காதில் கேட்டவை: 'THE WAR YOU DON'T SEE'

காதில் கேட்டவை: 'THE WAR YOU DON'T SEE'

The_War_You_Dont_See_poster.jpg

ஆஸ்திரேலியாவில் பிறந்து, லண்டனில் வசிக்கும் செய்தியாளர் "ஜான் பிள்கேர்".

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் நாடுகளில் அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகள் நடத்தும் தாக்குதலில் கொல்லப்படும் அப்பாவி பொதுமக்கள் பற்றிய செய்திகளை, ஊடகங்கள் எவ்வாறு மறைக்கின்றன என்பது குறித்து ஜான் பிள்கேர் தயாரித்துள்ள ஆவணப்படம் 'THE WAR YOU DON'T SEE'.  இந்தப்படம் சமீபத்தில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செலஸ் நகரில் திரை இடப்படுவதாக இருந்தது. ஆனால், (அரசு கொடுத்த) நெருக்குதலின் காரணமாக இப்படத்தை, விழா அமைப்பாளர்கள் கடைசி நேரத்தில் திரையிட மறுத்துள்ளனர்.

ஓரளவிற்க்கு ஜனநாயகம் இருப்பதாக நம்பப்படும் அமெரிக்காவிலேயே, செய்தியாளர்களுக்கு இந்த நிலைமை என்றால், இந்தியாவில் செய்தியாளர்கள் நிலைமை குறித்து யோசித்து பாருங்கள்!

அப்படிஎன்றால் ஜனநாயகம் என்று ஒன்று இருப்பதாக சொல்கிறார்களே, அது யாருக்காக? அல்லது யாரிடம் உள்ளது?

இந்த ஆவணப்படம் குறித்த மேலும் தகவல்கள் கீழ்காணும் தளத்தில். 'http://www.johnpilger.com/articles/lannan-foundation-in-us-bans-pilger-film-and-cancels-visit'.

அண்ணா சாலையில் அநாமத்தாக நிற்கும் 1200 கோடி!

அண்ணா சாலையில் அநாமத்தாக நிற்கும் 1200 கோடி!

'எத்தனை நாள்தான் வாடகை கொடுத்துக்கொண்டு இருப்பது? நமக்கென்று சொந்தமாக தலைமைச் செயலகம் தேவையல்லவா? என்ற எண்ணத்தில் கட்டினாரோ? அல்லது புதிதாக தலைமைச் செயலகம் கட்டுவதன்மூலம் கொல்லைப்புறமாக பணம் ஈட்டலாம் என்ற எண்ணத்தில் கட்டினாரோ? தெரியவில்லை; ஆனால் தனது கனவுத் திட்டம் எனக்கூறி புதிய தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டினார் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி!

30 சதவீத வேலைகள் முடிவதற்குள் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் திருமதி.சோனியா காந்தி ஆகியோரை வரவழைத்து பிப்ரவரி 13, 2010 அன்று திறப்புவிழாவையும் நடத்தி முடித்து விட்டார் கருணாநிதி!

புதிய தலைமைச் செயலகம் கட்டப்ப்படும்போதே செல்வி.ஜெயலலிதா 'தான் அடுத்து முதல்வரானால், புதிய தலைமைச் செயலகத்தில் காலடிகூட எடுத்துவைக்கமாட்டேன்' என்று சூளுரைத்தார்! அதன்படியே ஆட்சிப் பொறுப்பேற்றதும் பழைய தலைமைச் செயலகத்திலேயே பணிகளைத் தொடர்கிறார். தேர்தல் வருவதற்குள் பழைய தலைமைச் செயலகத்திலிருந்து அனைத்துத் துறைகளையும், அமைச்சர்கள் அறைகளையும் புதிய தலைமைச் செயலகத்திற்கு மாற்றிட வேண்டுமென்று நினைத்தார் கருணாநிதி. ஆனால் 9 துறைகளை மாற்றுவதற்குள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் மாற்றமுடியவில்லை.

பிறகு ஜெயலலிதா முதல்வரானதும் சட்டமன்றத்தில் "புதிய தலைமைச் செயலகம் அரசு எந்திரத்தை நடத்துவதற்கு லாயக்கற்றது என்றும், 9 துறைகள் மட்டுமே அங்கு உள்ளது, மீதி 29 துறைகள் புனித ஜார்ஜ் கோட்டையிலேயே உள்ளதாகவும், புதிய தலைமைச் செயலக கட்டுமானத்தில் ஊழல் நடந்திருப்பதாகவும், அதைப்பற்றி விசாரிக்க ஒரு கமிஷன் அமைக்கப்படுமென்றும், அதற்கு ஏதுவாக தொடர்ந்து முடியாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கட்டடப்பணி நிறுத்தப்படுவதாகவும்" தீர்மானங்கள் நிறைவேற்றினார்.

முதல்வரின் இம்முடிவிற்கு 2 காரணங்களை நாம் ஆராயவேண்டும்.
ஒன்று அதில் நிஜமாகவே நடைபெற்ற ஊழல் 
இரண்டு தன்னால் நிறைவேற்ற முடியாததை கருணாநிதி செய்துவிட்டாரே ங்கிற ஆணவம், ஈகோ.

