அந்த நிகழ்வை நகர்த்தும் அடிப்படை,அதற்கான தேவை, என நாங்கள் புரிந்துகொண்டதை , நாங்களே பகிர்ந்து கொள்ளவும் , நாங்கள் பகிர்ந்து கொண்டதை , உங்களோடு பகிர்ந்து கொள்ளவுமே இந்தத் தளம்.
Powered by Blogger.

Followers

Blog Archive