1 ) கருணாநிதி முதல்வராக இருக்கும்பொழுது கொண்டுவந்த திட்டமான 'கலைஞர் காப்பீட்டுத் திட்ட'த்தில் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் என்ற ஈ.டி.எ. குழுமத்தின் நிறுவனம் அதிக பயனடைந்தது. கல்ப் நாட்டு நிறுவனமான ஈ.டி.எ. குழுமத்தின், கட்டுமான நிறுவனம்தான் புதிய தலைமைச் செயலகத்தை கட்டியது. எனவே இதில் 400 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. கருணாநிதி முதல்வராக இருந்தபோது தினமும் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு, டிப்ஸ் கொடுத்து பார்த்துப் பார்த்து கட்டினாலும், விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்பவர் என்று மீண்டும் நிரூபித்திருக்கிறா கலைஞர்!

2 ) இதற்கு முன்பு 2001 முதல் 2006 வரையிலான அ.தி.மு.க. ஆட்சியிலேயே புது தலைமைச் செயலகம் கட்ட பல இடங்கள் பரிசீலிக்கப் பட்டன. தமிழகத்தின் முதல் மகளிர் கல்லூரியான ராணி மேரி கல்லூரியை இடித்துவிட்டு அங்கு தலைமைச் செயலகம் காட்டப்படும் என அப்போது ஜெயலலிதா அறிவித்தார். அதற்கு மாணவர்கள் மத்தியில் எதிர்ப்புக் கிளம்பியது. அந்த எதிர்ப்பை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு தி.மு.க. போராடி, அத்திட்டத்தை வாபஸ் பெற வைத்தது. அதன்பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கோரப்பட்டது. பிறகு அதுவும் முடியாமல் கோட்டூர்புரத்தில் ஒரு இடம் பார்த்து வைத்தார் ஜெயலலிதா. அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதால் அத்திட்டம் கைவிடப்பட்டது. (ஜெயலலிதா கோட்டூர்புரத்தில் பார்த்துவைத்த இடத்தில்தான் கருணாநிதி 'அண்ணா நூற்றாண்டு நூலகம்' காட்டியுள்ளார் என்பது வேறு விஷயம்). எனவே தன்னால் கட்டமுடியாத புதிய தலைமைச் செயலகத்தை கருணாநிதி கட்டிவிட்டரே என்று ஜெயலலிதா ஆணவங்கொண்டு இச்செயலில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது!.

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை, புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் திரு. கிருஷ்ணமூர்த்தி என்பவர் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், தலைமைச் செயலகத்தை மாற்றியதற்கு தடை விதிக்க முடியாது என்று கூறி பொதுநல வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும், அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். வழக்கு தள்ளுபடியானதால் மேல்முறையீடு செய்யவுள்ளதாக வழக்கறிஞர் திரு. கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

புதுச்சேரி காவலரின் தொப்பிபோல் உள்ளது என்றும், தண்ணீர் டேன்க் போல் உள்ளது என்றும் கிண்டல் செய்யப்பட்ட புதிய தலைமைச் செயலகம், வியர்வை சிந்தி உழைத்த மக்களிடம் வாங்கப்பட்ட, ஆயிரத்து இருநூறு கோடி ரூபாய் வரிப்பணத்தை, மொத்தமாக விழுங்கிக்கொண்டு, அண்ணா சாலையில் அநாமத்தாக நிற்கிறது!.

- உமர் முக்தார்

சமச்சீர் கல்வி தீர்ப்பு!


சமச்சீர் கல்வி தீர்ப்பு!
   
கடந்த தி.மு.க. ஆட்சியில் 2010-2011 ஆம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு ஆகிய இரு வகுப்புகளுக்கு மட்டும் சமச்சீர் கல்வியை அமுல்படுத்தபட்டது. மீதமுள்ள 2,3,4,5,7,8,9,10 ஆகிய வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வியை அமல்படுத்த, அதன் சாதக, பாதகங்களை ஆராய கல்வியாளர் முத்துக்குமரன் தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைத்தது தி.மு.க. அரசு.
   
முத்துக்குமரன் குழு, முழுவதையும் ஆராய்ந்து 109 கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. அவை அனைத்தையும் உடனடியாக அமல்படுத்த வாய்ப்பில்லாததால், வெறும் நான்கு கோரிக்கையை மட்டுமே தி.மு.க. அரசு அமல்படுத்தியது. மேலும், மீதமுள்ள வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வியை அமல்படுத்தி, அதற்காக இரு நூறு கோடி செலவில் புத்தகங்களையும் அச்சிட்டது.
   
அதற்குள் சட்டப்பேரவைத் தேர்தல் வந்து, அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியையும் பிடித்தது. கருணாநிதியாக இருந்தாலும், ஜெயலலிதாவாக இருந்தாலும் கடந்த கால ஆட்சியில் செய்தவற்றை புதிதாக பொறுப்பேற்றதும் நிறுத்திவிடுவது வழக்கம். அதுபோல்தான் தி.மு.க. அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வித் திட்டத்தை அ.தி.மு.க. அரசு, சமச்சீர் கல்வி சட்டத்தில், திருத்தம் கொண்டுவந்து கலைத்தது.
   
அதற்கான காரணம், தி.மு.க. அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வி மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன் மற்றும் ஓரியண்டல் ஆகியவற்றைவிட தரத்தில் குறைவாக உள்ளது என்றும், வெறும் புத்தக அளவிலேயே சமச்சீராக உள்ளது என்றும் அ.தி.மு.க. அரசு கூறியது. (கலைஞரின் கவிதை இடம் பெற்றதும் ஒரு காரணம் என்பது வேறு விஷயம்). எனவே, சமச்சீர் கல்வி தரத்தை உலகளவில் உயர்த்த, மீண்டும் ஒரு நிபுணர் குழு அமைக்கப்படுமெனவும் அரசு கூறியது.
   
இதை எதிர்த்தும், சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்தக் கோரியும், "பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை" என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் திரு.பிரின்ஸ் கஜேந்திரபாபு உட்பட, ஆறுபேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தனர். அவ்வழக்கில், சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பதற்கு தடை விதித்து, சமச்சீர் கல்வி இந்த கல்வியாண்டே தொடர வேண்டுமெனவும் உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
   
இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. தங்களது கருத்தையும் இவ்வழக்கில் கேட்க்க வேண்டுமெனக் கூறி மனுதாரர்கள் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இது அவசர வழக்காக ஏற்கப்பட்டு விசாரணைக்கு வந்தது. இதில் பழையபடி ஒண்டு மற்றும் ஆறு ஆகிய இரு வகுப்புகளுக்கு மட்டும் சமச்சீர் கல்வி தொடரவேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மீதி வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி தேவையா? இல்லையா? என்பது பற்றி ஆராய தமிழக அரசு நிபுணர் குழு அமைக்கவேண்டும் என்றும் அக்குழுவில், இந்திய பாடத்திட்டக் கழகத்தைச் சேர்ந்த 2 தமிழக அதிகாரிகள் உட்பட 4 பேரும், 2 கல்வியாளர்களும், பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர், இயக்குனர் ஆகியோர் இடம்பெற்று இருக்கவேண்டுமெனவும், அதன் தலைவராக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நியமிக்கப்படவேண்டும் எனவும் நிபந்தனை விதித்து, 2 வாரத்திற்குள் அக்குழு தனது அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
   
தற்போது 1 மற்றும் 6 ஆகிய வகுப்புகளுக்கு சிக்கல் தீர்ந்தாலும், மீதமுள்ள வகுப்புகளுக்கு பழைய பாடத்திட்டமே தொடரப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 2 வார காலத்திற்குள் நிபுணர் குழு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் கூறியதால் 15 ஆம் தேதி (புதன்கிழமை) திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படுமா? என்ற கேள்வியும், திறக்கப்பட்டாலும் எந்த பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு அமல்படுத்த வேண்டும் என்றும் தெரியாத ஒரு புதிரான நிலை பள்ளிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
   
ஏற்கனவே தி.மு.க. அரசு அச்சடித்த சமச்சீர் கல்வி பாடத்திட்ட புத்தகங்களால் 200 கோடி ருபாய் வீண் ஆனது. தற்போது, அ.தி.மு.க. அரசு அச்சடித்துள்ள பழைய பாடத்திட்ட புத்தகங்களால் பல கோடி ருபாய் வீணாக வாய்ப்புள்ளது.

தமிழக அரசின் இந்த முடிவுக்கு கல்வியின் மீதான அக்கறையா? அல்லது கருணாநிதியின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியா? புதிய அரசு சொல்வது உண்மையாக இருந்தாலும் தேவை இல்லா பகுதியை மட்டும் நீக்கிவிட்டு மற்றவற்றை,அமல்படுத்த நடவடிக்கை எடுக்கலாம். இந்த திட்டத்தை இக்கல்வியாண்டில் செயல்படுத்திவிட்டு படிப்படியாக மாற்றுவதே ஆரோக்கியமானது. தவறே நிகழ்ந்து இருந்தாலும் சமச்சீர் கல்வி என்பது கல்வியின் முன்னோக்கு சிந்தனையே! மீண்டும் நான்கு வழி பாடத்திட்டத்திற்கு செல்வது பிற்போக்கைத் தவிர வேறொன்றுமில்லை!
  
தரம் குறைவாக உள்ளது என்பது மாநில பாடத்திட்டம் அல்லாத மற்ற பாடதிட்டங்களோடு ஒப்பிடும்போது மட்டுமே. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் மூலம் படிப்பவர்களே அதிகம். எனவே, தமிழக அரசு சமச்சீர் கல்விபாடத்திட்டத்தை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே அனைவரின் கருத்தாக உள்ளது!

- உமர் முக்தார், செய்தியாளர், வின் தொலைக்காட்சி

June 14:
அந்த ஐந்து தோட்டாக்கள் அவருக்கு ஐந்து நட்சத்திரங்கள் ஆயின ..




 ஜோதிர்மாய் டே --- 
மும்பை மிட் டே இதழின் சிறப்பு புலனாய்வு செய்தியாளர், ஜோதிர்மை  டே. கடந்த சனிகிழமை பிற்பகல், போவாய் அருகே 2.40  மணிக்கு, அடையாளம் தெரியாத நபர்கள் நான்கு பேர் ,  நான்கு இரு சக்கர  வாகனங்களில் வந்து அவரை தாக்கி இருக்கிறார்கள் .

. ஐந்து குண்டுகளை உடம்பில் ஏந்தி மும்பை நகரத்து சாலையில் தன் உயிரை இழந்திருக்கிறார் டே . 

தொடர்ந்து மும்பையின் நிழல் உலகத்தை பற்றி பல கட்டுரைகள் எழுதி வந்தவர் டே . 

ஹிந்துஸ்தான் எக்ஸ்பிரஸ் ,நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட இதழ்களில் பணியாற்றியுள்ளார் டே ..

எப்போதும் செல்போனுடனே காட்சியளிக்கிற டே , தன்னுடைய நிழல் உலக தொடர்புகளை எப்போதும் தன் தேவைக்கு பயன்படுத்தியதில்லை என்கிறார்கள் மும்பையின் மூத்த செய்தியாளர்கள் ..


கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக , ஜீரோ டயல் என்னும் ஒற்றர்களை பற்றிய தன் சிறப்பு நூலை, டே வெளியிட்டார் .. புலனாய்வு தொடர்பான 3 நூல்களை இதுவரை டே வெளியிட்டுள்ளார். 

அண்மையில் தாவூத் இப்ராகிம் சகோதரரின்   மரணம் குறித்து கூட கட்டுரைகள் வெளியிட்டு இருந்தார் டே . ஆனால் சமீபத்தில், அவர் எந்த சிறப்பு புலனாய்வு கட்டுரையும் எழுதாத நிலையிலும் , அவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளது, செய்தியாளர்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களை எழுப்பி உள்ளது 





.சில மாதங்களுக்கு முன்பாக , ரயில்வே சிறப்பு காவல் படை கலனில் நடைபெற்று வந்த முறைகேடுகளை, அகேலா என்னும் செய்தியாளர் புலனாய்வு செய்து வெளியிட்டதற்காக மாநில அரசால் கைது செய்யப்பட்டிருந்தார்..

ஜோதிர்மாய் டே,  அரசின் இந்த செயலை கண்டித்து செய்தியாளர்கள் அமைப்பினர் பலருடன் மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் பாட்டிலை சந்தித்து செய்தியாளர்கள் மீதான இந்த தாக்குதலுக்கு தன் கண்டனத்தை 
தெரிவித்துள்ளார் .

மேலும் மாநில மற்றும் மத்திய அரசின், பல மக்கள் விரோத செயல்பாடுகளையும், தன்னுடைய கட்டுரைகளில் கடுமையாக எதிர்த்து வந்தார் டே .. 



அரசுக்கு எதிரான செய்திகளோ , நிழல் உலகம் பற்றிய செய்திகளோ , எவ்வித தயக்கமும் இன்றி மக்களுக்கு உண்மையை தொடர்ந்து எழுதி வந்துள்ளார் டே .. 
கடந்த 6  மாதங்களில் மட்டும் இந்தியாவில் மூன்று செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் 
.
பத்திரிகை துறை இது மாதிரியான சவால்களை தொடர்ந்து சந்தித்தே வந்திருக்கிறது ..இது மாதிரியான அச்சுறுத்தல்களால்  புலனாய்வு செய்தியாளர்களின் எண்ணிக்கை எவ்விதத்திலும் குறையாது என்கிறார் தேசிய செய்தியாளர்கள் சங்க தலைவர் நின்னான் ...

டே வின் மரணம் குறித்த உண்மையான தகவல்களை மாநில அரசு வெளியிட வேண்டும் என்றும், தேசிய செய்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது... 

தகவல் அறியும் உரிமை சட்டத்திற்காக கொலை செய்யப்பட்ட சதீஷ் செட்டி , நிழல் உலகம் பற்றி செய்தி வெளியிட்ட ஜோதிர்மாய் டே என மும்பை மாநகரம் சமூக மாற்றத்திற்காக போராடும் போரளிகளின் ரத்த பூமியாகி வருகிறது . 




உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வர உழைப்பவர்களுக்கு  மரணமே பரிசானாலும் ,அந்த பாதையில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை தான் சமூக மாற்றத்திற்கான உந்துதல் சக்தி ..
மக்கள் செய்தியாளர் "ஜோதிர்மை டே" வுக்கு வீரவணக்கம்!

செய்தியாளர் நெல்சன் சேவியர் .


June 13:
பாபா ராம்தேவின் நாடகம்!   

                                

 "என் வாழ்க்கையில் இதுவரை இப்படியொரு வன்முறையை நான் பார்த்ததேயில்லை" என ராம்லீலா மைதானத்தில் நடந்த சம்பவத்தைப்பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார் யோகா குரு பாபா ராம்தேவ். யோகா வகுப்பு நடத்தவும், மாலை 6 மணிக்குள்ளாக அனைவரும் கலைந்துச் சென்று விடுவோமென்றும் காவல் துறையிடம் அனுமதி வாங்கினார் பாபா. ஆனால், ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதம் என ஊடகங்களுக்குக் கூறினார். இதனால் அங்கு கூடி வந்த கூட்டத்தைப் பார்த்து தனது முடிவை மாற்றி களைந்து போக மருத்துவிட்டார் பாபா. 
 இதனால் வேறுவழி இல்லாமல் மத்திய அரசு காவல் துறையை ஏவி கூட்டத்தைக் கலைத்தது. வெறும் 2000 பழங்குடியினரை கலைப்பதர்க்கெல்லாம் துப்பாக்கிச் சூடு நடத்தி பொதுமக்களை கொள்ளும் காவல் துறை ராம்லீலா மைதானத்தில் கையாண்டவிதம் மென்மையானதே. இதற்கே பாபா, 'இப்படியொரு வன்முறையைப் பார்த்ததில்லை' என கூறுகிறார் என்றால் அவர் (பாபா) இத்தனை நாள் மிகவும் பாதுகாப்பான, சொகுசான வாழ்க்கையையே வாழ்ந்து வந்திருக்கிறார் என்று பொருளாகிறது. 
   "ஊழலை ஒழிப்பதற்கு உருவாக்கப்படும் லோக்பால் அமைப்பு பிரதமரையும், இந்திய தலைமை நீதிபதியையும் விசாரிக்கக் கூடாது" என்று கூறியவரே இந்த ராம்தேவ்தான். அன்னா ஹசாரே மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு மாற்றாக மத்திய அரசாங்கத்தால் உருவாகப்பட்டவராககூட பாபா ராம்தேவ் இருக்கலாம்!.
 கறுப்புப் பணம் வெளிக்கொண்டுவரப்பட வேண்டுமென்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை, அதேவேளை அதற்காக பாபாவின் போராட்டத்தை ஊக்குவிக்க வேண்டுமா? அவர் கூறும் கோரிக்கைகள்தான் என்ன?
  •  ஊழல்வாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கவேண்டுமென கோருகிறார். கொலை செய்த குற்றவாளிகளுக்கே மரண தண்டனை கொடுக்கக் கூடாதென பலர் கூறிவரும் வேளையில் ஊழல்வாதிகளுக்கு மரண தண்டனை என்பது இந்தியாவில் நடக்காத காரியம்!.
  • 500, 1000 ஆகிய ரூபாய் நோட்டுகளைச் செல்லாததாக்கிவிட வேண்டுமெனவும் கூறுகிறார். இந்த நோட்டுகளை ஊழல் பெரிச்சாளிகள் மட்டுமா வைத்துள்ளார்கள்? சாதாரண உழைத்து உண்பவர்கள்கூடதான் வைத்துள்ளார்கள். எனவே இதுவும் வேலைக்கு ஆகாத கோரிக்கை!.
  • ஜனநாயக இந்தியாவில் பிரிட்டிஷ் காலனியாக்கத்தின் அடையாளங்கள் அளிக்கப்பட வேண்டுமென்கிறார். அதாவது ஆங்கிலத்தில் நடக்கும் நிர்வாகம், கல்வி எல்லாம் நிறுத்தப்பட வேண்டுமாம். ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தில் தீர்வு காணும் எளிமையான பிரச்சனை அல்ல, மக்களிடையே விவாதம் நடத்தப்பட வேண்டிய பெரிய விஷயம் இது. ஆங்கிலத்தை ஒழித்துவிட்டு எல்லா இடங்களிலும் இந்தியைக் கொண்டு வரும் முயற்சி என்பதே இதன் பொருள். இது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மாநில மொழிவாசிகளுக்கு எதிரானது. எனவே இந்தக் கோரிக்கையும் செல்லுபடியாகாது!.  
  • அடுத்து மிகவும் முக்கிய கோரிக்கையை அவர் வைக்கிறார். அது இந்திய பிரதமர் நேரடியாக மக்களால் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்கிறார். அதாவது நாடாளுமன்ற ஜனநாயகம், பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆகியவை பாபாவுக்கு வேம்பாகக் கசக்கிறது போலும்! அந்தந்த மாநில உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் ராம்தேவ்கள் போன்றோரின் சில திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. அதற்காக நாடாளுமன்ற ஜனநாயகத்துக்குப் பதிலாக அதிபர் ஆட்சி முறையை கொண்டு வரும் விருப்பத்தைத் தெரிவிக்கிறார் பாபா! ஆக இந்தக் கோரிக்கையும் நிராகரிக்கப் படவேண்டியதுதான்!. 
   இந்தக் கோரிக்கைகளை எல்லாம் பெரிதாக ஊடகங்கள் விவாதிக்காமல், காவல் துரையின் அத்துமீறல்களை மட்டுமே சுட்டிக்காட்டி பரபரப்பை ஊட்டுகின்றன. இவருக்குப் பின்னால் உள்ள ஜனநாயக விரோதமான கோரிக்கைகளை அம்பலப்படுத்தத் தவறுகின்றன. மேலோட்டமாக ஊழல் எதிர்ப்புப் போராட்டம் என்று சொல்லப்படும்போது, அதற்கு ஆதரவு அளிப்பது கடமை அன்று தோன்றுகிறது. இதனைத் தவிர்த்துப் பார்க்கும்போது இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கக்கூடாது என்ற எண்ணமே மேலோங்குகிறது!.
   மேலும், பாபா ராதேவ் உண்ணாவிரத நாடகத்தை 9 நாள் கழித்து இன்று முடிதுக்கொண்டிருக்கிறார். கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு தேராடவுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மற்றொரு ஆன்மீகவாதியான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கோரிக்கையை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிட்டதாகவும் செய்திகளும், படங்களும் ஊடகங்களில் வெளிவந்து இருக்கின்றன.
   பாபா உண்ணாவிரதம் இருந்தபோது ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத், பி.ஜே.பி. ஆட்களுமே அதிகம் வந்து பாபாவுக்கு ஆதரவளித்தனர். ஆக பாபா ராம்தேவை பின்னாலிருந்து இயக்குவதே ஹிந்துத்துவா சக்திகள்தான் என்று ஒரு சந்தேக எண்ணம் தோன்றுகிறது.
   எது எப்படியோ, பாபாக்களும், ஹசாரேக்களும் ஊடகங்களை பயன்படுத்தி தங்களுக்குப் புகழ் சேர்த்துக்கொண்டு, மக்களை முட்டாளாக்குகிறார்கள் என்பதே நிஜம்!.
                                                                                                                             

- உமர் முக்தார்,                         
                                                                                 செய்தியாளர், வின் தொலைகாட்சி

சமச்சீர் கல்வி தேவையா?


ஜெயலலிதா முதல்வர் ஆனவுடன், "இந்தமுறையாவது அம்மா, தடாலடியான முடிவுகள் எதுவும் எடுக்காமல் இருப்பாரா?" என்பதே பெரும்பாலானவர்கள் பேசக்கேட்டோம். அப்படி கேட்டவர்களின் மூக்கை உடைப்பதற்காகவோ என்னவோ, எடுத்த எடுப்பிலேயே, எதைபற்றியும் யோசிக்காமல், யாரைபற்றியும் கவலைபடாமல் தினந்தோறும் எதாவது ஒரு அதிர்ச்சி தரும் அறிவிப்புகளை வெளிட்டு கொண்டிருக்கிறார் நம் முதல்வர்.

இதில், கிடப்பில் போடப்பட்ட புதிய தலைமைச்செயலகம், மறைமுகமாக, மூடுவிழா கானபோவதாக அறிவிக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவை அடங்கும். இதுபோன்ற முடிவுகள் அரசின் பணத்தை வீணடிக்கும் செயல் என்ற அளவில், இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடியாக, பெரும் அளவுக்கு பாதிப்பு ஏற்படபோவதில்லை. ஆனால், சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்கபோவதாக அ.தி.மு.க அரசு எடுத்துள்ள முடிவு, இனிவரும் காலங்களில், ஜெயலிதாவின் அராஜக நடவடிக்கைகள், "டாப் டென்" பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கபோவது உறுதி. ஏனென்றால், இந்த முடிவு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் அந்த அளவுக்கு குழப்பத்தை உண்டாக்கி உள்ளது. 

தற்போது செயல்படுத்த போவதாக அறிவிக்கப்பட்ட, சமச்சீர் கல்வி என்பதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால், அரசு பள்ளியில், கிழிந்த சட்டையை அணிந்துகொண்டு, பசித்த வயிற்றுடன் இலவசமாக(இது அரசின் கடமை) படிக்கும் மாணவனும், தனியார் பள்ளியில் ஆயிரம் ஆயிரம் ரூபாய்களை செலவழித்து அணைத்து வசதிகளுடனும் படிக்கும் மாணவனும், ஒரே பாட திட்டத்தில் பயில்வதாகும். அதாவது, அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவன், கூட்டல் கழித்தல் விதிகளை கற்றுக் கொண்டிருக்கும்போது, தனியார் பள்ளியில் பயிலும் மாணவன், அதைவிட மேலான அல்ஜீப்ரா விதிகளை கற்றுகொண்டிருப்பது என்று இல்லாமல். அனைத்து பள்ளி மாணவர்களும் ஒரேவகையான பாடத்திட்டத்தில் பயிலும் வகையில் ஏற்படுத்தபட்ட திட்டம்தான் இந்த சமச்சீர் கல்விதிட்டம்.

நாம் ஏற்கனவே சொன்னதுபோல், கிழிந்த சட்டையை அணிந்துகொண்டு பணக்கார மாணவன் படிக்கும் பாடத்திட்டத்தை படிப்பதால் மட்டும், நம் ஏழை மாணவனுக்கு கல்வியில் சமத்துவம் கிடைத்து விட்டதாக நாம் கருத முடியாது. ஆனால், தற்போது இருந்துவரும் நான்கு வகையான(ஏற்ற, தாழ்வான) கல்வித்திட்டத்தை விட, இந்த சமச்சீர் கல்வி திட்டம் முற்போக்கான விஷயம் என்றவகையில் நாம் இதை ஆதரித்தே ஆகவேண்டும். கல்வியில் உண்மையான சமத்துவத்தை நிலைநாட்ட, எதையும் புரிந்துகொள்ளாமல், வெறுமனே மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் கல்விமுறையை மாற்றி, அறிவியல்பூர்வமான கல்விமுறையை உருவாக்க, ஆசிரியர் என்ற சர்வாதிகாரி(பெரும்பாலானோர்) கற்பிக்கும் பாடத்தை, எதிர்கேள்வி கேட்காமல் கவனிக்கும் அடிமை கல்விமுறையை மாற்றி, ஜனநாயக கல்விமுறையை உருவாக்க நடத்தப்பட்டுவரும் போராட்டத்தில் சமச்சீர் கல்விமுறையை அமுல்படுத்த வைப்பது ஒரு முக்கியமான மைல் கல் என்பதை நாம் உணரவேண்டும். 

சமச்சீர் கல்வி திட்டம் என்பது, ஏதோ செவ்வாய் கிரகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட திட்டம் என்பதை போல் பலர் யோசிக்கின்றனர். உண்மையில், தமிழ்நாட்டை தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் சமச்சீர் கல்விமுறை பலவருடங்களாக நடைமுறையில் உள்ளது. அப்படியென்றால், மற்ற மாநிலங்களில், மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என்று, பள்ளிகளில் பலவகைகள் கிடையாது, அதாவது ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு பாடத்திட்டம், அந்த பாடதிட்டத்திற்கு ஏற்றாற்போல் ஒவ்வொரு கட்டணம் என்றெல்லாம் கிடையாது. இந்த மாநிலங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் எல்லோரும் முட்டாள்களா? சமச்சீர் கல்வித்திட்டத்தை நடைமுறை படுத்துவதால், அவர்களின் கல்வித்திட்டம் சீரழிந்து விட்டதா? இல்லைதானே? அப்படியென்றால், இத்தனை நாளும் தமிழ்நாட்டில், இப்படிப்பட்ட வெவ்வேறு பாடத்திட்டங்களை கொண்ட பள்ளிகள், சிறந்த படிப்பை தருகிறேன் என்ற பெயரில், கல்வியை கேவலமாக வியாபாரம் செய்துவந்ததை நாம் பார்த்துகொண்டுதானே இருந்திருக்கிறோம்? 

கல்வியை வியாபாரிகளிடமிருந்து மீட்டெடுத்து, மெக்கானிக் கடைகளிலும், டீ கடைகளிலும், வனாந்தரங்களில் ஆடு மேய்த்துக் கொண்டும், தங்கள் எதிர்காலத்தை தொலைத்துகொண்டிருக்கும் நம் குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க, காலம் காலமாக நடத்தப்பட்டு வரும் நீண்ட போரட்டத்தில், சமச்சீர் கல்வி என்ற ஒரு சிறு கோரிக்கையை நிறைவேற்ற சம்மதித்தது தி.மு.க அரசு. பிஞ்சுகைகள் காய்த்துப்போக வேலை செய்யும் நம் குழந்தைகள் பற்றியோ, அவர்களை படிக்கவைக்க வழிதெரியாமல் தற்கொலை செய்துகொள்ளும் நமது தாய்மார்கள் பற்றியோ, கொஞ்சம்கூட கவலைபடாமல், கேவலம் அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக, அதோடுகூட, கல்வியை வியாபாரமாக்கி அதன்மூலம் கோடி கோடியாக சம்பாதிக்கும் திருட்டு கும்பலுக்கு ஆதரவாக, சமச்சீர் கல்வியை நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது அ.தி.மு.க அரசு.

இதைபற்றி கொஞ்சமும் கவலைகொள்ளாமல், அம்மாவின் தாளத்திற்கு தப்பாமல் ஆடிக்கொண்டு இருக்கின்றது தே.மு.தி.க என்ற, பெயரளவிலான எதிர்கட்சி. பொதுவுடைமை பேசிக்கொண்டு, தங்களை கம்யூனிஸ்ட்கள் என்று கூறிக்கொள்ளும், சி.பி.ஐ, சி.பி.எம் கட்சிகளும் கூட இதுகுறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை. இதனிடையே, சமச்சீர் கல்வி சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ள அரசு, அதன்மூலம் அடுத்த கல்வி ஆண்டில்கூட தாங்கள் விரும்பினால்தான் சமச்சீர் கல்வி திட்டத்தை செயல்படுத்துவோம் என்று மறைமுகமாக கூறியுள்ளது. அதாவது, இனிமேல் சமச்சீர் கல்வி திட்டம் வந்தால் வரலாம், வராமலும் போகலாம் என்ற நிலை உருவாகிஉள்ளது.

இனி இந்த அரசியல் கட்சிகளை நம்பி பயன் இல்லை. மக்கள் ஒருங்கிணைந்து சமச்சீர் கல்வியை நடைமுறை படுத்தவேண்டி நடத்தும் போராட்டமே ஆட்சியாளர்களை செவிசாய்க்க வைக்கும் என்பதை எல்லோரும் உணரவேண்டும். சமச்சீர் கல்வியை நடைமுறை படுத்த மக்கள் இயக்கத்தை கட்டி அமைப்பதும், அந்த இயக்கத்திற்க்கு அனைத்துதரப்பு மக்களின் ஆதரவையும் பெறுவதுமே இப்போது நம் முன் உள்ள கடமையாகும்.

நண்பர்களே! நமக்கு தெரிந்த வழிகளில், சமச்சீர் கல்வியின் முக்கியதுவத்தை அனைவரும் உணரும்படி செய்வோம்! நம் குழந்தைகளின் எதிர்காலத்தை ஒளிபெற செய்வோம்!

இனப்படுகொலை நினைவுநாள் நிகழ்வு

சிங்கள இனவெறி அரசினால், ஈழத்தமிழர்கள் இன படுகொலை செய்யப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு,   "மாற்றத்திற்கான செய்தியாளர்கள்"  நடத்திய புகைப்பட கண்காட்சி, மற்றும் கருத்து பகிர்வு நிகழ்வின் புகைப்பட தொகுப்பு.



சிங்கள இனவெறி அரசு நடத்திய, ரத்த வேட்டைக்கு ஆதாரமான புகைப்படங்கள்.
கருத்துபகிர்வு நிகழ்வில் வரவேற்ப்புரை: செய்தியாளர் விஜய்.

நிகழ்வின் தலைமை: செய்தியாளர் நெல்சன்.

உணர்வை வெளிப்படுத்தி, போராட்ட காலத்தில் இணைய வந்த நண்பர்கள்! 

ஈழ தமிழினத்தின் வரலாறு: செய்தியாளர் ஆனந்த்.

ஈழ தமிழினத்தின் வரலாறு: தோழர்  

இனப்படுகொலை: செய்தியாளர் ஜீவசகாப்தன். 

ஈழ தமிழினத்தின் வரலாறு: தோழர் வினோத்.

ஈழ தமிழினத்தின் வரலாறு: செய்தியாளர் தமிழரசன்.

உணர்வை உரசிப்பார்க்க கவிதை வாசிப்பு: செய்தியாளர் எழிலரசன்.

மானமுள்ள, மக்கள் செய்தியாளர் "லாசந்தா விக்கரமசிங்கே" பற்றி: செய்தியாளர் தனபாலன்.
என்ன செய்ய வேண்டும்?: செய்தியாளர் அசீப்.



ஆபரேஷன் - 17 நாள்!

        
         Standing Soldiers Clip Art
ஆட்சி பொறுப்பேற்ற பதினேழு நாட்களில், அம்மாவின் நேரடி கட்டளையின் கீழ் நடந்த, சில அதிரடி ஆபரேஷன்களை மக்களுக்கு நியாபகபடுத்த விரும்புகின்றோம்!

1 ஆபரேஷன் "செயின்ட் ஜார்ஜ் கோட்டை"
   செலவு - 1100 கோடி.
   
ஆங்கிலேயர் கோட்டைக்குள் இரவோடு இரவாக இறங்கிய அரசுத்துறை அதிகாரிகள், எதிரிகளுடனான (பூச்சி, புழுக்கள், ஒட்டடை) கடும் சண்டைக்கு பிறகு, "செம்மொழி தமிழ் ஆய்வு மையம்" என்ற பெயர்பலகையை கழற்றி எடுத்துவிட்டு, "தமிழ்நாடு தலைமை செயலகம்" என்ற பெயர் பலகையை வெற்றிகரமாக மாட்டி விட்டு, பத்திரமாக தங்கள் தளத்துக்கு(அட! வீட்டுக்குதாங்க) திரும்பினர்.

2 ஆபரேஷன் "சமச்சீர் கல்வி"
   செலவு - 200 கோடி.

அரசு அச்சகத்துக்குள், அதிரடியாக நுழைந்த கல்வித்துறை அதிகாரிகள், 200 கோடி ரூபாய் செலவில் அச்சடிக்கப்பட்டு வைத்திருந்த, சமச்சீர் கல்விக்கான புத்தகங்களை கைப்பற்றி, இனி அப்புத்தகங்கள், மக்கள் நலன் கருதி, குழந்தைகளின் மலத்தை துடைக்க பயன்படுத்தப்படும், என அறிவித்தனர். 

இதுபோன்று, மக்கள் நலம் கருதி பல்வேறு ஆபரேஷன்களை நடத்த, ஜெயலலிதா அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மக்களே உஷார்!


Time

Total Page Views

About this blog

நம்மைச்சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகள் , அதன் பின்னணியிலிருக்கும் அரசியல் , அந்த நிகழ்வை நகர்த்தும் அடிப்படை,அதற்கான தேவை, என நாங்கள் புரிந்துகொண்டதை , நாங்களே பகிர்ந்து கொள்ளவும் , நாங்கள் பகிர்ந்து கொண்டதை , உங்களோடு பகிர்ந்து கொள்ளவுமே இந்தத் தளம்.
Powered by Blogger.

Followers

Blog Archive